எங்கள் அன்பு ஐய்யாமை...

                                     
   எங்கள் அன்பு ஐய்யாமை ,
                         எப்பொழுதும் மாத்திரை பெட்டியை எடுத்துக் காலை மாலை இரவு என பிரித்து ஒரு தண்ணீர் பாட்டிலை அருகே வைத்துக் கொண்டும்  ஒரு துணியை எடுத்து தண்ணிர் பாட்டில் மாத்திரை பெட்டி கட்டில் என அதை கொண்டு துடைத்து சுத்தமாக வைத்தபடி இருக்கும் இடம் மட்டுமல்ல தன்னையும் முகமலர்ச்சியோடு இருப்பது அவர்களின் வழக்கம் . கூடவே ஒரு கைபேசி வேறு . இதுவே எங்கள் ஐய்யாமை .
              ஐய்யாமை அப்பாவின் அம்மா . எங்களுக்கு பாட்டி . அப்பாவின் அம்மாவை ஐய்யாமை என்றும் அப்பாவின் அப்பாவை ஐய்யப்பா என்றும் அழைப்பது வழக்கம் .
             எல்லோருக்கும் தாத்தா பாட்டி என்றாலே கொள்ள பிரியம் உண்டு . எங்களுக்கு தாத்தாவின் அன்பு மழையில் நனையும் பாக்கியம் கிட்டவில்லை . ஐய்யாமை அன்பு கிட்டியது அதுவும் தெவிட்டாத அன்பு .
                         உங்களுக்கு பிடித்த பெண்மணி யார் என்று கேட்டால் எல்லோரும் சமுதாயத்தில் இருக்கும் சிறந்த நபரை கண்டிப்பாக கூறுவார்கள் . எங்களுக்கு ஐய்யாமை அப்படிப் பட்டவரே . மனதைரியம் படைத்த , ஆளுமை திறம் கொண்ட , ரசனைக்குரிய , அன்பான , கண்டிப்பான , குழந்தைத்தனமான பெண்மணி என பல பண்புகளை கொண்டவர்கள் .
                       எங்கள் ஐய்யாமை சில பல சுவாரசியமான சம்பவங்கள் அவர்கள் எங்கிருந்தாலும் அலைப்பேசி வாயிலாக எப்படியும் எல்லோர் குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டு விடும் . அது என்ன என் ஐய்யாமை என்பதற்கு பதிலாக எங்கள் என்று சொல்கின்றேன் என கேள்வி எழுப்பலாம் .
                 எங்கள் ஐய்யாமைக்கு 4 மகள் 3 மகன் அவர்களின் வாரிசாக பேரன் பேத்திகளாக நாங்கள். எல்லோரும் திருமணம் ஜோடியொடு சேர்த்து நிறைய பேர் பேரன் பேத்திகள் . ஆக சதா மல்லுக்கு செல்லம் கொஞ்சவும் ஐய்யாமை சுற்றி எப்பொழுதும் பேரனோ பேத்திகளோ கண்டிப்பாக இருப்பார்கள் .
                              எங்கள் ஐய்யாமை மருந்து மாத்திரை என்று இதய நோயாளியாக இல்லாத காலத்தில் எனது பால்ய பருவத்தில் இருந்த ஐய்யாமை கொஞ்சம் ஆளுமை அதட்டலும் இருந்த காலத்தில் இருந்தே பிடிக்கும் .
                                      தேங்காய் எண்ணையை வழிய வழிய தலைக்கு தேய்த்து இறுக பின்னி மாட்டு கொம்பு போல தலையை வாரி விட்டு இருக்க நான் சொல்வேன் 'ஐய்யாமை மாட்டு கொம்பு மாதிரி அசிங்கமா இருக்கு  என்பேன் . இப்படி தலை வாரினா தான் முடி நல்லா வளரும் என்று கூறும் குரலில் முதலில் கண்டது அன்பும் கண்டிப்பும் அதிகாரமும் தான் .
                 சிறு வயதில் அடிக்கடி அழும் போது , பெண்கள் அழ கூடாது . வீட்டுக்கு ஆகாது என்று அவர்கள் கூறிய தோரணையில் அழுகையை நிறுத்தியவள் தான் . இன்று வரை அழுகை வந்தாலும் அழுவதை தவிர்த்திடுவேன் .
                                     ஐய்யாமை எளிதில் எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவர்கள் . புதிதாக பேருந்தில் அமரும் பெண்மணி கட்டிய புடவை நன்றாக இருந்தால் அதை அவர்களிடம் சொல்லி எங்கே எடுத்தீர்கள் உங்களுக்கு நல்லா இருக்கு என துவங்கி இறங்கும் போது நட்போடு புன்னகை செய்து விடை பெரும் அளவிற்கு கூட நிகழ்ந்தது உண்டு .
                                   பேரன் பேத்திகள் என்று பரிசு பொருட்கள் என வாங்கினாலும் சில தோழிகளின் குழந்தைகளுக்கும் சேர்த்தே வாங்கும் இலகு மனம் கொண்டவர்கள் .
               மகன் மகள் பேரன் பேத்திகள் என பறவையாக சுற்றி வந்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இதயநோய் வந்த பின்னே சட்டென எங்கும் செல்ல முடியா சூழ்நிலை . அன்று முதல் தான் குழந்தைதனம் குடி புகுந்து இருக்கும் .
                                     எப்பொழுதும் தீபாவளி பொங்கல் என்றாலே ஐய்யாமை எல்லோரையும் மூத்த மகன் வீட்டிற்கு அழைத்து விடுவார்கள் . பெரிப்பா வீடு கலைக்கட்டும் .பரமபதம் சீட்டு விளையாட்டு கண்ணாமூச்சி என கும்பலாய் விளையாடி மகிழ்ந்த தருணங்கள் திரும்பக் கிடைக்காத பொக்கிஷம் தான் .
                                               தீபாவளி பொங்கல் தாத்தாவின் நினைவு நாள் என எதுவானாலும் செய்யப்படும் உணவுகளான மெதுவடை, பணியாரம், பருப்புவடை எல்லாவற்றையும் அதிகம் உட்கொள்ளக்கூடாது ஐய்யாமைக்கு இருந்தும் பேரன் பேத்திகளின் ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடம் கேட்டு உண்டு பின்னர் அதற்கு பெரிப்பாவிடம் திட்டும் வாங்கி கொள்வார்கள் . பிரிஜ்ஜில் இருக்கும் ஸ்வீட் கூட மெல்ல நெஸ் செய்து எப்படியும் சுவை பார்த்து விடுவார்கள் . நாங்களும் எடுத்து கொடுத்து விடுவோம் அவர்களின் கொஞ்சல் கெஞ்சலில்...
                      நாங்கள் தான் செல்லம் கொடுப்போம் என்றால் வீட்டிற்கு வந்து வேலை செய்யும் பணிப்பெண்கள் கூட பாட்டிமா பாவம் என்று கொடுத்துவிடுவார்கள்.
           ஐய்யாமையிடம் நற்பெயர் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை . அதுவும் வேலை செய்யும் பணிப்பெண்கள் அங்க சோபாவில் காலில் அருகே சரியாவே தொடைக்களை டிவி சேரில் கீழே சரியா பெருக்களை என உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்டு பிடித்து சரிவர செய்ய சொல்வார்கள் .
ஆனால் அவர்கள் ஒழுங்காக செய்து விட்டாளோ பாராட்டவும் செய்வார்கள் .
                          என்னை அவர்களின் துணிகளை காயா போடா அனுப்புவார்கள் . சிறிது வெயில் வந்து அதிகம் சுடுவதற்குள் போய் எடுத்து வர உத்தரவு போடுவார்கள். ஐய்யாமை இப்ப தானே அனுப்பினீங்க என்றால் அதிக நேரம் வெயில் பட விட மாட்டார்கள் . போக மறுத்தாலோ முகம் சிறு பிள்ளையிடம் மிட்டாய் பறித்த முகமாக மாறிவிடும் .
                                   சரி நாங்கள் தான் அவர்கள் வழி பேரன் பேத்திகள் என்று இருந்தால் பேரனை மனம் முடித்த பேத்திகள் என வேறு வீட்டில் இருந்து வந்த அணைத்து பேத்திகளும் கூட ஐய்யாமைக்கு செல்லம் . ஒவ்வொரு பேரனும் ஐய்யாமைக்கு தனி தனியாய் ஏதேனும் வாங்கி வந்து மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க செய்வார்கள் .
                                        தொடர்ச்சியாக என்றாவது யாரும் வரவில்லை என்றால் சட்டென எல்லோருக்கும் ஐய்யாமையே போனில் எல்லோருக்கும் தனக்கு உடல் நிலை சரியில்லை என சொல்லி அவர்களை வர வழைப்பார்கள் . எப்படியும் சின்ன அதை அல்லது அப்பா இல்லை யாராவது ஒரு பேரனோ கண்டிப்பாக பார்க்க வந்து பேசி செல்ல வந்த உடல் நலக்குறைவு காணாமல் போய்விடும் அவர்களுக்கு .
                       பேத்தியான என்னிடம் அதலக்க(பாவற்காய் போன்ற கசப்பு சுவை கொண்டது ) வாங்கி வர சொல்வார்கள் . நீ இருக்கும் இடத்தில் நன்றாக கிடைக்கும் என்பர் . அவர்களின் நட்பு வட்டமும் உறவினர்களும் தோதாக எல்லாம் எடுத்து வந்து கொடுப்பார்கள் . எங்கள் ஐய்யாமைக்கு அவர்களின் அன்பால் நட்பு வட்டமும் உறவினர்கள் வட்டமும் பெரிது .
                           இந்த நீட்டு டம்ளரில் தான் உபயோக படுத்துவேன் அவர்கள் உபயோகிக்கும் கட்டிலில் மண் காலோடு ஏறிட அனுமதித்தது இல்லை .
                       தாத்தா நினைவு தினம் வரும் போது எல்லோரும் வருவோம் . நான் இறந்தால் யாரும் அழ கூடாது . எனக்கு என்ன குறை எல்லா பேரன் பேத்திகள் திருமணத்தையும் பார்த்தாயிற்று .ஏன் போதாதா குறைக்கு கொள்ளு பேரன் பேத்தியும் பார்த்தாயிற்று என்பார்கள் . ஐய்யாமை எமனுக்கே சவால் விட்ட பெண் என்று கிண்டல் செய்தலும் ஐய்யாமை எங்கள் குழந்தையின் திருமணம் பார்க்காம எப்படி போவீங்க என்று கூறாமல் இருந்ததில்லை .
                            அப்பாவிட்டுக்கு போகும் போது ஐய்யாமை இருந்தால் குழந்தைகள் தங்க நகை போட்டு இருக்க ஏன் போடலை என்று கேட்டு துளைப்பார்கள் . ஐய்யாமை சின்ன மகள் சரியான வாலு ரெண்டு முறை வளையலை நெளிச்சுட்டா அதான் போடலை என்பேன் . கை குழந்தை நடந்து ஓடும் வரை தங்கம் அணிந்து அழகு பார்க்கணும் என்பார் .
                                       போனமுறை ஐய்யாமை பார்க்க சென்றோம் அவர்கள் முதலாம் ஆண்டு நினைவு நாள் என்று கூட மறந்து ஐயோ ஐய்யாமை ஏன் நகையை நெளிச்சு போட்டு இருக்கா பாப்பா என்பார்களே என்று யோசித்து நிற்க , அவர்களின் நினைவு நாளுக்கு தான் போகின்றோம் என்ற உண்மை அறியாமலே . நான் மட்டும் இல்லை அங்கு வந்த அப்பா அத்தைகள் சித்தப்பா என சிலரும் ஐய்யாமையின் அறைக்கு எப்பொழுதும் போல சென்று அவர்கள் இல்லை என்ற உண்மை அறிந்து பின்னரே ஹாலிற்கு வந்து அமர்ந்ததை என்னை போலவே சொல்லி புலம்பினார்கள் .
                          இதோ இம்முறையும் ஐய்யாமையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு அழைப்பு வந்து விட்டது . கிளம்ப வேண்டும் இம்முறையும் அவர்கள் நினைவு தரும் நிகழ்வுகளை அலசி பேசி தான் இருப்போம் அதனை எங்கள் ஐய்யாமையின் மூச்சு காற்றும்  அங்கிருந்தே கேட்டும் ரசிப்பார்கள் .
            என்றும் ஐய்யாமை நினைவுகள் எங்கள் பேரன் பேத்திகளின் வாசம் வீசிக்கொண்டே இருக்கும் . அன்பு முத்தங்கள் ஐய்யாமை .
                                                                                            -- பிரவீணா தங்கராஜ் .




















































Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு