பஞ்ச தந்திரம்-7
பஞ்ச தந்திரம்-7
அப்பாடி நான் தப்பிச்சேன் என்ற உணர்வில் ரஞ்சனா இருக்க, நைனிகாவோ, "பச் இப்ப பிரஷ் பண்ணி குளிச்சி காபி குடிக்க போகணும். சாப்பாடும் அங்க தான். நான் போய் சாப்பிடுவேன்... நீங்க எப்படி?" என்று நைனிகா சிரித்தாள்.
"நேத்தே செத்திருந்தா ஆவியா அலைய வேண்டியவ. இன்னிக்கு திங்க அலையுற.
உன்னையெல்லாம் சாக போடினு விட்டு தொலைச்சிருக்கணும்." என்று ரஞ்சனா பேசவும் நைனிகாவோ பேஸ்ட் பிரஷ் என்று பல் தேய்க்க ஆரம்பித்தாள்.
மடமடவென குளித்து முடித்து தலைவாறி ஹேண்ட் பேக்கை எடுத்து, யாரும் கத்தி பேசாதிங்க. நான் வெளியே லாக் பண்ணிட்டு ப்யூ மினிட்ஸ்ல வந்துடுவேன்." என்று நைனிகா அவள் பாட்டிற்கு வெளியேறினாள்.
கடலில் தொடைவரை உவர்ப்பு நீர் மூழ்கும் ஆழம் வரை சென்று திரும்பியதால் லேசாய் கசகசப்பு உணரவும் "ஒரு மாதிரி பிசுபிசுனு இருக்கு. நானும் டூ செகண்ட்ல குளிச்சிட்டு வந்துடறேன்." என்று ரஞ்சனா குளிக்க தயாராக கூறினாள்.
"குளிச்சிட்டு எதை போட்டுக்கறதாம்" என்று திரிஷ்யா கேட்கவும் "அதெல்லாம் அந்த பிசாசோட டிரஸ் ஏதாவது பத்தும். இல்லைனா கூட டைட்டா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்." என்று குளிக்க சென்றாள்.
திரிஷ்யாவோ உறங்கும் தனுஜாவை வருடியபடி கண்டாள்.
"சின்ன பொண்ணு.. இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனை இருக்கும் அம்மா. அம்மா அப்பா இல்லையோ?" என்று மஞ்சரியிடம் கேட்டாள்.
மஞ்சரியோ, "தெரியலைமா இப்ப எல்லாம் மொபைல் தரலைனு கூட குழந்தைங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணறாங்க. தூங்கி எழட்டும் பொறுமையா கேட்டு என்ன பிரச்சனைனு தெரிந்துக்கலாம்." என்றார் மஞ்சரி.
திரிஷ்யாவுக்குள் உதய் கூட போன் தரவில்லை என்றால் காட்டு கத்தல் கத்துவான். அவனுக்கும் இதே வயது தான் என்ற தாய்மை தவித்திட துடித்தாள்.
நைனிகாவோ வுமன்ஸ் ஹாஸ்டலில் உள்ள கேன்டீன் பக்கம் வந்து, "கலாம்மா... பசிக்குது... காபி ப்ளிஸ்.." என்று கூறினாள்.
கலாம்மாவோ "நேத்து ஏதோ உம்முனு இருந்த... கூப்பிட கூப்பிட சாப்பிடாம போன. இன்னிக்கு காலையில எல்லாரும் போனதும் வந்து நிற்கற." என்று கண்டிப்பாய் கேள்வி எழுப்பினர்.
நைனிகா எப்படி கூறுவாள்? தருணால் நேற்று ஏற்பட்ட மனகசப்பிற்கு துளி உணவும் இறங்கியிருக்கிது. இறந்திட தான் துடித்தது மனம்.
ஆனால் தன் வலியை விட பிறர் வலியை கேட்டால் தன் வலியெல்லாம் பெரிய வலியே இல்லையென்று தோன்றிடுமாம். அப்படி தான் நைனிகா தவறாய் எண்ணிக் கொண்டாள்.
"அக்கா அக்கா... கலாக்கா இந்த பிளாஸ்க்குல டீ ஊத்தி கொடேன். உனக்கு ட்வென்ட்டி ரூப்பீஸ் தர்றேன்." என்று பணத்தை நீட்டினாள்.
"ஏன்... டீயை குடிச்சே உயிர் வாழப்போறியா?" என்று கேட்டாள்.
"இல்லைக்கா.. நேத்து சாப்பிடலையா... பயங்கற பசி. அதான் எக்ஸ்ட்ராவா காலேஜ் கிளம்பறதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வயிற்றுக்கு நிரப்பிடலாமேனு" என்று பிளாஸ்கை தந்தாள்.
கலா மறுபுறம் சென்று டீ ஊற்றவும் அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லையென்றதும் சப்பாத்தியை மொத்தமாய் எடுத்து கைப்பையில் திணித்து கொண்டாள்.
கலா டீயை தரவும் அதனை வாங்கிக் கொண்டு, "தேங்க்ஸ் அக்கா." என்று சப்பாத்தியை கேட்க அவளுக்கு எடுத்து தட்டில் வைத்து குழம்பை தரவும் மடமடவென சாப்பிட ஆரம்பித்தாள். தன்னை போல அங்கே நால்வர் பசியோடு இருப்பார்களே என்ற நல்லெண்ணம்.
நேத்து நைட் தானே சாப்பிடலை. இந்த பொண்ணு என்ன பேய் மாதிரி சாப்பிடுது என்பது போல கலாம்மா பார்க்க, அசட்டுதனமாய் சிரித்து வேகமாய் சாப்பிட்டு நழுவினாள்.
வேகமாய் தங்கள் அறைக்கு வந்து சாவி போட்டு திறக்க ஆரம்பித்தாள்.
கதவை திறந்ததும் ரஞ்சனா கண்ணாடியில் அப்படியிப்படி தன்னை அலங்கரித்து இருப்பதை காணவும், வேகமாய் கதவை தாழிட்டாள் நைனிகா.
"ஹௌ தேர் யூ. இது என்னோட டிரஸ். என் பர்மிஷன் இல்லாம யூஸ் பண்ணிருக்க?" என்று நைனிகா வந்தாள்.
"ஹலோ... நீ குளிச்சிட்டு நீட்டா டிரஸ் பண்ணிட்டு இருக்க. நாங்க குளிக்க வேண்டாமா? நீட்டா இருக்க வேண்டாமா?" என்றதும் மஞ்சரியோ "இப்படி கத்தினா வெளியே கேட்கும்." என்றதும் "எனக்குமே இந்த சேரி இரிட்டேட்டா இருக்கு." என்றாள் திரிஷ்யா.
"உங்களுக்கு இல்லாததா அக்கா. இந்தாங்க... எல்லாமே மாடர்ன் டிரஸ் ட்ரை பண்ணுங்க." என்று கப்போர்டை திறந்தாள்.
"அவ அக்காவா.. அவயென்ன விட சின்ன பொண்ணு. அவளுக்கு 27 தெரியுமா?" என்று ரஞ்சனா பொரிந்தாள்.
"நீ அப்போ ஆன்ட்டியா... இட்ஸ் ஓகே. சின்ன பொண்ணோ பெரிய பொண்ணோ அவங்க அக்கா. நீ ஆன்ட்டி. அவங்களுக்கு ரெஸ்பெக்ட் பண்ணுவேன் பட் உன்னை.. சான்ஸேயில்லை." என்று தோளைக் குலுக்கினாள்.
"உன்னை..." என்று ரஞ்சனா கத்த, தனுஜா "மம்மி" என்று எழுந்தாள்.
அனைவரும் திரும்பி தனுஜாவை பார்க்க, "யார் உன்னோட மம்மி? எங்கயிருக்காங்க?" என்று நைனிகா கேட்டாள்.
"அது வந்து.. மம்மி.. மம்மி நினைவு வந்துடுச்சு." என்று தேம்பினாள்.
"ஹே... நீ ஏன் சாக போன?" என்று நைனிகா அதட்டவும் தனுஜா பயந்து போனாள்.
மஞ்சரியோ, "எடுத்ததும் சத்தமா பேசாதே மா. குழந்தை பயந்திடுது." என்று பக்குவமாய் பேசினார்.
"இவளுக்கு இதே வேலை அம்மா." என்று கூறவும், ரஞ்சனாவோ முதல்ல பல் விளக்கட்டும்" என்றாள்.
"ஆமா யாரெல்லாம் பிரஷ் பண்ணிட்டிங்க. காபி குடிக்க வாங்க" என்று பிளாஸ்கை எடுத்து டம்ளரில் ஊற்றினாள்.
ரஞ்சனா மேம்போக்காய் பார்க்க, முதலில் மஞ்சரி திரிஷ்யா குடித்தனர்.
பிறகு பல் விளக்கி முடித்து வந்த தனுஜாவுக்கும் ஊற்றி குடித்து முடிக்கவும், குடித்து முடிக்க ரஞ்சனாவோ எட்டி எட்டி பார்த்தாள்.
"அதெல்லாம் மீதி இருக்கு. வந்து குடிங்க ஆன்ட்டி" என்று வம்பிழுத்தாள்.
ரஞ்சனாவோ பிடுங்கி குடித்தாள். தனுஜா பழக்கமில்லாத டீயை குடித்து திரிஷ்யாவையும், ரஞ்சனாவையும் ஏறிட்டாள்.
கஷ்டப்பட்டு குடிச்சிடு பசிக்கும்ல" என்று ரஞ்சனா கூற, திரிஷ்யாவும் "ஆமாடா.. சாப்பிடுடா செல்லம்" என்று கொஞ்சினாள்.
"செல்லக்குட்டி டீயை குடிச்சிட்டு இதை சாப்பிடுங்க" என்று சப்பாத்தியை மொத்தமாய் எடுத்து வைத்தாள்.
சப்பாத்திக்கு ஜாம் தடவி வைக்க, மற்றவர்களும் அப்பொழுதே ஒவ்வொன்றாய் எடுத்து சுவைத்தனர்.
சப்பாத்தி காலியாகவும், "கல்லு மாதிரி இருக்கு ஆனாலும் பசில தெரியலைல. இதே மத்த நாளா இருந்தா இதை தொட்டு கூட பார்க்க மாட்டேன். சரி அடுத்த இரண்டு பேர் சொல்லுங்க." என்று அவசரப்படுத்தினாள்.
மஞ்சரியோ "குழந்தை சாப்பிடட்டும் மா." என்றார்.
"அதுக்குள்ள நான் குளிச்சிட்டு வந்துடலாம் ஆனா எனக்கு டிரஸ் இருக்காது." என்று கவலைப்பட்டார்.
"பாட்டி... உங்க வசதிக்கு பட்டு புடவை இருக்காதே... பட் சுடிதார் போடுவீங்களா சொல்லுங்க. பிகாஸ் இங்க இருக்கறவள் கொஞ்சம் பேட்..(fat) ம்ம்.. நீங்க அப்படியொன்னும் குண்டு கிடையாது. அவளோட சுடி வசதியா இருக்கும்" என்று ஸெல்பை கலைத்து எடுத்து கொடுக்க, குளிச்சிட்டு வந்துடறேன் டா." என்று புகுந்தார்.
மஞ்சரி குளித்து முடித்து வரவும் கடைசி சப்பாத்தியை தனுஜா விழுங்கினாள்.
"சொல்லு... உங்க அம்மா அப்பா எங்க? ஏன் சாக வந்த? இந்த வயசுல என்ன எண்ணம்?" என்று மஞ்சரி தன்மையாக கேட்டார்.
திரிஷ்யா ரஞ்சனா நைனிகா என்று வரிசையாய் கண்களை உருட்டி பார்த்தாள். "எங்கப்பா நான் பிறக்கறப்பவே இறந்துட்டதா அம்மா சொல்வாங்க. அதனால அம்மா மட்டும் தான். நானும் அம்மாவும் ரொம்ப அட்டாச். பட் இப்ப அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை... இல்லை இல்லை.. அம்மாவும் செத்துட்டாங்க. ஆஹ் செத்துட்டாங்க. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியலை. இனி எனக்கு அம்மாவா யார் இருப்பா? என்று அழுதுக்கொண்டு கேட்டாள்.
"இதுக்கு தான் சாகப்போனியா?" என்று மஞ்சரி கேட்டதும், எனக்குனு யார் இருக்கா?" என்று தேம்பினாள்.
திரிஷ்யா தனுஜாவை அணைத்து கொண்டு, "அழக்கூடாது... இதுக்கெல்லாமா அழறது. இங்கப்பாரு.. யாருமில்லைனா என்ன? இந்த நிமிஷம் இங்க மஞ்சரி பாட்டி இருக்காங்க. நைனிகா அக்கா இருக்கா. அம்..அம்மாவா... நா..நான் இருக்கேன். திரிஷ்யா அம்மா." என்று அணைத்து கொண்டாள்.
நைனிகாவோ நிகழ்வதை கண்டு உதடு வளைத்து அதிசயமாக கண்டாள். ரஞ்சனாவோ மஞ்சரிம்மா தோளில் முகம் புதைத்து தனுஜாவை நோக்கினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
அவரவர் கவலை
ReplyDelete