பஞ்ச தந்திரம்-2
தந்திரம்-2
ஒரு காம்பவுண்டில் இங்கும் அங்கும் ஒரு செங்கல் பேத்து இருந்தது. அதில் மாறி மாறி கால் வைக்கும் பொருட்டு ஏணிபடிகள் போல இருக்க அதில் நைனிகா ஏறினாள்.
"ஏய்... என்ன பண்ணற?" என்று ரஞ்சனா கேட்டு நைனிகாவை நிறுத்தினாள். பாதியில் தொங்கிய நைனிகா கீழே இறங்கினாள்.
"இது நான் தங்கியிருக்குற ஹாஸ்டல். இது வழியா மேல வந்திங்கன்னா... ரூமுக்கு போயிடலாம்." என்று சாவி கொத்தை ஆட்டினாள் நைனிகா.
"மஞ்சரி அம்மா வயசானவங்க எப்படி ஏறுவாங்க? இதோ திரிஷா.." என்று கூறவும் "என் பெயர் திரிஷா இல்லை திரிஷ்யா" என்று இடைப்புகுந்து திருத்தினாள் திரிஷ்யா.
"சரி... திரிஷ்யா.. இவங்க சேரி கட்டியிருக்காங்க எப்படி ஏறுவாங்க?" என்று கேட்டாள் ரஞ்சனா.
நைனிகாவோ தோளைக் குலுக்கி வேற இடம் இருக்கா என்பது போல பார்த்தாள்.
"நான் அட்ஜஸ்ட் பண்ணி ஏறிடுவேன். எங்கவீட்ல மாடில வாட்டர் டேங்க்ல இது மாதிரி ஏணில ஏறி பழக்கம். ஆனா இது சுவர் சறுக்கிடாதா?" என்று திரிஷ்யா கேட்டாள்.
"தைரியமா ஏறுங்க" என்று நைனிகா பதில் தந்தாள்.
"அப்படியே அவங்க ஏறினாலும் மஞ்சரிம்மா?" என்று ரஞ்சனா கேட்க, "நானும் ஏறிடறேன்மா. வேற வழி" என்று சுவரை தொட்டு பார்த்தார்.
"ஓகே அப்படியே ஏறினாலும் அந்தபக்கம் குதிச்சு இடுப்பொடிஞ்சா? சரி சேப்பா இறங்கினாலும்... இது ஹாஸ்டல்லு சொல்லற. எத்தனை மெம்பர்ஸ் இருப்பாங்க. வார்டன் நிர்வாகினு யாராவது பார்த்தா என்னாகறது. கழுத்தை பிடிச்சி தள்ளுவாங்க" என்று ரஞ்சனா மீண்டும் தடுத்தாள்.
"பாதிப்பேர் ஊருக்கு போயிட்டாங்க. பத்து பேர் தான் இருப்பாங்க. அப்படியே பார்த்தாலும் நான் அதை மேனேஜ் பண்ணிப்பேன். வார்டன் செக்கியூரிட்டி பார்க்காம இருந்தாலே போதும்." என்று கூறினாள்.
"எனக்கு இது சேப்பா தோணலை. சின்ன பொண்ணு பேச்சை கேட்டு மேலே ஏறி பெரியவங்களும் குழந்தைகளும் கால் உடையவா? சாகறதை விட கஷ்டம். நாம படுத்தபடுக்கையில் இருப்பது." என்று ரஞ்சனா மீண்டும் தடுத்தாள்.
"லுக்... நீங்க வரலைனா விடுங்க. யார் வர்றிங்களோ வாங்க. தட்ஸ் இட். என்னை நம்பி வந்தா பாதுகாப்பா தங்கலாம். கேரண்ட்டி" என்று நைனிகா கோபமாய் ரஞ்சனாவிடம் கூறி மற்றவர்களை பார்வை பதித்தாள்.
வர்றிங்களா? வரலையா? என்ற பொருள் அதில் அடங்கியிருந்தது.
நைனிகா தனது நெயில் பாலிஷை சுரண்டி உதட்டை குவித்து ஊதினாள்.
வயதில் முதிர்ந்த மஞ்சரியே முன் வந்து ஏற தயாரானார்.
நைனிகாவோ "தேங்க்ஸ் பாட்டிம்மா" என்று மடமடவென ஏறி விட்டு சுவரில் காலாட்டி அமர்ந்து மஞ்சரி பாட்டி ஏற கை கொடுத்தாள்.
பட்டுசேலையை தூக்கி இழுத்து இடையில் சொருகினார். நைனிகா கையை பற்றி ஏறவும் ரஞ்சனா பார்த்தும்மா என்று பதறி பிடித்துக் கொண்டனர்.
மெதுவாய் ஏறிவிட்டு நைனிகாவை பார்க்க "சிம்பிள்... ஜம்ப் பண்ணுங்க. இல்லைனா இதே போல ஆங்கங்க சுவர் கைப்பிடி இருக்கும். ஆனா தேடி பார்க்கணும். வெயிட் எ மினிட்" என்று குதித்து விட்டு தனது போனை எடுத்து டார்ச்சை ஒளிர செய்தாள்.
"சீ... ஜிக்ஜாக்(zigzag) இருக்கு தெரியுதா? அதே பேட்டர்ன்ல பத்திரமா பிடிச்சிட்டு இறங்குங்க" என்றாள்.
தன் இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு இறங்கினார் மஞ்சரி.
பாதி இறங்கவும் கை வெடவெடத்தது. ஆனால் இதுவரை வந்துவிட்டு ஏறவும் இயலாது. தைரியத்தை மனதில் திரட்டி பாதியில் கையை விடுத்து குதித்தார்.
"அம்மா." என்று மஞ்சரி விழவும் நைனிகாவோ "பாட்டி ஆர் யூ ஓகே?" என்று கேட்டாள். தலையாட்டி மூச்சு வாங்க எழவும், "அம்மா நீங்க ஓகே தானே?" என்று இந்தபக்கம் திரிஷ்யா, ரஞ்சனா கேட்டு தவித்தனர்.
"ஒன்னுமில்லைம்மா பத்திரமா இருக்கேன்." என்றதும் நிம்மதி வந்தது.
குழந்தை தனுஜாவை ஏற்றிவிட ரஞ்சனா முயல, அவளோ பயந்து பின் வாங்கினாள்.
திரிஷ்யாவோ "பாப்பாவுக்கு பயமாயிருக்கா? இங்கப்பாரு நான் போறேன். நீ அதுலயே கால் வச்சி ஏறணும்" என்று திரிஷ்யா ஏறிட, தனுஜா அவளையே வைத்த கண்ணெடுக்காமல் பார்த்தாள்.
"ஆன்ட்டி ஏறிட்டேன் பாரு. கை கொடு. நீயேரு பார்க்கலாம்" என்று திரிஷ்யா அழைக்க ரஞ்சனா தூக்கி ஏற்றினாள்.
திரிஷ்யா உதவியால் தனுஜா ஏறினாள்.
அதே போல மறுபுறம் இறங்கிவிட்டு தனுஜாவை அழைக்க அவளோ இந்தபக்கம் ரஞ்சனாவையும், அந்தபக்கம் திரிஷ்யாவையும் பார்த்து திரிஷ்யாவிடம் தாவினாள்.
கண்ணை மூடி குதிக்கவும் திரிஷ்யா பிடித்து கொண்டாள்.
"அம்மாடி... இங்கபாரு... தனு குட்டி இங்கபாருங்க" என்று திரிஷ்யா கொஞ்சவும் தனுஜா இமை திறந்தாள்.
மஞ்சரி பாட்டியும் நைனிகாவும் இருக்க சுவரை பார்த்தாள்.
அதற்குள் ரஞ்சனா மடமடவென ஏறி இறங்காமல் குதித்தாள்.
பாஞ்ச்... ஐந்து பேரும் வந்தாச்சு." என்று சுற்றி முற்றி பார்த்தாள்.
"இதென்ன இடம்?" என்று ரஞ்சனா கேட்டதும், "இங்கயாராவது கேள்வி கேட்கறாங்களா. நீயேன் இம்சைப்படுத்துற. என்னை பாலோவ் பண்ணுங்க. யாராவது வர்ற மாதிரி தெரிந்தா ஒன்னும் பயப்பட வேண்டாம். லைட்டா மறைஞ்சி வாங்க போதும். பாட்டி நீங்களும் பாப்பாவும் தான் யாருக்கும் தெரியாம வரணும். மத்தபடி இவங்க ரெண்டு பேரும் பார்த்தா நியூ ஜாயின் ஒர்க்கர்ஸ்னு சொல்லிடலாம். இங்க காலேஜ் கேர்ள் மட்டும் இல்லை ஆபிஸ் ஒர்க் பண்ணற அக்காவும் இருக்காங்க. சோ அவங்களை பத்தி நோ பிராப்ளம்." என்று கூறினாள்.
"இது வுமன் ஹாஸ்டல்லா? காலேஜ் ஹாஸ்டல் இல்லையா?" என்று ரஞ்சனா கேள்வி எழுப்பினாள்.
"வுமன் ஹாஸ்டல் தான். காலேஜ் ஹாஸ்டல் என்றால் ஏகப்பட்ட டார்ச்சர் இருக்கும்னு இங்க வந்து சேர்ந்தேன்" என்று நைனிகா தோளைக் குலுக்கி குறிப்பிட்டு மெதுவாய் சுவர் பின்னால் ஊர்ந்தாள்.
அவளை தொடர்ந்து மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
ஒவ்வொரு இடமாக மறைந்து மறைந்து வந்து படிக்கட்டில் நின்றாள்.
நைனிகா வாயில் ஒற்றை விரலை வைத்து மெதுவாய் சென்று மாடியில் யாருமில்லை என்றதும் "நான் கதவை திறந்ததும் மடமடனு வாங்க. ஆனா ஓடிவராதிங்க ." என்று சென்றாள்.
ஒரு அறையை திறப்பது அறிந்ததும் எட்டி எட்டி பார்த்தார்கள்.
கதவை திறந்ததும் வர செய்கை செய்தால், குழந்தை தனுஜாவும் பாட்டி மஞ்சரியும் வந்து சேர்ந்தனர்.
அவர்களை உள்ளே தள்ளி "சத்தம் போடக்கூடாது" என்று தனுஜாவிடம் எச்சரித்தே அனுப்பினாள்.
அடுத்து திரிஷ்யா வர கூறவும் சேலையை இறுகப்பற்றி ஓடிவந்தாள்.
அவளையும் தனது அறையில் இழுத்து விட்டு நைனிகா திரும்ப, பக்கத்து அறைக்கதவு திறந்து ஒரு பெண் எட்டி பார்த்தாள்.
ரஞ்சனா பாதி வழியில் அப்படியே நிற்க, நைனிகாவோ "ஷிட்'' என்று திரும்ப, "ஏ... யார் நீ...?" என்று ரஞ்சனாவை பார்த்து கேட்டாள் நைனிகா அறைக்கு அருகே இருந்த அறையில் இருந்தவள்.
"யாரா... 304 ரூமுக்கு புதுசா வந்திருக்கேன். ஏன்... என்னாச்சு?" என்றாள் ரஞ்சனா.
"ஓ... சாரி எனக்கு தெரியாது. நான் கலா. இங்க யாரோ மறைந்து மறைந்து வந்தது போல இருந்துச்சா அதனால எட்டி பார்த்தேன்" என்று அறிமுகமாக, நைனிகாவோ முறைத்தபடி தனதறைக்குள் சென்றாள்.
"ஓ... நான் விமலா. ப்ரீயா இருக்கறப்ப பேசுவோம். இப்ப புயல் காத்து வீசுது. கதவை சாத்திட்டு தூங்குங்க. பை" என்று கூறியதும் கலாவோ "எக்ஸாக்ட்லி பை" என்று கதவை சாற்றினாள்.
ரஞ்சனாவோ பொய்யை உதிர்த்து வந்தவள் நைனிகா அறைக்கதவு திறந்திருக்க நுழைந்தாள்.
"அறிவிருக்கா.. அவகிட்ட போய் பேசிட்டுயிருக்க. அவ இந்த ஹாஸ்டல் முழுக்க வாயாடி வம்பு அளக்கறவள். இப்ப நீ வகையா மாட்டப்போற. நீ மாட்டினா ஓகே. என்னை ஏன் கோர்த்து விடற?" என்று கத்தினாள் நைனிகா.
"இதோடா.... சாகணும்னு முடிவுப் பண்ணிட்ட... கோர்த்து விட்டா என்ன?" என்று ரஞ்சனா பேசினாள்.
நைனிகாவுக்கு ரஞ்சனாவை பிடிக்கவில்லை. அதே போல ரஞ்சனாவுக்கு நைனிகாவை பிடிக்கவில்லை. சந்தித்ததிலிருந்து ஒரு தூரம் விலகல்.
"உஷ்" என்று தனுஜா கூறவும் இருவரும் அமைதியானார்கள்.
நைனிகா அங்கிருந்த நீரை எடுத்து குடித்தாள். திரிஷ்யாவிடம் பாட்டிலை தர அவளும் பருகினாள்.
''பாட்டி உங்களுக்கு?" என்றதும் அவருமே குடித்தார்.
திரிஷ்யா தனது சேலையை மேலே தூக்க, காலிலிருந்து இரத்தம் வழிந்தது.
"ஓ காட்.. சிராய்ச்சி இருக்கு போலயே" என்று ரஞ்சனா முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்.
நைனிகாவிடம் "ஆயின்மெண்ட் ஏதாவது இருக்கா?" என்றதும் தலைக்கு தேய்க்கும் எண்ணெயை நீட்டினாள்.
"ஒரு பஸ்ட் எயிட் பாக்ஸ் வச்சிருக்க மாட்ட?" என்று ரஞ்சனா பொரியவும், "பச் நீ ரொம்ப குடைச்சல் தர" என்று நைனிகா மெத்தையில் அமர்ந்தாள்.
"இங்க டெட்டலாவது இருக்கா?" என்று கேட்டாள். கை அலம்பும் இடத்தில் இருந்ததை எடுத்து கொடுக்க அதனை போட்டு கழுவி துடைத்து எண்ணெயை தடவினாள்.
தனுஜா மஞ்சரி பாட்டியின் கை வளைவில் இருக்க பாட்டியும் மெத்தையில் அமர்ந்தனர்.
லேசாய் இரத்தத்தை துடைத்து விட்டு டெட்டல் இருக்கவும் அதனை அப்படியே வைத்து தனியாக இருந்த சேரில் அமர கூறினாள்.
திரிஷ்யா அமரவும் ரஞ்சனா எனக்கு எங்க உட்கார என்பது போல விழி விரித்தாள்.
எங்கும் இடமில்லை என்றதும் இன்னொரு பெட் சுருட்டி இருந்ததை எடுத்து உருட்டவும் அது கீழே மெத்தையாக மாறவும் அதிலேறி அமர்ந்தாள்.
"ஏய் அது ரூம் மேட் நிஷாந்தியோட பெட்" என்று நைனிகா கூறவும், "அவ வந்தா அவளிடம் சாரி சொல்லிக்கறேன்." என்று ரஞ்சனா கூறவும் நைனிகா கொதித்து போனாள்.
முதல்ல யாருக்கு எந்தவூர்? என்ன பிரச்சனை? இறக்க துணிந்த காரணமென்ன? என்று அறிந்திடும் ஆர்வம் எழும்ப, முதலில் தனுஜாவிடம் "நீ யாரு எந்தவூர் அம்மா அப்பா யாரு?" என்றாள்.
"பசிக்குது" என்று தனுஜா கூறவும் வேகமாய் வந்த கேள்விகள் தடைப்பட்டு போனது.
"எனக்குமே மாத்திரை போடணும்." என்று மஞ்சரி பாட்டி கூறவும் முதலில் குழந்தைக்கும் பாட்டிக்கும் வயிற்றுக்கு அனுப்ப தங்களின் சாப்பாட்டு கூடையை உருட்டினாள்.
மேகி பேக்கேட் மட்டும் இருக்க, கெட்டிலில் சுடத்தண்ணீர் கொதிக்க வைத்தாள் நைனிகா.
கப் மேகி என்பதால் நன்றாக கொதிக்க வைத்து ஆளுக்கு ஒரு கப் என்ற விகிதத்தில் சாப்பிட கொடுத்தாள்.
தனுஜா வேகமாய் தனக்கு பிடித்த நூடுல்ஸை விழுங்கினாள்.
மஞ்சரிக்கு சாப்பிட பிடிக்காவிட்டாலும் வேறுவழியில்லையென்று சாப்பிட்டு தனது கைப்பையில் இருந்த மாத்திரையை விழுங்கினார்.
திரிஷ்யா மட்டும் ''என் குழந்தைக்கும் ரூடுல்ஸ்னா ரொம்ப பிடிக்கும்" என்று கூறவும் ரஞ்சனா "உனக்கு குழந்தை இருக்கா?" அதை மீறி எப்படி சாக துணிஞ்ச?" என்று கோபமாய் கேட்டாள்.
தனுஜா ஸ்பூன் தவறவிடவும், குழந்தை முன் பேசவேண்டாமென அமைதி காத்தனர்.
திரிஷ்யா தனுஜாவிடம் உறங்க கூற தனுஜா மறுக்கவும், கதை சொல்லி தூங்க வைக்க முனைந்தாள். அவள் குழந்தைக்கு கதை கூறி தூங்க வைத்து பழக்கம் என்பதால் அதனை சரியாக செய்தாள்.
குழந்தை உறங்கும் வரை மற்றவர்கள் தங்கள் வாழ்வின் எந்த முகவுரையும் துவங்க வேண்டாமென்றும். குழந்தையை பற்றி நாளைக்கு விசாரிப்போமென்றும் மஞ்சரி அறிவுறுத்த காத்திருந்தனர்.
ரஞ்சனா மட்டும் அங்கும் இங்கும் பார்வையை உருட்டி அங்கிருந்த வசதியை பார்த்து நின்றாள். நைனிகா பக்கம் எல்லாம் வசதி படைத்ததாக இருந்தது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
ஆஹா...! சாகணும்ன்னு முடிவெடுத்தபோது...
ReplyDeleteஒருத்தருக்கொருத்தர் இடையில
மனக்கசப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. அதே உயிர் பிழைச்சு வந்தப்பிறகு ஒரு த் தரை பார்த்து இன்னொருத்தர்
முகம் சுழிப்பதும் ஏனோ...???
தொடர்ந்து வாசித்து கருத்து அளித்துஊக்குவிக்கவும் நன்றி 😊😊😊😊
DeleteInteresting
ReplyDeleteவித்தியாசமான நடை
ReplyDelete