பஞ்ச தந்திரம்-4

பஞ்ச தந்திரம்-4 

    திரிஷ்யா பலகனவை மனதில் தேக்கி வைத்து சுடிதார் அணிந்து கணவன் முன் நிற்க அவனும் கட்டி பிடித்து தட்டாமாலை சுற்றுவதாக கனவு கண்டாள். 

  கல்லூரியில் படிக்கும் போது சுடிதார் அணிந்திருக்கின்றாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு முற்றிலும் சேலை தான் கட்டவேண்டும் என்பது நாகேஸ்வரியின் விதி. 

    அதனாலே சுடிதாரை என்றோ மூட்டை கட்டியிருந்தாள். 
    கணவரின் விருப்பம்மாடர்ன் உடை என்று அறிந்தப்பின் சுடிதார் அணிவதில் தயக்கமின்றி வாங்கிவிட்டாள். 

  குளித்து முடித்து உடையணிந்து கணவர் எழுந்திடும் முன் டீ போட சென்றிருந்தாள். லோகநாதனோ மருமகளின் உடையை கண்டு ஜாகிங் போகாமல் மனைவியிடம் கிசுகிசுக்க வந்தார். 

     நாகேஸ்வரியோ ரயில் வண்டி போல அதிவேகமாய் வந்து, "என்னடி  இது?" என்று கேட்டார். 

   "சுடிதார் அத்தை. அவருக்கு பிடிக்கும்னு போட்டேன்" என்று நடுங்கினாள். 

   "இந்த டிரஸை என் மகன் வாங்கி தந்தானா? எங்க அவன்?" என்று கத்தினார். 

    "இல்லை அத்தை... அவர் வாங்கி தரலை. இது நான் தான் வீட்டு செலவுக்கு கொடுத்ததுல வாங்கினேன். அவருக்கு சுடிதார் பிடிக்கும்னு" என்று கூற தயங்கி நாணினாள். 

    கணவரின் அறையை எட்டி பார்த்தால், 'இப்ப எதுக்கு கத்தறிங்க, சுடிதார் அவளுக்கு நல்லாயிருக்கு விடுங்க' என்று கணவன் வந்து குரல் கொடுப்பானென ஆசைக்கொண்டாள். 

    அவளின் எண்ண கடலலையில் விஷத்தை கலந்தவனாய் வேதாந்த் வந்தான். 

   "என்ன சத்தம்?" என்றவன் மனைவியின் சுடிதாரை கண்டு ஒரு நொடி ரசித்தான். அடுத்த நொடி "இது நீ வாங்கிக்க சொன்னியா டா. ஏதோ உனக்கு மாடர்ன் டிரஸ் பிடிக்கும்னு சொல்லறா?" என்று நாகேஸ்வரி கேட்டதும் மனைவி தன்னை நேற்று போனில் பார்த்த பெண்ணை வைத்து இன்று அதை தந்தை தாயிடம் கூறுகின்றாளோ என்ற பயத்தில் மிதந்தான். 

    "நான் எதையும் வாங்கிக்க சொல்லலைம்மா." என்றவன் "என்னடி என்ன மாட்டி விடபார்க்கறியா?" என்று காதில் வந்து கர்ஜித்தான். 

     "இல்லைங்க நீ விருப்பப்படுவிங்கனு" என்று கையை பிசைந்தாள். 

   "ஏன்டிம்மா... இந்த வீட்டுக்கு வரவு செவுக்கு காசு கொடுத்தா நீ உன் இஷ்டத்துக்கு மினுக்கறதுக்கு செலவு பண்ணிருக்கியே. என் பையன் சம்பாரிச்சு அதை நீ இப்படி தான் செலவழிக்கறியா?" என்னு நாகேஸ்வரி கேட்டு முடித்தார். 

   "அய்யோ அத்தை... இதுல என்ன மினுக்கறதுக்கு இருக்கு. சாதாரண சுடிதார்." என்று மறுத்து பேச ஆரம்பிக்க, "டேய் வேதாந்த்... இனி சம்பள பணத்தை அவளிடம் தராதே." என்று எதற்கோ சென்று எதிலோ முட்டிய கதையாக மாறியது. 

   "முதல்ல இந்த கண்றாவியை மாத்து. மாமனார் எதிர்ல துப்பட்டா இல்லாம சுத்தறது." என்றதும் திரிஷ்யாவுக்கு ஒரு மாதிரி அசிங்கமாய் போனது. மெதுவாக தனதறைக்கு சென்று விட்டாள். 
  
    அங்கே முகம் பொத்தி அழவும், வேதாந்த் வந்து சமாதானப்படுத்த எதிர்பார்த்தாள். ஆனால் உடனே வரவில்லை. 

  உதய் எழுந்து பல் விளக்கி வெளியே சென்றான். கூடுதலாக அம்மா அழுதுட்டு இருக்காங்க" என்று தகவலை கூறியும் யாரும் கண்டுக்கவில்லை. 

    ஆற அமர டீ குடித்து வந்த வேதாந்த் "இன்னும் இந்த டிரஸை நீ மாத்தலையா" என்று கதவை தாழிட்டான். 

   "உங்களுக்கு இந்த டிரஸ் பிடிக்கலையா? இதுல ஆபாசமா இல்லையே." என்று கூறினாள். 

    "இதப்பார்... எங்கம்மாவுக்கு எது பிடிக்குதோ அதை போடு. இதை கழட்டு" என்று தன்னவள் மனதை வதைத்து கூறினான். 
   
   "நான் என்ன போடணும்னு என்னிஷ்டம் இல்லையா. அத்தை ஏன் என்னிடம் திணிக்கணும். உங்களுக்கு பிடிச்சா போதுமே" என்று கேட்டு பதிலை எதிர்பார்த்தாள். 

   "எனக்கு பிடிக்கும்னு எப்ப சொன்னேன்?" என்று பாய்ந்தான். 
   
  "நீங்க... போன்." என்று பேச தயங்கினாள். 
    
  "ஓ... போன்ல பார்த்ததும் நீயா முடிவு பண்ணிட்டியா. அதை ஜஸ்ட் எண்டர்டெயிண்மெண்ட். சீ... சினிமா நடிகை வித்தியாசமா டிரஸ் போட்டா பார்க்கறதில்லை. அது போல தான். பட் அதை நீ தப்பா மீன் பண்ணிட்ட." என்று கூறினான். 

   "ஆனா நீங்க பார்த்ததும் நடிகையை இல்லையே... மாடர்னா கவர்ச்சியா இருந்த பெண்ணை தானே" என்றதும் வேதாந்த் தலையை கோதி, "ஹேய்.. ஏதோ ரிலாக்ஸுக்கு அந்த டைம் பார்த்தேன்.  என்னடி தப்பு. ஜஸ்ட் போட்டோ.. எவளோடவே குடும்பம் நடத்தலையே.  இதை இதோட விட்டுட்டு டிரஸ் மாத்திட்டு போய் வேலையை கவனி." என்று எரிந்து விழுந்தான். 

   திரிஷ்யா பல்லை கடித்து கொண்டு சுடிதாரை அகற்றி சேலை உடையை மாற்றி ஹாலுக்கு வந்தாள். 

    நாகேஸ்வரி நாகத்தின் சீற்றத்தோடு ஒரு பார்வை வீச, சிவனேயென்று திரிஷ்யா சமையலறையில் நுழைந்தாள். 

     இட்லி அவித்து குருமா செய்து கண்ணீரோடு வேர்வை வழிய வெளியே வந்தவள் கண்டது தான் ஆசையாய் வாங்கிய சுடிதாரை வேதாந்த் வெளியே எடுத்து வர அதை குப்பை வண்டியை இழுத்து வரும் பெண்ணிடம் நீட்டினார். 

   லேசாய் புது துணி என்ற வலி திரிஷ்யாவுக்கு இருந்தது. 
  ஆனால் என்ன செய்ய தானாக முடிவெடுக்க இயலாது. கணவன் துணையிருந்தால் ஒரு பெண்ணுக்கு பலம். இங்கு கணவன் தன்னை ஒரு வேலைக்காரியாக நடத்தினால் என்ன செய்வது.

     வேதாந்த் உதய் இருவரும் பள்ளி அலுவலகம் சென்றதும், திரிஷ்யா சாப்பிடும் போது நாகேஸ்வரி திரிஷ்யாவின் தாயாருக்கு போன் போட்டு திரிஷ்யா ஏதோ பெரிய தவறை செய்தவளாக எட்டுக்கட்ட இடிந்து போனாள். 
  
    இனி அம்மா வேறு தனியாக போன் போட்டு திட்டு திட்டுவார்கள். திரிஷ்யா நிலை கவலைக்கிடமாக மாறியது.

   திரிஷ்யா கதையை தொடர, அதே நேரம் நைனிகா போனில் நோட்டிபிகேஷன் வரவும் அதனை எடுத்து பார்த்தாள்.

    "புல் ஷிட்." என்றவள் மனதில் அவள் காதலன் தருணை திட்டினாள். 
   
   "அம்மா போன் போட்டு என்னை தான் அன்னிக்கு திட்டினாங்க." என்று திரிஷ்யா அழுதவள் நைனிகா புல்ஷிட் என்றதும் நிமிர்ந்து அவளை ஏறிட்டாள். 

   "சாரி.. டிரஸ் போட்டதுக்கு தப்பு சொன்னாங்களே அதுக்கு திட்டினேன்." என்று சமாளித்தாள். 

   மஞ்சரியோ நைனிகாவை விடுத்து திரிஷ்யாவை கண்டு தோளில் கை வைத்து, "இதுக்காம வீட்டை விட்டு வந்த?" என்று கேட்டார். 

    "என்னம்மா இது... இதுக்கு எல்லாம் வீட்டை விட்டு வருவேனா. எத்தனையோ வீட்ல மாமியார் மாமானார் சண்டை பெரிய தலைவலியா இருக்கு. எத்தனை சீரியல் பார்த்திருக்கேன். இந்த விஷயம் எல்லாம் என்னை இரண்டு வாரம் மனசுல கஷ்டப்பட்டு பீல் பண்ணிட்டு திரும்ப நடைமுறைக்கு வந்திடுவேன். நான் வந்ததுக்கு காரணமே வேற. பிரச்சனை இது கிடையாது. இது பெரிய அலைக்கு முன்ன வர்ற சின்ன சின்ன அலைகள்." என்று கூறினாள். 

    ரஞ்சனாவோ "பெரிய பிரச்சனைனா?" என்று கேட்டு திரிஷ்யாவை பார்க்க அவளோ மீண்டும் தன் வாழ்வியலை கூற துவங்கினாள். 

-தொடரும். 
பிரவீணா தங்கராஜ்.

  

  

    

Comments

  1. அப்படின்னா வீட்டுக்காரரு யாருக்கோ ரூட் விட்டு இருப்பாரோ......???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு