யாரென்று யார் அறியும் முன் இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார். தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு, பக்கத்து இருக்கையில் பெண்மணியை நோட்டமிட்டார். ஈஸ்வரிக்கு 56 வயது இருக்கலாம். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல தோள்பை கண்ணாடி என்று இருந்தார். முகத்தில் தோள் சுருக்கம் மட்டும் சற்று குறைவாக இருந்தது. இரயில் சிநேகிதம் என்பாரே அப்படி பார்த்ததும் சிரித்து முடிக்க, இருவரும் பரஸ்பரமாக முறுவல் புரிந்தனர். ''இந்த டிரையின் இன்னிக்கு காலியா இருக்கு. இப்ப தான் ஒரு டிரையின் போனதால ஏதோ இந்த டிரையின் காலி.. நமக்கு கொஞ்சம் நெருக்கடியில்லாம இருக்கு." என்று ஈஸ்வரி பேசவும், ஆமோதிப்பதாய் முன்பு போலவே புன்னகைத்தாள் பக்கத்து இருக்கை பெண்மணி. "நீ வேலைக்கு போறியா மா?" என்று கேட்க, "இல்லிங்க ஹவுஸ் ஒய்ப்" என்று பேச்சை துவங்கினார்கள். ...