காயத்ரி
காயத்ரி
இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.
அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.
மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.
ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர்.
மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.
காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.
காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர்ந்து தனி வீடு எடுத்து தங்கி படிப்பதால் அவர்கள் இருவரும் அங்கே மாட்டிக் கொண்டிருந்தனர். ஒற்றை பிள்ளையும் டெல்லியில் பெரியப்பா வீட்டில் மாட்டிக் கொண்டான்.
144 தடை உத்தரவு போட்டு வீட்டில் முடக்கப்பட்டிருந்தனர்.
சிவகுமாருக்கு குடும்பம் பெரியது. ஆனால் உறவுகள் மேலோட்டமாய் பழகுவார்கள். காயத்ரியின் குடும்பம் ஒரு அண்ணன் மட்டும். தங்கைக்கு ஒன்று என்றால் துடித்திடுவார்.
இன்றைய நாட்களில் கடவுளிடம் வரும் அதிகப்படியான பிரார்த்தனை என்னவென்றால் உலகை உலுக்கும் கிரிமி அழிந்து, நாடு தினசரி சூழலாக மாற வேண்டும். மரண எண்ணிக்கை குறைந்து மக்கள் உயிர் பேண வேண்டும் என்பதே... அப்படி தான் அந்த குடும்பமும் சிவக்குமாரின் உடல்நிலையை எண்ணி வருந்தி பிரார்த்தனை செய்தது.
காயத்ரி குணமடைந்து வீட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டாள்.
வீட்டிற்கு சென்றாலும் இரண்டு வாரம் எங்கும் செல்லக் கூடாதென அறிவுறுத்தியிருந்தனர்.
வீட்டுக்கு வந்தப் பின்னும் அப்படியொன்றும் உணவு இறங்கவில்லை. நார்மல் வாழ்க்கை ஸ்தம்பித்தே இருந்தது.
நான்கு நாட்கள் ஆன நிலையில் சிவகுமார் இறந்ததாக கூறி அறிவிப்பு வந்தது. காயத்ரியின் தங்கை மாதவி மட்டும் கூட வந்து அமர காயத்ரியின் தேம்பல்கள் நிறுத்த முடியவில்லை.
கடைசியாக ஹாஸ்பிடலுக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சென்ற நேரம் முகத்தை பார்த்தது.
தன்னை போல திரும்பி வருவாரென நம்பிக்கையோடு காத்திருந்த காயத்ரிக்கு சிவகுமாரின் இறப்பு செய்தி அதிர்ச்சி அளித்தது.
அதுவும் மகன் இருந்தும் தகன காரியம் செய்ய முடியாது. தகனம் கூட பரவாயில்லை
தன்னோடு உடலும் மனமும் ஒரு சேர ஆத்மார்த்த தம்பதியாராய் ஐம்பது வருடம்
வாழ்ந்தவர். கடைசியாக ஒரு நொடி கூட காண முடியவில்லையே என்ற எண்ணமே உயிரை
உருவி எடுத்தது காயத்ரிக்கு.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு பக்கம் "என்னால அப்பாவுக்கு கொள்ளி கூட போட முடியலையே மா." என்றான் மகன்.
"அம்மா அழாத மா." என்றாள் சின்ன மகள். பெரியவளோ, "அய்யோ அப்பாவை கடைசியா பார்க்காமலே இங்க வந்தோமே. இனி எப்பவும் பார்க்க முடியாதா..." என்ற ஒப்பாரி போன் மூலமாக தான் கேட்க வைத்தது.
வீடு நிசப்தமாக யாருமின்றி தனியாக மயானமாக காடசியளித்தது. தனி வீட்டில் மாதவியின் அருகாமையில் காயத்ரி அழுதழுது கரைந்தார்.
இதோ மூன்று மாதம் கழித்து வெளியே வந்து மக்களோடு காய்கறி வாங்க வர, பக்கத்து தெருவில் சாலையை ஹாட் ஸ்பாட் என்ற பேனரை கட்டி தெருவை முடக்கினார்கள்.
காயத்ரி தன்நிலை யாருக்கும் வேண்டாமென யாரென அறியாத உயிருக்கு இறைவனை வேண்டினாள் கண்ணீரோடு.
இன்னமும் முடியவில்லையே... எங்கோ ஆம்புலன்ஸ் ஒலியும். யானோவொருவரின் கண்ணீரும் ஒரு உயிருக்காக பல மனங்கள் துடித்து கொண்டிருக்கின்றது.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment