பஞ்ச தந்திரம்-6

பஞ்ச தந்திரம்-6 
  
     "நீங்க சொல்லுங்க அம்மா... நான் என்ன செய்யறது. அவரோட திரும்பி வாழணுமா? எனக்கு என் மகன் வேண்டும். அவன் இல்லைனா நான் செத்துடுவேன்" என்று முகம் பொத்தி அழுதாள். 

     மஞ்சரியோ "முதல்ல தண்ணி குடி." என்றார். 

   ரஞ்சனாவோ "பைத்தியமா நீ... சாகணும்னு முடிவெடுக்கற... உன் குழந்தையை யோசித்து பார்த்தியா. எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு நிகரா இருக்க முடியுமா. நீ செத்துட்டா உன் பையனுக்கு மொத்தமா அம்மா இல்லாத நிலை ஏற்படும். அதே நீ தனியா வாழ்ந்து இருந்தாலாவது அடிக்கடி அவனை பார்த்து அவன் நிலையை கவனிக்கலாம். யார் கண்டா... ப்யூச்சர்ல அவன் உன்னை தேடிவரலாம். அப்படியில்லைனா கூட போர்டிங் ஸ்கூல்ல ஒரு வாரம் இருந்துட்டு அம்மா வேண்டும்னு அழது உன்னை கேட்கலாம். உன் கணவர் உன்னை தேடிவரலாம். திங்க் பாஸிடிவ்." என்றாள். 

     திரிஷ்யா வேதனை சுமந்தவளாக, "அவனுக்கு ஒரு போன் வீடியோ கேம்ஸ் டாய்ஸ் இதெல்லாம் கிடைச்சாளே என்னை மறந்துடுவான் ரஞ்சனா. அந்தளவு இந்த இடைப்பட்ட நாள்ல என்னை தள்ளி வச்சே பழகிட்டாங்க." என்றாள். 

   எது சொன்னாலும் இப்படி பேசுகின்றாளே என்று மஞ்சரியிடம் திரும்பி "என்னம்மா இப்படி பேசறா? நீங்க ஏதும் பேசலை" என்று கூறினாள். 
  
     மஞ்சரியோ "வேதனையும் வலியும் அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும் மா. நாம என்ன சொல்லறது." என்று ரஞ்சனாவிடம் பேசியவர். திரிஷ்யாவிடம் "எதுக்கோ நாங்க ஒருமுறை வந்து பேசட்டுமா? இது மாதிரி சாகறதுக்கு வந்தா அடிச்சி இழுத்துட்டு வந்து பேசி புரியவச்சி கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்களும் கொஞ்சம் புரிந்து நடங்கனு. 
   சாகற வரை போனதால அவங்களும் கொஞ்சம் பயந்து யோசிக்கலாம் இல்லையா." என்றதும் திரிஷ்யா மௌவுனமானாள். 

   எதற்கும் கடைசி முயற்சி இருக்கட்டுமே என்று தலையாட்டினாள். 
   நைனிகாவோ "பிச்சையெடுத்து அன்பை பெறுவதுக்கு நாம தனித்து நிற்கலாம். இது என்னோட அட்வைஸ். நான் வயசுல சின்னவ. அதோட என் தாட்ஸ் இப்படி தான். உங்களுக்கு போரடிக்கலாம்." என்று தோளைக் குலுக்கினாள். 

     ரஞ்சனாவோ "ஓ... மாடர்ன் தாட்ஸ் யுவதியே... நீங்க ஏன் சாகப் போனிங்க. எல்லாத்தையும் தூக்கி தூறப்போட்டு வாழ வேண்டியது தானே." என்று நைனிகாவிடம் வம்பு ஆரம்பித்தாள். 

     "ஏ.. உன்கிட்ட பேச விரும்பலை. என் பிராப்ளத்தை நான் கடைசியா சொல்லறேன். உன்னோடது சொல்லு இல்லை பாட்டி நீங்க சொல்லுங்க." என்று தனது பக்கம் வரும் திருப்பத்தை திருப்பி விட்டாள்.

     ரஞ்சனாவோ "எனக்கு நீ கேட்டு சொல்ல விருப்பமில்லை. அம்மா நீங்க சொல்லுங்க. அடுத்து நான் சொல்லறேன்." என்றாள். 

     மஞ்சரியோ தூக்கம் கண்ணை சுழற்றினாலும் மனதில் பாரம் இருக்க உறங்க மனமில்லை. அதனால் கூற ஆரம்பித்தார். 

       "நான் நல்லா வசதியா குடும்பத்துல பிறந்தவள். என்னை கல்யாணம் செய்தவரும் நல்ல வசதி." என்று உரைத்தார். 

  நைனிகாவோ "நீங்க பட்டு சேரி கட்டிட்டு இருக்கறதுலயே தெரியுது. ஏதாவது கல்யாண வீட்ல இருந்து வந்துட்டிங்களா?" என்று கேட்டாள்.

    "இல்லைம்மா... தினமுமே இப்படி சின்ன பார்டர் கொண்ட பட்டு சேலையே வீட்ல கட்டிக்கிறது தான் என் வழக்கம். கல்யாணமானதுலயிருந்தே இப்படி தான். சரிகையில்லாத சேலையை என் கணவர் கட்டவிட்டதில்லை. எங்கப்போனாலும் அந்த ஊர்ல ஒரு சேலை வாங்கிடுவார். அதுவும் பட்டு தான் வாங்குவார். ஆயிரம் இரண்டாயிரத்துக்கு பருத்தி பட்டு கட்டறது எனக்கும் பிடிக்கும். அவரோட ஆசைப்படி அவர் இறந்தப்பிறகும் என்னை இப்படி தான் கட்டணும்னு சொன்னார்  என்னிடம் பூ பொட்டை கூட தவிர்க்காதேனு சொன்னவர். அவருக்கு என்னை மங்களகரமா பார்க்க தான் பிடிக்கும். பொட்டு இல்லாம இருக்காதே மஞ்சரினு சொன்னவர். 

   எங்க இல்லறத்தோட இனிமைக்கு பிறந்தவங்க மூன்று ஆம்பளை பசங்க இரண்டு பெண்கள். எல்லாரையும் நிறைவா கல்யாணம் பண்ணி கொடுத்தோம். மனசு முழுக்க பேரன் பேத்தி என்று பார்த்து கண் நிறைவா இறந்தார். 
   நானுமே அதே நிறைவோட இறந்து போயிருக்கலாம். ஆனா இந்த பணம் என்ற மாயாவி இருக்கானே... அவனை பகிர்ந்து கொடுக்க ஆரம்பிச்சதுல முளைச்சது பிரச்சனை. 

  என்னதான் பணம் வீட்ல நிரம்பி வழிந்தாலும் போதும்னு மறுக்க இங்க யாருக்கும் மனசு வரலை. அதுக்கு பதிலா எனக்கு குறைவா கொடுத்துட்டிங்க, அவங்களுக்கு அதிகமா கொடுத்துட்டிங்க. எனக்கு வைர ஒட்டியாணம் வரலை, எனக்கு வைரமாலை வரலைனு குற்றம் சுமத்தி சண்டை வலுத்துச்சு. 

   என் கணவர் மகேந்திரன் இருந்தப்பவே சமமா பகிர்ந்துட்டு தான் போனார். ஆனா நிலமும் நகையும் காலத்துக்கு ஏற்ப மாறுதே. ஒரு ஏரியாவுக்கு இன்னொரு ஏரியாவோட வீட்டு மதிப்பு கூட குறைய வருதே. அதுல தான் பிரச்சனை முளைத்தது. 

    அதுக்கூட என்னவோ போங்கனு என் பேர்ல இருப்பதை மொத்தமா எழுதிட்டேன். 

   பணத்தை நகையை வீட்டுல வச்சிக்க ஆர்வமா இருந்த என் பொண்ணு பசங்களுக்கு இந்த கிழவி தேவைப்படலை. ஆளாளுக்கு அம்மாவை நீ வச்சிக்கோ நான் வச்சிக்கோனு பந்து மாதிரி உதைக்கறாங்க. 
   
     மருமகளோட குத்தல் வார்த்தையை வாங்கிட்டு ஒரு வாய் பருக்கை சாப்பிட முடியலை. சரி பசங்க மட்டுமா பெத்திருக்கோம். நம்ம மனசை புரிந்துக்கற இரண்டு பொண்ணுங்களையும் பெத்திருக்கோம். மாப்பிள்ளைகளுக்கும் சீர்வரிசை பாகப்பிரிவினையில ஒரு மகனா தானே பார்த்தோம்னு அங்க போய் நின்றா..... அங்கயும் மதிப்பில்லை. 
   
    எப்பவும் கொடுக்கற வரை தான் பெருமை. ஒன்னும் இல்லைனா அதுக்கு மரியாதையில்லைனு ரொம்ப தாமதமா புரிந்தது. 

    பேரன் பேத்திங்க எல்லாம் பக்கத்துல போனாலே 'ஒல்ட் லேடி' 'கிழம்' 'கிரானி கழுத்தருக்கும்' என் தலையை கண்டாளே ஒடறாங்க. 

    ஊட்டிவிட ஆசைப்பட்டு பேசினா பச் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதேனு டென்ஷன் பண்ணாதிங்க பாட்டினு கத்தறாங்க. இதோ இந்த பிள்ளை சொன்ன மாதிரி அவங்க தாட்ஸ் என் தாட்ஸ் ஒத்துவரலை.

   தனியா வீட்ல இருக்கறது என்னவோ சுடுகாட்டை விட மோசமா இருக்கு. வேலைக்காரங்க கூட வாழவா இந்த வீடு. அப்படியும் மனதை சாந்தப்படுத்தி இருந்தேன். இரவு எல்லாரும் போனதும் வெறுமை வருது. தனிமை இளமையில இனிமையா இருக்கலாம். ஆனா முதுமையில தனிமை ரொம்ப கொடூரம். யாராவது பேச்சு துணைக்கு இருக்கணும். வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சி பார்க்கவோ பகிர்வோ, ஏன் நடக்கற காலத்தை பகிர்ந்து பேச கூட யாராவது வேண்டும். ஒரு மனிதராவது இருந்தா நமக்கு இவங்க இருக்காங்கனு ஒரு இதம் உணரும். பையன் இல்லை... பொண்ணு இல்லை... பேரன் பேத்திகள் அவங்கவங்க வேலையில பிசி...
    
     என்னை அநாத ஆசிரமத்துல விடலாம்னு முடிவு பண்ணி கூடி பேசினாங்க. நானும் அப்படியாவது போய் நாலு மனுஷங்களை பார்க்க நினைச்சேன். ஆனா இத்தனை பேர் இருந்தும் எனக்கு ஆசிரமம் போகணுமானு ஒரு பக்க வேதனை. ஒரு குழந்தைகளை கூட பாசத்தோட வளர்க்கலையானு கவலை. எழுபது வயசு பிறக்க போகுது. இதுக்கு மேல வாழணுமா? இன்னமும் இருந்து என்ன பண்ணறது? என்ற வெறுமை. 
   
    ஒரு வேளை இதெல்லாம் பழகி ஏற்கற மனபக்குவம் இருந்திருந்தா நான் சாக முடிவெடுத்திருக்க மாட்டேன். எனக்கு இந்த தனிமை புதுசு. ஒதுக்கல் புதுசு. மனபக்குவம் இல்லை." என்றதும் நைனிகா சிரித்தாள். 
  
  ரஞ்சனா முறைத்து பார்த்து திரும்பினாள். திரிஷ்யாவும் இவளிடத்தில் இருக்கின்றோம்  என்பதால் அதிக நக்கல் புரிகின்றாளே என்ற பார்வையை வீசினாள்.
  
   நைனிகாவோ "சாரி.. சாரி.. எழுபது ஆகப்போகுது உங்களுக்கு பக்குவம் இல்லைனு சொல்லறிங்க. வாழ்க்கையில எத்தனை இன்பதுன்பம் பார்த்திருப்பிங்க. அனுபவமும் பக்குவமும் வரலையா?" என்றாள். 

    "எல்லாருக்கும் எல்லா பக்குவமும் அனுபவமும் கிடைக்காதுமா. ஒவ்வொருத்தருக்கு சில அனுபவங்கள் வராமலே இருக்கலாம். அது திடீரென நேரும் போது தடுமாற்றம் வரும். 

  அதுவும் என்னை மாதிரி கிடைச்சதை வாங்கி நல்லா வழ்ந்தவங்களுக்கு சின்ன சின்ன வருத்தங்கள் கூட பெரிய விஷயம் தான். அனுபவங்கள் வலி எல்லாம் குறைவான பக்குவத்துல தான் அனுபவிச்சியிருப்போம். 
  
    எதையும் இலகுவா எடுத்துக்க இப்ப மாதிரி எங்களுக்கு மனசுவரலை. ஒருவேளை இனி தான் அந்த பக்குவத்தை நான் உணர்ந்து கடைப்பிடிக்க இந்த கஷ்டத்தை கடவுள் தந்தாரோ என்னவோ. ஆனா மனசு சட்டுனு கஷ்டத்தை ஏற்க முடியலை. இப்படியே செத்தா என்னனு தோணவும் கடலை நோக்கி வந்துட்டேன்." என்று கூறினார். 

  மஞ்சரி பாட்டி அழவில்லை. மாறாக திடமாக கூறிமுடிக்க, பக்கத்தில் ஏதோவொரு அறையில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது.

   "ஓமை காட்... விடிஞ்சிடுச்சா." என்று நைனிகா பதறினாள். 
   
   ரஞ்சனா கையில் கட்டிய கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தரை என்று காட்டியது. 

    "விடிஞ்சுது." என்று ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்தனர். 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 

   




      

Comments

  1. ம்.... அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. அனுபவம் நமக்கு வழிநடத்தும்.

      Delete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1