பிரம்மனின் கிறுக்கல்கள்-7

 


அத்தியாயம்-7

தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான்.

"என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா" என்று மூச்சு குழாயை கழட்டி மெதுவாய் பேசினார்.

"ஏன்பா இப்படி பேசற. காலேஜ் படிக்கிறப்ப அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நான் நேசித்து கல்யாணம் செய்தவளும் என்னை விட்டு போயிட்டா. நீயாவது கூடவே இருக்க என்ற சந்தோஷப்பட்டா இப்படி பயமுறுத்தறியே. சந்தனா போட்டோ ஹால்ல இருந்தது குத்தமா." என்று வருந்தினான்.

"அடேய்... என் வயசு ஐம்பத்தி ஆறு. நான் சாகிற நிலையில வந்து மருத்துவமனையில கிடக்கவும் இப்படி பதறுற. இத்தனைக்கும் உன் காதலை ஏற்றுக்காம சந்தனாவோட கல்யாண கோலத்துல வீட்டுக்கு வந்தப்ப கோபத்துல விரட்டி அனுப்பினேன். அப்படிபட்ட எனக்கு உடம்பு சரியில்லைன்னதும் நீ துடிக்கிற.

அதே பாசம் தானே டா எனக்கு உன் மேல. நீ பிறந்து வளர்ந்து ஒத்த பிள்ளையா ஆளாகி வந்து திருமணத்தையும் எனக்கு தெரியாம பண்ணிட்டு வந்த, சந்தோஷமா வாழ்ந்தியா. இதோ அந்த பொண்ணை கொரானாவுக்கு தூக்கி கொடுத்துட்டு இருபத்தியெட்டு வயசுல தனிமரமா இருக்க.

உன்னோட வாழ்க்கை இன்னும் எத்தனை வருடம் இருக்கு. அதுவரை இறந்த பொண்ணோட எண்ணங்களில் வாழ்ந்துட்டு இருப்பியா. அவனவன் முப்பது நாற்பதுல கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெத்துக்கறான். உனக்கென்ன டா.

நீ ஆசைப்பட்ட விதமா அந்த பிஞ்சு குழந்தையும் தத்தெடுத்தாச்சு. ஏன் அந்த பொண்ணை தன் பொண்ணா பார்த்துக்க ஒரு குத்துவிளக்காட்டும் மருமகளும் கிடைச்சாச்சு. இனியும் தனி தனியா வாழ்ந்துப்போம்னு பிடிவாதம் பிடிச்சா எப்படி? சந்தனா இறந்து பத்து மாதம் ஆச்சு. இனியும் மனசு மாற நேரம் கேட்டா என்னப் பண்ண? பெத்த மனசு உன்னை இப்படி பார்க்கவா உசிரை பிடிச்சிட்டு இருக்கேன்.

நான் கண்ணை மூடறதுக்குள்ள அந்த பொண்ணு யஷ்தவியோட உன்னை குடும்பஸ்தனா பார்த்துட்டா தானே எனக்கு நிம்மதி.

அவனவன் ஒரே ரூம்ல லிவ் இன் டூ கெதர் லைப்ல மூழ்கறாங்க. நீ என்ன ஊரறிய கல்யாணம் பண்ணிட்டு தனி தனியா நண்பர்களா வாழலாம்னு இருக்கிங்க." என்று பேசினார்.

ஆத்விக் அன்பாளன் பேசுவதை எல்லாம் செவியில் கேட்டு விட்டு மௌனமாய் இருந்தான். எங்கே வாதம் புரிந்தால் தந்தை நலன் மோசமாகுமோ என்ற அச்சம் வாயடைத்திட வைத்தது.

"ப்பா... யஷ்தவி நல்ல பொண்ணு. நல்ல பிரெண்ட் நல்ல அம்மா." என்று அடுக்க, "நல்ல மனைவினு எப்படா சொல்லுவ" என்று பேசினார்.

"சார் அதிகம் பேசாதிங்க. வெளியே நில்லுங்க" என்று செவிலியர் அதட்ட, "பதில் சொல்லிட்டு போடா. நழுவாதே" என்று கூறினார்.

"டைம் கொடுங்கப்பா." என்று வெளியேறினான்.

வெளியே வந்ததும் மூச்சு முட்டியது. யஷ்தவியை மனைவியாய் பார்க்க முடியுமா என்று தோன்ற சந்தனா முகம் வந்து சென்றதே தவிர யஷ்தவி முகம் மனதில் ஒட்ட மறுத்தது. மனதிலே ஒட்டாத பொழுது வாழ்வில் எப்படி என்று மலைத்தான்.

"இப்ப எப்படி இருக்காங்க?" என்று யஷ்தவி குரல் அருகே கேட்க நிமிர்ந்தவன் அவளை கண்டு "இப்ப பரவாயில்லை பேசினார்." என்றவனிடம் காபியை நீட்டவும் வாங்கி பருகினான்.

"அம்மா ஒரே புலம்பல், அழுது தீர்த்துட்டாங்க பச்... மேரேஜ் ஒன்னு தான் லைப்புனு நினைக்கிறாங்க. கேன்டீன்ல காபி குடிச்சிப்பிங்கனு சொன்னேன். அப்பறம் வலுக்கட்டாயமா அனுப்பிட்டாங்க" என்றவள் ஐசியூவின் வட்டத்தில் அன்பாளனை பார்த்தாள்.

மிடறு மிடறாக காபி பருகியவன் "உங்களுக்கு சிரமம் தான். பட் கேன்டீன் போற நிலையில நான் இல்லை. கொஞ்சம் பயந்துட்டேன்." என்றான்.

"உறவுகள் நம்மை விட்டு போனா பயம் வரும். அதுவும் நம்ம அன்பா நேசிக்கிற உறவு என்றால் மனசு கிடந்து தவிக்கும்" என்றவள் சிகையை ஒதுக்கி அமர்ந்தாள்.

"நீங்க உங்க கணவரை மிஸ் பண்ணலையா?" என்று கேட்டான்.

படக்கென திரும்பியவள் அவனிடம் இருந்த வெற்று காபி கப்பை பெற்று கொண்டு வேகநடையிட்டாள்.

ஆத்விக்கிற்கு ஏன் கேட்டோமென்றானது. ஆனால் நிதர்சனம் அவனை கேட்க வைத்தது. தனக்கு சந்தானா நினைவு தள்ள, வருணின் நினைவு இவளுக்குள் வரவில்லையா. எவ்வளவு இயல்பாய் பாவனாவோடு மட்டும் ஒட்டுதலாய் மாறினாள்.

யஷ்தவி வீட்டுக்கு நடந்தே வந்தாவள் பையை ஹாலில் ஒரு திசைக்கு போட்டுவிட்டு கதவை தாழிட்டு முட்டிகட்டி அழுதாள்.

'பார்க்கறவங்க கல்நெச்சக்காரினு சொல்லற அளவுக்கு என்னை மாத்திட்டியே டா. நான் துடிச்சது இங்க யாருக்கு தெரியும். அம்மாவிடம் உண்டாயிருக்கேனு சொன்னேன். அடுத்த இரண்டாவது வாரத்துல என்னை கரு கலைந்ததை சொல்ல வச்சான். அதுக்கு அடுத்த வாரம் என்னை விதவைன் பெயர் சூட்டிட்டு போயிட்டான்.

உயிரோட இருந்தா வாழவெட்டினு பெயர் தந்துயிருப்பான். ஆக மொத்தம் எனக்கு ஒரு பெயர். அவன் நிம்மதியா போயிட்டான் என்று தான் தோன்றியது.

சித்ரா பாலகுமார் கதவை தட்டி பார்த்து அவள் அழுவதை அறிந்ததும் செய்வதறியாது அமைதியாக மாறினார்கள்.

சித்ராவோ பாவனாவை அணைத்து முத்தமிட்டு அவள் வைத்திருந்த பொம்மையை பறித்து தூரயெறிந்தார். குழந்தை வீறிட்டு அழுதது. யஷ்தவி கதவை திறந்து ஓடி வந்தவள் தாயிடமிருந்து பாவனாவை வாங்கி அழுகையை குறைத்தாள்.

அதன் பின் அமைதியாய் சமையலை ஆரம்பித்தாள்.

பாலகுமாரிடம் உணவை கொடுத்து விட்டாள். நடுஒஇல் ஆத்விக் வீட்டுக்கு வந்து குளித்து சென்றான்.

ஒரு வாரமாய் இதே நிலை தொடர, அன்பாளன் சாதாரண வார்டிற்கு அனுப்பியதாக கூறிவிட்டு வீட்டிற்கே அனுப்பினார்கள்.

ஆத்விக் தந்தையை யஷ்தவி இருந்த அறையில் தங்க வைத்தான்.

பாலகுமார் அருகே இரவு உறங்க, ஆத்விக் அறைக்குள் வந்தான். ஏற்கனவே கட்டில் சுவரோரம் வைத்ததை குளிக்க வந்த சமயம் பார்த்திருக்க அவனாக சுவர்பக்கம் சென்றான்.

யஷ்தவி எப்பொழுதும் போல பாவனா அருகே உறங்க வந்தவள் அதன் பின் கீழே செல்ல, "பரவாயில்லை. மேல தூங்குங்க. பாவனா அந்த பக்கம் விழுந்துட்டா. சேப்டிக்கு இருக்கட்டும்." என்றான்.

"அந்த பக்கம் சுவர் தானே நீங்க இந்த பக்கம் தூங்குங்க. நான் கீழேயே படுத்துப்பேன்." என்றவள் பதில் கேட்காது பாய் விரித்து படுத்து கொண்டு போர்வையை மூடிக்கொண்டாள்.

'தேவையா இது நீ ஏன்டா பாவம் பார்க்கற, யஷ்தவி தோழி கூட இல்லை, இரயில் பயணம் செய்யும் எதிரெதிர் பயணி மாதிரி' என்று கூறி கொண்டான்.

     அன்பாளன் உடல்நிலை காரணமாக மகனோடும் மருமகளோடும் இருப்பதாக ஆத்விக் தரப்பில் நடிக்க, "நான் இருப்பதால எப்படியும் ஒரே அறைக்கு போய் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கற நிர்பந்தம் வரும். அடிக்கடி ஓன் மகனிடம் புரிய வைக்க முயல்கின்றேன்" என்றவரை கையெடுத்து கும்பிட்டு சித்ரா பாலகுமார் இருவரும் ஊருக்கு கிளம்பினார்கள்.
  
    யஷ்தவியோ விழிபடலத்திலிருந்து கன்னத்தில் வழிவிட்டவள் விடைக் கொட்த்தாள்.

     அந்நேரம் ஒரு நண்பனாய் "நான் இருக்கேன் மாமா அவங்களை பார்த்துக்கறேன்." என்று பொதுவாய் கூறினான்.

     மகள் யஷ்தவியையும், பாவனாவையும தலைவருடி புறப்பட்டார் சித்ரா.

      அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் அன்பாளனின் மேற்பார்வையில் ஆத்விக் யஷ்தவி அவஸ்தையுடன் தான் கடந்தனர்.

      ஒராமாய் நின்றவளை மகன் அருகே அமர வைப்பார். அவனுக்கு நீ பரிமாறு மா. அவனோட சேர்ந்து சாப்பிடு என்று கூற யஷ்தவி ஆத்விக் நெளிந்தபடி அடிக்கடி அருகே சந்தித்து அமருவதாகபடும்.

      அப்படி என்னதான் பேச வைத்தாலும் அது தாமரை இலை நீர் போன்ற உறவில் வந்து நிற்பார்கள்.

    அன்று யஷ்தவி வீட்டில் இல்லை. அன்பாளனை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தாள்.
    ஆத்விக் தந்தைக்காக விரைவாக வந்த நாட்களில் அதுவும் ஒன்றாக இருக்க யஷ்தவி இல்லையென்றதும்  "பாவனா இல்லையாப்பா?" என்று கேட்டான்.

     "யஷ்தவி கூட கூட்டிட்டு போனா" என்றார் அவர்.

     "எங்க?" என்று கேட்டதற்கு அன்பாளன் தெரியலையேபா" என்று யஷ்தவிகாக காத்திருந்தனர்.

     ஆட்டோவிலிருந்து யஷ்தவி போத்தீஸ் பையும், பூச்செடியும் பாவனாவை கையில் வைத்தபடி இறக்கினாள்.

     ஆத்விக் மேலிருந்து பார்த்தவன் குழந்தையை வச்சிட்டு ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கா என்றதும் சின்ன கோபம் வந்தது. ஏன் அவளுக்கு தேவையானதை சனி ஞாயிறு வாங்க போகலாமே. அன்று குழந்தை என்னிடம் இருக்கும் அல்லவா என்று எண்ணினான்.

    கால்கள் வேகமாக படிகளில் இறங்கி குழந்தையை வெடுக்கென வாங்கினான்.

     யஷ்தவியோ பொதுவிடம் என்பதால் அமைதியாக போத்தீஸ் பையும் ரோஜா செடியும் எடுத்து வந்தாள்.

    "எங்கம்மா போனா" என்ற ஆத்விக் கேட்கும் முன் அன்பாளன் கேட்டுவிட்டார்.

      "பாவனாவுக்கு இரண்டு வாரத்துல பிறந்த நாள் வருது மாமா. அதனால டிரஸ் வாங்க போனேன்." என்று போத்தீஸ் பையை ஹாலில் வைத்து விட்டு பால்கனியில் ரோஜா செடியை ஒரு தொட்டிக்குள் வைத்து வெயில் பட பரமாரித்து நீர் ஊற்றினாள்.

    ஆத்விக்கோ மெதுவாய் யஷ்தவி அருகே வந்து "அவ பெர்த்டே எப்படி தெரியும்?" என்று கேட்டான்.

      "நாம ஹாஸ்பிடலில் இருந்தப்ப மலர் பிரசவ வார்டு போன அன்னிக்கு தான் வருண் என்னை கொரானா வார்டுல இருந்தப்ப எட்டி உதைச்சார். என்னோட வயிற்றுல இருந்த கரு உரு தெரியாம கலைந்து போன நாள். என் வயிற்றில அந்த உயிர் அழிஞ்சுடுச்சு. பாவனா பிறந்தது அப்ப தான் தெரியும்." என்று கண்ணீரை துடைத்து கூறினாள்.

     ஆத்விக் சிலையாக ஸ்தம்பித்து நின்றான்.
    தன்னை போல குழந்தையை பறிக்கொடுத்து இருக்கின்றாளே என்ற வலி உணர்ந்ததாலா அல்லது தான் வாரிசு சந்தனா வயிற்றில் உருவாகி அவள் இறந்ததும் அவளோடு சிசுவும் போன செய்தியே விட பெண்ணவள் வயிற்றில் அந்த நிலையில் உடலும் மனமும் எத்தகைய வலியை சுமந்திருக்கும் என்று சிந்தித்ததாலோ யஷ்தவி மேல் வியப்பாய் எப்படி இவள் நடமாடுகின்றாள். என்னை விட வலி வேதனை அதிகம் பெற்றவள் பாவனாவை அவள் குழந்தையாக காண்கின்றாளென புரிந்தது.

முதல் முறை யஷ்தவியை பற்றி இன்னும் அறிய வேண்டியது உள்ளதோ? என்று மனம் பிசைந்தது.

-கிறுக்கல்கள் தொடரும்.

-பிரவீணா தங்கராஜ். 





Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1