குளம்பி வாசம் வீசுதே

    குளம்பி வாசம் வீசுதே


    தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.

       கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.

     அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.

    இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள். அன்றைய நாட்களை இன்றும் நினைவு சாரலில் மீட்டெடுத்தாள்.

   சின்னதாய் துளிதுளியாய் மழை பொழிந்திருக்க அதில் நனைந்தாள் ஸ்ரீமதி.

      கூடவே தந்தை சிவம் செய்து கொடுத்த கப்பலை நீரில் வைத்து அது செல்லும் பக்கம் தானும் பார்த்துக் கொண்டே, எதிரே வருபவரையோ சுற்றி இருப்பவரையோ கூட அறியாமல் அதன் போக்கில் சென்று ஒரேயிடத்தில் ஒர் சிறுவனின் தலையில் இடித்து நிமிர்ந்தாள்.

     அவனும் ஸ்ரீமதி போல கப்பலை விடும் நோக்கத்தில் அவளை பார்க்காமல் இடித்து கொண்டான். நிமிர்ந்து இருவரும் முறைத்து கொள்ள, இருவரின் கப்பலும் ஒரே நேரத்தில் அந்த மேடான தெருவிலிருந்து கீழிறங்கும் பாதையில் கப்பல் அடித்து செல்லப்பட்டது.

      'உன்னால தான் என் கப்பல் முழ்கிடுச்சு.' என்று மாறி மாறி கூறிக்கொண்டு சண்டையிட, மழையாலான ஈரப்பதம் சொதசொதவென இருக்கவும் அதில் சதக்சதகென்று காலையூன்றி அடித்து கொண்டனர்.

    இருவரின் பெற்றோரும் வந்து தடுத்து, ஸ்ரீமதி தந்தை சிவமும், கிருஷ்ணா தந்தை விவேக்கும் ஒரே மொழி தமிழ் என்றதில் நட்பானார்கள்.

     பின்னர் வீட்டுக்கு வந்து கிருஷ்ணாவின் அம்மா கமலமும், ஸ்ரீமதி தாயார் சுந்தரியும் தோழியாக மாறினர். 

பெரியவர்கள் நட்பாகலாம், சிறியவர்கள் அதே கடுகடுவென மழைக்கு செய்த மிளகாய் பஜ்ஜியாக காரமாகவே திரிந்தனர்.

     இரண்டு வருடம் அடுத்த  தெருவில் கிருஷ்ணன் வீட்டுக்கு  விளையாட செல்வாள் ஸ்ரீமதி. எப்படியும் பாதி நேரம் நல்லதாய் செல்லும் பிறகு சண்டையில் முடிய கிருஷ்ணாவை அடித்தோ அல்லது கடித்தோ ஓடி வந்திடுவாள்.

       கிருஷ்ணா அலறலில் இரண்டு நாள் அவன் வீட்டுக்கு முழுக்கு போடுவாள். அதன் பிறகு சண்டை மறந்து செல்வாள். இல்லையேல் கிருஷ்ணா இவளின் வீட்டுக்கு வந்து விளையாட வந்து நிற்பான்.

     மூன்றாம் வருடம் ஸ்ரீமதி பாட்டி  ஊருக்கு வந்து கிராமத்திலே வாழ ஆரம்பித்தனர். கிருஷ்ணாவை அதன் பின் மறந்தே போனாள். அவனுமே... ஆனால் பெற்றோர்கள் போனில் பழக்கத்தை வளர்த்தனர்.

     மொழியறியா ஊரில் மூன்று வருட பழக்கம் உறவினராக கருத வைத்தது. அதன் தொடர்ச்சியே மாதத்தில் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தொலைப்பேசி அழைப்பில் நலன் விசாரிப்பில் நிறுத்திக் கொள்வார்கள்.

     அன்று கிருஷ் மீசை அரும்பிய வயதில் முதல் முறையாக சென்னைக்கு காலடி வைத்தான். அதுவும் வந்த இரண்டாம் நாளே ஒரு கிராமத்திற்கு செல்ல காரில் கிளம்பினான்.

   வயலினை கண்டு குதுகலமாக வந்தான். நடுவிலே பெரிய பள்ளத்தில் கார் மாட்டிக்கொண்டு வெளியேற பஞ்சராகியிருந்தது.

மூவனும் இறங்கிட தந்தை விவேக் ஸ்டெப்னி மாட்டிக் கொண்டிருக்க, மழை சின்னதாய் தூறியது.

   கிருஷ்ணா சற்று தூரத்தில் இருக்கும் மல்லிப்பூ தோட்டமருகே சென்று வருவதாக ஓடினான்.

    ''கிருஷ்ணா..  பார்த்து... அங்க பூச்சி ஏதாவது இருக்க போகுது என்ற கமலம் கூறவும் "பார்த்துக்கறேன் மா" என்றான் வளரும் காளையவன்.

      சுற்றி சுற்றி மல்லிப்பூ மணம் வீச, அதில் லயித்து நுகர்ந்தான். இமை மூடி கையை இருபக்கமும் விரித்து சுற்றி முடிக்க, யாரின் மீதோ கைப்பட்டு விழித்திறந்தான்.

    ஆனால் அதற்குள் தன் மேல பாதிக்கு விழுந்திருந்தாள் பெண்ணொருத்தி.

    விழுந்த வேகத்தில் நெற்றி முட்டி கிருஷ்ணா வலியில் கை வைத்து நிமிர அவளோ அழுகையில் சிதறியிருந்த பூக்களை தன் பாவாடையில் சேகரிக்க ஆரம்பித்தாள்.

     தன்னால் பூக்கள் கீழே சிதறியதற்கு அழுகின்றாளென கிருஷ்ணா, "சாரி சாரி நான் தான் பார்க்கலை" என்று மன்னிப்பு வேண்டி நின்றான்.

     பெண்ணவளோ பூவை மடியில் பாவாடையில் எடுத்து வைத்தவள் அழுகையை நிறுத்தவில்லை.

     "ஹலோ... உன்னை தான் பாப்பா. நான் தான் சாரி கேட்டுட்டேனே எதுக்கு அழுவுற...?" என்றான். பதினாறில் அடியெடுத்து வைக்கும் அவனின் பார்வை தன் வயதொத்த பெண்ணை கண்டு அவளை தன்னில் சிறியவளாக எண்ணி பாப்பா என்றான்.

    "யாருக்கு யார் டா பாப்பா. போ அங்குட்டு" என்று மூக்குறிந்து கொண்டே திட்டினாள்.

     இதுவரை மரியாதையின்றி யாரும் பேசியதில்லை. இது சற்று வித்தியாசமாகப்பட்டது. தன் தவறென்று அமைதியாகி அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

     இரட்டை சடை, பாவாடைசட்டை, அழுது வீங்கிய பண் கன்னம், கண்கள் எதையோ பறிக்கொடுத்த இழப்பு, இப்பொழுது தான் மெல்லினம் கண்டிருந்த உடல்வாகு. மல்லிப்பூவை தாங்கியிருந்த பாவாடையால் முட்டி கீழ் மழையால் காலில் ஒட்டியிருந்த மழைத்துளிகள் என்று பார்த்து முடிக்க, "கிருஷ்ணா டயர் மாற்றியாச்சு எங்க இருக்க?" என்ற கமலத்தின் சத்தம் கேட்டு, இதோ வந்துட்டேன் மா." என்றான்.

     கிருஷ்ணா என்ன நினைத்தானோ அவளின் டா என்ற அழைப்புக்கு பதில் தராமல் செல்ல பிடிக்காமல், அவளின் சடை இழுத்தான்.

    கையோடு அவளின் ரிப்பன் வந்து விடவும் அதை கையில் சுற்றி தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்து கார் இருக்கும் திசைக்கு ஓடினான்.

     தங்கள் யார் வீட்டுக்கு வர வேண்டி வந்ததோ அவர்கள் வீட்டுக்கு வந்ததும் கமலம் சுந்தரியை அணைத்து ஆறுதல்படுத்த  ஆரம்பித்தாள்.

     சுந்தரியின் மாமியார் இறப்புக்கு தான் கிருஷ்ணா குடும்பம் வந்திருந்தது.

   விவேக் சென்னை வந்ததும் சிவத்திற்கு போன் செய்ய அவன் தன் தாய் இறந்த செய்தி அறிய நேர்ந்தது.

   இரண்டு நாள் ஆனபோதும் சிவத்தின் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு வந்து ஒர் எட்டு பார்த்திட வந்தார்கள்.

      "மழை விட்டு விட்டு பெய்யுது. எல்லாரும் வந்தாச்சுன்னா பாடியை எடுத்திடலாம். நேரம் போயிட்டே இருக்குல." என்று காரியம் செய்வோர் கூறவும், மனைவியை பறிக்கொடுத்த சிவத்தின் தந்தை தோளில் போட்டிருந்த துண்டை வாயில் கடித்து அழ ஆரம்பித்தார் ஆதிசிவன்.

    "எல்லாரும் வந்தாச்சுயா. நீங்க ஆரம்பிங்க. பாவி மக நான் போனப்பிறகு போவானு பார்த்தா சுமங்கலியா போவேன்னு எனக்கு முன்ன போயி என்னைய அநாதையா ஆக்கிட்டா." என்றார்.

    கிருஷ்ணாவுக்கு சின்ன மழையில் நனைந்தபடி, காரியம் செய்வதை வேடிக்கை பார்த்திருந்தான். அவனுக்கு இதுவரை இது போன்று இறந்தவரின் வீட்டுக்கு வந்து பார்த்ததில்லை அதனால் கூடுதலாகவே ஆர்வமாக பார்த்தான்.

    "ஏய் சின்ன குட்டி என்ன பண்ணுது. கூப்பிடு அவளை பேத்தி முறை செய்யணும்ல" என்று கூப்பிடவும் "ஆச்சி... ஆச்சி... நீ கேட்ட மல்லிப்பூ ஆச்சி... உனக்கு நம்ம தோட்டத்துல பறிச்சேன். வாசம் வீசுதா... உனக்கு பிடிச்ச மாதிரி ரவுண்டா மாலை மாதிரி என் கையால கட்டியிருக்கேன். தாத்தா இந்தா ஆச்சிக்கு வச்சிவிடு." என்று நீட்டினாள்.

     உயிருரோடு இருக்கும் பொழுது வைக்க வற்புறுத்தி தாத்தாவை ஆச்சியை காதலர்களாக சீண்டி விளையாடிம் ஸ்ரீமதி இன்று வைக்க சொல்லி அழவும், மறுக்காது வைத்து அழகு பார்த்தார்.

      கிருஷ்ணா மழையில் அடிக்கடி துடைத்து ஸ்ரீமதியை பார்த்தவன், வரும் பொழுது இவளை தானே பார்த்தோம் என்பதாய் பேக்கெட்டில் ரிப்பனை எடுத்து பார்த்து மறைத்து கொண்டான்.

    நான் பார்த்து விட்டேன் என்று வானத்திலிருந்து மழைத்துளி அதில் நனைந்திட வேகமாக அதனை தன் பேக்கெட்டில் மறைத்தான்.

        கிருஷ்ணா கண்கள் ஸ்ரீமதியின் அழுகையை தான் விழியசைக்காது பார்த்தான்.

     அவனின் மனதிற்கு, இவ அழுவறதில் தான் வானம் தாங்கிக் கொள்ளாமல் அதுவும் இவளோடு மழையாக பொழிகின்றதா... என்று மீசை முளைத்த கத்துக்குட்டி கவிஞனாக வார்த்தையில் வடிக்க தெரியாது  நின்றான்.

      கிருஷ்ணா பார்வை ஸ்ரீமதியை வட்டமிட்டு இருக்க அவளின் செய்கை ஒவ்வொன்றும் அவனுக்கு வித்தியாசமாகப்பட்டது.

     இந்த இடத்தில் காதல்(?) ஹார்மோன் வேலை செய்யுமா? என்றால் பதில் அங்கிருக்கும் கிருஷ்ணனிடம் கேட்டு அறியலாம்.  அதற்கு காலை நேரமோ இங்கிதமோ கிடையாது. அதுவும் பருவத்தின் முதலடியில் இருப்போருக்கு... இழவு வீட்டிலும் ஏஞ்சல் சுற்றும்.

    அவன் கண்களுக்கு ஸ்ரீமதி அப்படி தான் தனித்து தெரிந்தாள். பாட்டியை தூக்கி கொண்டு செல்லும் பொழுது ஸ்ரீமதியின் கண்ணீர் அதிகமாக மழையும் பெரிதானது.

     உடலை அமரர் ஊர்தியில் இருக்க இடுகாடு நோக்கி சென்றது.

     "ஏய் பிள்ளை அழுவுறதை நிறுத்து. நீ அழுதழுது உங்க தாத்தா கலங்குது." என்ற ஊர்காரர்களின் மூதாட்டி பேச வீட்டுக்குள் ஓடினாள்.

     கிருஷ்ணாவுக்கு அவள் அழுவதை நிறுத்த மாட்டாளா என்று கலங்கி போனான்.

    அடுத்தடுத்து ஏறக்கட்ட வந்தவர்கள் செல்ல, வீட்டில் ஆட்கள் குறைவாக மாறவும், வீட்டிலிருந்தோர் குளித்து சுத்தம் செய்து முடித்திருந்தனர்.

     கமலம் சுந்தரி மடியில் படுத்திருந்த ஸ்ரீமதியின் தலையை தடவி, "நல்ல வளர்ந்துட்டா மதி குட்டி... மதி எங்களை தெரியுதா..?" என்று கமலம் கேட்டதும் 'ஙே' என விழித்தாள்.

    சின்னதுல பார்த்தது ஆறு வருஷம் ஆச்சே.. ஆளே மாறிட்டா." என்றதும் சுந்தரி கிருஷ்ணாவோட அம்மா டி கமலம் ஆன்டி... மதுரால இருந்தோமே நினைவுயில்லை" என்றிட விழித்து சிரிக்க முயன்றாள்.

     மெல்ல நழுவி திண்ணையில் அமர்ந்தாள். மழை விடவில்லை இருந்தும் காலை நனைத்தபடி ஸ்ரீ இருந்தாள். அவளின் கால் கீழே ஓடும் மழை நீரில் சலசலத்தது.

    பேப்பர் கப்பல் ஒன்று அவள் காலில் வந்து உரசவும், அதனை எடுத்து பார்த்து திரும்ப யார் கப்பல் விட்டது எட்டி எட்டி பார்த்தாள்.

     திண்ணையில் மறுமுனையில் மழையில் நனைந்து யாரோ பதுங்குவது அறிந்து அவ்விடம் வர கிருஷ்ணா எழுந்து நின்றான்.

     அன்னை பேசியதை அவனும் கேட்டான் தான் ஆனால் அவனுக்கும் ஸ்ரீமதியை நினைவில்லை.

    அதுவும் ஒடிசலாக விளையாடிய நிழலுருவில் இவளை தற்போது இணைத்து பார்க்க அவள் மாறியிருப்பதை கண்டான்.

      ஸ்ரீமதிக்கு மெல்ல மெல்ல கிருஷ்ணா முகமும் நினைவு வந்தது.

     முன்பும் தன்னிடம் அடி கடி வாங்கியவன். இன்றும் அதே நிலையில் நிற்பதை அறிந்தாள்.

      கடைசியாக மல்லிப்பூ பறித்த நேரம் இவன் மீது விழுந்த நினைவும் வர, ஆச்சி பசங்களிடம் என்ன பேச்சு என்ற அதட்டல் இன்றும் கேட்பதாக தோன்ற அவனை கண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

    கிருஷ்ணாவுக்கு பெருத்த ஏமாற்றம் துவண்டது. அவன் ஊரில் பெண் பிள்ளைகள் சிநேகத்தோடு பேசுவார்கள். இங்கு ஸ்ரீமதி ஓடவும் அதன் பின் அவளையே தேடினான். மூன்று நாள் அவன் வந்தால் இவள் ஓடுவது என்ற முடிவில் இருந்தாள்.

       மழை பெய்ய எங்கோ நெல் அவித்த வாசம் வீசியது. புதுவித வாசம் நுகரத் துவங்க பெண்ணவள் உரசி செல்லவும் அவளின் வாசமும் சேர்த்தே நுகர்ந்தான்.

      மழையில் காபி பருக நீட்டியவளின் ஓடும் பாவனையை கண்டு அவள் டம்ளர் எடுக்கும் நேரம் அதனை சுற்றி ரிப்பனை பம்பரமாக கட்டி முடித்து நின்றான்.

     ரிப்பனை பார்த்தவள் அவனையும் கண்டு சமையலறைக்கு சென்றடைந்தாள்.

     அடுத்த நாள் கிருஷ்ணா செல்லவும் ஸ்ரீமதி செடிமீது இருந்த பனித்துளியை ஒவ்வொன்றாய் ஆட்டி கொண்டிருந்தாள். கிருஷ்ணாவும் சென்றுவிட்டான்.

     அதன் பின் மூன்று வருடம் கழித்து சென்னை ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.காம் பயில வந்தவளை ராகிங்கில் சந்தித்தான்.

    பெரு மழை வரவும் எல்லோரும் ஓட, கிருஷ்ணா ஸ்ரீமதி சிலையாக நின்றனர். 'நீ தானே ஸ்ரீ' என கேட்க எண்ணி மழையில் நமத்து போன பட்டாசாக இருந்தான்.

   அவளோ மழைக்கு ஆற்றும் குளம்பி போல நுரைத்து, "ஏய்.... நீ கிருஷ்ணா தானே..." என்று பொங்கி கேட்டாள்.

      "ஆமா... இங்க வா" என்று கல்லூரி மேடையில் ஏற்றி நிறுத்தினான்.

      "முழுசா நனைந்துட்டேன். அப்பறம் என்ன... கிருஷ்... நீ இந்த காலேஜா... எந்த இயர்?" என்று கேட்க "செ..செகண்ட் இயர்" என்றான்.

     "ஓகே நான் போறேன்." கையசைத்து ஓடியவளை அடிக்கடி பார்க்க ஆசைப்பட்டான்.

     அடுத்தநாள் தாய் கமலம் "சுந்தரி குடும்பத்தோட சென்னை வந்துட்டாங்க. ஒர் முறை பார்க்க போகணும்" என்றதும் அழைத்து செல்வதாக முன் வந்தான்.

    தாயோடு வந்தவன் சுந்தரி உபசரிப்பில் அவளை தான் தேடினான்.

     நீண்ட நேரம் கழித்து சமையலறையில் வியேர்த்து விறுவிறுத்து தட்டில் காபி எடுத்து வந்து நீட்டினாள்.

     அடிப்பாவி கொல்லறதுக்கு பிளான் போட்டுட்டாளா... என்று பயந்து எடுத்து பருகினான். காபி மணம் நாசியில் துளைத்து அவனை பித்தம் ஊட்டியது.

    'நான் நல்லா போட்டுயிருக்க மாட்டேன்னு தானே நினைத்த' என்பது போல லுக்கை விட்டாள். சேசே அப்படியில்லை என்று பார்வையை வீசினான்.

    பெற்றோர் எதிரில் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. கல்லூரி வந்ததும் அவன் முன் வந்து "காபி கொடுத்தா என்ன லுக்கு..." என்று பொரிந்தாள்.

     "ஏய் மழையம்மா... குடிச்சிட்டேன்ல அப்பறம் என்ன? இதை நேத்தே கேட்டு இருக்கலாம்." என்றான்.

     "கேட்டு இருக்கலாம்..... ஏன் நீ கூட நேத்தே பேசியிருக்கலாம். காபி நல்லா இருக்குனு சொல்லி... நீ ஏன் பேசலை.." என்று சண்டை போட "கூல் கூல்.. இப்ப காபி குடிச்சிட்டே பேசுவோமா..." என்றான்.

     "ம்ம்..." என்று கிளம்பினார்கள்.

    அவனின் பைக்கில் இரண்டு பக்கம் காலை போட்டு நடுவில் தனது பேக்கை வைத்து வேடிக்கை பார்க்க, 'ரையினிகேப்' அழைத்து சென்றான். அங்கே பேச ஆரம்பித்தனர்.

      "நீ நல்லா வளர்ந்துட்ட... அப்ப இருந்த அதே வாய்... கப்பல் விட்டப்ப என்னை இடிச்சிட்டு என்ன ரகளை பண்ணின" என்று பேசியதும் "உனக்கும் தான் நீ மட்டும் சும்மாவா இருக்க, எங்க ஆச்சி இறந்த அன்னிக்கு ரிப்பனை பிடிச்சி இழுத்த. மல்லிப்பூ தோட்டத்துல." என்று சாடினாள்.

    அவன் அதை கூற வந்து தான் முதல் சந்திப்புக்கு மாற்றி விட்டான். இவள் பேசியதும் திணறினான்.

       "நீ அழுத... எனக்கு அன்னிக்கு கஷ்டமா இருந்தது. உனக்கு ஆச்சியை பிடிக்குமோ..?" என்றான்.

      "ம்ம்... ரொம்ப..." என்றதும் மூக்கை வைத்து நுகர்ந்து இருக்க, "என்ன?" என்றான்.

    கொஞ்சமாய் மண் வாசம் வீசவும் "கோடை மழை... மண் வாசம் வீசுதே தெரியலை..." என்றாள்.

    "எனக்கு காபி ஸ்மெல் தான் வருது." என்றவன் நுகரவும், "மக்கு..." என்று வைதாள். அதன் பின் நல்ல நட்பு இடையிடையே காதல் உணர ஆரம்பித்தாலும் வெளிப்படுத்தவில்லை.

     கிருஷ்ணா-ஸ்ரீமதி நட்பு அவர்களின் காலேஜிலும் பிரசித்தம் பெற்றன.
  
    மூன்றாம் ஆண்டு சொல்லிட வேண்டுமென ஆசையாய் ஒத்திகை பார்த்தாள். இயலவில்லை...

    அவள் கூற விரும்பியதை கூற வைக்கவே வந்தான் அவளின் கார்காலதேவன்.

    கிருஷ்ணா ஸ்ரீமதி ஆலிக்கு அஞ்சி 'ரெயின்கேப்' வந்து நின்றார்கள்.

     காபி ஆர்டர் கொடுத்து விட்டு ஸ்ரீமதி மழையை வேடிக்கை பார்த்தவள் "உன்னை விரும்பறேன் கிருஷ். அந்த மழை பெய்தால் எப்படி என் மனசு குழந்தை மாதிரி அதுல நனைய ஏங்குதோ... அதே போல உன்னை பார்த்தா மட்டும்." என்று கூறியவள் மறந்தும் கிருஷ்ணாவை பார்க்கவில்லை.
    
    கிருஷ்ணாவோ ஸ்ரீமதியை பார்த்தவன் கள்ளத்தனமாக சிரித்து, "இந்த மழையும் காபியும் பிரிக்க முடியாதுல..." என்றான்.

     ஸ்ரீமதிக்கு தான் பேசியதை கிருஷ்ணா கேட்கவில்லையோ என்று திரும்பினாள்.

     "கூடவே பஜ்ஜி பப்ஸ்னு இருந்தா அமைசிங்." என்றான் டிஸூ பேப்பரில் மும்மரமாக கப்பல் செய்து கொண்டிருந்தான்.

     ஸ்ரீமதியோ தான் பேசியதை முற்றிலும் கேட்கவில்லையென உடைந்து விட்டாள். அவன் விரும்பிய பப்ஸை மட்டும் ஆர்டர் கொடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். 

     அதன் பின் இரண்டு வருடம் கிருஷ் மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றான். அடிக்கடி சாட்டில் பேசிக் கொள்வார்கள்.
  
    கடைசியாக கிருஷ்ணா உனக்கு ஒரு ஷாகிங் சர்ப்பிரைஸ் இருக்கு. நேர்ல வந்து சொல்லறேன்" என்றான். இதோ அவன் ரெயின்கேப் வரச்சொல்லி விட இருபது நிமிடம் காத்திருக்கின்றாள்.

     ஸ்ரீமதிக்கு கிருஷ்ணா அவளின் காதல் சொல்லியதை கேட்டு அதற்கு அப்பொழுது மறுத்துவிட்டு படிப்பு முடிந்து வந்து காதலை ஒப்புக் கொண்டு இன்று வெளிப்படுத்த இதேயிடத்திற்கு வர சொல்லியிருப்பானோ என்ற எண்ணமே எழுந்தது.

     அதை எண்ணி பார்த்தவளின் மனம் அவன் சாட் பண்ணியதில் எல்லாம் மறைமுகமாக காதலை ஏற்ற பதில்கள் தாங்கியும், காதலும் இருப்பதை அறிந்தாள்.

       இன்று புயல் காற்று அதிகமாகவே வீச, மழையின் குளிரில் ஏசி கேபே வேறு உதறல் கொடுத்தது.

     கிருஷ்ணா கதவை திறந்து வந்தான். முன்பை விட நிறமேறி இருந்தான். உடல் வாகு முன்பு விட வலிமை கூடியதாக காணப்பட்டான்.

    பின்னால் திரும்பி திரும்பி யாரையோ அழைத்து வருவது புரிந்தது. யாராக இருக்குமென்ற ஆவலோடு வரவேற்றாள்.

    "சுவாதி உட்காரு" என்று அமர வைத்தான்.

      "ஹாய் கிருஷ்ணா... எப்படியிருக்க. நீ இங்க வர சொன்னதும் எனக்கு பழைய ஞாபகம் தான் வந்துச்சு... காலேஜ் டேஸ் மிஸ்பண்ணற பீல் வந்துடுச்சு." என்று வேகமாக கூறி "யாரிவங்க?" என்றாள் ஸ்ரீமதி.

   ஸ்வாதியை பார்த்தவன் "அறிமுகப்படுத்த வந்தேன். நீ நான் ஸ்டாப்பா பேசிட்ட. நீ எப்படியிருக்க... இது ஸ்வாதி அப்பாவோட தங்கை பொண்ணு." என்றான்.

     "எனக்கு என்னடா... நல்லாயிருக்கேன். நீ ஏதோ சர்ப்பிரைஸ்னு சொன்ன." என்று மழையில் ஐஸ்க்ரீமுக்கு ஏங்கிய சிறுமி போல கேட்க துவங்கினாள்.

    இக்கணம் விட்டால் கிருஷ்ணாவை கடித்து வைப்பாள். அவனின் கன்னம் அவளை அப்படி ஈர்க்க செய்தது.

    ஸ்வாதிக்காக வெட்கப்பட்டு அடக்கி அமர்ந்திருந்தாள்.

  "சர்ப்பிரைஸ்.. என்னனா... இவ ஸ்வாதி...  அத்தை பெண்ணு சொன்னேன்ல... அடுத்த மாதம் எனக்கும் இவளுக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க ஸ்ரீ. அதுக்கு தான் என் பெஸ்ட் பிரெண்ட் உன்னிடம் ஷேர் பண்ண வந்தேன்." என்றான்.

     பேச்சு என்னவோ சாதாரணமாக வந்தது. ஆனால் அதை ஏற்க ஸ்ரீமதிக்கு நேரம் எடுத்தது. ஸ்வாதியை பார்த்து அதிர்ந்து போனவள்... இடியோசை கேட்டதும் தான் உணர்வு வந்து ஸ்வாதிக்கு விஷ் பண்ணினாள்.

     "ஹார்டி கங்குராஜிலேஷன் ஸ்வாதி. யூ டூ கிருஷ்." என்றவள் கண்ணீரை மறைக்க போராடினாள்.

      ஸ்வாதி "தேங்க்ஸ்" என்று நிறுத்தி கொண்டாள்.

    ஆர்டர் செய்த காபி குடித்து முடிக்க மழை ஓய்ந்திருந்தது.

     "ஓகே ஸ்ரீ... நாங்க கிளம்பறோம். உன்னிடம் ஸ்வாதியை இன்ட்ரோ கொடுக்க ஆசைப்பட்டேன். அதான்... என்னோட ஒரே பிரெண்ட் நீ தானே. இது அரேஜ் மேரேஜ் அப்பா அம்மா சொல்லி உனக்கு தெரிய வந்து நீ திட்ட ஆரம்பிச்சாளோ... இல்லை கடிக்க கூட செய்வ. எதுக்கு வம்பு. அதான்." என்று நகைத்தான்.

    ஸ்ரீமதிக்கு சிரிக்க தோன்றவில்லை... ஸ்வாதியுமே எப்பொழுது கிளம்புவோம் என்பதாக தவிப்பது புரியவும், கிருஷ்ணாவாலும் இதற்கு மேல் தாளயியலவில்லை.

    "சாரி ஸ்ரீ. இப்ப தான் ஊருக்கு திரும்பியது. லாட்டாப் ஓர்க் பேலன்ஸ் ஓகே மா. பை." என்று ஸ்வாதியை இழுத்து சென்றான்.

     ஸ்ரீமதிக்கு தலையில் இடிவிழுந்த உணர்வு. கிருஷ்ணா சாட்டில் பேசியது காதல் என்று இல்லை. ஆனால் மறைப்பொருளாக அது காதல் என்று தான் மனம் சொன்னது. பிறகு எப்படி மாறியது. தன் காதல் கிருஷ்ணா உணரவேயில்லையா.' என்று அழுதாள்.

கொஞ்ச நேரம் முன் குடித்த காபி போன்று கசந்தது. ஆனால் அதன் மணம் போல ஒட்டிக் கொண்டிருப்பவனின் எண்ணங்களை என்ன செய்ய? பூமியில் மழையின் ஈரம் போல ஸ்ரீமதியின் கன்னத்தில் கண்ணீரும் ஈரம் தேங்கியிருந்தது.

    அங்கு கிருஷ்ணாவோ வலியோடு பைக்கில் ஹெல்மெட்டுக்குள் அழுதான்.

     'மன்னிச்சிடு ஸ்ரீ. எங்கப்பா வந்ததும் வராததும் தங்கை பொண்ணு கட்டிக்கோனு சொன்னார். நான் நாசுக்கா மறுத்தேன்.

    ஆனா கொஞ்ச நேரம் கழித்து அப்பாவும் அப்பாவோட தங்கையும்  என் காலில் விழுந்து, 'என் பொண்ணு ஓர்க் பண்ணற இடத்துல காதலிச்ச பையன் கெடுத்துட்டு போயிட்டான். பித்த பிரம்மை பிடிச்சு மூலையில் முடங்கறா... அவளை புரிந்து கல்யாணம் பண்ணிக்க என் அண்ணன் மகன் உன்னை தவிர யாரிருக்கா... உறவுன்னு புரிந்துக்க செய்து என் மகளுக்கு வாழ்க்கை கொடு கிருஷ்ணா' என்று அத்தை மாமா காலில் விழவும் அப்பாவும் அன்பு தங்கை அழ கண்டு அவருமே கெஞ்ச ஆரம்பித்தார்.

     உறவு முக்கியமா காதலா என்று குழம்பியவன் காதலென்று சுயநலமாக யோசிக்க முடியாது தவித்தான்.

     நான்கு வருடம் ஸ்வாதிக்கு மனம் மாற்றி தற்போது கிருஷ்ணாவோடு பேச வைத்தனர்.

    ஸ்வாதியும், 'நீங்க திருமணம் செய்யலனாலும் நான் கோபிச்சுக்க மாட்டேன். எனக்கு இனி திருமணம் வேண்டாம்னு அம்மாவிடம் தெளிவா எடுத்து சொல்ல எனக்கு ஒர் வாய்ப்பு அமையும். ஒரு வேளை பிடிச்சிருந்தா உங்களுக்கு உண்மையா இருப்பேன் கிருஷ்ணா.' என்ற ஸ்வாதி நிலைமையும் கிருஷ்ணாவை யோசிக்க வைத்தது.

      ஸ்ரீமதியிடம் இதுவரை காதலை கூறவில்லை அவனுக்கு அது வசதியாக போனது.

    அவனுக்கு தெரியும் ஸ்ரீ தன்னை விரும்புகின்றாள் என்று ஆனால் இன்று ஸ்வாதியை அறிமுகப்படுத்தினாள். ஸ்ரீமதி தன்னால் ஒதுங்குவாளென அறிந்தே இப்படி செய்துவிட்டான்.

      ஸ்வாதி கிருஷ்ணா தோளில் கை  வைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து முடிக்க, மேடு பள்ளத்தில் பைக் பயணித்து இறங்க தன்னால் ஸ்வாதி கைகள் கிருஷ்ணாவின் தோளில் பதியப்பட்டது.

     கிருஷ்ணா அந்த கரத்தை கண்டு மேகத்தை பார்த்தான். மழை விட்டு தூரம் சென்றது போல தோன்றியது. ஸ்ரீயை போலவே...

-முற்றும்.

-பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு