அகமா முகமா?
அகமா முகமா?
குழந்தைகள் வந்ததும் அவர்களை கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.
குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.
மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.
குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.
உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.
"என்னப்பா... எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி மவுஸ் தான் அந்த பொம்மை எங்க?" என்று அசோஷியேட் ஆள் ஒருவன் கேட்டான்.
முகமூடி அணிந்த சக பொம்மை உடை அணிந்தவனோ, "சார் மிக்கி மவுஸ் பொம்மையோட மூக்கு பகுதி லைட்டா நூல் விட்டு இருக்கு. அதனால அதை அவசரமா ஸ்ட்ரிச் பண்ணிட்டு இருக்கான் துரை." என்று பவ்யமாய் கூறினான் குப்ஃபி(goofy) உடை அணிந்தவன்.
"இதெல்லாம் முன்னவே பார்த்து வரமாட்டிங்களா. கொஞ்சம் சீக்கிரம் வரச்சொல்லுப்பா" என்று 'பப்பே' சிஸ்டம் சரியாய் இருக்கின்றதா என்று பார்க்க சென்றார்.
"என்ன துரை தச்சிட்டியா இல்லையா. அங்க காசு கொடுத்தவன் பறக்கறான்." என்று துரையை கேட்டான் லோகு.
"தச்சிட்டேன் பா." என்றவன் வெளியே வந்தான்.
"இங்க ஏசியென்றதால் கொஞ்சம் பரவாயில்லை. இல்லை தைக்கறதுக்குள்ள ஒரு வழியாகியிருப்பேன்" என்று கூறவும் லோகு சிரித்தபடி கைப்போட்டு வந்தனர்.
மிக்கி(micky) அண்ட்(and) குப்ஃபி(goofy) தோளில் கை போட்டு வர குழந்தைகள் ஆசையாய் ஆர்வமாய் ஓடி வந்தார்கள்.
பல போட்டோக்கள் பல குழந்தைகள் என்று நேரம் ஓடியது. அதுவும் மிக்கி அண்ட் மினி என்று சேர்ந்து எடுக்க உள்ளுக்குள் இருக்கும் இரு ஆண்களுக்குமே சிரிப்பு தான். புதிதாக ஸ்மர்பட், டிஸப்பிள் பீ, ப்யூட்டி கேர்ள் சிண்ட்ரெல்லா என்று இருக்க அவர்களை சுற்றி பெண் குழந்தைகள் கூட்டம் அலை மோதியது.
வருவோர் அனைவரையும் கை குலுக்கி, கட்டி அணைத்து, புகைப்படம் எடுத்து என்று பெரியவர்களுமே மகிழ்ந்தார்கள். உடனுக்குடன் முகநூலில் ஸ்டேடஸ் என்றும் வைத்து முடித்தனர்.
துரைக்கும் லோகுவுக்கும் உள்ள அழுவறேன் வெளியே சிரிக்கறேன் என்பதாக உள்ளே வேகுது வெளிய சிரிக்கிறேன்னு என்று பாடுவதாய் தோன்றும்.
சீப் கெஸ்ட் வந்ததும் குழுந்தைகள் போட்டிகளுக்கு சென்று குழுமினார்கள்.
அதனால் பொம்மை ஆடை அணிந்த மனிதர்களுக்கு கொஞ்ச நேரம் கிடைக்க துரையோ அவசரமாய் இயற்கை உபாதை செல்ல நேரம் பார்த்தான்.
லோகுவோடு கூறிவிட்டு உடையை கழட்டி கொடுத்து சென்றான்.
இடைப்பட்ட நேரத்திலும் மிக்கியை தேடி வந்து ஏமாற்றம் அடைந்தனர் சிலர்.
அதே நேரம் சீப் கெஸ்டாக வந்தவரின் பையனுக்கு இயற்கை உபாதை வர பாத்ரூம் அழைத்து வந்தனர்.
"கனிஷ் தனியா போயிடுவியா" என்று அவன் அப்பா பரதன் டிவி புகழ் பெற்ற குழந்தை சீரியலில் வருபவர். அவரோ கனீஷை பாத்ரூம் அனுப்பி விட்டு போனில் பேச சென்றார்.
குழந்தைக்கு பாத்ரூம் சென்று விட்டு சற்று நேரம் ஆகவும் உள்ளே வந்தார் கனிஷ் தந்தை பரதன்.
அந்த நேரம் துரை குழந்தைக்கு பேண்ட் ஜிப்பை போட்டு விட்டு கொண்டிருந்தான்.
"ஏய் ஏய். குழந்தையை என்ன பண்ணற?" என்று அவசரமாக பரதன் வந்தான்.
"சார் சார் பயப்படாதிங்க. குழந்தை பாத்ரூம் போயிட்டு பேண்ட் ஜிப் போட முயற்சி பண்ணினான். போட முடியலை. ரொம்ப நேரம் திணறவும் போட்டு விட்டேன்" என்றான் துரை.
"ஏய் சீ கையை எடு. யார் நீ இங்க என்ன பண்ணற. டாய்லேட் க்ளீன் பண்ணறவனா?" என்று பேச துரைக்கு அசிங்கமாகி போனது.
பலரும் தன்னிடம் போட்டோ எடுக்க ஆவலாய் வெளியே காத்திருக்கின்றார்கள். என்ன அந்த உயிரற்ற பொம்மை உடையை அணிந்தால் மட்டுமே. மற்ற நேரம் ஏன் தன்னை ஒரு விதமாக பார்த்து முகம் சுழிக்கின்றனரோ. தான் அணிந்த உடை மிக்கி மவுஸாக இருக்க, நேரில் பார்க்க வெள்ளிதிரை புகழ் யோகி ராமு போல காட்சி தரும் தன்னை கண்டு அப்படி தான் ஒதுங்குகின்றனரோ? என்று வலித்தது.
எதுவும் பேசாமல் அமைதியாய் வெளியேறி தனது மிக்கி மவுஸ் ஆடையை உடுத்தி கொண்டு முகமாஸ்கை அணிந்தான்.
அவன் அழுகின்றானா, வேதனைபடுகின்றானா, என்பது அந்த பொம்மை கவசத்துக்கு மட்டுமே தெரியும்.
லோகுவோடு சேர்ந்து மற்ற பொம்மை உடையணிந்த மனிதரோடு சேர்ந்து விட மீண்டும் குழந்தையோடும் புகைப்படமாகவும் நேரம் ஓடியது.
சில பெண்கள் தோளில் கைப்போட்டு போட்டோ எடுக்க வானத்தில் ஜிவ்வென்றும் பறந்தார்கள். துரைக்கு தெரியும் பொம்மை முகமூடியை எடுத்தால் இவர்களும் கழுத்து சங்கிலி பறிப்பவனாக தங்களை பார்ப்பார்கள் என்று. அவனுக்கு உலக மக்களை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
போட்டி முடிவு அறிவித்து விட்டு சாப்பிட சென்று திரும்புகையில், சீப் கெஸ்ட் பாதை கடந்து செல்ல கனிஷ் தந்தை பரதனிடம் "டேடி டேடி கார்டூன் மனிதரிடம் போட்டோ எடுக்கணும்" என்று கொஞ்சி கெஞ்ச பரதன் போட்டோ எடுக்க சென்றான்.
"டேய் அப்பாவோட போட்டோ எடுக்க அத்தனை பேர் இருக்காங்க நீ என்ன.." என்றாலும் பரதனுக்கும் ஆசையிருந்தது.
கனீஷை அழைத்து சென்று "ஹாய்" என்று கூற மாற்றி மாற்றி பொம்மை உடை அணிந்த மனிதர்கள் கையை குலுக்கினான்.
பரதனும் கை குலுக்கி அனைவரோடு மகனும் தானும் போட்டோ எடுக்க ப்ரியப்படுவதாக கூறினான்.
அதே போல எடுத்தனர். அந்நேரம் கனிஷை பரதன் கைவளைவில் தூக்கி வைத்தார். அக்கணம் கனிஷால் பரதனின் பேனா கீழே விழுந்ததை பரதன் கவனிக்கவில்லை.
போட்டோ எடுத்து சாப்பிட கிளம்பும் நேரம் "சார் சார்." என்று துரை அழைக்க அவன் குரல் பரதன் செவியை எட்டாமல் போகவும், மிக்கியின் முகமாஸ்கை தலை வழியாய் கழட்டி அழைத்தான்.
பரதன் நின்று திரும்பினான் கொஞ்சம் அதிர்ந்தான்.
"சார் உங்க பேனாவை மிஸ் பண்ணிட்டிங்க" என்று பாத்ரூமில் பரதன் திட்டிய அதே நபர்.
பரதன் தயங்கி அங்கேயே நிற்க லோகுவோ "டேய் நீ போய் கொடு டா" என்று ஊக்கினான்.
"என்ன சார். ரியல் பேஸை பார்த்ததும் இவனோடலாம் போட்டோவா என்று ஜர்க் ஆகிட்டிங்களா. நான் முகமூடியை கழட்டாம தான் கொடுக்க பார்த்தேன். ஆனா உங்களுக்கு கேட்கலை. அதனால கழட்ட வேண்டியதா போச்சு. சாரி சார்" என்றதும் பரதன் சூழ்நிலை உணர்ந்து பேச முயன்றான்.
"சாரி தம்பி அது திடீரென பையனோட கொஞ்சம் பார்க்க பயமுறுத்தற மாதிரி நீ இருந்ததும் அப்படி பேசிட்டேன்." என்று பரதன் பேசிட, "பரவாயில்லை சார் நீங்களாவது உடனே சாரி கேட்கறிங்க. சிலர் அப்பவும் அலட்சியமா தான் பார்ப்பாங்க.
எங்களுக்கு என்ன ஆசையா சார். முகத்தை யோகி ராமு மாதிரி இருக்க? அதுவா தாய் தகப்பனால அமையுது. அதை மாத்தி வைக்க முடியுமா. அப்பா அம்மா மாதிரி அமைவது வரம் சார்.
இப்ப உதாரணம் சொன்னேனே யோகி ராமு சார் அவர் கூட முன்ன இப்படி பீல் பண்ணிருக்கலாம். ஆனா இப்ப காமெடி படத்துலயும் காமெடி ரோலுலையும் அவர் தான் டாப்பு சார். அவர் கூட எங்களை மாதிரி பீல் பண்ணியதா ஒரு பேட்டில சொல்லிருக்கார். அதெல்லாம் எங்களுக்கு ஒரு அனுபவ பாடம் சார். ஒரு நாள் அது மாதிரி ஏதாவது வாய்ப்பு வரும். அப்படியே வரலைனா கூட தினசரி என்னோட நின்னு போட்டோ எடுக்கற குழந்தைகளோட மகிழ்ச்சி தான் எங்களுக்கு அவார்டு.
உள்ள புழுக்கமா இருக்கும். எங்கயாவது எரும்பு கடிச்ச மாதிரி வலிக்கும், சொறியணும்னு தோணும். ஆனா எதையும் செய்ய முடியாது. ஆனா சின்னதா கைகாலை ஆட்டி கை குலுக்கினா குழந்தைகள் முகமும் பார்க்கற உங்களை போன்றோரும் ஒரு ஆனந்தம் அடைவீங்களே அதுல இருக்கு சார் எங்க வாழ்க்கை." என்றான்.
பரதனை பரிசு கொடுக்க அழைக்க பரதன் துரையை பார்த்தவாறே மேடைக்கு சென்றான்.
பரிசு கொடுத்து முடித்து, நன்றியுரை ஆற்றி காரில் ஏற, சென்ற கணம் மீண்டும் பொம்மை உடையணிந்த மனிதருக்கு கனீஷ் கையசைத்து மகிழ்ந்தான். "டேடி எனக்கு மிக்கிமவுஸை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றான்.
"எனக்குமே" என்ற பரதனின் பேச்சில் அவன் மனம் துரையின் மனமா அல்லது மற்றவரின் காட்சிக்கு மகிழ்ச்சி தரும் பொம்மை முகமா? என்று ஆராயவில்லை. இரண்டுமே என்றது.
-முற்றும்
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment