தீர்ப்பெழுதிய பேனா ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, "இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா... பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க" என்று தழதழத்து கூறி முடித்தார். எதிரில் இருந்தவர்களோ "இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்...