ஹைக்கூ

தன்னில் தாகம் தனிய
தலையை வெட்டிவிட்டான்
இளநீரை
        --பிரவீணா தங்கராஜ் .



* உயிர்த்திசை*

 கோடிட்டு காட்டினேன் நீ இரு உயிரென
மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...!
உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும்
உலகமே நானாக மாறித்தான் போனாய்... !
மரணவலி கொடுத்து நான் வந்தாலும்
மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு
பாகாய் உருக செய்யும் அன்பை
பாரினில் வேறு யார் தருவார் ?
ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண
எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...!
உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும்
உன்னை மறந்தே எனக்களிப்பாய்...!
உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும்
உறைவிடமாக இருப்பேன் எந்நாளும்
உயிர்த்திசையாக இருப்பவளே... !
உயிராய் என்னை சுமந்தவளே ...!

                                      -- பிரவீணா தங்கராஜ்
      
       * அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது .
                

பயம் ஓடியது

கோரமான பற்களதில்
இரத்தம் வழிந்த திட்டுக்கள்
கண்களை கண்டாலே 
பயப்பந்து வயிற்றில் பிரள
எதற்குக் கொன்றது ? ஏன் கொன்றது ?
எத்தனிக்க இயலாத காட்சிகள்
அப்படியே உள்வாங்கிய
மகளின் மனதில்
விளக்கு பொத்தானைப் போடாத
அந்த அறைக்குச் செல்ல
கால்கள் தயங்கியே நிற்க
அச்சத்தில் கைகளும் சில்லிட்டுயிருந்தன
சீக்கிரம் கிளம்புயென்று
விரைவுப்படுத்திய போது
அந்தப் பார்வையே சொல்லிவிட்டது
நிமிடத்தில் கண்ட
பேய் படத்தின் பாதிப்புயென்று
'சரி வா' என கை கோர்த்து
அழைத்துச் சென்ற மகளிடம்
'இப்ப மட்டும் பேய் வராதா' யென்ற
கேள்விக்கு பதிலாக
'அம்மா நீங்க இருக்கீங்க' யென்ற
பதிலில் சிலிர்த்து விட்டது
என்ன வார்த்தை கூறி மீதி முடிப்பதென்று ...
                               -- பிரவீணா தங்கராஜ் .


 

விடாமுயற்சி

வெற்றியெனும் வாகை பூச்சுட
விடாமுயற்சி யெனும் விதையை
தூவிவிடு....!
ஒருநாள் முளைக்கும்
விடியல் பிறக்கும்
அந்நாள் வரை
அசராது முயன்றிடு ...!  
தோற்பதை கணக்கில் எண்ணாதே
எண்ணத்தை ஏணியாக்கி
விடாது முயன்று வெற்றிக்கனியை
பறித்து விடுவாய்...!
உன்னில் நம்பிக்கை உள்ளவரை
வெற்றி உனக்கென
காத்திருப்பது நிஜமே...!
                    -- பிரவீணா தங்கராஜ் .

அன்பு மகள்

ஏழுவர்ணம் போதவில்லை
வர்ணங்களை கூட்டுகின்றாள்
அன்பு மகள்.
            --பிரவீணா தங்கராஜ்.

பெண்மையின் அழகு

தத்தித் தத்தி நடந்து வந்து
தங்கத் தமிழை நீ மொழிந்து
தாமரையாய் சிரிக்கும் பேதையழகு
குட்டிக் குட்டி குறும்புச் செய்து
கள்ளத்தனம் மறைத்து வைத்து
கதைகள் பல கூறிடும் பெதும்பையழகு
சுட்டி தனம் செய்ததெல்லாம்
சுருக்க செய்திடும் அச்சமது
சடுதியில் மாறிய மங்கையழகு
பார்த்ததை கேட்டதை உண்மையென
பிரித்து பார்க்கா  நெஞ்சமது
பாசவலையில் விழுந்துடும் மடந்தையழகு
இது சரி இது தவறுயென
இன்னது வகுத்து இன்னலை களைத்து
இதிகாசம் எடுத்துரைக்கும் அரிவையழகு
கற்று தேர்ந்த அறிவினை
கனிந்தே எடுத்துரைத்து இல்லறத்தை
காவியமாய் பேணிடும் தெரிவையழகு
ஒப்பனையும் , உடலழகும் பெரிதென
ஒப்புதலை ஏற்காது அன்பு இதயமது
ஒப்பற்ற தாய்மையே பேரிளம் அழகு
வரிகளை ஓவியமாய் வயிற்றில் பெற்ற
தாய்மையே பெண்ணினத்தின் பேரழகு
                                                        -- பிரவீணா தங்கராஜ் . 


தூது




நேரங்கள் சென்றுக் 
கொண்டே இருக்கின்றன
நாட்கள் கூடிக்கொண்டே
போகின்றன

நான் உனக்காக அனுப்பிய
காதல் தூதுகள்
எல்லாம் மகிழ்வோடு
ஏற்றுக்  கொண்டாய் ...!

ஆம்
நீயே அறியாது தான்.

மேகத்தை தூதாக்கினேன்
மழையாய் பொழிந்தவுடன்
ஏற்று கொண்டாய்.

உன் வீட்டின்
பூவை தூதாக்கினேன்
அந்த ஒற்றை ரோஜாவை
நீயே கிள்ளி தலையில்
சூடிக்கொண்டாய்...!
நீ சூடியதும் அது
என்னை பார்த்து கர்வத்தோடு
சிரிக்க வேறு செய்கின்றது.

பாடல் மூலமாக இசையோடு
தூது அனுப்பினேன்
உன் ரோஜா செவி மடல்
அந்த இசைக்கு ஏற்ப
இசைந்து கொடுத்து
ரசித்துக் கொண்டாய்...!

தூதாக அனுப்பியவை எல்லாம்
ஏற்றுக் கொண்டாய் ...!

உன்னை அறியாது
அதைப் போலவே
என் காதலையும்
சற்று விழி நிமிர்ந்து
பார்த்து ஏற்றுக் கொள் .

காதலில் சொல்லாமல்
புரிதலில் ஒரு சிறகு விரித்து
பறக்கும் மனம்
வண்ணத்து பூச்சியாய் ...!

அந்த இனிய அவஸ்தை
வேண்டுமடி அழகியே...!

         -- பிரவீணா தங்கராஜ் . 

துப்புரவாளர் - ஹைக்கூ

அருகலை இலவசமாக்கி
அத்தியாவசியம் உயர்கின்றன
அரசியல்
       ***
கழிவுகள் துப்புரவுசெய்தும்
போக மறுக்கின்றன
அறுகலை குப்பைகள் .
       ***
கூட்டிப்பெருக்கி கழுவி
சுத்தம் செய்தும் மணக்கவில்லை
துப்புரவாளர்களின் வாழ்க்கை .
                         --பிரவீணா தங்கராஜ் . 

மழலையின் மனிதம்

தின்னும் மிட்டாய் தவிர - தங்கமே
யானாலும் கூட தர துடிக்கும்
வசவுச்சொல்லி அடித்திட்ட போதிலும்
வாயிங்கேயென அழைத்திட
கணமே அணைத்திடும்
பாவ மென்ற ஒற்றை  சொல்லை
பவ்வியமாய் கூறியே பகிர்ந்திடும்
ஐந்தறிவு யென்ன அரக்கன் யென்ன
ஈகைத்திடவே செய்யும் மழலையின் மனிதம் .
                       -- பிரவீணா தங்கராஜ் .

வறுமைகள்

வெண்பட்டாடை   யுடுத்தி
கைகளில் மந்திரக்கோல் புகுத்தி
வலுக்கட்டாயமாக புன்னகை வரைந்தே
பார்த்து தோற்றுப்  போனேன்
எவ்வளவோ முயன்றும் உந்தன்
சிறகை விரித்து பறக்க தடை செய்கின்றது
நீ தலையில் சுமந்த வறுமைகள்(ல்)
விழியில் யேனடி சோகம்
ஏட்டுச்சுரைக்காய் கிட்டவில்லையென்றா
இல்லையேல் தலைமேல் சுமக்கும்
பாரத்தை தாங்கிட யாருமில்லையென்றா
மனம்தளரா பட்டாம்பூச்சியே
வாழ்க்கை சக்கரம் மாறும்
                        -- பிரவீணா தங்கராஜ்


வன்பாதங்கள் செல்லும்...



கருமை நிற மேகத்தினுள்கடக்கின்றேன் சுவாசித்தபடியே
கானல் நீர் தான்
கண்களுக்கு புலப்பட்டாலும்
கால்கள் வீரநடை போடுகின்றன
பாசங்கள் தவிக்க விட்டபோதும்
பாதங்கள் மட்டும் தளரவில்லை 
பரவசத்தை அள்ளிக்கொண்டே
பட்டங்கள் துணையோடு
பறக்கின்றேன் நம்பிக்கையோடு
நேர்பாதை செல்லும் கால்களுக்கு
நேர்மையே தோழனாக
நெடுந்தூர மென்றாலும்
நெட்டி முறிப்பதில்லை மனம்
நேசத்தை மீண்டும் தேடியபடி
உறவுகள் தளர்த்தி சென்றாலும்
உன் மனமும் உள் மனமும்
உதராதவரை உறைய மாட்டேன்
உச்சியை தொடும் வரை
உறங்கிட கண்களையும் விடமாட்டேன்
வழிகளை தேடாது  - என்
வன்பாதங்கள் செல்லும் தடமே
வழியாக மாற்றியமைப்பேன்
வசந்தங்களை வரமாக மீட்டி
வந்திடுவேன் வாழ்வினை உயர்த்தியே...!
                 -- பிரவீணா தங்கராஜ் .

கிராமம்

கொக்கரக்கோ ஒலியெழுப்பி சேவல் கூவ
கம்பிவளைவில் புள்ளிகளை சிறையிட்டோம் கோலத்தில
விடியல்களை வீட்டிற்குள்ள கதிரவன் பரப்ப
ஜல் ஜல் லென மாட்டுவண்டி சலங்கை படிக்க
சல சல வென நீரோடை வயலிலோட
சிலு சிலு வென காற்று சில்லிட செய்ய
பச்சை பட்டாடை உடுத்தியே பூமி சிரிக்க
பாதகங்கள் செய்யாதே வாழ்கின்றோம்
திண்ணை கட்டி திகட்டாது கதைப் பேசிடுவோம்
கம்மன்கூழும் பழைய கஞ்சி பசியாறிட
போதும் போதும் என்றுதானே வாழ்ந்திடுவோம்
அடுக்குமாடி யிடுக்குவீடு வேண்டவில்லை 
ஓட்டு வீடு யென்றாலும் வேப்பங்காற்று வேண்டுகின்றோம்
கணினிகுள்ளதலையை விட்டு வாழும் வாழ்கையெதுக்கு
களப்பை பிடிச்சி காலம் தள்ளும் வாழ்கையிருக்கு
பச்சரிசி சாதம் எல்லாம் தேவையில்லை
பசியாற்ற நெல் விதைச்சா போதுமுங்க
இறுக்கி பிடிச்ச ஆடை எல்லாம் இங்கில்லை
சொருகி கட்டும் தாவணி யென்றுமுண்டு
வகிடுயெடுத்து பின்னி தலைவாரும் அழகியுண்டு
மாதமொருமுறையாவது  வந்து வாழு கிராமத்தில - அதை
உந்தன் சந்ததிக்கும்  பெருமையாய் கூறு நல்ல....
                                                               --பிரவீணா தங்கராஜ் .

காதல்

இரு
கண்களின்
பிள்ளை
காதல் .
        பிரவீணா 

அவள் போலவே...

அவள் போலவே இருந்தாள்
அதற்காகவே நெருங்கி நின்று
பார்க்க துடித்தேன்
கண்களில் அதே குறும்பு
நான் திட்டும் அதே
பேய் நகம் அவள் கைகளில்
அவளின் சிறு தவறுக்கு
நான் தலையில் கொட்ட செய்வேன்
அந்த கொட்டுதலில் வலி
தலைக்குள் செல்லாது காக்கும்
அதேயடர்ந்த கூந்தல் கற்றைகள்
அதுவும் அவளுடையது போலவே
விழியகன்றாது பார்த்தேன் .
'சே, அக்கா தங்கையோடு
பிறந்திருந்தால்
பெண்ணின் அருமை புரியும் ' யென்ற
முனங்களும் காதில் விழுந்தன .
திட்டி சென்ற அவளுக்கு தெரியாது
'நான் விரும்பிய வாழ்க்கை
வாழ செல்கின்றேன்' என
எழுதி விட்டு கண் காணாது சென்ற
என் உடன் பிறப்பின் நகலாகயிருந்த
அவளை விழியகற்றாது பார்த்தேனென்று.
                                -- பிரவீணா தங்கராஜ் . 

சமூக அவலம்

' மதுவை🍷' தானே கொள்ள சொன்னோம்
' மது ' வை கொன்றே விட்டீர்களே...
மக்களாய் தானே வாழ சொன்னோம்
மாக்களாய் தானே வாழ்கின்றீர்
இறையை தேடும் குழந்தை முகத்தில்
இரையாய் தானே சுட்டு கொள்கின்றீர்
வார்த்தைகள் வரவில்லை
கோர்த்திட்ட கண்ணீரில்
உச்சம் தான் கொடுமையில்
அச்சம் தான்  நொடிகளில் ...
                          -- பிரவீணா தங்கராஜ் .

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...