சக்தி

                    சக்தி

  


    இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்... ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம் தோழியான அட்வகேட் ஜெனியின் வீட்டில்.

     "லுக் லீலா. கொஞ்சம் யோசித்து முடிவெடு. இப்ப வர்ற பெண்கள், தொட்டதுக்கு எல்லாம் டிவோர்ஸ் என்று நிற்கறாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து பாரு. இன்னிக்கு இந்த முடிவு சரியா இருக்கலாம். ஆனா நாளைக்கு உனக்கு ஒரு துணையென்று தேடுறப்ப வெற்றிடமா இருக்கும். உங்கம்மா வேதராணி சொல்லறதை காது கொடுத்து கேளு. உங்க அத்தை புவனா உங்களுக்கு என்ன பிரச்சனையென்றாலும் அவங்களிடம் சொல்ல சொல்லறாங்க." என்று அட்வகேட் ஜெனிதா தோழியாகவே இப்பொழுதும் அறிவுரை கூறிமுடித்தாள்.

    "இது நேத்து முடிவெடுத்து இன்னிக்கு சரியென்று இங்க வந்து நிற்கலை ஜெனி. யோசித்து தான் முடிவெடுக்கறேன் எடுக்கறேன். அவருக்கும் இதுல முழு சம்மதம் தான். நீ மேற்கொண்டு ஆகுற வேலையை பாரு" என்று கூறினாள் லீலாவதி.

     சக்தியும் "எஸ் ஜெனி.. லீலாவதி விருப்பப்பட்டதை நிறைவேத்துங்க." என்று தன்மையாய் கூறிவிட்டு எழுந்தான்.

    இருவரும் வாசல் வரை சேர்ந்தே நடந்தனர். ஜெனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

   சக்தி காரில் லீலாவதி ஒன்றாக அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஜெனியிடம் இரு பெற்றோரும் கலந்தாலோசித்து மகன்(ள்) மருமகள்(ன்) என்று இருவரும்க்கு என்ன கருத்து வேறுபாடு என்று அறிந்து என்ன பிரச்சனையென்றாலும் தீர்வளிக்க லீலாவதியின் தோழியான  ஜெனியிடமே வந்து நின்றனர்.
 
ஆனால் சக்தி லீலாவதி இருவருமே மியூட்சுவல் டிவோர்ஸ் அப்ளை செய்வதில் பின் வாங்கவில்லை. தோழியிடமும் எந்த வித காரணத்தையும் பகிரவில்லை.

   ஜெனியும் இருக்கும் அத்தனை வழியிலும் பிரச்சனையின் மூலக்காரணத்தை கேட்டுவிட்டாள்.

   இருவருமே பிரச்சனையை தவிர்த்து 'கருத்து வேறுபாடு' என்ற ஒன்றை கூறினார்களே தவிர காரணத்தின் ஆணிவேர் எதுவென்று உறுதியாய் கூறவில்லை.
 
      ஜெனி தன் தந்தை ஜெயதேவிடம் இதை பற்றி விவாதித்தாள்.

     மௌவுனமாய் "குழந்தை பிறக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்மா." என்று வருத்தமாய் கூறவும் "ஒரு வருஷத்துல அப்படியென்ன அவசரம் குழந்தைக்கு" என்றும் அவர் அக்கா ஜீவிதா கூறினார்.

     ஆனால் ஜெனியின் யூகமோ "அப்படியிருக்காது அத்த" என்றும் கூறினாள்.

    "பழைய காதல் ஏதாவது மனசுல வச்சிருந்து இப்ப அதை மறக்க முடியாம பிரியறாங்களோ என்னவோ?" என்று ஜீவிதா கூறவும் ஜெனிக்கோ "ம்ம்.. லீலாவதி யாரையும் விரும்பலை. சக்தி எப்படியோ தெரியாம புரளி கிளப்ப கூடாதே" என்று அமைதிக்காத்தாள்.

    "அம்மாடி இந்த டிவோர்ஸ் கேஸ் எல்லாம் தூக்கி போடு. லாயர் விஜயகுமாரிடம் ஜூனியரா போ." என்று அறிவுறுத்தினார் தந்தை ஜெயதேவ்.

     ஜெயகுமாருமே விவாகரத்து பெற்று மகளை அக்காவோடு வளர்த்து ஆளாக்கியவர். அதனால் அப்படி குறிப்பிட்டார்.

    "எடுத்த கேஸை எப்படிப்பா அம்போனு விட, அதுவும் இவ என் பிரெண்ட்பா, இதை முடிச்சி கொடுத்துட்டு நீங்க சொன்னது போல சேர்ந்துக்கறேன் பா." என்று கூறினாள்.

    இங்கு சக்தி லீலாவதியின் டிவோர்ஸிற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யூகங்களை வழங்கிவிட்டு சம்மந்தப்பட்ட இருவருமே காரில் ஒன்றாக பயணித்து, இரவு உணவை சேர்ந்தே முடித்து கொண்டு வீட்டிற்கு சென்றார்கள்.

    சக்தியும் லீலாவும் ஒரே அறைக்கு சென்றனர்.

    இருவரும் உறங்கும் நேரம் மெத்தையில் ஒரு புறம் இருந்த சக்தி "தேங்க்ஸ் லீலா" என்று கூறினான்.

     "இட்ஸ் ஓகே சக்தி" என்று கூறி "குட் நைட்" என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு படுத்து கொண்டாள். அவனுமே நடுக்கத்தோடு ஒரு முத்தத்தை வழங்கினான்.

    லீலாவதிக்கு மறுபுறம் திரும்பி படுத்து கொண்டாள். இமை மூடியவளின் இதயம் உறங்கவில்லை. அதற்கு மாறாக இமை மூடியபடி தன் கடந்தகாலத்தின் திருமண அத்தியாயத்திற்குள் நுழைந்து நடந்தவையை எண்ணி பார்த்தாள்.

    சக்தி படத்தை வீட்டில் காட்டி பிடித்திருக்கின்றதா என்று கேட்டப்போது அதனை வாங்கி சம்மதமாய் தலையசைத்தாள்.

    அன்னை வேதராணியும் தந்தை உலகநாதனும் ஊர்ககூடி திருவிழா போல திருமணத்தை நடத்த அடுத்தடுத்து களம் இறங்கினார்கள்.

   ஓரே பெண் லீலாவதி அதனால் சக்தி இவளை பெண் பார்த்து சென்றப்பின் நிச்சயமும் திருமணமும் செல்வ சிறப்பாய் நடத்தினார்கள். ஆயிரம் கனவோடு அடியெடுத்து வந்தாள். ஒவ்வொரு சடங்கும் வெட்கமும் மகிழ்ச்சியும் பொங்க செய்து நிறைவேற்றினாள்.

    சக்தி தாய் புவனாவும் தந்தை தாமரை செல்வனுக்கும் சக்தி இரண்டாவது பையன் என்பதால் கடைசி திருமணம் என்று விழாவாய் கொண்டாடினார்கள்.

   சக்தி இரண்டு மூன்று முறை லீலாவதியோடு பேசினான். அதன் பின் திருமணத்தில் ஜோடியாக அவள் கைப்பற்றியும் நின்றாள்.

    தன் விருப்பு வெறுப்பு மலர்ந்து பேசி சக்தியோடு நற்தோழியாக வாழ்ந்தாள்.

    சக்தி நல்ல நண்பனாய் அவளுக்கு உறுதுணையாக இருந்தான். ஆனாலும் இந்த விவாகரத்து தவிர்க்க முடியவில்லை.

   இருவருக்கும் இது தான் சரியென்று ஒருமித்தமாக தோன்றவும் வந்துவிட்டார்கள். இது இரண்டாவது முறையாக வந்து செல்வது. முதலில் ஒரு மாதம் முன் வந்து அப்பீள் செய்தார்கள். ஜெனி மறுக்க வேறு அட்வகேட் பார்க்கவா என்று கேட்டு மீண்டும் அவளே அதன்கான வேலையை பார்த்தாள்.

   இதோடு மியூட்சுவல் டிவோர்ஸ் முறையில் இரண்டாவது முறையாக அனுப்பி முடித்தாயிற்று. இருவீட்டு பெற்றோருக்கும் கைவிரித்து என்னால எதுவும் உதவ முடியவில்லையென்று வருந்தினாள் தோழி லீலாவதிகாக.

   சில தினங்களில் சட்டபூரணமாக விவாகரத்து பத்திரம் வந்துவிடும். அதன் பிறகு லீலாவதி தன் தாய் வீட்டில் இருந்துக்கொள்வாள்.

   சக்தி வெளிநாட்டில் வேலை கிடைக்க பெற்றதால் அங்கு சென்று செட்டிலாவதாக முடிவெடுத்து உள்ளான்.

    நாட்கள் உருண்டோட விவாகரத்து முடிவுக்கு வரும் நாளும் வந்தது.

    கோர்ட் வாசலில் இருவருக்கும் விவாகரத்து பத்திரம் வழங்கி விட்டார்கள்.
      லீலாவதியும் சக்தியும் அதற்கும் ஒன்றாக வந்து வாங்கினார்கள்.

   பெரும்பாலும் விவாகரத்து வாங்கும் தம்பதிகள் எதிரும் புதிரும் கோபமாகவோ, சோகமாகாவோ திரிவார்கள். ஆனால் லீலாவதி சக்தியை பொறுத்தவரையில் ஆத்மார்த்த தம்பதிகள் போல ஜோடியாக வந்துவிட்டு ஜோடியாக செல்ல ஜெனி பின் வந்தாள்.

    சக்தி கார் எடுத்து வரும் வரை லீலாவதி தனியாக இருக்க, ஜெனி அருகே வந்தாள்.

    "என்னால இப்பவும் நம்ப முடியலை லீலா. என்ன தான் காரணம். அட்வகேட்டா நினைச்சி சொல்ல வேண்டாம். பிரெண்டா சொல்ல மாட்டியா. உங்க பேரண்ட்ஸிடம் சொல்லிடுவேன்னு பயமா. அவ்ளோ தான் என் மேல வச்ச நம்பிக்கையா?

   டிவோர்ஸும் வாங்கி கொடுத்துட்டேன். என்ன பிரச்சனை டி. சக்தி யாரையாவது விரும்பறாரா?

   எப்படி நல்ல பிரெண்டா ஆத்மார்த்த தம்பதியா தெரியற உங்களுக்கு அப்படியென்ன பிராப்ளம்.?" என்று கேட்டாள் ஜெனி. 

   லீலாவதியோ "சக்தி சக்தியா இருக்கறது தான் பிரச்சனை. நான் விட்டு கொடுத்து யோசித்து முடிவெடுத்திருக்கேன் ஜெனி.

    இதை தவிர என்னிடம் எதையும் கேட்காதே.

  சக்தி எனக்கு ஒரு நல்ல பிரெண்ட்.. நானும் அப்படி தான். நாங்க ரெண்டு பேருமே எங்க நலனுக்கு தான் இந்த முடிவெடுத்திருக்கோம். எப்படியும் அப்பா அம்மா எனக்கு வரன் பார்ப்பாங்க. நான் சாகறதுக்குள்ள ஒரு துணை எனக்கு கிடைப்பாங்க. சக்திக்கு அவன் விரும்பிய வாழ்க்கை வாழட்டும்" என்று சென்றாள்.

    ஜெனிக்கோ அவள் சொன்னதை இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்கவும் பளிச்சிட்டது. லீலாவதி செல்லும் பாதையில் ஜெனி பார்க்க அங்கே லீலாவதி ஒரு திருநங்கைக்கு நாணயம் வழங்கி அவளேயே கண்டாள். அடுத்து சக்தியை கண்டு சங்கடமாய் திரும்ப ஜெனியை கண்டு புன்னகை அரும்பி கையசைத்தாள்.

     ஜெனிக்கு லீலாவதி பூடகமாக சொன்னது தற்போது விளங்கியது.

   'சக்தி சக்தியாய் இருப்பது தான் பிரச்சனை' லீலாவதிக்கு. இனி சக்தி சக்தியாய் இருந்தாலும் அவன்(ள்) வாழ்வு சிறக்கும் நல்ல வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, தனிமையாக தனக்கு பிடித்தமாக பெண்ணாக வாழ்வை தொடர...

-சுபம்
பிரவீணா தங்கராஜ்.


  

    


  

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1