365 நாட்கள்

365 நாட்கள் காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி. சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அது குளத்தை சுத்தப்படுத்தும் பணி. நூறு நாள் வேலைக்காக வந்து சேர்ந்திருக்கின்றாள் ரேவதி. குழந்தையை மேட்டில் ஒரமாய் அமர வைத்துவிட்டு சேலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகினாள். குழந்தை மணற்மேட்டில் மண்ணை துழாவி கையில் உருட்டி வாயில் வைத்து முடித்தான். "ரேவதி உன் பையன் மண்ணு திண்ணுதே பாரு" என்றார் கூட பணிப்புரியும் சுந்தரி. "அடவிடுங்கக்கா.. வீடும் மண்வீடு தான். அங்கயும் மண்ணை திண்ணுது. எத்தனை முறை தான் எடுத்துவிடறது. சாப்பிடுற சாப்பாட்டுலயே கல்லு கடக்கு. நம்ம வாழ்க்கையில கல்லும் மண்ணும் இருக்கறது தானே." என்று மண்வெட்டி கொண்டு தூர்வாறினாள். "ஏன் ரேவதி வூட்ல உன் புருஷன் இல்லை. யாரிடமாவது விட்டுட்டு வரலாம்ல. கைக்குழந்தையை போற வேலைக்கு எல்லா...