பஞ்ச தந்திரம்-15
பஞ்ச தந்திரம்-15
மஞ்சரியோ அந்த பெரிய வீட்டில் ஹாலில் அமர்ந்து, "ஏன் பேசக்கூடாது. நீங்க இல்லைனா நான் நேத்தே கடல்ல விழுந்து செத்து பிணமா மிதந்திருப்பேன் தானே?
உண்மையில சாகப்போற எனக்கு இது மறுஜென்மம்.
முன்ன அன்பான மனைவியா, அப்பாவியான அம்மாவா இருந்துட்டேன்.
இப்ப இனி உங்களோட வாழ்ந்து நல்ல மனிஷியா இருக்க போறேன். இதுவரை நான் நல்லதுனோ உதவினோ செய்ததில்லை. பிறந்த நாள், கல்யாண நாள் என்றால் ஆசிரமத்துக்கு பணம் தந்திருக்கோம். சாப்பாடு போட்டிருக்கோம். ஆனா அதெல்லாம் காசிருக்கறவன் யாரும் செய்வாங்க. இனி நான் வாழறது தான் நான் எப்படிப்பட்டவள்னு காட்டும்.
சொந்த பேரன் தப்பு பண்ணியிருந்தும், தப்பை தப்புனு சொன்னவளா இருந்துக்கறேன். இரத்த பந்தம், பாசம்னு முடங்கலை. சொத்து பத்துனு பார்க்கறவங்களை உதாசினம்படுத்தி, என் பேரனால பாதிக்கப்பட்டவளை நான் சப்போர்ட் பண்ணி வாழ்வேன்." என்று உரைக்க சட்டென நைனிகா பாட்டியை இறுக அணைத்தாள்.
"பாட்டிம்மா... நிஜம் தானே. எனக்கு அன்பு செலுத்தி, கூடவே இருப்பிங்களா? நான் தப்பு செய்தா அதட்டணும். அதே நேரம் என் நேரத்தை பகிர்ந்துக்கணும்" என்று கன்னம் பிடித்து ஆட்டினாள்.
"நிச்சயமா.'' என்றவர் அதற்குள் பணியாட்கள் இல்லாது நைனிகா ரஞ்சனா திரிஷ்யா சமைக்க ஆரம்பித்தார்கள்.
ரஞ்சனா மட்டும் ஓதுங்க, தனுஜா மற்றவர்களுக்கு உதவினாள்.
திரிஷ்யாவோ தனுஜாவை தூக்கி சப்பாத்தி உருட்டியவள் அவளுடனே விளையாடினாள்.
தனுஜா சாப்பிட்டு உறங்கவும், ரஞ்சனாவிடம் வந்து, "ஏன் ஆசிரமத்துல விடணும்னு யோசிக்கற? என்னிடம் குழந்தையை கொடுக்கறியா? நான் அன்பா பார்த்துப்பேன். எனக்கு தனுஜாவை பார்க்க பார்க்க உதய் நினைவு கூட வருவதில்லை." என்று கூறவும், ரஞ்சனாவோ திடுக்கிட்டாள்.
"உனக்கு உதய் இருக்கான் திரிஷ்யா. அதோட நீ நினைச்சா மறுமணம் பண்ணி வாழலாம். இல்லையா... வேதாந்திற்கு ஒரு வாய்ப்பு கொடு. இன்னமும் உங்கப்பா அம்மா வந்து சமரசம் பண்ணலையே." என்று மொழிந்திடவும் திரிஷ்யாவோ விரக்தியாய் சிரித்தாள்.
"இன்னமும் நான் வேதாந்தோட வாழ்வேன்னு எப்படி நம்பற? என்னோட உடை நடை பேச்சு வச்சி, இவளுக்கு தைரியம் எல்லாம் இல்லைனு நினைச்சிட்டியா.
உண்மை தான். எனக்கு முன்ன தைரியம் இல்லை. இதே மாதிரி முன்ன என்றால் பயம் இருக்கும். நம்ம பிள்ளையையே நம்மளால் வளர்க்க முடியாது. கணவரோட வீட்ல வேலைக்காரியாவது இருந்து காலத்தை ஓட்டிடலாம். இப்படி தான் யோசித்துயிருப்பேன். வேலைக்காரியா..." என்று அலட்சியமாய் சிரித்தாள்.
"இப்ப முடிவெடுக்கற பக்குவம் வந்துடுச்சு ரஞ்சனா. உதய் நிச்சயம் வேதாந்த் கூடவாழ மாட்டேன். டிவெர்ஸ் வாங்கறதா முடிவு பண்ணிட்டேன். அப்பா அம்மா யார் இடையில வந்தாலும் முடிவுல மாற்றமில்லை. உதய் என்னோட வந்தா அவனோட வாழ்வேன். இல்லைனா தனியா இருந்துப்பேன்.
அதனால தான் தனுஜாவை கேட்டேன்." என்று உறங்கும் குட்டி உயிரை உச்சி முகர்ந்தாள்.
"சரி டிவோர்ஸ் வாங்கினாலும் உதய் கிடைக்காட்டியும் நீ ஒரு லைப் வாழலாமே? ஏன் தனுஜாவோட நீ அடைப்படணும். மறுமணம் செய்து வாழ்ந்து காட்டு. உனக்கென்ன என் வயசு கூட இல்லை. இருபத்தியேழு வயசு எல்லாம் முதல் கல்யாணம் பண்ணறாங்க." என்று ரஞ்சனா தெளிவுப்படுத்தினாள்.
மஞ்சரியும் அதை ஆமோதிக்க, "பட்டது போதும் அம்மா. என்னால வாழமுடியுமானு தெரியலை. ரஞ்சனா யோசித்து தனுஜாவை கொடுக்கறதா இருந்தா கொடுங்க. நான் பத்திரமா பார்த்துப்பேன்." என்று புன்னகை நவில்ந்தாள்.
அன்றைய இரவு நிம்மதியாக சாப்பிட்டு உறங்க சரியாக இருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் நைனிகா பேரண்ட்ஸ் வந்து கூப்பிட இருவரிடமும் வரமறுத்து போக கூறினாள்.
அவள் தந்தை அடிக்க கை ஓங்க, "எனக்கு தேவையான நேரத்துல தைரியம் சொன்னிங்களா? அன்பு காட்டினிங்களா? பசிக்குதா என்னாச்சு உடம்பு சரியில்லையானு என் முகம் பார்த்து கேட்டிங்களா? சரி ஹாஸ்டல் சேர்த்திங்க நீங்களா போன் பண்ணி சாப்பிட்டியா? எப்படி படிக்கற? கொடுக்கற பணம் போதுமா? ஒழுங்கா செலவு பண்ணறியா? எங்களை மிஸ் பண்ணறியா? ஏதாவது ஏதாவது நீங்களா பேசியிருக்கிங்க?
எப்பவும் போன் பண்ணினா பிஸி ஐ டாக் டூ லேட்டர், இந்த வார்த்தையில மட்டும் ஒத்துமையான தம்பதிங்க நீங்க. எந்த முகத்தை வச்சி எனக்கு அறிவுரை சொல்ல வந்துட்டிங்க.
இப்ப கூட மகளுக்கு என்ன பிரச்சனையோ இத்தனை நடந்திருக்கு சூசைட் பண்ணிட்டா என்ன பண்ணறது. எதுவும் யோசிக்கலை.
உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதையே மறந்துட்டதா வாழறிங்கள்ல... உங்களுக்கு நான் பிறந்தவனு என்பதையும் மறந்துடுங்க. நான் எக்கேடோ கெட்டு ஒழியறேன். உங்க பிஸினஸ் உங்க பாட்னர் கவனிங்க. பாட்னர் என்று சொன்னது. நீங்க இன்னொரு மனைவியோட வாழறதும், அவங்க இன்னொரு கணவனோட வாழறதையும் தான். கெட்லாஸ்ட்" என்று இருவரையும் விரட்டினாள்.
நைனிகா தந்தை விறுட்டென எழுந்து சென்றிட, அன்னையோ "இன்டிபெண்டா சுதந்திரமா வாழு. ஆனா இனி இதே தவறை செய்யாத." என்று மட்டும் கூறிவிட்டு மற்ற மூவரை கண்டு சென்றார்.
அதன் பின் கல்லூரியில் அவப்பெயர் வந்ததால் டிசி கொடுக்கும் அளவிற்கு சென்றது. மஞ்சரி ரஞ்சனா தான் கஷ்டப்பட்டு பேசி நைனிகாவை அதே கல்லூரியில் படிக்க கேட்டு கொண்டார். அதன் காரணமாக கல்லூரியில் படிப்பு தடைப்படவில்லை. ஆனால் நட்பு வட்டாரங்கள் அப்படியே கழண்டு கொண்டது.
நைனிகாவை கண்டால் பெண் மாணவிகள் ஒதுங்கி போக, ஆண் மாணவர்களோ நூல் விட்டு பார்த்தார்கள்.
நைனிகா மாணவர்களை கடக்கும் போதெல்லாம் "மச்சி நீ அந்த வீடியோ பார்த்தியா? செமயை இருந்ததுடா." என்று கேலியோடு சீண்டுவார்கள்.
அதையெல்லாம் ஆசிரியரிடம் புகார் செய்ய வந்தால் பெண் ஆசிரியையோ "நீயா இழுத்து கொண்டது இப்படி தான் பேசுவாங்க." என்று இவளையே திட்டினார்கள்.
இவர்களாவது பரவாயில்லை. ஆண் ஆசிரியர்களோ இது தான் சாக்கென்று அவள் மேனியில் கை வைத்து பேசவும் தட்டிவிட்டு நைனிகா கடந்தாள்.
நைனிகா தினம் தினம் முள் மஞ்சத்தில் நடக்க பழகினாள்.
மஞ்சரியோடு நைனிகா இருக்க தினமும் நடப்பையை பகிர்ந்தாள். முதியவர் அவரோ தெம்பூட்டுவார்.
---
திரிஷ்யாவுக்கோ கோர்ட் கேஸ் என்று அலையவே நேரம் போனது. அம்மா அப்பா எல்லாம் எத்தனையோ அறிவுரை வாறி இறைத்தனர்.
எல்லாம் அநாமத்தாக போனதே தவிர கேட்கவில்லை.
குழந்தையை மட்டும் கேட்டு கோர்ட்டில் மல்லுக்கட்டினாள். ரஞ்சனா தான் கூடவே உதவி புரிந்தாள்.
கோர்ட் உதயின் வாய் வார்த்தையை கேட்டு முடிவு வழங்கியது.
---
இதற்கிடையே சுசிலாவுக்கு செக்கப்பில் எயி!!ஸ் இருப்பதாக கூறி, அது குழந்தைக்கு வராமல் தடுக்க மாத்திரை வழங்கவும் தான் ஜனார்தன் மீது பாய்ந்தாள்.
அப்பொழுது கூட ரஞ்சனா மீது பழிபோட முனைந்தான்.
சுசிலாலோ பளாரென மருத்துவ வளாகத்தில் அறைந்தாள்.
அந்த பொண்ணு ரஞ்சனா எப்படின்னு எனக்கு தெரியும் டா. ஏதோ முன்ன தப்பு செய்தியேனு ஊருக்கு பயந்து அந்த பொண்ணு தான் உன்னை மயக்கினானு பரிந்து பேசினேன். எனக்கு அப்பவே தெரியாதா? நீ தான் எப்பவும் அவபோறவர இடத்துல வலிந்து போய் பேசுவ. அவ ஒதுங்கி போவா" என்று கூறவும், இரு பெண்களின் வாழ்வை சுழியம் ஆக்கியவனை அந்த தெருவே சந்தி சிரிக்கும் வகையில் தான் சாபமிட்டு மண்ணை இறைத்து கிளம்பினாள்.
---
தனுஜாவோ மஞ்சரி பாட்டி வீட்டிலிருந்தபடி பள்ளியில் பயின்றாள். அன்னை எப்படியும் தன்னை விட்டு பிரிவதாகவே பேச பேச, ஒரு கட்டத்தில் ஏதோ படத்தில் புற்றுநோயால் இறப்பதாக காட்ட, அன்னையும் அப்படி மடிய போவதாக குழந்தை மனம் முடிவெடுத்து கொண்டது.
தினம் தினம் அன்னையின் கதையை இனி யார் கூறுவார்களோ என்ற ஏக்கத்தோடு உறங்குவாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment