குலானின் கை வண்ணம்

   குலானின் கை வண்ணம்


  லட்சுமி பாத்திரத்தை டம் டும் என்று வைத்து அம்மியில் வேர்கடலை துவையலை அரைத்து கொண்டிருந்தாள்.

      ''இந்த கரண்ட் கண்டுபிடிச்ச காலத்துலயும் நான் இந்த அம்மி கல்லுல அரைச்சிட்டு கிடக்கேன். அதுக்கு காரணம் நீ தான் யா." என்று கணவன் கணேஷை வைதவாறு லட்சுமி கத்திக் கொண்டிருந்தாள்.

    "பொழைக்க தெரியாத ஆளை கட்டி வச்சிட்டு எங்கப்பன் நிம்மதியா போய் சேர்ந்துட்டார். நான் இன்னமும் உன்னான்ட மாட்டிட்டு அல்லல்படறேன்." என்றவர் மகளிடம் "ஏய் கயலு தண்ணி கொண்டா துவையலுக்கு விட்டு அரைக்க" கூறி முடித்ததும் அஞ்சாங்கல் பொறிக்கு விளையாடி கொண்டிருந்த கயல்விழி தண்ணீரை கொண்டு வந்து வைத்து ஓட பார்த்தாள்.

    "ஏன்டி கொஞ்சம் கல் உப்பு எடுத்தா. ஒரு காஞ்ச மிளகாய் கொண்டா. கராம் பத்தலை" என்று ஏவவும் கயல் விளையாட்டை தடுக்கின்றாரே தாய் என்று கொஞ்சம் வாடிப்போனாள்.

     உப்பு மிளகாய் எடுத்து வந்து நீட்டி விளையாட போக அதற்குள் தன்னோடு விளையாடிய மலர் அவள் வீட்டுக்கு சென்றிருக்க தந்தையருகே வந்தமர்ந்தாள்.

     "நான் சொல்லற மாதிரி பானைய செய்து கொடுத்து சம்பாரிக்கற வழியை பாருயா. நீ பட்டினி இரு யாரு வேணாம்னா. இந்தா பன்னிரெண்டாகுது இதுக்கு. இந்த ரசம் துவையலுனு சாப்பிட கொடுத்தா அது வலுவா இருக்குமா." என்று சொன்னதும் கணேஷை புரியாது பார்த்தாள் கயல்.

     கணேஷோ இத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் "என்ன லட்சுமி நான் என்ன பானை செய்யாமலா இருக்கேன். செய்தது எல்லாம் பாரு அடிக்கி வச்சிருக்கேன்.

   மற்றவங்க பானையில குழாயை வச்சி வியாபாரம் பார்க்கறாங்க தான். ஆனா அது நீடிக்காது மா. அந்த பிளாஸ்டிக் குழாயை சொருகினா அதோட பிடிமானத்துல திருகும் பொழுது அது கொஞ்சம் கைஞ்சமா லூஸ் விட்டுடும் புள்ள.

     தெரிந்தே செய்யறது எப்படி புள்ள. மனசு குத்துதுல. மத்தவங்க செய்யறாங்கனு நாமளும் டிசைனை மாற்றினா அது அபயோகப்படுத்தற நாள் நீட்டிக்காது. பானையா அய்யோ அது வேஸ்டு என்று வாங்கற கொஞ்சநஞ்ச ஆட்களும் வாங்க மாட்டாங்க." என்று எடுத்துரைத்தான்.

     லட்சுமி வடித்த சோறையும் இரசத்தையும் வைத்து துவையலை நீட்டினாள்.
   
    கயலோ "அப்பா பானையில தண்ணி ஊத்தி வெயிலுக்கு சில்லு குடிக்கிறவங்க. அதோட பயனை தெரிந்து வைச்சியிருக்க மாட்டாங்களா.

இப்ப எங்க மிஸ்ஸெல்லாம் ஒரு பொருளோட பயன் பண்பு நலன் அதோட பாதிப்பு அதனால ஏற்படும் நலன் இப்படி தான் பாடம் நடத்துவாங்க.

நீயும் அது போல எழுதி வைச்சிட்டா அதை படிச்சு தெரிந்து குழாயை விட சாதரண டிசைன் கொண்ட பானையை வாக்குவாங்க தானே. யாரும் அது சரியில்லை இது சரியில்லை என்று கூற மாட்டாங்க. எழுதி பார்த்ததை படிச்சி வாங்குவாங்க. அதோட தன்மை அறிந்து வாங்கறதால அவங்களும் ஏமாறலை. நீயும் உண்மையா விற்ற மனதிருப்தி கிடைக்கும்ல. அது மட்டும் இல்லை பா. டேப் வைச்ச பானை மட்டும் இல்லை. எங்க மிஸ் வாட்டர் பாட்டில் கூட வச்சிருக்கிங்க. நீ அது மாதிரி செய்யுங்க அப்பா. பானையில டிராயிங் வரைந்து கலர் கொடுக்கலாம். நிறைய ஐடியா இருக்கு பா." என்று கயல் ஐடியா அலமுவாக மாறி யோசனை தந்தாள்.

     "டேய் குட்டிமா அப்பா என்ன பெரிய கடையா வச்சியிருக்கேன். ரோட்டுல வச்சி பிழைப்பு நடத்துறோம். இதுல எங்க எழுத. கலர் அடிக்க எல்லாம் நான் ஓவியன் இல்லையே..." என்று சலித்தார்.

    "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அப்பா. எங்க ஸ்கூல்ல சார்ட் ஒர்க் செய்வாங்க. நான் அதுமாதி எழுதி தர்றேன். நீ உன் கடை போடற இடத்துல பானைகளுக்கு நடுவுல அந்த சார்டை வச்சிடலாம். அது சுலபம் தானே. அதுக்கு நீ ஷர்வன் ஸ்டோர் அண்ணாச்சியா இருக்கணும்னு அவசியமில்லையே அப்பா." கிலுக்கி சிரித்தவள் மேலும்,
    "அதுவுமில்லாம டிராயிங் பண்ணறது சுலபம் அப்பா. நீ சின்ன சின்ன டிசைன்ல பெயின்ட் ஒர்க் பண்ணிடலாம். மண்ணுல வெவ்வேறு வடிவத்துலயும் செய்யலாம். மண் தானே அப்பா. நாம என்ன செய்தாலும் நம்ம கை பழக்கம் தானா வரும்" என்றாள்.

     "அடசின்ன வாலு யோசனை நல்லா தான் இருக்கு. எழுதி கொடு. வச்சி பார்த்து வியாபாரம் பண்ணி பார்க்கறேன்." என்று கணேஷ் பதில் தந்தார்.

     அன்றைய இரவு கண் விழித்து, கயல் செய்து கொடுத்தாள்.

   கயலின் தரத்தில் போர்டு பளிச்சென மிளிர்ந்தது. பள்ளியில் முதல் மாணவி அவளின் திறமை நேர்த்தியான எழுத்தில் புலர்ந்தது. காலை வெயிலும் அழகாய் விடிந்தது.

   கயலை பள்ளியில் விட லட்சுமி செல்லவும் கணேஷ் வண்டியில் பானையை ஏற்றி சந்தை கூடும் இடத்தில் அடுக்கி வைத்து கயலின் கை வண்ணத்தில் மிளிரும் சார்ட் போர்டை வைத்தான்.

     பத்து மணிக்கு மேல் போவோர் வருவோர் பார்த்து பார்த்து போனார்கள். கணேஷ் சோர்ந்து அமர்ந்தான்.

     மாலை நான்கு மணிக்கு பள்ளியில் லட்சுமி அழைக்க வர அவளுக்கும் முன்னாக கணேஷ் நின்றிருந்தான்.

    கையில் கயல் நீண்ட நாளாக கேட்ட டைய்ரி மில்க் சாக்லேட்டும் ஹீரோ பெண்ணும் வைத்திருந்தார்.

      "என்னங்க பொழப்பை பார்க்க போகலையா இங்க இருக்கிங்க." என்று லட்சுமி கொஞ்ச நஞ்ச வருமானத்தையும் விட்டு விட்டு மனுஷன் இங்கே இருக்காரே என்று பதறினாள்.

     அதற்குள் கயல் தன் தோழியோடு பள்ளி முடிந்து வாசலில் வர என்றும் தாய் மட்டும் அழைத்து செல்வது வழக்கம். இன்று தந்தையும் இருக்க தோழியிடம் பை சொல்லிவிட்டு தந்தை தாய் நோக்கி ஓடிவந்தாள்.

     "ஏலே கயல் குட்டி நீ சொன்ன யோசனை படி பானையை அடுக்கி வச்சேன். போர்டை நடுவுல வச்சேன். முதல்ல காய்கறி வாங்க வந்த சந்தையில எல்லாரும் பார்த்துட்டே போனாங்க புள்ள. திரும்ப வந்ததும் வாங்கிட்டாங்க. சிலர் போகறப்ப வாங்க இருந்தாங்களாம். பானை வித்திட்டதும் ஆர்டர் கொடுத்து இருக்காங்க. பதிமூன்று பேர் கேட்டு இருக்காங்க. இதுல புதுசா இட்லி பானை மாதிரி கேட்டு இருக்காங்க. அதான் புரியலை... வித்தியாசமா இருந்தா கூட ஓகே எத்தனை வருடம் உபயோகப்படுத்தலாம்னு சொல்லுங்கனு கேட்டுக்கறாங்க. இந்தா கயலு உனக்கு இது." என்று வாங்கி வந்த பேனா சாக்லேட்டை நீட்டினார் கணேஷ்.

     "அதுக்கா அப்பா பீல் பண்ணற உன்னோடதுல நெட்டு போடு நான் மண்ணுல என்னவெல்லாம் செய்யலாம்னு குகூள்ல போட்டு காட்டறேன். உங்களுக்கு தெரிந்தா செய்யுங்க. முதல் வாட்டர் பாட்டில் செய்தா எனக்கு தான் அது." என்று முன் பதிவாக தனக்கு ஆர்டர் தந்து ஆலோசனையும் வழங்கினாள்.

      லட்சுமி வாயை பிளந்து மகளை காண தந்தையும் மகளும் தொழிலை மேம்படுத்த வண்டியிலே கலந்தாய்வு செய்ய லட்சுமி ஏதோ தங்களின் வாழ்வு மாற்றம் பெறும் என்ற நம்பிக்கை சிறிதாய் வந்தது.

-முற்றும்
-பிரவீணா தங்கராஜ்.

    

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு