வலி உன்னை செதுக்கும் உளி

           வலி 

 


      மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.
 
   சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை துடைத்து கொண்டு, "என்னங்க பொண்ணுக்கு வாட்டர்பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு. காசு வச்சிட்டு போ. வாட்டர் பாட்டில் வாங்கணும்.

    இப்படியே டியூசனுக்கு போய் பிள்ளையை அழைச்சிட்டு வர்றப்ப இந்த பீடி ஹான்ஸு எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுனு டியூசன் பொண்ணு கண்டிப்பா சொல்லுச்சு.

    தயவு செய்து அதை துப்பிட்டு மகளை அழைச்சிட்டு வா. இப்படியே போனா அந்த டியூசன் எடுக்குற நந்தினி பொண்ணு இனி உன்னை வரவேண்டாம் என்னை வந்து அழைச்சிட்டு போக சொல்லுது." என்று சாவித்ரி கூறவும் சட்டை பொத்தானை மாற்றியபடி இருந்த மருதுவோ மனைவியை ஏறயிறங்க பார்த்தான்.

    "நான் பீடி புடிக்கிறேன், ஹான்ஸ் போடறேன். அதனால என் பிள்ளையை கூட்டிட்டு வரக்கூடாதா. என்னடி நியாயம். நான் என்ன எவனோ ஒருத்தனோட பொண்ணையா கூட்டியாற போறேன். என் பொண்ணு டி.

    என்னை இப்படி வரக்கூடாது அப்படி வரக்கூடாதுனு எவ சொல்லறது?" என்று மருது தெனாவட்டாய் கூறினான்.

   போதாதற்கு நந்தியின் நிலையை புட்டு புட்டு வைத்தான்.
   "அந்த பொண்ணு நந்தினி இவ்ளோ பேசுதே... அவங்க அம்மா ஓடிப் போனாங்களே புத்திமதி சொல்லுச்சா. அவங்க அப்பன் பார்லயே குடித்தனம் பண்ணறானே அதை திருத்துச்சா?

   ஏன் அவன் தம்பி எவனையோ அடிச்சி முகறையை பேத்து இப்ப பத்து நாளா ஜெயில்ல இருக்கான். அவனிடம் நல்லது சொல்லி வளர்த்துச்சா.? வந்துட்டா ஊருக்கு உபதேசம் பண்ண, ஹான்ஸ் திண்ணுட்டு வரக்கூடாது. பீடி புடிச்சிட்டு வரக்கூடாதுனு.

    நானே என் பொண்ணை வேற டியூசன் சென்டருக்கு மாத்தணும்னு இருக்கேன். இந்த நந்தனி பொண்ணு எவனோடவோ காபி ஷாப்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தது. அது எல்லாம் தப்பில்லை.

   எல்லாம் ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவாங்க சாவித்ரி. மத்தபடி அறிவுரை கூறிட்டு திரியறவங்க வூட்ல எதுவும் ஒழுங்கிருக்காது." என்று சட்டையில் பணத்தை எண்ணி வைத்தவன் "ஏதோ சில்வர் பாட்டில் வருதாம். அத்த வாங்கி கொடு. சும்மா பிளாஸ்டிக் பாட்டில் வாங்கி உடையுது லீக் ஆகுதுனு உசுரை வாங்காதே" என்று பணத்தை நீட்டி வாசலுக்கு வந்தவன் அப்படியே ஸ்தம்பித்தான்.
  
   கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருந்த நந்தினி அங்கு மகளை அழைத்து வந்திருந்தாள்.
  
   எப்பொழுது வந்தாளோ? இவ்வளவு நேரம் பேசியதை கேட்டிருப்பாளோ? என்று மருது இயல்பாய் பார்த்தான்.

நந்தினியோ "சாவித்ரி அக்கா... உங்க பொண்ணு பெரிய மனுஷி ஆகிட்டா. அதான் நானே கூட்டிட்டு வந்து விடலாம்னு வந்தேன். வயிறு வலி என்றதும் எண்ணெய் முட்டை குடிக்க வச்சி கூட்டிட்டு வந்தேன்." என்று கூற மருது சாவித்ரி மகிழ்ச்சியாக மகள் சங்கீதாவை அழைத்து பாத்ரூம் ஒட்டிய தனியறையில் படுக்க வைத்தார்.

   பிறகு மற்றவையை உறவோடு கலந்தாலோசித்து முடிவெடுக்க எண்ணினார்.

   சாவித்ரி நன்றி நவில்ந்து நீரை பருக கொடுக்க, அந்த தண்ணீரை வாங்கி அருந்திவிட்டு, "மருது அண்ணா... நீங்க பேசியது நூத்துக்கு நூறு உண்மை. அறிவுரை வழங்கிட்டு இருக்கறவங்க வீட்ல எதுவும் சரியில்லை.

   எங்க அம்மா அப்பா தம்பி ஏன் நான் எல்லாம் தறிக்கெட்டு இருக்கோம்.

   எங்கம்மா ஓடிப்போனதால தான் எங்கப்பா குடிக்காரனா மாறிட்டார். தம்பியை அவன் பிரெண்ட்ஸே அம்மாவை வச்சி கிண்டல் பண்ணவும் தான் அவன் அவங்களை அடிக்க போய் இப்ப ஜெயில்ல இருக்கான்.

  நான் அவனுக்கு அபராத தொகையும் வீட்டை சரிப்படுத்தவும் நிதிநிலையை சமாளிக்கவும் தான் டியூசன் எடுக்கறேன். இந்த டியூசன் காசு பத்தலை. அதனால தான் நீங்க பார்த்திங்களே அவரிடம் அவங்க அம்மாவுக்கு கேர்டேக்கரா பார்த்துக்க மாச தொகை எவ்வளவுனு பேரம் பேசிட்டு இருந்தேன். 

   வலியும் வேதனையும் சுமந்துட்டு இருக்கற நான். மத்தவங்களுக்கு அறிவுரை சொல்ல கூடாதா. என்னை விட இந்த வலியை அனுபவிச்சு புரிஞ்சுக்கறவங்க தானே குழந்தைக்கு நல்லதை சொல்ல முடியும்.

   வலியும் வேதனையும் புரிஞ்ச நான் தானே, எனக்கு பார்ல விழுந்த அப்பாவை கைகாட்டி யாரும் பேசிடுவது போல நாளைக்கு உங்களை வச்சி நந்தினியிடம் 'உங்கப்பா பீடி பிடிப்பாரா? ஹான்ஸ் போடுவாரானு கேட்டுட கூடாது பாருங்க.

    நான் பட்ட அவஸ்தை கஷ்டம் என்னிடம் படிக்கிற பசங்க அனுபவிக்க கூடாதுனு தான் சாவித்ரி அக்காவிடம் சொன்னது. அதை நீங்க தப்பா எடுத்துப்பிங்கனு தெரியாது.

    டியூசனுக்கு வேறயிடம் பார்த்தாலும் நீங்க இந்த பழக்கத்தோட அவளை கூப்பிட போகாதிங்க. என்று கைக்குப்பினாள்.

   "அய்யோ நந்தனி நான் உன்னை தப்பு சொல்லலையே" என்று சாவித்ரி வந்து கையை பிடித்தார்.

   "பரவாயில்லை அக்கா... இங்க அறிவுரை சொன்னாலும், நீ யோக்கியமா என்று அவங்க பின்புலத்தை ஆராயறாங்க. யாரும் தன் தவறை மாத்திக்க யோசிக்க மாட்டேங்கறாங்க.

    இவங்க வீட்லயே இப்படி வந்துட்டா போதிதர்மா கிளாஸ் எடுக்கனு நினைக்கறாங்க. அண்ணா மட்டும் இல்லை... நிறைய பேர் பேசறதை கேட்டிருக்கேன்.

   மருது அண்ணா நான் வந்தது தெரியாம பேசிட்டார். வர்றேன் அக்கா. அக்கா.... சங்கீதாவுக்கு நல்லதா சாப்பிட கொடுங்க. நான் வர்றேன்." என்று நந்தினி வேகமெடுத்தாள்.

  அறிவுரையை நல்லவர்களும் எந்தவித தவறும் செய்யாதவர்கள் உரைக்க வேண்டுமென்றால் வலியை அனுபவிக்கும் இது போன்றோர் ஒதுங்கி இருக்க வேண்டுமா? என்று நந்தினி மனம் கணத்தது.

  ஆனால் தன் போக்கை மாற்ற போவதில்லை.  தன்னிடம் படிக்கும் மாணவ மாணவியருக்கு நல்லதை போதிக்க அவள் சலித்து கொள்ள போவதுமில்லை.

  -முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...