வாழுங்கள் வாழவிடுங்கள்

   வாழுங்கள் வாழவிடுங்கள்




         நைனிகா டிராவல் பேக்கில் துணியை அடுக்கி கொண்டிருந்தாள்.

     வைதேகி பேத்திக்கும் உணவு ஊட்டியபடி அவள் பின்னே வந்தவர் மருமகள் டிராவல் பேகில் துணியை அடுக்கவும் யோசனைவயப்பட்டு கணவரை நாடி சென்றார்.

     "என்னங்க நீங்க அவ்ளோ சொல்லியும் இரண்டு நாள் லீவுக்கு செங்கல்பட்டு கிளம்பிட்டு இருக்காங்க." என்று நொடித்தார் வைதேகி.

       வேல்முருகனோ "அப்படியா?" என்பது போல விறுவிறுவென அறைக்கு வந்தார். அதற்குள் நைனிகா டிராவல் பையை மூடி வைத்து நிமிர மாமனார் வரவும் கையை பிசைந்தாள்.

    "என்னம்மா இது. இந்த மாசம் வரவுக்கு மீறிய செலவுன்னு சொல்லி எங்கயும் போக வேண்டாம்னு சொன்னேன். ஆனா பையை தூக்கிட்டு கிளம்பினா என்ன அர்த்தம்" என்று எடுத்ததும் கத்தினார் வேல்முருகன்.

      "மாமா எனக்கு என்ன தெரியும். அவர் தான் மூன்று மணிக்கு கிளம்பணும் எடுத்து வைனு சொன்னார். எனக்கு வேற எதுவும் தெரியாது. அவர் சொன்னப்படி டிரஸ் எடுத்து வச்சேன்" என்று கூறவும் வேல்முருகன் பையனிடம் பேசிக் கொள்வோமென ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

      'எத்தனை முறை சொல்லறது. சட்டு சட்டுனு டூர் போட்டு போனா அடுத்து பிற்காலத்துல என்ன சேர்த்து வைப்பான். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை. இதுல பொம்பள பிள்ளையை வேற பெத்து வச்சிருக்கான். நாம அட்வைஸ் சொன்னா எல்லாம் தெரியும்னு எகத்தாளம் வேற" என்று நொடித்து சாய்வு நாற்காலியில் கொஞ்ச நேரம் உடலை சரித்தார்.

       நேரமாக மதியம் இரண்டு மணிக்கு விக்ரம் வேகமாக வந்தான். கைகால் அலம்பி சாப்பாடு எடுத்து போட்டு அவனாகவே சாப்பிட்டான்.

    அருகே நைனிகா வந்து, "மாமா உற்றுனு இருக்கார். நீங்க சொன்னது மாதிரி தான் பதில் சொன்னேன். இதுக்கு பிறகு நீங்களாச்சு அவராச்சு. நான் போகணும்னு போஸ் பண்ணலை." என்று ஆறு வயது மகளுக்கு ஜடை பின்ன ஆரம்பித்தாள்.

        சாப்பிட்டு கொண்டே விக்ரம் தாய் தந்தையை நோட்டமிட்டான். எப்படியும் சாப்பிட்டதும் பேச ஆரம்பித்து அரைமணி நேர வாக்குவாதம் நடக்கும். மூன்று என்பது மூன்றரைக்கு செல்ல நேரலாம் என்று உள்மனதில் கணக்கிட்டான்.

      அவன் யூகம் போல தந்தை செருமியபடி, என்னப்பா ஏதோ இந்த மாசம் பணவரவு கொஞ்சம் இடிக்கும் அதுயிதுனு சொன்ன, இப்ப மாமனார் வீட்டுக்கு கிளம்பிட்ட?" என்றார் இடக்ககாக.

       "அப்பா... பணவரவு இடிக்க தான் செய்யும் அதுக்காக லீவு முடிந்து அவங்க அம்மா வீட்டுக்கு போக கூடாதா. ஸ்கூல் முடிந்து இப்ப தான் ரிலாக்ஸா லீவுல போக முடியும். நம்மளோட பணவரவு முன்னப்பின்ன வருவதை பொறுத்து இந்த லீவுல அனுப்பாம இருக்க முடியுமா?" என்றான்.
   
     அவனின் பேச்சில் தன்னவளுக்காக யோசிக்கும் எண்ணம் தென்பட நைனிகா கர்வம் கொண்டாள்.

      "இங்க பாரு விக்ரம். அனுபவத்துல சொல்லறேன். பெண் பிள்ளை பெத்து வச்சிருக்க, சிறுக சிறுக சேர்த்து வை. இஷ்டத்துக்கு மாதம் ஒரு டூர் அதுயிதுனு செலவு பண்ணாதே. அப்பறம் ஒரு வார்த்தை சொல்லிருந்தா சேமித்து வைத்திருப்பேனு வந்து நிற்காதே." என்று அறிவுரையாய் வழங்கினார்.

      "அப்பா... எனக்கு தெரியாம இல்லை. என்னையும் அக்காவையும் வளர்த்திங்க. அம்மாவை எங்கயாவது அழைச்சிட்டு போனிங்களா? எனக்கு தெரிந்து அம்மாவை எங்கயும் அழைச்சிட்டு போகலை. குழந்தை குட்டி படிப்பு, வேலை இப்படியே இருந்துட்டிங்க.

    நான் வேலைக்கு போய் தலையெடுத்த பிறகு எங்கயாவது வாங்கன்னு சொன்னாலும், இந்த வயசுல என்னடா பார்த்து என்னத்த ரசிக்கனு பேசறிங்க.

   சரி நாங்களாவது போய் வர பார்த்தா பணவரவை காட்டி தடுக்கறிங்க. இது இப்பனு இல்லை. எப்ப நான் வெளியே போனாலும் ஏதோ பணத்தை செலவழிக்கறேன்னு குற்றம் சாட்டி அக்காவிடம் புலம்பிட்டு இருக்கறது எனக்கு தெரியும்." என்றான் விக்ரம்.

      "இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி நடந்தா வாழ்க்கை எப்படி? அப்படி போய் பணக்கஷ்டத்துல மாட்டிக்க கூடாதென பயந்து என் அனுபவத்தை உனக்கு சொல்லறேன். நீ என்ன தெரிந்தே இப்படி ஆடற" என்று குதித்தார்.

      "உண்மை தான் பா. வீட்டுக்கு ஒருத்தர் எடுத்து சொல்லணும். ஆனா அது சொல்லிட்டு விட்டுடணும். என் வாழ்க்கையையும் நீங்களா வாழ கூடாது.

    உங்களோட கடந்த கால வாழ்க்கையில நினைச்சி பாருங்க. நீங்க எங்கயும் போகலை. பணத்தை சேமித்து பெரிதா அப்படி ஒன்னும் வாழலை. சின்ன சின்ன பங்ஷன் கூட தவிர்த்துட்டு இருக்கிங்க.  அப்படியிருக்க நீங்க வாழ்ந்த வாழ்க்கையோட ஏடுகளில் பெரிதா சுவாரசியம் இல்லை.

   என் வாழ்க்கையும் அப்படி இருக்க கூடாது. கஷ்டப்பட்டு தான் நைனிகாவை கூட்டிட்டு போறேன். ஆனா கடனாளியா போகலை. கொஞ்சம் காசு இடிக்கும். ஆனா அவளோட இந்த வருட லீவுல அம்மா வீட்டுக்கு போன திருப்தி கொடுப்பேன்.

   இங்கயே இருக்கற நம்ம அபூர்வா குட்டிக்கு அவங்க தாத்தா ஆச்சி வீட்டுக்கு  போயிட்டு புது அனுபவத்தை தருவேன். எனக்கும் அலுவலக ஸ்ட்ரஸ் மறந்து நாலு புது மனிதரை புது இடம் என்று இருக்க ரிலாக்ஸ் ஆவேன்." என்றான்.

      "அப்ப அறிவுரை சொல்லக்கூடாது அப்படி தானே. உங்கயிஷ்டப்படி வாழுங்க" என்று பொறுமினார் வேல் முருகன்.

     "நான் அப்படி சொல்லலை பா. தீ சுடும்னு நீங்க தான் அறிவுரை சொல்லறிங்க. ஆனா அந்த சுடு எப்படின்னு தெரியாமலேயே நான் கடக்க வேண்டாம்னு பார்க்கறேன்.

    இப்ப ஆறுசுவையிருக்கு. பாகற்காய் கசக்கும். அதுக்காக அந்த சுவையே தவிர்த்துட்டு அது கசக்கும் கசக்கும்னு என்னிடம் அறிவுத்தறிங்க. ஆனா சிலருக்கு அந்த கசப்புல ஒரு சுவை அறிந்து ரசிக்கறாங்களே. அதனால எல்லா சுவையும் அறிந்து பார்க்கறோம் தானே.

   யாருக்கு எந்த ருசி பிடிக்குதுனு பிறகு தானே தெரியும். எனக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காதுனு என் வாழ்க்கையில நான் வாழ்ந்தா தானே என்னோட அனுபவமா நான் அறிவேன்.

     நீங்க சொன்னது நல்லதாவே இருந்தாலும் அது நீங்க வாழ்ந்தது. ஆனா அது எனக்கு அனுபவமா வந்தா தான் அது என் வாழ்க்கை. இல்லைனா அது பற்றி நான் அறியாம போவேன். அதனால வாழுங்க. என்னையும் வாழ விடுங்க என்று தான் சொல்லறேன்." என்றான்.

     நைனிகா எப்பொழுதும் தவிர்த்திடும் சில காரணங்கள் இன்றும் தடையாய் வந்திடக் கூடாதென அஞ்சினாள்.

      வேல்முருகனோ, "உண்மை தான் என்னோட அப்பா இதை செய் அதை செய்னு சிலதை என்னிடம் திணிப்பார். அப்ப எல்லாம் எனக்கு பிடிச்சதை செய்யணும்னு வேகம் வரும். நான் அதை தான் உன்னிடம் திணிப்பேன். இப்ப தான் புரியுது. அவங்க அவங்க அவங்களோட விருப்பம் தெரிந்து புரிந்து வாழணும். நல்லதும் கெட்டதும் நம்ம வாழ்வில் அனுபவ பாடமா கடந்து போறது தான் வாழ்க்கை.

      நான் சொன்னேனு நீ வாழ்ந்துட்டா உன் வாழ்க்கையை யார் வாழ? சரிதான்" என்று ஆமோதித்தார்.
 
     வாழுங்கள் வாழவிடுங்கள் என்று புரிந்தவராய் "ஏன்மா வைதேகி ஏதோ முருகன் கோவிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டியே போயிட்டு வா. நான் எனக்கு பிடிச்ச கிரிக்கேட்மேட்ச் பார்க்கறேன். தோற்றாலும் ஜெயிச்சாலும் எனக்கு பிடிச்சதே" என்று கூற நைனிகா மலர்ந்து தாய் வீட்டுக்கு செல்ல விடைப்பெற்றாள்.
  
விக்ரமோ புது அனுபவத்தை வாழ்வென்னும் ஏட்டில் பதிய வைக்க மகளுக்கு டூரின் அனுபவத்தினை கூறிக்கொண்டே வந்தான்.

-முற்றும்
-பிரவீணா தங்கராஜ்.

🙄சொல்ல வந்ததை சரியா சொன்னேனா தெரியலை. ஆனா காண்சப்ட் இதுதான். 

   நாம அனுபவம் என்ற ரீதியில் மற்றவருக்கு அறிவுரை கூறி அந்த செய்கையை செய்ய விடாம தடுத்து முடக்கிடறோம். ஆனா நமக்கு கிடைத்த அனுபவம் அவங்க வாழ்வில் கடக்காம போவதை நாம உணர்வதில்லை.
 
    வாழ்ககை என்றால் என்ன? நாம படிக்கிறதா இல்லை வேலைக்கு போவதா? நல்ல உத்தியோகம் நிறைவான வீடு பணம் குடும்பம் இது மட்டுமா? இல்லை நாம அனுபவம் தான் வாழ்க்கை. நாம லைப்ல நடக்கிற வெற்றி தோல்வி ஏக்கம் வலி வேதனை சந்தோஷம் என்று அனைத்தும் கலந்தது. இந்த பக்கம் போனா விழுவ என்று பாதை மாற்றினா அந்த பக்கம் விழுந்து எழுந்தா கல் பேத்து புதையல் இருப்பது அப்போ யாருக்கு தெரியும். அதனால அவங்க அவங்க வாழ்வை அவங்க அவங்க வாழுங்க. மற்றவர்களையும் வாழ விடுங்க. எனக்கு இப்படி ஆச்சு அதனால பண்ணதே செய்யாதே போகாதே என்று தடுக்காதிங்க. போய் தான் வரட்டும் வந்து தான் பார்க்கட்டும் அவங்க வாழ்க்கை.
    அறிவுரை சொல்லலாம் ஆனா அது திணிப்பா இருக்க கூடாது.

    😉 கதைக்காக எழுதலை. நிஜமாவே என் வாழ்க்கையை நான் அப்படி தான் வாழறேன் என்னிஷ்டபடி மெதுவாக ரசித்து பயணித்து.😎 அதுல இன்பம் துன்பம் எதுவென்றாலும் ஸ்மைலியோட தான் அக்சப்ட் பண்ணுவேன்.





Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1