துளிர் விடும் விடியல்
துளிர் விடும் விடியல்
ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.
தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.
தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.
அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?
படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.
மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.
பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்
சாதாரணமான மனிதன் சின்னசாமி. அதனால் பெண் பிள்ளை பெற்றெடுத்தோம் கட்டி
கொடுத்தோம் என்பது தான் அவர் எண்ணம்.
திவ்யபாரதிக்கு இது சுத்தமும் பிடிக்கவில்லை. அதிலும் தந்தை அண்ணன்
மார்ச் எக்ஸாமில் கோட்டை விட்டு அக்டோபரில் பிட் அடித்துத் தேர்வானவன்.
அவனுக்கு வராத படிப்பை வாவாயென வறுத்தெடுத்துப் பி.காம் படிக்க வைத்தவராயிற்றே திவ்யபாரதிக்கு இரத்தம் சூடேறுமா ஏறாதா?
கோபத்தில் தந்தையை உறுத்திக் கொண்டு சாப்பிடாமல் விரதமிருக்க ஆரம்பித்தாள். அப்படியாவது தந்தை தன் பக்கம் திரும்பி படிக்க வைப்பாரென. ஆனால் அவரோ மனோகரனுக்குக் கறிக்குழம்பிலிருந்த ஈரலை எடுத்துத் தட்டில் வைத்து மகனை உச்சி முகர்ந்தாரே தவிர மகள் திவ்யபாரதியை சட்டை செய்யவில்லை.
இருவரும் சாப்பிட்டு வெளியேறவும் திவ்யபாரதிக்கு சோகமானது.
தாய் ருக்மணி தான் சாப்பிட சொல்லி கெஞ்சினார்.
"ரொம்ப முக்கியம் சோறு. நான் இன்னிக்கு இந்தச் சோறுக்காகத் தட்டில கை
வச்சேன். என் வாழ்க்கையே உன்ன போல அடுப்படில தான் இருக்கும்." என்று குறைக்
கூறி கோபத்தைத் தாய் மீது காட்டி, அங்கே ஒப்புக்கு இருக்கும் இரும்பு
கட்டிலில் ஏறியமர்ந்தாள்.
கீழே தண்ணீர் படாமலிருக்க நாலுபுறமும் செங்கல் வைத்திருந்தனர்.
"அடுப்படி ஒன்னும் அசிங்கமில்லை பாரதி. எல்லா வீட்லயும் சமைக்க எப்படியும் இந்த இடம் வந்தாகணும். இது படிச்சிருந்தா வரக்கூடாதுனு சட்டம் எழுதலை. எந்தவூர் படிச்ச ஞானியானாலும், ராணியானாலும் ஒரு வாய் தண்ணி குடிக்கவும், வயிறு பசினு சொன்னா கரண்டி பிடிச்சி சமைக்கத் தான் செய்வாங்க." என்று ருக்மணி கூறிவிட்டுச் சாப்பாட்டைப் பிசைந்தார்.
"நான் கரண்டி பிடிக்கறது தப்புனு சொல்லலை. இரண்டு எழுத்து படிக்க வச்சா என்னவாம். அண்ணனை படிக்க வைச்சார். என்ன படிக்க வச்சா என்னவாம்.
பணம் இல்லைடி.. னு மட்டும் ராகம் பாடாதே. கவர்மெண்ட் காலேஜ்ல சேர்ந்தா அதெல்லாம் கட்டலாம். உன் புருஷன் குடிக்காம இருந்தா எல்லாம் சாத்தியம்" என்று முட்டி கட்டி எட்டுக்கட்டையில் பேசினாள்.
"என்ன என்னடி பண்ண சொல்லற. நாலு வீட்ல பாத்திரம் கழுவி நானும் தான் வீட்டை கவனிக்கறேன். பத்தலையே.... உங்கண்ணா தலை நிமிர்ந்துட்டா வேலைக்குப் போய்ப் பணம் சம்பாரித்துக் கொண்டாருவான். என்ன அதுக்கு முன்ன உங்கப்பனுக்கு அந்த வினோத் பையனுக்குக் கட்டி முடிக்கணும்னு நினைக்கிறார்.
அந்தப் பையன் வினோத் வரதட்சனை வேணாம் உன் பொண்ணைக் கட்டிக்கிறேனு சொன்னான். உங்கப்பாவுக்கு அதே மண்டையில ஓடும்" என்று கூறி மகளின் கையைப் பிடித்து உருண்டையைக் கையில் வைத்து சாப்பிட கூறினார்.
"வேண்டாம் மா." என்றாள் திவ்யபாரதி.
"பொண்ணுக்கு உடம்பு ரொம்ப முக்கியம். சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும். தெம்பு இருந்தா தானே உங்கப்பாவோட சண்டைப் போட்டாவது படிக்கக் கேட்ப, அதுக்கு வலு வேண்டாமா? நீ என்ன தப்பு பண்ண? சாப்பிடாம பட்னி கிடக்கக் குடிக்கிறவர் கவலைப்படலை. உங்கண்ண.. நான் படிக்க வைக்கிறேனு வார்த்தை விடலை. அவனுக்கு அவன் சோறுனு மட்டும் கண்ணுல பட்டுச்சு." என்று கொடுக்கப் பாரதி அமைதியாய் அம்மா கொடுத்த வில்லையைச் சாப்பிட்டாள்.
"ஏ திவ்யா.. புக் பேர் ரத்தாம் டி. ஏதோ பாரதியார் கவிதை வாங்க சொன்ன. இந்தா காசு. நீயே பக்கத்துல எங்க கிடைக்கும்னு வாங்கிக்கோ" என்று திவ்யபாரதி கொடுத்த பணத்தைத் திரும்பத் தந்தாள்.
காசு வந்ததும் அன்னையைப் பார்த்து, பேரு தான் திவ்யபராதி. பாரதியார் கவிதை கூட வாங்க முடியாத பாரதி. பெயருல மட்டும் திவ்யா.. சரஸ்வதியோட பெயரு.
எல்லாம் என் தலைவிதி." என்று இருந்த அந்த எலிப் பொந்து அறையில் ஒரமாகச் சுருண்டாள்.
"ஏய் தண்ணியாவது குடி தொண்டையிலயே சோறு நிற்க போகுது. அப்பறம் விக்கிக்கும்" என்று கூற காதில் வாங்காமல் இருந்தாள்.
ருக்மணி சாப்பிட்ட பாத்திரத்தை விளக்கி கொண்டிருக்கத் திவ்யபாரதி யோசனையில் சுழன்றாள்.
அந்நேரம் துணுக்கு பேப்பர் ஒன்று வீடு வீடாகப் போட்டுப் போயிருந்த ஒருவன் திவ்யா வீட்டிலும் போட்டுச் சென்றான்.
பார்ட் டைம் ஜாப் என்றிருக்கத் தான் படிக்கத் தேவையான பணத்தைக் கணக்கிட்டு அதனைப் பற்றியே சிந்தித்தாள்.
நிச்சயம் இந்த வேலை கிடைத்தால் பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படிப்பை தொடரலாம். தந்தையிடம் பணத்தைக் கேட்டு தொல்லை செய்ய வேண்டியதில்லை. ஆனால்... படிக்கவும் வேலைக்குச் செல்லவும் அனுமதி வேண்டும்.
"ருக்மணி... உன் பையன் யாரோ கூடப் படிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டானாம். போலிஸ் உன் புருஷனை இழுத்துட்டு போயிருக்காங்க" என்றதும் ருக்மணி பதறியடித்து ஓடினார்.
திவ்யபாரதி வெளியே வர, அந்தயிடமே பரபரப்பாய் இருந்தது. அண்ணன் ஒரு பெண்ணை அழைத்து வர, தந்தை கூடவே வந்து நின்றார்.
போலிஸ்காரன் பெண் வீட்டார் புகார் கொடுத்த போது, மனோகரனை பிடித்தது. ஆனால் அவனோ ரெஜிஸ்டர் மேரேஜ் செய்திருந்தான். அதனால் அந்தப் போஸிஸே நியாயப்படி காதல் திருமணத்தை ஆதரித்துச் சுமூகமாக மாற்றி அனுப்பினார்கள்.
சின்னசாமி சரி தன் மகன் திருமணத்தை முடித்துத் திரும்பினான் என்று பார்க்க அவனோ "எனக்குக் கல்யாணமாகிடுச்சு இனி அங்க வரமாட்டேன். அங்க ஒன்டிக்குடித்தனம் பண்ண முடியாது. தீபிகா பணக்காரி அதனால நாங்க தனி வீடு பார்த்துக்கறோம்" என்று முதல் குண்டை தூக்கி போட்டான்.
சட்டைகளைப் பையில் அடுக்கி கொண்டே, "ப்பா.. இப்ப கல்யாணம் ஆகிடுச்சு. எனக்குக் குடும்பம் இருக்கு. இனி என் பணத்தை எதிர்பார்க்காதே. தீபிகா பியூட்டிபார்லரில் இருந்து அவளுக்கு டிரஸ் வரை நான் தான் செலவு பண்ணணும். அதனால என் சம்பளம் கேட்காதே" என்று இரண்டாவது குண்டை தூக்கி போட்டான்.
"டேய்... உன்னைப் பெற்று எடுத்து வளர்த்து வாரிசா மதிச்சு, படிக்கலாம் வச்சேன். இப்படி ஒருத்திய கட்டிக்கிட்டு பொசுக்குனு போறேனு சொல்லற. சரி அதாவது பரவாயில்லை.
உன்னை நம்பி தானே உன் பணத்தை நம்பி தானே திவ்யா கல்யாணம் யோசித்தேன்." என்றார் சின்னசாமி.
"இங்க பாருங்க... பெத்தா புள்ளைய வளர்க்கணும். உங்க சுமைய என் மேல திணிக்கறிங்க. அவளைக் கட்டி கொடுக்கணும்னா நீங்க தான் பணம் சேர்க்கணும். நான் இல்லை. தீபிகா வா போகலாம். இனி இங்க இருந்தோம் நம்மைச் சுரண்டி ரத்தத்தை உறிஞ்சுடுவாங்க" என்று நடையைக் கட்டினான்.
ருக்மணி தான் அழுதழுது புலம்பினார். சின்னசாமி வழமையாய் குடித்து விட்டு புலம்பி ஒரத்தில் கிடந்தார்.
திவ்யா வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று இருமனநிலையாக இருந்தவள் அப்பொழுது முடிவெடுத்தால் வேலைக்குப் போக வேண்டும் என்றும், அதே நேரத்தில் படிக்க வேண்டுமென்றும்.
அடுத்த நாள் அந்த எண்ணிற்கு அழைத்து, மானத்திற்குப் பாதகமான வேலையில்லை என்பது வரை அறிந்து கொண்டு சென்றாள்.
அன்னை கிட்ஸ் க்ளினிங்கில் ரிசப்ஷன் வேலை. மதிய ஷிப்ட். மதியம் 1 மணியிலிருந்து மாலை மாலை ஆறுமணி வரை.
பெயர் எழுதி டோக்கன் போட்டு குழந்தை உடல் எடை உயரம் பதிவு செய்து அனுப்ப மட்டுமே.
அனைத்தும் தெளிவாகக் கேட்டு வீட்டுக்கு வந்த பொழுது சின்னசாமி வினோத்தை அழைத்து வந்து, "இந்தப்புள்ள உனக்கும் இவனுக்கும் கல்யாணம். நீயும் ஓடுகாலியா போறதுக்குள்ள கட்டி வச்சிடறேன்." என்றார் சுவரை பார்த்து பேசினார்.
திவ்யபாரதி மெதுவாக நடந்து வந்தாள்.
தந்தை முன் அமர்ந்து, "இங்க பாருப்பா... நான் ஓடுகாலியா போக மாட்டேன். நீ பயப்படாதே. என்னைக் கல்யாணம் பண்ணி வச்சி உன் கடமை முடிஞ்சுதுனு நீ பாட்டுக்கு இருப்ப. வர்ற வருமானத்துல எனக்குப் பொங்கல் சீரு, தீபாவளி சீருனு கொடுப்பிங்களா...
சின்னசாமி மகன் ஒருத்திய லவ் மேரேஜ் பண்ணிட்டு இழுத்துட்டு ஓடிட்டான். மகளைப் படிக்க வைக்காம பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சான். அவன் வாழ்ந்தது இதான்னு ஊர் சொல்லும். இதில்லப்பா வாழ்க்கை.
ஊர் என்ன சொல்லனும் தெரியுமா?!
சின்னசாமி குடிக்காரனா இருந்தாலும் பையன் அவனை உதறி தள்ளிட்டு போனாலுமே, மக மேல நம்பிக்கை வச்சி, படிக்க அனுமதிச்சு, வேலைக்கும் அனுப்பிப் பொம்பள பிள்ளைய சொந்த காலில் நிற்க வச்சான்னு பேசணும். உன்னைப் பார்த்து மற்றவங்க பொம்பள பிள்ளையா இருந்தாலும் பெத்தவங்களைப் பார்த்துக்கோம். பேச வைக்கணும். உன்னை முன் உதாரணமா காட்டணும்." என்றாள்.
அவள் பேச்சில் சரஸ்வதி அருள் போல, தங்குதடையின்றித் திடமான முடிவும், உண்மையும் மனதை புரட்டும் பக்குவ வார்த்தையும், கண்ட சின்னசாமி ருக்மணி மீது பார்வை வீசினார்.
இவ்வளவு நேரம் அழுது புரண்டு யாருக்கோ திருமணப் பேச்சு என்றிருந்த ருக்மணி மகள் அருகே நடந்து வந்தாள்.
"இங்க பாருங்க அப்பா. நம்ம வீட்டுல இருந்து மூன்று ஸ்டாப்புல இருக்கற ஹாஸ்பிடலில் வேலை இருக்காம். எல்லாம் கேட்டுட்டேன். பிளஸ் டூ படிச்சா கூடப் போதுமாம். வர்றவங்களுக்கு டோக்கன் போடற வேலை. மாச சம்பளம் ஆறாயிரம். போகப் போக எட்டாயிரம் கூடத் தருவாங்களாம். அதுக்குள்ள கரஸ்ல ஒரு டிகிரி முடிச்சிடுவேன்.
அண்ணாவுக்கு மார்ச் இல்லைனா அக்டோபர்னு அவகாசம் தந்து படிக்க வச்சி மேலயேத்தி விட்ட... இப்ப எனக்கு அவகாசம் கொடுப்பா... நான் உன்னை மேலயேத்தி விடறேன் என்றாள் உறுதியாக.
இம்முறை சின்னசாமிக்கு மகள் பேச்சு திமிராகத் தெரியவில்லை. உறுதியான, உயர்வான, நிமிர் பேச்சாகத் தோன்ற பக்கத்திலிருந்த வினோத்திடம் "என் மக சொன்னதைக் கேட்டியாப்பா... அவளுக்கு நான் அவகாசம் தர போறேன். உன்னால முடிஞ்சா காத்திரு. இல்லைனா... வேற பொண்ணைப் பாருப்பா" என்று மகளுக்குச் சம்மதமாக அவனிடம் பதிலை கூறி திவ்யபாரதிக்கு வழிவிட்டு நின்றார்.
இனி திவ்யபாரதி பாரதியின் கவிதை புத்தகம் தேடி போவாள். படிக்க மட்டும் அல்ல... பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் மாற.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment