பஞ்ச தந்திரம்-9
பஞ்ச தந்திரம்-9
"தருண் இங்க இல்லை... அவன் ஈவினிங் தான் சென்னை வர்றான். இப்ப போன்ல தான் பேச முடியும். அதுவுமில்லாம என்னால அவனோட வாழ முடியாது. இந்த சேர்த்து வைக்கிற தாட்ஸ் இருந்தா தயவு செய்து மறந்திடுங்க. அதுக்கு நான் செத்துடலாம்.
எனக்கு என் வீடியோ தான் பிரச்சனை" என்று நைனிகா கூறவும் மஞ்சரியோ, "இது போன்ல பேச வேண்டிய விஷயமில்லை. நேர்ல பார்த்து முடிவு பண்ணலாம்." என்று கூறவும் மற்றவர்களும் ஆமோதித்தனர்.
"அப்படின்னா திரிஷ்யா லைப்பை பார்ப்போம்." என்று கூறினாள் ரஞ்சனா.
திரிஷ்யா விழியை நிமிர்த்தி இந்த ரணகளத்திலா? என்று குழம்பினாள்.
"எப்படியும் ஈவினிங் வரை இங்க இருக்க முடியாது. மாட்டிப்போம். அதோட பசிக்கும். எங்க வார்டன் லைட்டா பத்து பதினொன்றுக்கு கண் அசரும். அந்த நேரம் ஓடிடலாம். வெளியே செக்கியூரிட்டி கேட்டா ஹாஸ்டல்ல இருக்கறவங்களை பார்க்க வந்ததா சொல்ஒஇ எஸ்ஸாகிடலாம்." என்று நைனிகா கூறவும் அனைவரும் இந்த திட்டத்தை ஏற்று வெளியே செல்ல தயாராகினார்கள்.
தனுஜாவும் திரிஷ்யாவும் சேர்ந்து போகட்டும். செக்கியூரிட்டி கேட்டா உங்க தங்கச்சி பார்க்க வந்ததா சொல்லுங்க, பாட்டியும் ரஞ்சனாவும் தனியா போங்க. உங்களை கேட்டா என் பொண்ணை பார்த்துட்டு போறதா சொல்லுங்க." என்று பொய்யை தயாரித்து யாருக்கும் தெரியாமல் அனுப்பினாள்.
அறையிலிருந்து வரவேற்பறை வரை பதுங்கி பதுங்கி வந்தார்கள். அதற்கு மேல் யாரையோ பார்க்க வந்து திரும்பியதாக காட்டிக் கொண்டு நடந்தார்கள்.
நைனிகா கூறியது போல செக்கியூரிட்டி கேட்க, பொய்யை அவிழ்த்து விட்டனர்.
"போகும் போது உங்களை பார்க்கலையே?" என்று கேட்டான்.
"வீராசாமி அண்ணா. எனக்கு லெட்டர் வந்ததா பார்த்து சொல்லுங்க" என்று நைனிகா திசை திருப்பினாள்.
வீராசாமியோ "இரும்மா.. யாருனு கேட்டுட்டு வர்றேன்." என்று ரஞ்சனாவை கேட்க, "போகும் போது நீங்க இல்லை அதுக்கு நாங்க என்ன பண்ணறது. இந்த லட்சணத்துல ஹாஸ்டல் செக்கியூரிட்டி" என்று ரஞ்சனா பேசவும் "அது வந்து மேடம்." என்று திணற, "அண்ணா லெட்டர் வந்ததா இல்லையா பார்த்து சொல்லுங்க" என்று நைனிகா இக்கட்டை கூட்ட, செக்கியூரிட்டியோ "இதோ வர்றேன்மா" என்னு ஓடினார்.
இடைப்பட்ட நேரத்தில் திரிஷ்யா-தனுஜா, மற்றும் மஞ்சரி ரஞ்சனா வெளியேறியிருந்தனர்.
"என்ன அம்மா உம்முனு இருக்கிங்க" என்று ரஞ்சனா கேட்டாள்.
"இல்லைம்மா... இதுவரை எந்த பிரச்சனைக்கும் தீர்வு களையற விதமா பேசியதில்லை. ஆனா தீர்வுகள் தீர்க்கப்படணும்." என்று மஞ்சரி என்னவோ போல் பேசவும் திரிஷ்யா புரியாமல் பார்க்க, மஞ்சரி கண்ணீரை மறைத்து "உன் வீட்டுக்கு போகலாம்" என்று விலாசம் கேட்கவும் நைனிகா கார் புக் செய்து வேதாந்த் வீட்டுக்கு சென்றார்கள்.
திரிஷ்யா வீட்டில் கார் நின்றதும் மெதுவாக ஒவ்வொருத்தராய் இறங்கினார்கள்.
"குழந்தையை நம்ம கூடவே கூட்டிட்டு போகணுமா?" என்று திரிஷ்யா தாயாக எண்ணி தனுஜாவுக்காக தவிர்த்தாள்.
மஞ்சரியோ நைனிகாவோடு தனுஜாவை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழையலாமென்றால் நைனிகா மனநிலையோ மிகவும் பாதித்து இருக்கின்றதே.
அதனால் முடிவெடுக்க தவித்து நின்றார்கள். ரஞ்சனாவோ தனது கைப்பேசியை தனுஜாவிடம் கொடுத்துவிட்டு வாசலில் போர்டிக்கோவில் இருந்த இருக்கையில் அமர கூறினாள்.
தனுஜா புத்திசாலி குழந்தையென்றதால் சூழ்நிலையை புரிந்து அமைதியாக அமர்ந்தாள்.
மஞ்சரி திரிஷ்யா கையை பிடித்து வந்தாள். நைனிகா ரஞ்சனாவை அழைத்து வந்தாள். நால்வரும் ஹாலுக்குள் வரவும் நாகேஸ்வரி வீட்டு போனில் "உங்க பொண்ணு யாரோட ஓடிப்போனாளோ. இங்கிருந்து அங்க வந்திருப்பானு பார்த்தோம். இப்படி அங்கயும் வராம ஒருத்தி ஒரு நாள் முழுக்க எங்க போனா." என்று ஆவேசமாக திரிஷ்யா தாயாரிடம் பேசுவது நன்கு விளங்கியது.
"சம்பந்தினு சொல்லிட்டு இங்க வந்திடாதிங்க. ஆம்பளைனா அப்படி இப்படி இருப்பான். படத்துக்கு A சர்டிபிகேட் போட்டதை பார்க்க கூடாதோ. அதுக்கெல்லாம் எம்புள்ள விளக்கம் சொல்லணும். ஏதோ எங்க பையன் ஆபாசமா படம் பார்க்கறான்னு பேசறா உங்க பொண்ணு. அங்க வந்தா புத்திமதி சொல்லி அனுப்புங்க" என்று நாகேஸ்வரி ஆம்பளை பையன் என்ற பெற்றெடுத்த திமிரில் பேசினார்.
"நான் எங்கயும் யாரோடவும் ஓடிப்போகலை அத்தை" என்று திரிஷ்யா வரவும், "உங்க பொண்ணு வந்துட்டா." என்று ரிசீவரை தர, அதனை வாங்கி மேஜையில் வைத்திட திரிஷ்யா அன்னையிடம் பேச போனை காதில் ஏற்றாள்.
திரிஷ்யாவை பேசவிடாமல், வேதாந்திற்கு அடங்கி போகவும், மன்னிப்பு கேட்டு அனுசரித்து போகவும் சாம்பிராணி போட்டார்கள்.
அப்பொழுது தான் குழந்தையோடு மட்டுமாவது கண்ணுக்குள் காட்டி வீட்டோடு ஏற்பார்களென்று அறிவுரைகள் வழங்க, "போதும்மா... என் வாழ்க்கையை நான் முடிவுப்பண்ண தான் வந்திருக்கேன். முடிஞ்சா போன் மூலமா பேசறதை கேளு." என்று மெதுவாக ரிசீவரை வைத்தாள்.
அதற்குள் நாகேஸ்வரி கணவரையும் மகனையும் அழைத்து வந்திருந்தார்.
"இங்க எதுக்குடி வந்த?" என்று வேதாந்த் வேகமாய் வந்தான்.
"தம்பி தம்பி... பொறுமையா பேசலாம். சண்டைப்போட்டு முடிஞ்சிப்போறதுயில்லை. உங்களை நம்பி உங்க குழந்தையிருக்கான் இல்லையா... அவனுக்காக உட்கார்ந்து பேசலாம்.
மிஞ்சி மிஞ்சி போனா அன்பா வீட்ல நடத்தி, அங்கீகாரம் கொடுத்து மதிப்பை தானே கேட்கறா?" என்று மஞ்சரி இறைஞ்சினார்.
இதுவரை இதுபோன்ற பஞ்சாயத்தை கண்டதில்லை. அதனாலோ என்னவோ மஞ்சரி பேச்சு வேதாந்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.
"அம்மா... என்மேல தப்பில்லை. நீங்க ஏன் கெஞ்சறிங்க. எனக்கு என் குழந்தை வேண்டும் உதயை கொடுத்தா போதும். நான் கிளம்பிடுவேன்" என்று திரிஷ்யா முன்வந்தாள்.
"ஓ..ஓஹோ... அப்போ என்னிடம் மன்னிப்பு கேட்டு, வாழ வரலை. என் பையன் வேண்டுமோ உனக்கு. ஓடிபோய் என்னை விட்டு போகணும்னு முடிவுப்பண்ணிட்ட எதுக்குடி என் குழந்தை. தனியா போ.. சிக்குனு இருக்கனு தானே சுடிதார் போட ஆசைப்பட்ட. அதோட அழகுல எவனையாவது கட்டிக்கோ. அவன் தருவான் குழந்தை. அவனை பெத்து வளர்த்துக்கோ.
என் பையன் உதய் என்னோட தான் இருப்பான்." என்று கூறவும் திரிஷ்யா முகம் சுழித்தாள்.
ரஞ்சனாவுக்கு கோபம் வந்தது. நைனிகாவோ சீ ஆண்கள் கூட்டமே இப்படி வல்கறாய் பேசி அடக்குவது தானா? என்று முகம் சுழித்தாள்.
"எனக்கு நீங்க என்ன கண்றாவி பார்த்தாலும் பிரச்சனையில்லை. இனி உங்களோட நான் வாழப் போறதில்லை. என் பையன் வேண்டும். நீங்களா அவன் படிக்கிற பள்ளிக்கூடத்துல போன் பண்ணி இங்க வரவழைச்சி அனுப்பிவிடுங்க" என்று மன்றாடினாள்.
"நெவர்... எங்க பேரனை அனுப்ப மாட்டோம்" என்றார் லோகநாதன்.
"இங்கயிருந்து கிளம்புடி." என்று கழுத்தை பிடித்து இழுத்தான்.
ரஞ்சனா கணவன் மனைவி சண்டை. பெரியவர் மஞ்சரி இருக்கின்றார் என்று அமைதியில் வேடிக்கை காண, வேதாந்த் வீட்டை விட்டு வெளியேற்ற முனையவும் நைனிகா வந்து திரிஷ்யாவை பிடித்து நிறுத்தினாள்.
"என்ன ஜென்மம் நீங்க? அழகான பொண்ணு ஆனா அந்த அழகை ஆராதிக்க மாட்டிங்க. கண்ட இடத்துல இருக்கறவளை அழகுனு கொண்டாடி வழிவிங்க. இதை கேட்டா... அதட்டி மிரட்டறது. உங்களோட அந்தரங்க லீலைகளை உங்கப்பா அம்மாவிடம் சொன்னதுக்கு பாரமுகம் காட்டி ஒதுக்கறிங்க. மனைவியை தண்டிக்க ஆயிரம் வழி கண்டுபிடிச்சி சாகடிக்கிறிங்க. அரக்கனா நீங்க... பெத்த குழந்தையை பார்க்க விடாம பண்ணறிங்க. ஏன் உங்களை மாதிரி கண்ட பார்ன் சைட் பார்த்து பெண்களிடம் ஆபாசமா பேச உச்க பையனுக்கு கத்து தரப்போறிங்களா?" என்று ஆவேசமாக கத்தினாள்.
வேதாந்த்... நைனிகாவை உச்சிமுதல் பாதம் வரை பார்த்து, ஏளனமாய் சிரித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
வக்ரமான ஆண்
ReplyDelete