காவலை மீறிய காற்று
காவலை மீறிய காற்று
சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, "ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?" என்று கேட்டே விட்டார்.
சுனிலிற்கு 'போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு ஆடுவாளே. நான் வேற பங்ஷனுக்கு வரலைனு சொல்லிட்டேன். அதுக்கும் சேர்த்து சண்டைக்கு போவா' என்று முனங்கினான். அவன் முனங்கி முடிக்கும் முன் யமுனா ஆரம்பித்தாள்.
''இங்க பாருங்க அத்த. உடை என்பது நமக்கு எது கம்பர்டெபிளோ அதை தான் உடுத்தணும். என்ன பார்க்கறவங்க என்னை பார்த்து முகம் சுளிக்காத வகையில இருந்தா போதும்.
உங்க பையன் கடைசி நிமிஷத்துல எனக்கு மீட்டிங் இருக்கு. வரமுடியாது பொண்ணை நீயே கூட்டிட்டு போனு சொல்லிட்டார். எனக்கு ஸ்கூட்டில இதான் கம்பர்டெபிள். இப்படி தான் உடுத்துவேன்." என்று பொட்டிலடித்தாற் போல கூறி முடித்தாள்.
பாக்கியம் சத்தமேயில்லாமல் "என்னய்யா இது நீ போகலையா. குழந்தை ஆசையா டான்ஸ் ஆடுது. பார்க்கலைனா எப்படி?" என்று கேட்டார்.
"அம்மா இன்னிக்கு சடனா மீட்டிங் போட்டுட்டாங்க. எங்க டீம் செய்த பிராஜக்டை நான் தான் கணினிதிரையில எக்ஸ்பிளைன் பண்ணணும். என்னோட டிக்கெட்ல நீ வேண்டுமின்னா யமுனா கூட போ மா. ஒரு குழந்தைக்கு இரண்டு டிக்கெட் தான்" என்று அன்னையிடம் திணித்தான் சுனில்.
"உன் பொண்டாட்டி அழைச்சிட்டு போவாளா டா.?" என்று கேட்டு விட்டு அறைப் பக்கம் பார்த்தார்.
இன்னமும் தன் மகள் அபூர்வாவை ரெடி பண்ணும் மும்முரத்தில் யமுனா இருந்தாள்.
"அம்மா பட்டு பட்டுனு பேசுவாளே தவிர நீ கூப்பிட்டா எல்லா இடத்திற்கும் அழைச்சிட்டு போவா மா." என்று சுனில் அன்னையிடம் கூறினான். அதோடு தொடர்ச்சியாய் "யமுனா என் டிக்கெட்ல அம்மாவை அழைச்சிட்டு போ" என்று உரக்க கூறிட, "அத்தைய கிளம்ப சொல்லுங்க." என்று மட்டும் பதில் கொடுத்தாள்.
யமுனாவை சோதிக்காமல் பத்தே நிமிடத்தில் சின்னதாய் பார்டர் வைத்த புடவையை கட்டி கொண்டு வந்தார் பாக்கியம்.
***
இதே போன்ற மற்றொரு வீட்டில்... அதே வசனம் அதே சூழ்நிலை.
சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் துர்கா. இதனை எட்டி நின்று பார்த்த சங்கரியோ, "ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பையனோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?" என்று கேட்டார்.
மாதேஷ் எட்டி பார்க்க, துர்காவோ "சரிங்க அத்த இரண்டு நிமிடத்தில மாத்திட்டறேன்" என்றாள்.
"என்ன இருந்தாலும் சொல்லு துர்கா மாதிரி ஒரு பொண்ணு அமைவாளா? நான் சொன்னா சரி சரினு கேட்டுக்கறா." என்று துர்காவை தன் பையனிடம் புகழ்ந்தார் சங்கரி.
"மா... நீயுன்னு இல்லை. இதோ எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் இன்னிக்கு கம்பெனில பருப்பு மூட்டு குடோன்ல லாரி வர்றதில கணக்கு பார்த்து அடிக்க வைக்க என்ன உடனடியா கூப்பிட்டாங்க. நான் ஆண்டுவிழாவுக்கு வரமுடியலைனு துர்காவிடம் சொன்னேன். என்னை புரிஞ்சி சரிங்கனு சொல்லிட்டா. என்னயிருந்தாலும் அடுத்தவங்க நிலைமையை புரிஞ்சி அதுக்கேற்ற மாதிரி அனுசரித்து போறதில துர்கா எப்பவும் முதல் இடத்துல பிடிப்பா மா" என்று தாயிடம் மனைவியை பெருமை பேசினான்.
துர்காவோ மென்னகை விடுத்து தன் மகன் ஆதித்யாவிற்கு ஆடையை அணிவித்து கை பட்டனை போட்டு விட்டாள்.
சேலை உடுத்தி ஸ்கூட்டி என்றால் சற்று தடுக்குமே என்ற உதித்த பொழுதும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று சங்கரியோடு கிளம்பினாள்.
***
இரண்டு குடும்பமும் ஒன்றாக ஆண்டுவிழாவில் சந்தித்தது.
பாக்கியமோ வந்தவரை தான் பார்த்தார். பெரும்பாலும் ஜோடியாக குழந்தையின் பெற்றோர் வந்திருந்தனர்.
அதனை கண்டு யமுனாவை நோக்கினார்.
முதலில் சுனில் வரவில்லையென்ற கோபம் இருந்தாலும் பாக்கியம் வந்ததில் அந்த சினம் கொஞ்சம் தணிந்தது.
பாக்கியமோ வந்த தம்பதியரில் பெண்களை கண்டு இந்தனை அலங்காரம், நம்ம மருமக மட்டும் ஏதோ ஆபிஸ் உத்தியோகத்துக்கு போறமாதிரி வந்திருக்காளே என்ற ஆதங்கம் இருந்தது.
அதுவும் தன் அருகே இருந்த பெண் 'ஆதித்யா சட்டையில படாம தண்ணி குடி' என்றவளின் மீது பதிந்தது.
சேலை கட்டி பாந்தமாய் இருந்தாள். அவளும் மாமியாரோடு வந்திருப்பாள் போல.
ஆதித்யா மற்றும் அபூர்வா இருவரும் முதல் வகுப்பு ஆனால் வேறு வேறு செக்ஷன் என்றதால், அவளின் அம்மாவிடம் அந்தளவு பரீட்சையம் இல்லை.
நாகரீகமாக மிதமான புன்னகையில் சேரில் அமர்ந்து ஆண்டுவிழாவை இரசிக்க செய்தனர்.
மூன்று மணி வரை விழா என்பதால் நான்கு மணிக்கு துவங்கினார்கள். அரங்கத்தில் முதலில் வகுப்பு வாரியாக ஆடல், பாடல், நகைச்சுவை பேச்சு, நாடகம், என்று சென்று கொண்டிருந்தது.
துர்கா மற்றும் யமுனா ஸ்நாக்ஸ் வாங்க எழுந்து சென்றனர். அவர்கள் சென்றதும் சங்கரி பாக்கியம் பேச ஆரம்பித்தனர்.
முதியவரின் பேச்சு வட்டமடித்து சேலை பற்றி வந்தது.
"எங்க என் மருமகளிடம் சொன்னேன். எனக்கு இது தான் ஸ்கூட்டி ஒட்ட வசதினு ஒரே போடா சொல்லிட்டா. பையனும் வேலைக்கு போகவும் சண்டை எதுக்குனு நான் வந்துட்டேன்." என்றார் பாக்கியம்.
"என் மருமக பரவாயில்லை. அவளும் முதல்ல அப்படி தான் சுடிதாரை எடுத்தா. நான் சொன்னதும் மதிப்பு கொடுத்து சேலை உடுத்திக்கிட்டா." என்று புகழ்ந்தார் சங்கரி.
ஸ்நாக்ஸ் வாங்கிய இடத்திலோ கசகசவென் இருந்த முகம் சுளித்து நின்றாள் துர்கா.
"ரொம்ப கசகசனு இருக்கா. இங்க வந்து நில்லுங்க பேன் காற்றுல கொஞ்சம் பெட்டரா இருக்கும்" என்றாள் துர்கா.
யமுனாவோ "என்ன செய்யங்க பெரியவங்களுக்காக கணவருக்காக நம்ம விருப்பத்தை மாற்றிக்க முடியாம தான் சேலை கட்டினேன். என்ன செய்ய எல்லாயிடத்துலயும் பேன் இல்லை. என் நேரம் நான் உட்கார்ந்த இடமும்பேன் இல்லை. இங்கயும் பேன் இல்லை" என்பது போல கூறினாள்.
இருவரும் தங்கள் மூத்தோருக்காக வாங்கிய டீ சமோசா என்று கொடுத்துவிட்டு தங்கள் குழந்தைகள் ஆடும் நேரத்திற்கு காத்திருந்தார்கள்.
அந்த நேரமும் வந்தது. ஆதித்யா ஆடும் பொழுதும் அபூர்வா ஆடும் பொழுதும் போனில் இரு தாயாருமே புகைப்படமும் வீடியோவாகவும் எடுத்தனர்.
மனநிறைவாய் துர்கா மற்றும் சங்கரி ஆதித்யாவை அணைத்து கிளம்பியிருந்தனர்.
துர்கா ஸ்கூட்டியை நிதானமாகவே ஒட்டினாள். ஆனால் எதிரே காற்று பலமாக வீசியது. சேலை ஒருபக்கம் தன் மானத்தை காட்டி விட, சங்கடமாய் நெளிந்தாள்.
இருந்தாலும் தற்போது அதனை சரிபடுத்த கையை எடுக்கயியலாத நிலை. ஆதித்யா மற்றும் சங்கரி வெயிட்டை பேலன்ஸ் செய்ய வேண்டுமே. அதனால் பரவாயில்லையென சிக்னல் வந்ததும் சரிச்செய்ய நேரம் கிடைக்குமென எண்ணினாள்.
ஆனால் சிக்னல் வரும் முன் அங்கு கட்டிடம் கட்ட இருந்த சிமெண்ட் மூட்டையின் காலி கவர் பறந்து வந்து இருசக்கர வாகணத்தின் முன் டயரில் சுற்றியது. எதிர்பாராத இந்த நிகழ்வில் துர்கா பேலன்ஸ் செய்ய முனைய, அந்த நேரம் சேலையால் காலை கீழே வைக்க இயலாது தடுத்தது.
வண்டி ஆட்டம் காண, சங்கரி ஆதித்யா ஒருபக்கம் சாய்ந்தனர். துர்காவோ பக்கத்தில் கல்லில் மோதி விழுந்தாள்.
அதே நேரம் யமுனா பாக்கியம் இருவரும் அபூர்வாவை அணைத்து புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்த நேரம், அருகேயிருந்த மருத்துவ ஆம்புலன்ஸில் துர்காவை ஏற்றி சென்றனர்.
என்னானது ஏதானது என்று யமுனாவிற்கு புரிபடவில்லை. சற்று நேரத்திற்கு முன் சந்தித்தவர்களாயிற்றே என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் ஆம்புலன்ஸில் துர்காவை ஏற்றி கூடவே சங்கரி அம்மா கையில் ஆதித்யாவோடு செல்வோரை நின்று கேட்க இயலாத நிலை.
பக்கத்தில் இருந்த போலிஸிடம் என்னவென விசாரித்தார் பாக்கியம்.
"அதுவா மா. முன் வீல்ல சிமெண்ட் கவர் மாட்டிக்கிச்சு. அந்த பொண்ணு சேலை கட்டியதால சட்டுனு பேலன்ஸ் பண்ண முடியாம மோதிடுது. பைக் சாய்ந்து கல்லுல மோதிடுச்சு. எத்தனை முறை தான் கட்டிடத்துல இருந்து அப்படியே சிமெண்ட் கவரை தூக்கி எறியாதிங்கனு சொல்லறது. கேட்டா ஒழுங்கா வச்சது தான் அப்படியே பறந்துடுச்சு. காத்து பலமா அடிக்குதுனு கதை விடுவான்" என்று பதிலை கூறி "வண்டி நிற்காதே கிளம்பு கிள்மபு டிராப்பிக் ஆகுது பாரு" என்று அதட்ட கூட்டம் கலைந்தது.
வீட்டுக்கு வரும் முன் பாக்கியமோ நெஞ்சில் கைவைத்து ஸ்கூட்டியில் வரும் ஒவ்வொரு பெண்மணியையும் கண்டார்.
சுடிதார் அணிந்த பெண்கள் சட்டென வைக்க தோதாக உடை அமைந்து. ஆனால் சேலை சற்றே தடுக்க செய்ய, முன் எச்சரிக்கையாய் தான் வைப்பது கண்ணில் பட்டது.
அபூர்வாவோ வீட்டுக்கு வந்ததும் அம்மா டிரஸ் மாற்றிடவா, கசகசனு இருக்கு" என்று கேட்டதும் கையற்ற காட்டன் கவுனை நீட்டினாள்.
பாக்கியமோ பெண் பிள்ளை இப்படி உடை போடக்கூடாது என்று என்றும் உரையாற்றி பேசுவார் ஆனால் இன்றோ அமைதியானார்.
ஆனால் அபூர்வாவையே பார்க்க, "இங்க பாருங்க அத்த கையில்லாத டிரஸ் போடறேன்னு அவளை திட்டாதிங்க. நான் தான் எடுத்தேன். இந்த காலத்துல வெயில், டிவி போன் என்று எல்லாம் வெட்பமயமா இருக்கு. அதனால நம்ம வீட்டுக்குள்ள குழந்தை ப்ரீயா உடுத்துட்டுமேனு நினைச்சேன். அதுவும் குறிப்பிட்டளவு வளர்ற வரை தானே" என்றாள் யமுனா.
"புரியுது மா. நான் நம்மிடம் பக்கத்துல இருந்து பேசினாளே அந்த பொண்ணை நினைச்சேன். முதல்ல சுடிதார் தான் அதுவும் எடுத்துச்சாம் அவங்க அத்தை சேலை கட்ட சொல்ல சரிங்கத்தனு கட்டிக்கிட்டு வந்துச்சாம்.
எதிர்த்து பேசாத பிள்ளைனு பெருமையா சொன்னாங்க. இப்ப என்ன நிலையோ மனசு சங்கடமா இருக்கு." என்றார் பாக்கியம்.
"அத்தை அந்த பொண்ணு கேன்டீன்லயும் கசகசனு இருக்குனு தான் சொல்லுச்சு.
நாம போடுகிற உடை நமக்கும் நாம போகிற இடத்துக்கும் செட்டாகுதானு முதல்ல யோசிக்கணும். நான் அவரோட போனா சேலை கட்டணும்னு இருந்தேன். ஏன்னா அவர் வண்டி ஓட்டுவார் நான் பின்னாடி இருப்பேன். சோ எனக்கு கஷ்டமில்லை. ஆனா அவர் வரலை. நானா ஓட்டணும் அதனால சேலையை தவிர்த்தேன்.
சேலை சில நேரம் சதி பண்ணிடும் அத்தை. எல்லா நேரமும் காலை கீழே சரியா வைக்க முடியாது. இப்படி நம்மை இம்சைப்படுத்திடும். நான் உங்களிடம் எதிர்த்து பேசினாலும் என்னோட சேப்டியும், என்னோட இருக்கற அபூர்வா மற்றும் உங்க சேப்டி முக்கியமா யோசித்தேன்.
அவங்க மற்றவர்களுக்காக யோசித்து அவங்க இப்ப கஷ்டப்படறாங்க. மற்றவர்களுக்காக யோசிக்கலாம். ஆனா அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாம இருக்கணும்.
கவலைப்படாதிங்க அத்த நீங்க உடைமாற்ற போனப்ப, அந்த பொண்ணு கூட்டிட்டு போன ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு கேட்டேன். இப்ப பரவாயில்லையாம். உயிருக்கு எதுவும் ஆபதில்லையாம். என்ன கையில பிராக்சர். கொஞ்ச நாள் வேலை செய்யாம பத்திரமா பார்த்துக்கணும். அவங்க அத்தை பார்த்துப்பாங்க" என்று அபூர்வாவை சாப்பிட அழைத்தாள் யமுனா.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment