பாயிரம் இன்றேல்

  பாயிரம் இன்றேல்

    

கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது. 

   கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள்.  தன் நயன விழியிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து வீட்டின் பின் பக்க கிணற்றில் ஏறி நின்றாள் ஜானவி.

     முடிவாக இறந்திட முடிவெடுத்து விட்டாயா? என்று ஓர் குரல் அவள் மூளையிடமிருந்து கேட்டது.

    'ஆமா... அப்பா பார்க்கற ஒயின் ஷாப் ஒனரை கட்டிக்கிட்டு வாழறதும் ஒன்று தான் சாவறதும் ஒன்று தான்' என்றது மனம்.

     'ஓ... அப்படின்னா சரி. நீ தானே தப்பு செய்த. அப்ப நீயே சாவு' என்று மூளை கூற மனம் திடுக்கிட்டு விழித்தது.

      'நான் என்ன தப்பு செய்தேன். அவன் தான் தப்பானவன். எத்தனை பேர் வாழ்வு அந்த ஒயின் ஷாப்ல போகுதோ. அவன் என் வாழ்வை முடிவெடுப்பதா என்று யோசித்தவள்' சட்டென குதித்தாள் கிணற்றுக்குள் அல்ல கிணற்றுக்கு வெளியே.

       என் இருபத்தி ஒன்று வயது வரை என் வாழ்வை நான் தான் வாழ்ந்தேன். இனியும் என் வாழ்க்கையை நான் தான் வாழணும். யாரோ ஒரு முகம் தெரியாதவன் அதுவும் ஒயின் ஷாப் ஆளு, பொண்ணு பார்க்க வர்றான்னு நான் சாகணுமா. இல்லை..' என்று தன் மூளை சொல்லியதன் தாக்கம் கால்களை அலம்பி சேரை கழுவி வேகமாக வீட்டுக்கு சென்றாள்.

      இழுத்து போர்த்தி நாளைக்கு தந்தையிடம் மீண்டும் மறுத்து பேசி முடிவெடுக்கணும் என்று உறங்கினாள்.

    அதிகாலையில் ஜானவி பல் தேய்க்க அக்கம் பக்கத்தில் சிலர் ஓடுவது கண்ணில்பட்டது.

    ஜானவி தாயார் மகேஸ்வரி முற்றம் தெளித்தவர் ஓடியவரில் ஒருவரை நிறுத்தி என்ன ஏதென விசாரிக்க "நம்ம சங்கவி தூக்கு மாட்டி செத்துடுச்சாம்" என்றதும் முற்றம் தெளித்த வாளியை 'தொப்'பென்று போட்டார்.

     ஜானவிக்கும் தூக்கிவாறி போட்டது.

    அவள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை கூடபயின்ற தோழி தான் சங்கவி.

      முகமலம்பியவள் தாயோடு செல்ல ஆரம்பித்தாள். மகேஸ்வரியோ வாளியை ஒரமாக வைத்து விட்டு மகளை அழைத்து கணவரிடம் கூறி சேர்ந்து புறப்பட்டனர்.

      சிவகாசி பக்கத்திலிருக்கும் ஒர் கிராமம் அது. கிராமம் என்றாலே நல்லது பொல்லது என்றால் ஒன்று கூடிடுவார்கள்.

    அதுவும் ஒரே தெரு என்றால் கேட்கவே வேண்டாம் அன்று முழுக்க பழகியதன் பொருட்டு சடலம் எடுக்கும் வரை வாசமிப்பது அங்கு தான்.

      மகேஸ்வரி மற்றும் ஜானவி வந்து வாசலில் நுழையவும் சங்கவியின் தாய் ஆனந்தியோ, "எம்மாடி பார்த்தியா உன் கூட்டாளிய. இப்படியா முடிவெடுப்பா.

       ஒரு வார்த்தை கல்யாணம் வேண்டாம்னா யோசித்து இருப்பேனே. இப்படி பாவி மக பொசுக்குனு வாழ்க்கையை முடிச்சிப்பானு கனா கண்டேனா. அய்யோ.. ஒத்த பிள்ளையா பெத்து நாங்களே பிள்ளைய சாகடிச்சிட்டோமே.' என்று ஒப்பாரி வைத்தார்.

   "என்னாச்சு அக்கா... நேத்து கூட பார்த்தேன் நல்லா தானே வாயாடிட்டு வம்பு இழுத்து சந்தோஷமா இருந்தா." என்று கேட்க ஆனந்தி கதறுவதற்கும் புலம்பலுக்கும் வழிவிட்டது அக்கேள்வி.

    "இந்தா... இந்த மனுஷன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேனு இவனை மாதிரியே ஒரு குடிகாரனை பார்த்து வச்சிருக்கான். சங்கவி நேத்து முழுக்க சொல்லுச்சு அப்பா எனக்கு இப்படி மாப்பிள்ளை வேண்டாம்னு. கேட்டுச்சா இது.

     இந்த உலகத்துல எவன் நல்லவனா இருக்கான். ஏதோவொரு கெட்ட பழக்கம் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு. இல்லை கல்யாணம் ஆனப்பிறகு சொல்லி திருத்திக்கோனு நேத்தே பூவச்சிட்டு போக வச்சான். இந்தா.. இப்ப பொணமா இருக்கறது என் பிள்ளை தானே. எல்லாம் இந்தாளை சொல்லணும்.

      கட்டிக்க போற பிள்ளைக்கு பிடிக்கணும். அது சொல்லறாப்பள மாப்பிள்ளையை பாரு. ஏதோ வேலை செய்து பொழப்பு நடத்தினா கூட பரவாயில்லை இந்த குடிபழக்கம் கொண்டவன் வேண்டானு தானே சொல்லிச்சு.

    திட்டி முட்டி பூ வச்சி சம்மந்தம் பேசி. இப்ப என் மக இந்த முடிவெடுத்துட்டாளே..." என்று கணவன் முருகனை இத்தோடு கணக்கு வழக்கில்லாமல் திட்டி முடித்தாள் ஆனந்தி.

     மகளின் வார்த்தையை விளையாட்டாய் தட்டிக்கழித்து தற்போது இறந்து போன சங்கவி காலை பிடித்து அழுது புலம்பியவரை வருவோர் போவோர் திட்டி முடிக்காது அகலவில்லை.

     ஜானவிக்கு தன் தோழி கண்ணாடியின் பேழையில் சடலமாக கிடக்க செய்வதறியது சிலையாக நம்பயியலாது கண்ணீர் வடித்து நின்றாள். 

      இதேயிடம் இன்று நானும் இருந்திருக்க வேண்டியது. என்னை தடுத்தது எது? சங்கவியை தடுக்காமல் விட்டது எது?

     சங்கவிக்கு ஒரு குடிகாரனை மாப்பிள்ளையாக பார்த்தார் அவள் அப்பா முருகன்.
  தனக்கு ஒயின்ஷாப் ஓனரை மாப்பிள்ளையாக பார்த்தார் தந்தை இளங்கோ.

      இரண்டு தந்தைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. பணத்தின் தரத்தில் ஏற்றம் இறக்கம் மட்டும் இருந்தது.

     தனக்கும் சங்கவிக்கும் வித்தியாசம் இல்லை. தானுமே நேற்று தற்கொலையை தேடி கிணற்று மதிலில் நின்றவள் தானே. ஆனால் எண்ணங்கள் சரியான நேரத்தில் தடுத்தது எது? என்று ஆராய்ந்தபடி சங்கவியின் உடலை கண்டு அழுது யோசனைக்குள் சென்றாள்.

       அந்த நேரம் தான் முருகனின் அண்ணன் 'அந்த' வார்த்தையை உதிர்த்தார்.

     என் தம்பியையே குறை சொல்லாதே தாயி. கல்யாணம் வேண்டாம்னா இந்த காலத்து பிள்ளைக்கு சொல்ல தெரியாது. எனக்கு சுடிதாரு தான் வேண்டும். தாவானி வேண்டாம்னு போன பண்டிகைக்கு எதிர்த்து நின்று பேசின சங்கவிக்கு தன்னோட வாழ்க்கையை பற்றி எதிர்த்து ஒரு குரல் உறுதியா சொல்லியிருக்கலாம்ல. அப்படி சொல்லியிருந்தா ஒரு முட்டுக்கட்டையோட என் தம்பி முடிப்பானா.

    படிச்சிருந்தா இதான் வேண்டும்னு எத்தனை பிள்ளைகள் முரட்டு பிடிவாதம் பிடிக்குது. ஏன் நல்லதுக்கு பிடிவாதம் பிடிக்க உன்ற மகளுக்கு சொல்லித்தரணுமோ. சும்மா படிக்காத பிள்ளை ஏனோ தானோனு யோசிக்காம முடிவெடுத்ததற்கு என் தம்பியை குறை சொல்லாதே." என்று அங்கே ஒர் வாக்குவாதம் ஆரம்பமானது.

     'படிச்சிருந்தா...' இந்த வார்த்தை ஜானவி மனதில் ஏதோவொரு இடத்தில் வெளிச்சமூட்டியது.

  தான் தந்தையிடம் திருமணத்தை வேண்டாமென கூறிக்கொண்டிருக்க அவர் கூறிய வார்த்தை "பொட்ட கழுதையை காலேஜில(இளங்கலை) போய் படிச்சிட்டு வந்து ஏகத்தாளமா பேசற. இதுல மேற்படிப்பு (முதுகலை) வேறயா.

    நான் பார்த்த மாப்பிள்ளை ஒயின் ஷாப் ஓனரு. இந்த காலத்துல குபேரன் பணமா அதுல தான் அதிகமா கொட்டுது. இதுல அரசாங்கம் பார் வேற. பிறவுயென்ன உன் மகளை தங்கம் வைரம் போட்டு மினுக்கிட்டு ஊரை வலம் வரச்சொல்லு." என்று இளங்கோ கூறியது.

   அதை மீறி தான் ஜானவி முடிவாக, "நீ பார்க்கற அந்த ஒயின் ஷாப் ஆள் வந்தா கட்டிக்க மாட்டேன் பா. கல்யாணத்தப்ப மேடையில மாலையை விசிறியெறிவேன். செய்ய மாட்டேனு நினைக்காதே பா. பிடிக்கலைனு சொல்லிட்டேன். நீ வற்புறுத்தினா அப்படி தான் பண்ணுவேன். வேற மாப்பிள்ளையே இல்லையா உனக்கு. கௌரவமா சம்பாதிக்கறவங்க உன் கண்ணுலப்படலை. அதை மீறி பண்ணினா. நான் என்ன முடிவெடுப்பேனு எனக்கே தெரியாது." என்று நேற்று இளங்கோவோடு தான் கத்திய வாதங்களை எண்ணி பார்த்தவள் ஆண்கள் இருக்கும் இடத்தில் தந்தையை நோக்க, அவருமே ஜானவியை தான் கண்டு தலை குனிந்தார்.

     இளங்கோ மகேஸ்வரியை அழைத்து மகளை வீட்டுக்கு அழைத்து போக சொல்ல மகேஸ்வரி வந்து தனியாக அழைத்து "வீட்டுக்கு போகலாம்" என்றார்.

   "என் பிரெண்ட் மா. காலேஜ்ல என்னோட படிக்கணும்னு ஆசைப்பட்டவள். அவளோட சூழ்நிலை காரணமா பத்தாவது படிச்சிட்டு பட்டாசுக்கு மருந்து சுத்த போயிட்டா. அவளை படிக்க வச்சிருந்தா என்னோட காலேஜிலும் சேர்ந்து தற்கொலையை பண்ணறதுக்கு முன்ன ஒரு முறை என்னைய மாதிரி யோசித்து இருப்பா. தற்கொலை பண்ணாம திரும்பி இருப்பா. படிக்கவும் விடலை. பிடிச்சமாதிரி மாப்பிள்ளையும் பார்க்கலை. விடுங்க... அவளை எடுக்கற வரை இங்க இருக்கேன்." என்று தாயை மீறி சென்றாள்.

   மகேஸ்வரிக்கு திக்கென்றானது. மகள் தற்கொலை பற்றி யோசித்தாளாயென்று.

      மதியமே உடலை தகனம் செலுத்த ஏற்பாடு செய்து பூக்களின் வழிபாதையில் சங்கவியை கூட்டி சென்றனர்.

      வீட்டிற்கு வந்து குளித்து முடித்து தலை விரித்து முழங்காலிட்டு தன் தோழியின் மரணத்தை மறக்க இயலாது தவித்தாள்.

    என்ன முட்டாள் தனாமா முடிவெடுத்துட்டா. சுடிதாரு வேண்டும்னு அன்னிக்கு அடம்பிடிச்சி இருந்தவ மாப்பிள்ளை வேண்டாம்னு அடம் பிடிக்க என்னவாம். பேசற சமூகம் வெறும் பார்வையாளரா தானே இன்னிக்கு பார்த்துட்டு போனாங்க. இதே அவள் ஒரு முறை யோசித்து தற்கொலை செய்யாம இருந்தா என்னவாம்.' என்று நேற்று தானும் அந்த நிகழ்வை நோக்கி சென்று திரும்பி வந்ததை உணராது திட்டினாள். என்ன திட்டி என்ன புரோஜனம். திரும்பி வர முடியுமா? என்று கோபமாக இருந்தாள்.

    ரோட்டில் யாரோ ஒரு பெண் தலையிலடித்து "யோவ் எதுக்கு யா குடிச்சிட்டு விழுந்து கெடக்க. வீட்டுக்கு வாயா." என்று அழும் சத்தம் கேட்டது.

    இதை கண்ட ஜானவிக்கு கோபம் அதிகரித்தது. "இந்த ஒயின் ஷாப் கடையால எத்தனை பெண்களோட வாழ்வு போகுது. என்னவோ இவனுங்களை திருத்த நாம பிறந்தவங்க மாதிரி. ஆண்கள் குடிச்சா கூட பெண் அடங்கி போயி காலில் விழணும். எனக்கு வர்ற கோபத்துக்கு நெஞ்சுல நாளு மிதி மிதித்து கல்லை தூக்கி தலையில போட்டு சாகடிச்சிடுவேன்.

     அப்படி அதிகமா சாவு வந்தா தெரியும் அவனவன் குடிக்க பயந்து வீட்ல ஒழுங்கா இருப்பான். அடங்கி ஒடுங்கி இருக்கணும்னு கட்டுப்பாட்டு போட்டே இவனுங்க தொல்லை தாங்க முடியலை. இதுல எவனும் நல்லவன் இல்லைனு உதாரணம் வேற. ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தா என்ன என்று நிலமை மாறி போய் இருக்கு.

     இந்த லட்சணத்துல எனக்கு ஒயின் ஷாப் ஒனரு மாப்பிள்ளை.

     நேத்தே என் வாழ்க்கையை முடிக்க போனேன். சின்னதா ஒரு யோசனை நான் ஏன் சாகணும்னு. நான் யோசித்தேன். சங்கவியும் படிச்சிருந்தா ஒரு முறை யோசித்து இருப்பா. படிக்கலைனா கூட தெளிவான முடிவெடுக்க திடமான ஒரு சப்போர்டா யாராவது இருக்கணும். எனக்கு யாருமில்லைனாலும் படிப்பு இருக்கு" என்று கத்த ஆரம்பித்தாள்.

      "நாளைக்கு போறேன்.. இந்தவூர் கலெக்டருக்கு மனு கொடுக்க, ஒயின்ஷாப் எடுக்க சொல்லி. அதுவும் எனக்கு பார்த்தவனுக்கு எதிரா." என்று நாற்காலியில் திடமாக உட்கார்ந்து பதில் உரைத்தாள்.

    "கண்ணு... எதுவும் செய்யாதே. நீ நேற்று பேசியது மனசுல உரைக்கலை. ஆனா இன்னிக்கு நடந்ததும் நடக்கறதும் அப்பாவுக்கு புரியுது டா. நான் இனி அந்த ஒயின் ஷாப் ஆளை கட்டிக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்.

    சங்கவி இடத்துல இன்னிக்கு நீ ஒர் கணம் வந்து போயிட்ட தாயி. நீ என் குலசாமி. ஏதோ வருமானம் அதிகமா வர்ற வியாபாரமாச்சேனு யோசிச்சேனே தவிர. மற்ற குடும்பத்தை யோசிக்கலை.

    நீ சொன்ன மாதிரி எத்தனை பேர் வாழ்க்கையில சாபத்துல இந்த வியாபாரம் நடக்குது. அதனால திருமணத்தை நானே நிறுத்திடறேன். அதுவும் காரணத்தை கூறியே நிறுத்தறேன். நீ போய் தூங்கு ஆத்தா. நீ கேட்ட மாதிரி படி டா" என்றார் இளங்கோ.

   ஜானவிக்கு இருக்கும் கோபத்தில் பாதி குறைந்தது.

    மீதி கோபத்தை காட்ட மனு எழுதி கையெழுத்து வாங்கி, அந்தவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அடுத்த நாள் கிளம்பினாள்.

    வராண்டாவில் கையில் மனுவை வைத்து அதே சீற்றத்துடன் இருந்தவளை ப்யூன் அழைக்க உள்ளே நுழைந்தாள்.

    அலைபாயும் கேசம் கொண்டு கண்ணில் கூர்மையோடு விஸ்வா உட்கார கூறினான்.

     "சார் எங்கவூரில் இருக்கற ஒயின் ஷாப் மூடணும். அதுக்கு பலரோட கையெழுத்து வாங்கி வந்துயிருக்கேன்." என்று இன்னமும் குடிப்போதையால் தங்கள் ஊரில் எத்தனை அவலம் நேர்ந்ததை அடுக்கி கூறி மனுவை நீட்டினாள்.

    விஸ்வா அதனை வாங்கி படித்து முடித்து, "விரைவில் இதுக்கு முடிவெடுக்கறேன் மிஸ் ஜானவி." என்றான்.

    "தேங்க்ஸ் சார்" என்று எழுந்தவள் "என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும். ஓ.. அதுல பெயரை பார்த்திங்களா?" என்றாள்.

    "நோ நோ. நேற்று நைட் நீங்க உங்க வீட்ல தற்கொலை முயற்சி பண்ண கிணற்றுல ஏறினிங்களே. அப்பறம் திடீரென ஞானோதயம் வந்து இறங்கி வீட்டுக்கு போனிங்க. அப்ப பார்த்து என் பிரென்ட்கிட்ட கேட்டேன்.

    அப்ப காரணமும் சொன்னான். என்னவோ இதே ஊருல டீச்சரா வேலை செய்வது கனவாமே. நைஸ்" என்றதும் திருதிருவென முழித்தாள்.

   "என்ன வருங்காலத்து மேல கமபிளைன்." என்றான் விஸ்வா. அதிலே எல்லாம் தெரிந்தவனாக இருக்க நக்கலாக பதில் தந்தாள்.

     "ம்ம்... வருங்காலம் நிறைய பேரோட இறந்த காலமா மாற்றம் பண்ணறதால. நிகழ்காலத்துலயே சுதாரிக்க செய்துட்டேன். இனி வருங்காலமா அந்த ஒயின் ஷாப்பும் வேண்டாம் ஒயின் ஷாப் ஆளும் வேண்டாம்னு." என்று துடுக்காக மொழிந்து செல்ல முற்பட்டாள்.

அவள் கூடவே வெளியே வந்து, "இது என்னோட பிரேக் டைம் அதனால பெர்சனல் பேசலாம். உங்க வருங்காலத்த என்னிடம் கொடுக்க முடியுமா. பத்திரமா இங்க வர்ற மனுக்கள் மாதிரி சேமித்து நடவடிக்கை எடுப்பேன். இது ஜஸ்ட் நேற்றும், இன்றும் உங்களை பார்த்த அபெக்ஷன் தான். ஆனா திருமணத்துல கொண்டு போக ஆசைப்படறேன். மனுவா கொடுக்காம நேரில் சொல்லிட்டேன். நிராகரிப்பதும் ஏற்பதும் ஜானவியென்ற டீச்சர் கையில தான் பதில்." என்று கூற அதே நேரம் மகேஸ்வரி மூலமாக தனியாக இங்கு வந்த மகளின் வருகையறிந்து இளங்கோ வந்து கேட்டு முடித்தார்.

    மகள் திருதிருவென முழிக்க விஸ்வாவை கண்டார்.

       பிறகு "அப்பா" என்று ஜானவி இளங்கோ அருகே சென்று பதில் சொல்லா நிலையில் இருந்தாள்.

    "இந்தவூருக்கு நீங்க வந்தப்பவே உங்க நல்ல குணம் கேள்விப்பட்டேன் தம்பி. இன்னிக்கு நீங்க மகளிடம் பேசியதில்... உங்க விருப்பம் புரியுது. எதுக்கோ மகளிடம் கேட்டுட்டு பதில் சொல்லறேன். ஒரு முறை கேட்காம முடிவெடுத்து என் மக கிணறு வரை ஏறியிருக்கா. ஆமா தம்பி நேற்று பெய்த மழையில என் மகளோட காலடி தடம் இருந்தது. அதனால எந்த முடிவும் அவளோட கலந்தாலோசித்து தான் இனி எடுக்கப்போறேன். ஏன்னா இது அவ வாழ்க்கை. நிச்சயம் நான் முன்ன பார்த்தது மாதிரி மறுப்பு தெரிவிக்க மாட்டானு நம்பறேன்." என்றதும் ஜானவி தந்தையறியாது சின்னதாய் வெட்கம் படரவிட வணக்கம் வைத்து திரும்பினார்கள்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

    

  

   

     
 
     

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு