சைராவும்🐕 சேட்டைக்காரியும்👧🏻

                   



     சைராவும் சேட்டைக்காரியும்

 

        ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.

     தற்போது அதன் வாழிடமான ஆலமரத்தின் கீழ் பகுதியிலிருந்து வேறிடம் நோக்கி இடம் பெயர யோசித்து கொண்டிருந்தது. ஏனென்றால் அது வயிற்றில் தற்போது குட்டிநாய்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியே பிறந்து விடும் நிலைக்கு இருந்தது.

    அதனால் அது தக்க பாதுக்காப்பான இடம் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது.

    அவ்வூரில் சற்று நெடுஞ்சாலையை தாண்டி சென்ற போது பசி வாட்டியெடுக்க ஒரு டீக்கடையின் கீழ் நின்றது. அப்போது அங்கே வந்த பருப்பு வியாபாரி ஒருவர் அந்த நாயை கண்டு பாவம் பார்த்து பட்டர் பிஸ்கேட் வாங்கி அதற்கு போட்டார்.
  
   நாயும் வாலாட்டி நன்றி உரைத்து பிஸ்கேட்டை சாப்பிட்டது. அந்த பருப்பு வியாபாரி அவ்விடம் விட்டு பைக்கில் அவரது வீட்டுக்கு செல்லவும் அந்த நாயும் பின் தொடர்ந்தது.

    ஒரு பெரிய கேட்டின் உள் செல்ல நாயும் உள்ளே வந்தது. வீட்டுக்கு வந்தப் பின்னரே அது தன்னை தொடர்வதை அறிந்து தன் மனைவியிடம் பிஸ்கேட் வாங்கி போட்டதும் தன் பின்னால் வந்ததை கூறி முடித்தார்.

    பருப்பு வியாபாரி மனைவியோ "பாவம்ங்க வயிற்றுல குட்டியை சுமந்த தாய் இங்கேயே இருக்கட்டும்" என்று கறிக்குழம்பில் சோற்றை கிளறி வாசலில் வைத்தார்.

     இருவரின் அன்பை கண்டு மகிழ்ந்த நாயும் அவர்கள் விரட்டாததால் அங்கேயே தங்க முடிவெடுத்தது.

   சில நாட்களில் மூன்று குட்டியை அந்த நாய் ஈன்றோடுத்தது. மூன்றும் ஒரே நிறத்தில் இருந்தது. இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று சின்ன சின்ன வித்தியாசம் காணப்பட்டு இருந்தது. முழு பிரவுன் நிறத்தில் ஒன்றும் வெள்ளை கலந்து சற்று பழப்பு கலந்தும் ஒன்று முகத்தில் மட்டும் லேசான வெள்ளை என்று மூன்று இருக்க கண் திறக்க கடினப்பட்டது.

      பருப்பு வியாபாரி மனைவி அந்த குட்டி நாயை பிரசவித்த நாயுக்கு தினமும் சாப்பிடும் பொழுது உணவை தட்டில் வழங்குவார்கள். குட்டி நாயுக்கு தாயே பாலை புகட்டிவிடும்.

   இப்படியாக சில நாட்கள் செல்ல குட்டி நாய் கண் திறந்து நடமாட, அங்கே ஒரு சிறுமி டோரா போன்று பேக் மாட்டி வந்து நின்றாள்.

    பருப்பு வியாபாரியின் பேத்தி. அவளுக்கு நாய், பூனை, பறவை, மீன்கள் என்று விலங்குகள் மீது அத்தனை ஆர்வம். அதனால் மூன்று குட்டி நாய்களை தன் தாத்தா வீட்டில்  கண்டதும் ஓடிவந்து மாறி மாறி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள்.

    தன் குழந்தையை யாரோ தூக்குவதாக எண்ணி தாய்நாய் ஓடிவந்து சத்தமிட அப்பொழுது அதனை அதட்டி விட்டார் பருப்பு வியாபாரி.

   தனக்கு உணவிடும் மனிதர் அதட்டியதும் அவரின் வீட்டுக்கு வந்த குட்டி பாப்பாவை கண்டு அமைதியானது. மேலும் அந்த குட்டி பாப்பா தன் குட்டி நாயை கொஞ்சுவதில் ஆனந்தம் அடைந்தது. அதன் மொழியாக வாலையாட்டி நின்றது.

       குட்டி பெண் பிரக்யா தன் தாய் தந்தையை விட்டு தனியாக தாத்தா பாட்டியோடு லீவுக்கு வந்திருக்க சேட்டைகள் செய்த வண்ணம் இருந்தாள்.

    பிரக்யா என்றதை விட சேட்டைக்காரி என்றே கூறிடலாம். பிரக்யா அவளின் பாட்டிக்கு பெரும்பாலும் சேட்டை செய்து வேலை இழுத்து வைப்பதே அதிகம்.

   பாலை குடிக்க கொடுத்தால் சிந்திடுவாள். பாத்திரம் விளக்கி வைக்க தண்ணிரை நிரம்பியிருக்கும் தொட்டியில் மண் கையோடு வால் தனம் செய்வாள்.

     சுவரில் கிறுக்குவாள், பொம்மையை குளிப்பாட்டுகின்றேன் என்று பார்பி டாலை குளிப்பாட்டுவாள்.

     ஸ்டூலில் ஏறி சர்க்கரை எடுத்து சாப்பிட்டு ஓடிவந்திடும் சேட்டை. பிரிட்ஜில் ஜாம் எடுத்து வாய் நிறைய அப்பிடும் சாது.

   சற்று அசந்த நேரம் மேக்கப் செய்கின்றேன் என்று பவுடரை சாந்து பொட்டு, மை டப்பாவை என்று பூசி வீட்டையே மொழுகி கழுவிவிடும் நிலைக்கு தள்ளிடுவாள். 

   பாட்டி என்றுமே அவளை சேட்டைக்காரி என்று தான் செல்லமாக அழைப்பார். அத்தனை சேட்டை செய்தாலும் அவள் வந்துவிட்டால் விடுமுறை முழுக்க ஆனந்தம் மட்டுமே.

      அன்றும் நாயுக்கும் அதன் குட்டிக்கும் உணவை தட்டில் போட்டுவிட்டு நம் சேட்டைக்காரி பிரக்யாவிற்கும் சோறூட்டி கொண்டிருந்தார் பாட்டி.

      "பாட்டி... இதோட அப்பா எங்க?" என்று கேட்டாள்.

    பாட்டியோ வெளியூருக்கு போயிருக்கு" என்று ஊட்டி விட்டார்.

     "பாட்டி இதோட பேர் என்ன இந்த மூன்று குட்டி பப்பியோட பேர் என்ன?" என்றாள்.

     "பேரா... இதுவரை வைக்கலையே மா" என்றார்.

     "நீயே மியாமிக்கு வைத்தது பபல இந்த மூன்று குட்டி நாயுக்கும் பெயர் வை" என்று கூறினார்.
   மியாமி என்பது அவ்வீட்டில் இருக்கும் பூனையின் பெயர் அதுவும் சேட்டைக்காரி வைத்ததே.

     சிறிது நேரம் யோசித்து சைரஸ், சைரா, ஜாக்கி என்று வைத்தாள். தாயான நாயுக்கு பெயர் வைக்கலையே என்று பாட்டி கேட்டதற்கு "அது என்னோட பிரெண்ட் ஆகலை அதனால பெயர் வைக்க மாட்டேன்" என்று குறும்பாய் பதில் தந்தாள்.

      என்னதான் மூன்று குட்டி நாய்கள் இருந்தாலும் சேட்டைக்காரிக்கு சைரா தான் பிடித்தம். அது எப்பொழுது தூக்கினாலும் நட்பாக அமைதியாய் அவளோடு பணிந்துவிடும். மேலும் சேட்டைக்காரி வயல் வரப்பு, நெற்களம், சற்று தூரமிருக்கும் மற்றொரு தோழன் வீடு என்று எங்கு சென்றாலும் கூடவே பயணிக்கும்.

     சைராவை தூக்கி கொள்வாள், சில நேரம் வைக்கோல் இருக்கும் இடத்தில் சைரா படுத்திருந்தால் அதனோடு வந்து "என்ன இங்க இருக்க வா விளையாட" என்று சைக்கிளில் வலம் வருவாள்.
 
     இப்படியாக சென்ற காலம் பிரக்யா ஊருக்கு சென்றுவிட்டாள். மற்றொரு லீவுக்கு வந்த நேரம் ஜாக்கியை வேறொரு வீட்டில் எடுத்து சென்று விட்டதாகவும் மற்றும் சைரஸ் ரோடு தாண்டும் பொழுது லாரியில் அடிப்பட்டு விட்டதாகவும் கூறிட அன்று முழுவதும் அழுது கண்ணீர் விட்டாள்.
   
       அன்று இரவு திருடன் வர சைரா கத்தி எழுப்பியது. பிரக்யா தான் "சைரா இப்படி கத்தாது தாத்தா போய் பாருங்க" என்று கூற லைட் போடவும் யாரோ ஒருவர் ஒடுவது நிழலாக தெரிந்தது. அடுத்த நாள் அந்த ஏரியாவில் பக்கத்து வீட்டில் திருட்டு நடைப்பெற்றதென அறிந்ததும் "நேற்று இங்கு வந்தது திருடன் தான் நம்ம சைரா சத்தமிட்டதும் லைட் போட்டதும் ஓடிட்டான்" என்று கூறினார். சேட்டைக்காரி அன்பாய் அரவணைத்து முத்தமிட்டாள்.

    அடுத்த ராள் சைராவிடம் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து அமர்ந்தாள். "சைரா நீ ரோடு கிராஸ் பண்ணும் பொழுது இரண்டு பக்கம் வண்டி வருதா இல்லையானு இதோ இப்படி பார்க்கணும். இப்படி பார்த்தை வலது இடது பக்கம் வண்டி வரலை என்றதும் நீ ரோடை கிராஸ் பண்ணணும். இல்லைனா ஏதாவது வண்டி இடிச்சிடும் புரியுதா. இதை முதல்லயே உனக்கும் சைரஸுக்கும் சொல்லிருந்தா சைரஸ் தப்பிச்சிருக்கும். சோ சேட் ஆனா நீயாவது ரோட்டை கடக்கறப்ப இதெல்லாம் பாலோவ் பண்ணணும் புரிதா" என்று விளக்கினாள்.

    சைராவிற்கு என்ன புரிந்ததோ அதன் நாக்கால் சேட்டைக்காரியின் காலை நக்கியது.
   
     "சைரா நாம ஓடிபிடிச்சி விளையாடலாம் என்னை பிடி பார்க்கலாம்" என்று ஓட, அவளை துரத்தியவாறு சைரா ஓடியது.

கதை நீதி:

*விலங்குகள் பசியோடு நம்மை பார்த்தால் அதற்கு முடிந்தளவு உணவை வழங்க வேண்டும்.

*நம்மை போலவே மற்ற உயிரும்.  நாம அன்பா இருந்தா அதுவும் அன்பா நம்மிடம் பழகும்.

*நம்ம சின்னதா உதவி செய்தாலும் நமக்கு ஆபத்து என்றால் விலங்குகள் நம்மை பாதுகாக்கும். அது போல சிறு உதவி பிறர் ஆபத்து நேரத்தில் உதவுவார்கள்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.





Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1