மத்தாப்பூ மலரே
மத்தாப்பூ மலரே வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ உண்மை. மலரோ எட்டி எட்டி பின் இருக்கையை கண்டவள் தன் தாய் செல்வியை சுரண்டினாள். "அம்மா... அம்மா... அங்க ஜன்னல் சீட் காலியா இருக்கு போலாமா?" என்றாள். செல்வி திரும்பி பார்த்து சரியென்று சம்மதிக்க பேருந்தில் இருவர் இருக்கையில் மூவராய் அமர்ந்திருந்த மலருக்கு ஜன்னலிருக்கை அதுவும் தானும் தாயும் மட்டும் என்று சவுகரியமாக அமர்ந்தாள். "அம்மா... டவுன்ல இருக்கற பெரிய கடைக்கு தானே போறோம்" என்று மீண்டும் தன் கேள்விக்கு பதிலை தெளிவுப்படுத்தி கொண்டாள். "ஆமா டா குட்டி" என்று தாடை பிடித்து கொஞ்சினாள். "அம்மா அம்மா மருதாணி பறிச்சு வச்சியா?" என்று அடுத்த கேள்வியை கேட்டாள். இரவானால் பாம்பு பூச்சி வந்திடுமென அம்மா பறிக்க தயங்குவாரென ஏற்கனவே பறித...