மத்தாப்பூ மலரே

 மத்தாப்பூ மலரே


     வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ உண்மை.

     மலரோ எட்டி எட்டி பின் இருக்கையை கண்டவள் தன் தாய் செல்வியை சுரண்டினாள்.

    "அம்மா... அம்மா... அங்க ஜன்னல் சீட் காலியா இருக்கு போலாமா?" என்றாள். 

   செல்வி திரும்பி பார்த்து சரியென்று சம்மதிக்க பேருந்தில் இருவர் இருக்கையில் மூவராய் அமர்ந்திருந்த மலருக்கு ஜன்னலிருக்கை அதுவும் தானும் தாயும் மட்டும் என்று சவுகரியமாக அமர்ந்தாள்.

     "அம்மா... டவுன்ல இருக்கற பெரிய கடைக்கு தானே போறோம்" என்று மீண்டும் தன் கேள்விக்கு பதிலை தெளிவுப்படுத்தி கொண்டாள்.

     "ஆமா டா குட்டி" என்று தாடை பிடித்து கொஞ்சினாள்.

      "அம்மா அம்மா மருதாணி பறிச்சு வச்சியா?" என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

    இரவானால் பாம்பு பூச்சி வந்திடுமென அம்மா பறிக்க தயங்குவாரென ஏற்கனவே பறித்து விட்டனரா என்ற விவரம் கேட்டாள்.
  
     "சாயந்திரம் பூ பறிக்கறப்பவே பறிச்சு அரைச்சு வச்சிட்டேன். வீட்டுக்கு போய் வச்சிவிடறேன்" என்று இம்முறை மகளின் நெற்றியில் முத்தமிட்டாள் செல்வி.

     "என் கூட படிக்கிற பிள்ளைங்க ஏற்கனவே டிரஸ் எடுத்துட்டாங்க தெரியுமா நான் தான் லேட்டு" என்று சோகமாக கூறினாள்.

      "தீபாவளி பண்டிகை முடியலையே மலர். நாளைக்கு போட தானே வாங்கறோம். முன்னாடியே எடுத்து அழுக்காயிட்டா." என்று கூறவும் குழந்தை உள்ளம் ஓ அப்படியா என்று எண்ணிக் கொண்டது.

     மலர் அறியாது தன் கையிலிருக்கும் பணப்பையை இறுகினாள்.

     வெறும் 500 ரூபாய் மட்டும் இருக்க போக வர என்று பஸ்ஸிற்கு காசு உள்ளது. இதில் மலர் எத்தகைய ஆடையை கேட்டு வாங்குவோமோ என்ற கலக்கம் மெல்ல அழுத்தியது.

  தினசரி கூலி சென்று செல்வி வீட்டை ஓட்டுபவள். கணவன் திவாகர் சென்னையில் ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்பவன். மாத கூலியாக பேசி பணத்தை வாங்கி வருவதாக போனில் கூறினான்.

    இந்நேரம் பஸ்ஸில் ஏறியிருப்பார். இரவுக்குள் வந்துவிடுவார் ஆனால் மலருக்கு ஆடை வாங்க எண்ணியிருந்தவன் மலர் ஆசையாக போன முறை கேட்ட கொலுசை வாங்கியதன் விளைவு தற்போது ஆடை வாங்க தன்னிடம் காசில்லை என்று கூறிட இதோ செல்வி மகளின் ஏக்கம் அறிந்து தன் கையிருப்பான ஒரு வார கூலியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

      இரவுக்குள் வந்திட வேண்டும் என்று வந்தவாசி டவுனிற்கு படையெடுத்து விட்டாள்.

     "எம்மா காவேரி டெக்ஸ்டெய்ல் யாரெல்லாம் இறங்கணுமோ இறங்குங்க" என்று கண்டெக்டர் குரல் கொடுக்க மலரை கைபிடித்து செல்வி இறங்கினாள்.

       கடைக்கு செல்லும் வழியெங்கும் பலூன் விற்றுக் கொண்டிருக்க வேடிக்கை பார்த்தவளாக காவேரி டெக்ஸ்டெல் கடைக்குள் நுழைந்தனர்.

     "அம்மா கடையில குளிருதுல" என்று ஏசி காற்றை கூறினாள்.

    "சேலையா ப்ராககா" என்று பணிப்பெண் வந்து கேட்டதும் செல்வி "ப்ராக்" என்றாள்.

   அதற்குள் மலரோ "எங்கம்மாவுக்கு சேலை எனக்கு ப்ராக்" என்று குதுகலித்தாள்.

     "சேலை இதே ப்ளோர் தான். ப்ராக் மாடில இருக்கு. சேலையை பார்க்கறிங்களா?" என்று உதவ வந்த பணிப்பெண்ணிடம், "இல்லை முதல்ல ப்ராக் பார்க்கறோம்" என்று மாடிக்கு சென்றனர்.

      வண்ணமயமான உடைகள் கண்ணை கவர்ந்தது. ஆனால் செல்வி மனமோ கணக்க ஆரம்பித்தது. கொண்டு வந்த காசில் மலருக்கு துணியெடுக்கணும். ஆனால் விலை உசத்தியா போனா என்ன செய்ய என்ற பயம் வாட்டியது.

    அதிலும் மலர் கேட்டதை வாங்கி தரவில்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆள் தான். இதை முன்னவே யோசித்து நேற்று மலர் பள்ளிக்கு போனபொழுதே வாங்கியிருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து சிந்தனை தோன்றியது.

       செல்வியின் தோற்றமோ என்னவோ பணிப்பெண் அதிகப்படியான ஆடையை ஒதுக்கி வைத்து மலிவான விலையில் கவுனை எடுத்து காட்ட, தான் சொல்லாமல் தன் நிலையை சொல்லும் தோற்றத்தை எண்ணி பணிப்பெண் செய்த செயலில் துளியும் வருத்தமில்லை. மாறாக உள்ளுக்குள் அந்த பெண்ணுக்கு நன்றி கூறினாள். இல்லையா பின்னே மலரிடம் அதிக விலையுயர்ந்த ஆடையை காட்டி ஆசை வளர்த்து மறுத்து சமாதானம் செய்வது என்ற போராட்டங்கள் குறைந்ததே.

     "அம்மா... ரோஜாப்பூ... அம்மா இங்க பாரு பிங்க் கலர். அம்மா இந்த டிரஸ் பார்றேன் மயில் டிசைன். அம்மா எதுமா வாங்க?" என்று கத்தியவளை "உஸ் சும்மாயிரு பார்த்து வாங்கறேன்." என்று எல்லா விலையையும் ஆராய்நதாள்.

    எல்லாம் 430, 510, 398, என்றே இருக்க திவாகர் தனக்கும் சேலை எடுத்து கொள்ள கூறியதை எண்ணி உள்ளுக்குள் நகைத்தாள்.

   விலை எம்புட்டு ஏறியிருக்கு. சாதரண கவுனே இந்த விலையா? என்று எடுக்க யோசித்து கொண்டிருந்தாள்.

    "மாம்... ஐ லைக் திஸ் மா. ப்ளிஸ்" என்ற ஒரு சிறுமி பக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் விலை போட்டிருந்த ஆடையை எடுத்து குதிக்க அந்த சிறுமியின் அம்மாவோ "இது ஓகே மா" என்று விலைபட்டியலை கூட காணாது வாங்க முடிவு செய்ததும் செல்விக்கு மலரின் அமைதி கண்டு ஆச்சரியம் தான்.

      எப்படி மலர் அதிகமான ஆடையை எதையும் எடுக்கவில்லை என்ற வினா வந்தது ஆனால் தற்போது கேட்கவில்லை.

     செல்வி 398 ரூபாய் மதிப்புள்ள கவுனை எடுத்து பில் போட தயாரானாள்.

    "சேலை பார்க்கலையா?" என்று கேட்டதும் "இல்லைங்க அடுத்த முறை வந்து வாங்கிக்கறேன்" என்று மலருக்கு மட்டும் வாங்கி விட்டு பணத்தை செலுத்த, "ஏன் மா உனக்கும் அப்பாவுக்கும் எப்பவும் வாங்கமலே வர்ற." என்று சோகமானாள்.

     "அது அது எனக்கு அப்பா வாங்கிட்டார் டா. உனக்கு தான் உன்னை கூட்டிட்டு போய் வாங்க சொன்னார்." என்றதும் அந்த பொய்யை மலர் நம்பிவிட்டாள்.

     இரண்டு கட்டப்பை நிறைய ஆடை வாங்கியும் "நான் கேட்ட டோரா கர்ச்சீப் வாங்கலை போ" என்று அழுது சென்றாள் அந்த இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ஆடையை வாங்கிய சிறுமி. அப்படி செல்லும் மக்களின் நடுவே ஒரு சிறு கவர் வாங்கி வந்த மலரோ குதித்து குதித்து மகிழ்ச்சியை கொண்டாடி வந்ததில் ஏதோ நிறைவை கண்ட செல்வி தனக்கு வாங்காதது பெரிய வருத்தமாய் தோன்றவில்லை.

      பலூன் கடையை கடந்திட, "இரண்டு பலூன் தாங்க அண்ணா" என்று செல்வி வாங்க "ஹய் பலூன் மா எல்லோ அண்ட் பிங்க் வேண்டும்" என்றதும் கடைக்காரர் அதனையே கொடுக்க வழியில் பத்து ரூபாய் வளையலை வாங்கி அணிந்த மலரோ "அப்பா வந்தா காட்டணும் மா. மருதாணி வைக்கணும். அப்பா எப்ப வருவார்" என்று மலர் கேட்க திவாகருக்கு போன் அழைப்பை தொடர்ப்பித்தாள் செல்வி.

     "சொல்லு செல்வி." என்றான்.

     "எங்க இருக்க. இப்ப தான் துணி வாங்கிட்டேன். நீ வந்திடுவ தானே. மலரு உன்னையே கேட்குது." என்றதும் திவாகரோ "பஸ்ல தான் இருக்கேன் டி. இராத்திரி வந்திடுவேன். குழந்தையிடம் சொல்லிடு. இங்க பஸ்ல நின்னுட்டு வர்றேன். செம கூட்டம் வைக்கவா" என்றான்.

    "சரிசரி வை" என்று செல்வி மலரை அழைத்து கொண்டு சென்றாள்.

     இரவு வீட்டுக்கு வந்ததும் மருதாணி வைக்க விட கூறவும் செல்வி மலரின் இரண்டு கையிலும் குப்பியாக வைத்து வட்டம் வைத்து முடித்தாள்.

      அடுத்து செல்வி ரசத்தோடு முட்டை பொரியல் வைத்து ஊட்டி விட்டாள்.

     "மா ஒன்னுக்கு வருது" என்று மலர்  விழித்து நின்றாள்.

     "இதுக்கு தான் முதல்ல சாப்பிட்டு பாத்ரூம் போயிட்டு பிறகு தூங்கறப்ப வைக்கிறேன்னு சொன்னேன். கேட்டா தானே. இப்பவே வை இப்பவே வைனு அடம் பிடிச்ச," என்று வீட்டின் கிணற்று பக்கம் அழைத்து சென்று பாவாடையை தூக்கி சொருகி அமர வைத்து போக சொல்ல, மலர் இயற்கை உபாதை சென்று விட்டு நின்றாள்.

    செல்வி தண்ணீர் ஊற்றி வந்தப்பின் "மா... கால்ல வச்சிவிடறியா." என்று கேட்டதும் செல்வி படுக்க சொல்லி காலின் பாதத்திலும் வைத்து முடித்தாள்.

    "அவ்ளோ தான் தூங்கு." என்றதும் மலரோ "மா... அப்பா வர்ற வரை நான் தூங்க போறது இல்லை" என்று  சுட்டி டிவியை வைத்து விட்டு கைகளை விரித்து அடிக்கடி மருதாணி கலைந்து விட்டதா என்று பார்த்து கொண்டாள்.

    செல்வி மீதி சாதத்தை பிசைந்து சாப்பிட்டு கொண்டிருக்க, "மா... நெற்றிகிட்ட அரிக்குது. சொறிஞ்சு விடு" என்று கயிற்று கட்டிலில் இருந்தவள் கூப்பிட, "ஏன்டி இப்ப தானே சாப்பிட உட்கார்ந்தேன். கொஞ்சம் இரு" என்றதும் மலரோ முகத்தை உற்றென்று வைத்து "மா.. கால்ல அரிக்குது." என்று கூப்பிட செல்வி சாதத்தை விழுங்கிக் கொண்டிருந்த நேரம் மலர் மெல்ல நெற்றியை காலை சொரிந்திட, முகத்தில் மருதாணி இழைத்தது.

     கை அலம்பி நீர் அருந்தி வந்து மலரை காண "திட்டாத மா சாரி" என்று திருட்டு விழி முழித்தாள்.

    "கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா." என்று துடைத்து விட்டு சொரிந்தும் விட்டாள்.

      "மலரு... மணி எட்டு முப்பது ஆகுது தூங்குடி" என்றதற்கு "மாட்டேன் அப்பா வர்ற வரை முழிச்சிருப்பேன்." என்றவள் டிவியில் கண்ணை பதிக்க செல்வி கிணற்றுகடியில் பாத்திரத்தை கழுவி வைத்து வர, கையில் மருதாணி இழித்து வைத்து மலர் உறங்குவதை கண்டாள்.

     கையில் துடைத்து விட்டு அழிந்த இடத்தில் சிறிது மருதாணி போட்டு பூசிவிட்டு, தனக்கும் வைத்து கொண்டு வாசலை பாதி திறந்தே வைத்து திவாகருக்காக காத்திருந்தாள்.

    வாசலை பார்த்து பார்த்து செல்வியும் உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

     இரவு செல்வியின் இடையை தழுவி ஊர்ந்தது ஆண் கரம் ஒன்று.

    முதலில் உறக்கத்தில் தெரியாது போக சற்று நேரத்தில் சின்னதாய் விழிப்பு தட்ட கண்ணை திறந்து எழுந்தாள்.

    "என்னாச்சு செல்வி" என்று திவாகர் குரல் என்றதும் நிம்மதியடைந்தவள். "எப்பயா வந்த. பயந்துட்டேன். தூங்க கூடாதுனு தான் கட்டிலுக்கு பக்கத்துல உட்கார்ந்திருந்தேன்."

    "பார்த்தேன் அதான் நானே தலையணையில சாய்த்து படுக்க வச்சேன்"

    "மருதாணி கையில வச்சேன். கதவை தாழிடலை." என்று கூறினாள்.

    "பார்த்தேன் பார்த்தேன்.. என்ன திடீரென ஆசை." என்று கைகளை அவள் மேனியில் வளைத்து கட்டி கொண்டான்.

   "சும்மா தோனிச்சு வச்சேன். அம்மா எனக்கு வச்சிவுடும். உன் பொண்ணு இரண்டு வாரமா கேட்டுச்சு. பறிச்சு வச்சிவிட்டேன்." என்றதும் திவாகர் கைகள் மகளின் தலையை வருடிவிட்டான்.
 
     தன் சட்டை பையிலிருந்த கொலுசை எடுத்து மனைவியிடம் காட்டினான்.

    இரண்டு மாசமா மலர் கேட்டுட்டு இருக்கா. இப்ப தான் வாங்க முடிஞ்சிது. என்ன இதே ஐயாயிரம் சொல்லிட்டான். இந்தா மீதி ஐயாயிரம்." என்று கொடுத்தான்.

     "என்னயா இது மாசம் பத்தாயிரம் வட்டி கடனை வச்சிட்டு ஐயாயிரம் கொடுக்கற." என்றாள்.

     "என்ன பண்ண சொல்லற. குழந்தை கேட்டது. கிளம்பறதுக்கு முன்ன வாங்கணும்னு மனசு அடிச்சிக்கிச்சு. வாங்கிட்டேன். இந்த மாசம் யாரிடமாவது வாங்கி கொடுத்திடலாம். குழந்தைக்கு கொலுசு போட்டு பார்த்து எவ்ளோ நாளாச்சு." என்று உறங்கும் மலரின் காலில் கொலுசை அணிவித்தான்.

      "உன்னிடம் மருதாணி காட்டணும், வளையலை காட்டணும்னு தூங்கமா தான் இருந்தா. நேரம் ஆகவும் என்னய மாதிரி உறங்கிட்டா." என்று எடுத்த கவுனை திவாகரிடம் காட்டினாள்.

    "உனக்கு வாங்கிக்கலையா செல்வி." என்றான்.

     "இருக்கட்டும் யா. உனக்கு வாங்காம எனக்கு எப்படி வாங்க. அதுவுமில்லாம பணம் பத்தாது." என்று சிரிக்க, மனைவியின் கேசத்தில் கை நுழைத்து "என்னை கட்டிக்குனு நீ கஷ்டப்படற செல்வி.

    படிக்கவும் இல்லை. வேலை வெட்டினு சொந்தமாவும் இல்லை. ஹோட்டலில் பரோட்டா போட்டு மாசம் பத்தாயிரம் வருது. அதுல இந்த வுடு கட்ட வாங்கின வட்டி கடனுக்கே சரியா போகுது. கொஞ்சம் பொருத்துக்கோ புள்ள. இன்னமும் ஐந்து வருஷம் போனா கடன் போயிடும் பிறவு தீபாவளி என்ன பொங்கலு கார்த்திகை தீபம் பிறந்தநாளு என்று வரிசையா வாங்கி தந்திடறேன்." என்று அணைக்க, "துணி நல்ல நாளுக்குனு எடுத்தா தான் உண்டாயா. நீ தான் சேலை கிழியறதுக்கு முன்னவே வாங்கி கொடுத்திடுவியே. இதுல தனியா பண்டிகை வேறயா?" என்றவளின் மனதை வென்றடைய ஆயிரம் கஷ்டம் அடைய விரும்பியது திவாகர் உள்ளம்.

     முத்தம் வைத்து தன் நெஞ்சில் அணைத்து கொண்டு உறங்கினான்.

   அதிகாலை மலர் கட்டிலில் உறங்கியவள் எங்கோ வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு கண்ணை கசக்கி கொண்டு இமை திறந்தாள்.

      கிணற்று பகுதியில் தந்தை பல் விளக்க கண்டு ஓடினாள்.

     கிணறு வந்த பிறகே காலில் கொலுசு சத்தம் கேட்டு குனிந்தாள்.

     "அப்பா... எப்ப வந்திங்க. இது நீங்க வாங்கி வந்த கொலுசா.." என்றாள்.

   "ஆமா டா." என்று மலரை தூக்கி சுற்றி நிறுத்தினான்.

     "பா... இங்க பாருங்க மருதாணி. காலில் கூட வச்சிருக்கேன்.'' என்று காட்டினாள்.

     "அழகாயிருக்கு டா தங்கம்." என்றார்.

     "பா.. எனக்கு கவுன் வாங்கியிருக்கு. குளிச்சிட்டு புது துணி போடப்போறேன். பட்டாசு வாங்கினியா...?" என்று கேட்டாள்.

     "வாங்கிட்டேன் ஆனா மலரு குட்டி பாப்பா தானே அதனால மத்தாப்பு மட்டும் வாங்கியிருக்கேன். இதோ துப்பாக்கி இதுல ரோல் பட்டாசு போட்டு வெடி. ராத்திரி மத்தாப்பு வெடிக்கலாம்." என்றான்.

     "இப்ப முடியாதா?" என்று வருந்த, "இப்ப குளிச்சிட்டு கோவிலுக்கு போகலாம். பிறவு சங்கரி தியேட்டருக்குபோய் படம் பார்த்துட்டு உங்கம்மா வச்ச நாட்டு கோழி குழம்பை சாப்பிட்டு பக்கத்தூர் திருவிழாவுக்கு போகலாம். இராத்திரி அந்தூர் பரோட்டா வாங்கி அப்பாவே ஊட்டி விடுவேனாம்" என்று வரிசையாய் வெளியே செல்லும் இடமாக இருக்க குதுகலமாக மலர் புறப்பட்டார்.

    போவதற்கு முன் கொலுசு கால்களை மான் போல துள்ளி துள்ளி தன் சுற்றத்தாரின் வீட்டில் இருப்பவரிடம் காட்டி தந்தை வாங்கி தந்தது என்றும் கவுன் தாய் வாங்கி தந்தது என்றும் பெருமை கொண்டாடினாள்.

      திவாகர் மான் போன்றவளின் துள்ளலை கண்டு உவகை கொண்டான்.

     திவாகர் கூறியது போல தொடர்ச்சியாய் சொல்லப்பட்ட இடங்களுக்கு சென்று விட்டு பக்கத்து ஊர் திருவிழாவுக்கு மூவரும் சென்றனர்.

     ராட்டினம் ஏறி சோளப்பொறி உண்டாள் மலர், கண்ணாடி வளையலை கை முழுக்க வாங்கி அணிந்தாள் செல்வி.

     திவாகர் கையால் அணிவித்து முடித்தான்.

    ஆங்காங்கே பட்டாசு சத்தமும் வானவேடிக்கையும் வானத்தை  வண்ணமயமாய் காட்டியது. "அப்பா அப்பா மத்தாப்பு சுத்தணும்." என்று நினைவுப்படுத்தினாள்.

    அங்கயே வள்ளி கிழங்கு என்று விற்க சாப்பிட பாதி வயிறு நிரம்பியது.

     சற்று நேரத்தில் "அம்மா... அம்மா... என் கொலுசை காணோம்" என்று மலர் அழுவ, "என்னடி சொல்லற. புது கொலுசாச்சே." என்று செல்வி மலர் இருவரும் தேடினார்கள்.

      தொலைக்கப்பட்டது சாதாரணமான விலையற்ற பொருளாக இருந்தால் இருந்திருக்கும். அதுவோ கண்ணை பறிக்கும் புது வெள்ளி கொலுசு. எடுத்தவர் இனி நிச்சயம் தரயியலாது என்று அறிந்தும் திவாகர் செல்வி தேடினார்கள்.

      தொலைந்ததை விட மலர் அழுவதை சரிசெய்ய இயலாது தவித்தனர்.

     சற்று முன் வானவேடிக்கையாய் வண்ணமயமாய் தோன்றியது. சட்டென ஒளியற்ற கருமை தாங்கிய வானமாய் காட்சி தந்ததும் செல்வி கலங்கி போனாள்.

      தங்கள் வாழ்வின் வண்ணங்கள் என்பது கொஞ்ச நேரம் தானா. இப்படி மகிழ்ச்சியை உடைப்பதற்கென்று கஷ்டப்பட்டு வாங்கிய கொலுசு போனதே. என்று வருந்தினார்கள்.

       மலர் அழுதவாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பரோட்டா மட்டும் வீட்டுக்கு வாங்கிக் கொண்டு வந்தனர்.

     மத்தாப்பு அப்படியே கேட்பாரற்று இருந்தது.

      திவாகருக்கு தெரியும் அது எவ்வளவு கடினப்பட்டு வாங்கியதென்று, இருந்தும் அதனை மறந்து மகளிடம் வந்து கஷ்டம் மறைத்து பேச ஆரம்பித்தான்.

     "மலர் குட்டி அப்பா உனக்கு அடுத்த முறை வர்றப்ப திரும்ப அதே கொலுசை வாங்கி தர்றேன் டா. அழாதே... இந்தா மத்தாப்பு பிடி" என்று மனதை மாற்றினார்.

     மலரும் மாறினாள், மத்தாப்பு வைத்து கஷ்டத்தை சிறிது நேரம் இல்லாமல் செய்தனர் அதன் ஒளியால்.

     மீண்டும் செல்வி திவாகரிடம் "என்னயா இது அம்புட்டு ஆசையா பணத்தை பெரிசா எண்ணாம வாங்கி இப்படி காணாம போச்சே. இதுக்கு வட்டி பணத்தையாவது கொடுத்திருக்கலாம்.

    நெருப்புல நின்னு மாடா உழைச்ச காசு. காணாம போச்சே" என்று செல்வி கவலை கொள்ள, திவாகருக்கும் அதே கவலை. சோகமாக கிணற்று பக்கமிருந்த கல்லில் அமர்ந்தான்.
 
      "அப்பா... என் மேல கோபமா.. எனக்கு அது எங்க விழுந்ததுனு கூட தெரியாது பா. சாரி பா நீ தீபாவளிக்கு வாங்கி தந்தது" என்று வந்து நின்ற மலரை அணைத்து கொண்டான்.

    "பணம் இன்னிக்கு போனாலும் நாளைக்கு சம்பாதிச்சிடுவேன் டா. நல்ல வேளை கூட்டத்துல உன்னை தொலைக்கலை. நீ தானே டா என் தீபாவளி பொங்கல் பண்டிகை எல்லாம்" என்றான்.

     "அப்ப வாப்பா பசிக்குது." என்று இழுத்திட, பின் பக்க லைட்டை போட்டு பரோட்டாவை பிரித்து திவாகர் கையில் கொடுக்க ஊட்டிவிட்டான்.

     "ஏன் பா.. நீயும் இதை தான் வேறவூருல போய் செய்யறியா. என் கிளாஸ் பொண்ணு சொன்னா." என்று ஆ வாங்கிக் கொண்டே கேட்டாள்.

       "ஆமா டா. அப்பா செய்யற பரோட்டாவுக்கு இருந்து வாங்கிட்டு போவாங்க. அந்தளவு ருசியா செய்வேன்."

     "நீயேன் பா இங்கயே செய்து விற்க கூடாது. பண்டிகை விழா அப்ப மட்டும் வந்துட்டு போற.

    எனக்கு அந்த வெள்ளி கொலுசு, அம்மா வாங்கி தர்ற கவுனு எதுவும் வேண்டாம். நீ என்னோடவே இருக்கியா.

    இங்கயே இருந்தா நான் தினம் தினம் உன்னோட தோளில் சாய்ந்துப்பேன். உன் மடில படுத்துப்பேன். உன் கையால சாதம் சாப்பிடுவேன். வாரம் வாரம் சந்தைக்கு உன்னோட மோட்டர் சைக்கிள்ல முன்ன உட்கார்ந்து ஜாலியா கை விரிச்சு ஹாப்பியா இருப்பேன்.

     நீ என்னோடவே இருக்கணும் பா." என்று மலர் தன் ஏக்கத்தை கூறி முடித்தாள்.

      "அப்பா வட்டி கடனை வாங்கியிருக்கேன் டா. அது கொடுக்கவாது பணம் வேண்டும். அப்பாவுக்கும் ஆசை தான் உன் கூடவே இருக்கணும்னு. விடிவு காலம் பிறக்கலையே." என்று திவாகர் பேசினான்.

     "மாப்பிள்ளை... எப்ப வந்திங்க.. நீங்க இருக்கிங்களோ என்னவோனு பட்டாசு வாங்கியாந்தேன். ஏ குட்டி.. எப்படியிருக்க" என்று செல்வியின் தந்தை வந்திருந்தார்.

    "எப்படியிருக்கிங்க மாமா. வாங்க... நேத்து ராத்திரி வந்தேன்." என்று அமர்வதற்கு மடக்கு கட்டிலை எடுத்து விரித்தான்.
  
     "வாங்கப்பா... இந்தாங்க" என்று நீரை தர, வாங்கி குடித்தவர். பேத்தி மலரை மடியில் அமர்த்தி "வர்றப்ப மலர் குட்டி பேசியதை கேட்டேன். குட்டி விவரமா பேசறா." என்று உச்சியில் முத்தமிட்டார்.

     "அறிவான பிள்ளை தான் மாமா. என்ன செய்ய கூடவே இருக்கணும்னா கடனாளியா இருக்க கூடாது." என்று பெருமூச்சை வெளியிட்டான்.

   "அதுவும் சரிதான். நாமளும் கடனை அடைக்க தான் பாடுபடறோம். ஆனா கடன் என்னமோ கூடுதே தவிர குறையாது. ஆனா பாருங்க சந்தோஷம் கூடயிருந்தா ரெட்டிப்பாகும். இது என்னோட வீட்டு பத்திரம் வரும்போதே உங்களிடம் இதை பத்தி பேச தான் வந்தேன். ஆனா பாருங்க. எனக்கு முன்ன என் குலச்சாமி சொல்லிடுச்சு.

    நீங்க கொஞ்சம் யோசிக்காம இதை வாங்கி கடனை அடைச்சி இங்கனயே ஒரு ஹோட்டல் வையுங்க. கூடுதோ குறையுதோ குடும்பம் என்ற ஒன்றோட ஒன்றாக இருந்த திருப்தி கிடைக்கும்.

    இவருக்கென்ன வாழ்ந்து கெட்ட மனுஷன். தனிக்கட்டைனு நினைக்காதிங்க.

   நானும் உங்களை போல உழைப்பு தேடி இடம் விட்டு இடம் அலைந்து பணம் சம்பாரிச்சு வந்தவன் தான். ஆனா வீட்டுக்கு வந்த பிறவு என் பொண்டாட்டி போய் சேர்ந்துட்டா. செல்வியோட மலரு பண்ணற சேட்டையெல்லாம் இங்க வர்றப்ப கேட்கறப்ப, இப்படி நான் கூடயிருந்து பார்க்கலையேனு கவலையாயிருக்கு. பொண்டாட்டி போனப்பிறகு பிள்ளையோட குழந்தைபருவம் போனப்பிறகு நாம என்ன கண்குளிர பார்க்க போறோம்.
   
    அதை முதல்லயே கூடயிருந்து பார்த்திருந்திருக்கலாமேனு இப்ப மனசு அடிச்சிக்குது.

   என்னை மாதிரி நீங்களும் காலம் போனப்பிறகு தனியா விழாவை கொண்டாடி என்ன பண்ணறது. எப்பவும் சேர்ந்து இருக்கறது தானே விழாக்கள்.

முன்ன அத்தை, சித்தி, மாமா, பெரிப்பா, பெரியம்மா, சித்தப்பா, தாத்தா, பாட்டி, அத்தை பசங்க, மாமா பசங்க, கொழுந்தனாரு இப்படி நிறைய உறவை தொலைச்சிட்டு தனி குடும்பமா இருக்கோம். அது போதாதுனு கணவன் மனைவி குழந்தைகள் என்று வேற பிரியணுமா. ஆடிக்கு ஒரு விழா ஆவணிக்கு ஒரு விழானு வந்து தலைகாட்டி போறது நல்லாவா இருக்கு.

     குழந்தைகள் இப்ப இருக்கற காலத்துல கூடயிருந்து பார்த்து வளர்ந்தாலே தப்பான கலாச்சாரத்தை தேடறாங்க. தனியா இருந்து நாமளா குழந்தையோட அழகான உலகத்தை மாத்திடலாமா.

     என்னவோ எப்பவும் சொல்லணும்னு தோன்றும். சொல்ல வாயெடுக்க மாட்டேன். இந்த முறை மலர் பேசியது கேட்டதும், சொல்ல தோனுச்சு. தப்பிருந்தா மன்னிச்சிடுங்க" என்று செல்வி வைத்து நீட்டிய பரோட்டாவை சாப்பிட துவங்கினார்.

      "நானும் சொல்ல இருந்தேன். ஆனா நீங்க எப்படி எடுத்துப்பிங்கனு" என்று செல்வி குரல் உள்ளுக்குள் சென்றது.

     "இந்தமுறை சென்னைக்கு போனா ஓனரிடம் சொல்லிட்டு வர்றேன் மாமா. என் பொண்ணுக்காக. இந்த விழாக்கால வரவா தந்தை உறவு இருக்க கூடாதுனு முடிவோட" என்று கடைசி வாயை மலருக்கு ஊட்டினான்.

      இனி மலரின் வீட்டில் என்றும் மத்தாப்பூ விழாக்கள் பூக்கும்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

  


     

   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1