நன்விழி

                   

                                                        நன்விழி
அத்தியாயம்-1


போலிஸ் வண்டிகள் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்தது.

    நந்தவனம் குடியிருப்புக்குத் தடுப்பு போட்டு சுற்றி பாதுகாப்புக்குப் போலிஸ்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தனர்.

     குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செய்தியாளர்களும், வீடியோ பதிவாளர்களும் தங்கள் பத்திரிக்கைக்குச் செய்தி சேகரிக்க ஆவலாய் நின்றிருந்தனர்.

    ஒலிப்பெருக்கி கேட்டு உயர் அதிகாரி நெல்சன் காத்திருந்தார்.

    "எந்த இயக்கம் என்று தெரிஞ்சுதா? என்ன கோரிக்கை வைத்திருக்காங்க." என்று உயர் அதிகாரி நெல்சன் தனக்குக் கீழே பணியை மேற்கொள்ளும் விமல் என்ற போலிஸிடம் கேள்வியைக் கேட்டு முடித்தார்.

     "சார் விமானத்துல இருந்து சில பேர் சந்தேகப்படும் படிய வந்தாங்க. அவர்களை ரமேஷ் பின் தொடர்ந்து வந்தார். அந்த ஆறு பேரும் இங்க விழா நடக்கற பில்டிங்ல வந்து மறைய, இப்ப இந்த நந்தவனம் குடியிருப்பு ஆட்களைப் பிடிச்சி வைத்துக் கொண்டு மிரட்டறாங்க சார். இங்க வந்ததை நம்ம ஆட்கள் கண்டுபிடிச்சி பின் தொடர்ந்து நமக்கும் அலார்ட் பண்ணியதில்  வகையா மாட்டியதும் அவங்க தப்பிங்க வழி தேடறாங்க." என்றான் விமல்.

    "என்னயா... விமானத்துல இருந்து இறங்கறப்பவே பிடிக்கக் கூடாதா என்று தனது தொப்பையில், சட்டையை நொடிக்கு  ஒருமுறை இன்(in) செய்து பேசினார்.

    "அங்க சந்தேகம் ஏற்பட்டதில தான் சார் பின் தொடர்ந்து வந்துயிருக்காங்க." என்று விமல் பணிவாய் பதிலளித்தார்.

     "அந்த ஸ்பீக்கரை (ஒலிப்பெருக்கியை) கேட்டேனே ரெடியா..?" என்றதும் இந்தாங்க சார் என்று மற்றோரு காவலாளி எடுத்து நீட்டினான்.

     அவர் வாங்கிப் பேச ஆரம்பிக்கும் முன்னவே, ஸ்பீக்கர் இரைச்சலில் அலறியது. ஆனால் அது நெல்சன் வைத்திருந்தவை அல்ல.

    நந்தவனம் குடியிருப்பு ஆண்டு விழாவிலிருந்து ஒலிப்பெருக்கியில் குழந்தை அழும் சத்தமும், பெண்கள் அலறும் சப்தமும் கேட்டது.

    "என்ன கேட்டுச்சா...? எங்களுக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை. நாங்க இங்கிருந்து போகணும். அவ்ளோ தான். அப்படிப் பண்ணாம எங்களை  பிடிக்க முயற்சி செய்தா... இங்க எத்தனை பேர் இருக்காங்கனு இந்நேரம் தெரிஞ்சு வைத்திருப்பிங்க அத்தனை பேர் உயிரும் ஒவ்வொன்றா போகும். இப்ப எங்களைக் கண்டுபிடிச்சுப் பின் தொடந்த வந்த ரமேஷ் என்ற போலிஸ் சேம்பிளுக்கு அனுப்பறோம்." என்று முடித்தான்.

     "ஹலோ... ஹலோ... இங்க பாரு . ஒரு உயிரும் ஆபத்து வரக்கூடாது. இன்க்ளுடிங் ரமேஷ் சேர்த்து தான்." என்ற பேச்சுக்கு மதிப்பில்லாமல் அந்தக் குடியிருப்பு வாசிகளில் இருவர் கண்ணீரோடு வெளியே ரமேஷை வைத்து விட்டு, காப்பாற்றாமல் வேடிக்கை பார்க்கறிங்களே என்பது போலப் பார்த்து சென்றனர்.

     நெல்சனோ "ரமேஷ்க்கு என்ன ஆச்சுனு பாருங்க." என்றார்.

     "இந்தக் குடியிருப்பு பகுதியில எத்தனை குடும்பம் இருக்காங்க? குடும்பத்துக்கு எத்தனை பேர்? அந்த ஆண்டுவிழா நடக்கிற ஹால் ஓட்டி என்னென்ன வழியிருக்கு? இதெல்லாம் தெரியணும். தெரிஞ்சவங்களை  வந்து பார்க்க சொல்லு" என்று கட்டளையிட்டவர் ரமேஷை பார்த்தார்.

    உயிர் ஓட்டி உள்ளது. தற்போது அங்கே எப்படிப்பட்ட நிலையென்று கேட்டால் பதிலளிக்கும் நிலையில் ரமேஷ் இல்லை. அதனால் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு செல்ல வெறும் பார்வையாளராக மட்டுமே நெல்சன் இருந்தார்.

     இங்கு நந்தவனம் ஆண்டு விழா நடந்து கொண்டிருக்கும் இடமோ அலறல் சத்தம் அதிகமாகக் கேட்டதும், அதில் தலைவனாக ஸ்டீபனோ, "சத்தம் போட்டிங்க அவங்களைத் தான் அடுத்து கொன்று வெளியே போடுவேன். அமைதியா இருங்க." என்றவன் தன் ஆட்களில் மூவரை பாதுகாப்புக்கு கன்னோடு வைத்து விட்டு, மற்ற மூவர் தனியாக இந்த இடம் விட்டு எப்படிப் போக என்பதாய் கலந்து ஆலோசித்தனர்.

     ஸ்டீபனோ, "தோராயமா நாற்பது பேருக்கு மேல இருக்காங்க. அதனால கொஞ்சம் போலிஸ் யோசிக்கும். எப்படியும் வண்டி அரேஞ்ச் பண்ண செய்வாங்க. என்ன இங்கிருக்கறவங்களைப் பாதிக்கு அனுப்ப சொல்ல வாய்ப்பு இருக்கு." என்று கூறவும்,

    "சே வகையா மாட்டிக்கிட்டோம்னா. இப்படிச் சாதாரணமா மாட்டுவோம்னு நம்ப முடியலை." என்று மதன் என்பவன் கடுப்போடு மொழிந்தான்.

    "ஸ்டீபன் இப்ப நமக்கு வழியில்லை. இந்தபக்கம் தான் தப்பிக்க முடியும். எப்படித் தப்பிக்க வழி சொல்லு." என்றான் முகமது.

    "என்ன பண்ணறது. போன் பண்ணி பாஸிடம் கேட்கணும். எப்படியும் தப்பிக்கணும். முதல்ல நாம யாருனு இவங்களுக்குத் தெரியாம மூவ் பண்ணணும்" என்று கண்ணாடி வழியாக மறைந்து நின்று தரை தளத்தில் பார்வை பதித்தான்.

      அங்கிருந்தனரோ துப்பாக்கியின் குறிக்கு பயந்து அஞ்சி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அன்று ஆண்டு விழா என்பதால் இருக்கைகள் வரிசையாக இருக்க அதில் அமர்ந்திருந்தனர்.

    நந்தவன குடியிருப்புக் காம்பவுண்டில் இருபது வீடுகள். தனிதனியான லக்ஸரி வீட்டில் வாழ்வதால் எல்லாரும் புழங்கும் விதமாக மூன்று தளம் கொண்ட பில்டிங் நடுநாயமாக இருக்கும்.

முதல் தளம் குழந்தைகள் விளையாடுவதற்கென்று திடல் அமைத்து இருப்பார்கள். அடுத்து அந்தக் குடியிருப்போர் ஜிம் ஒர்க்அவுட் செய்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும்.

  அடுத்த மேலே இருக்கும் தளம் இதோ ஆண்டு விழா கொண்டாடும் இடம். மாதத்தில் கூட்டம் வைத்து பேசவும், பிறந்தா நாள் கொண்டாட்டம் மற்றும் இது போன்ற விழா நடைப்பெறவும் பயன்படுத்துவார்கள்.
 
     இன்று அப்படி விழா கொண்டாட ஆரம்பித்துச் சாப்பிட்டுப் பாதிப் பேர் சென்ற நேரம் இந்த ஆறு பேர் வேகமாக ஓடி வந்து கதவை தாழிட்டு துப்பாக்கி வைத்து மிரட்ட ஆரம்பித்தனர்.

    துரத்தி வந்த ரமேஷ் என்ற போலிஸை கண் எதிரில் ஒருவன் கத்தி வைத்து சில பாகத்தில் கீறி உயிரை மட்டும் விட்டு வெளியே போட்டு விட்டார்கள்.

    நேரில் கண்டும் பயப்படாமல் இருக்க முடியுமா? சப்தமும் ஒடுங்கி அமைதி காத்தனர்.

     "என்னாச்சு நன்விழி?" என்று நித்திஷ் கேட்டு முடித்தான்.

      "ஒன்றுமில்லை நித்திஷ்... நாள் நெருங்குதே... அதான். கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. தண்ணீர் வேண்டும்." என்றதும் நித்திஷ் அங்கும் இங்கும் பார்த்தான்.

    "அக்கா அந்தத் தண்ணீர் பாட்டில் எடுங்களேன்." என்று நித்திஷ் கேட்க, அவரோ முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

    நித்திஷூக்குப் புரியாமல் இல்லை... அவனாக எழுந்து நிற்க துப்பாக்கி ஏந்தியவனோ, "என்ன?" என்று அதட்டல் புரிந்தான்.

     "பிரகனட் லேடி சார். தண்ணீர் கேட்டாங்க" என்றான்.

   துப்பாக்கி வைத்தவனோ நன்விழியைப் பார்த்து நித்திஷ் நீரை எடுக்கச் சம்மதித்தான்.

    "காலையிலே இவ முகத்தில முழிச்சேன். அப்பவே இப்படி ஏதாவது நடக்கும்னு நினைத்தேன் நடந்துடுச்சு. அதிர்ஷ்டம் கெட்டவள். இதுல இவன் வேற" என்ற வசவு மொழியைக் கேட்டு நித்திஷ் கடுப்பானான்.

    நன்விழி எதுவும் பேசாதே என்று கையைப் பிடித்து நித்திஷை தன்னருகே அமர வைத்தாள்.

அத்தியாயம்-2

"என்ன நன்விழி இதெல்லாம்? இன்னமும் நீ இது மாதிரி பேசறவங்களுக்காகப் பொறுத்து போனா என்ன அர்த்தம். எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. அட்லீஸ்ட் என்னையாவது பேச விடறியா. எப்ப பாரு தடுத்துடற?" இன்று நித்திஷ் சலித்தான்.

     "அடுத்த நிமிடம் என்ன வாழ்வு என்று தெரியாத ஒரு மூடிய புத்தகமா வாழறோம் நித்திஷ். இதுல அந்தப் புத்தகத்தில் நல்ல விஷயத்தை மட்டும் பார்ப்போமே. கெட்டதைக் கடந்து வந்திடனும். எனக்குப் பழகிடுச்சு." என்று தண்ணீரை அருந்தி தன்னை ஆசுவசுப்படுத்தினாள்.

     "அதுக்காக இப்படியா? இந்தளவு பொறுமை நான் பார்த்ததில்லை." என்று நித்திஷ் அந்தப் பெண்மணியைக் கண்டு முனங்கியபடி முறைத்து வைத்தான்.

     அதற்குள் அருகேயிருந்த பெண்மணியோ, "இவள் இருக்காளே... புருஷனை பறிக்கொடுத்து ஆறு மாசம் கூட ஆகலை... அதுக்குள்ள இவனைப் புடுச்சிக்கிட்டா. இந்தப் பையனும் அவ விரும்பியவளை விட்டுட்டு இதோ இந்த வயிறு வீங்கியவளை தாங்கிட்டு இருக்கான். என்ன கன்றாவியோ... என்னவோ இவன் தான் அந்தக் குழந்தைக்கு அப்பா மாதிரி நடக்கிறான். ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு போறதென்ன... மளிகை சாமான் வாங்கி வந்து தருவதென்ன? எப்ப பாரு இவன் வீட்ல இருப்பதை விட இவ வீடே கதினு இருக்கான்." என்று புரளி பேச ஆரம்பித்தனர்.

     "இவங்க அப்பா அம்மா எல்லாம் தண்ணி தெளித்து அனுப்பிட்டாங்களா? இவங்களை மாதிரி ஆட்களால் தான் இந்த மாதிரி துப்பாக்கி வைச்சிருக்கறவன் எல்லாம் நம்ம குடியிருப்புக்கு வந்து மிரட்டுற தலைவிதி வந்திருக்கு" என்று நொடிந்தார்.

    "இது மட்டுமா தினமும் வாக்கிங் என்ற பெயரில் கையைக் கோர்த்து போகுதுங்க. சை கன்றாவி. எங்க வீட்டுக்காரர் கூட என்னைப் பொதுயிடத்துல கையைப் பிடிச்சி நடக்க மாட்டார். இதுங்க ஊரே பார்க்க நடக்குதுங்க." என்றாள் மற்றொருத்தி.

    "இந்த வாரம் மீட்டிங்ல பேசணும்னு இருந்தேன். இன்ன செய்ய அதுக்குள்ள இவங்க வேற" என்று மூவரை கைகாட்டி நிறுத்தினார் பக்கத்து வீட்டாள்.

    வாழ்வா சாவா என்று துப்பாக்கி முனையிலும் இது போன்று அடுத்தவரை பழி போட்டு பேச இந்த மனிதமனம் ஆசைப்படுகின்றதா? அல்லது எந்தக் கெட்ட நிகழ்வுக்கும் வேண்டாதவர்களை அதில் நுழைத்து ஆனந்தம் கொள்கின்றதா? அது அவர்களே அறிவார்கள்.

     இவர்கள் பேசுவதும் நியாயம் தான். நன்விழியோடு அதிக நேரம் செலவு செய்பவன் நித்திஷ் மட்டுமே.
  
   தன் காதலி வினோதினி நன்விழியோடு பேசக்கூடாது என்ற பொழுதிலும் அவளைத் தவிர்த்து விட்டு நன்விழியோடு பேசினால் இந்த மனிதர்களுக்கு இவர்கள் அவலாகத் தான் மாறி போவார்கள்.

      அதிலும் நித்திஷ் எந்நேரமும் நன்விழியோடு இருப்பான். நன்விழியும் மறுத்ததில்லை. உதவிக்கு நித்திஷ் இருப்பதில் தவறாக எண்ணவில்லை.

     அங்கும் இங்கும் சத்தம் கேட்க அடுத்துத் தங்களைக் காப்பாற்ற செய்வார்களா என்றும் உயிரோடு விடவேண்டும் என்ற வேண்டுதலும் என்று அடுத்தப் பக்கம் கடவுளை வேண்டி நின்றனர்.

       "ஸ்டீபன் பசிக்குது. இங்க புட் எல்லாம் இருக்கு சாப்பிடலாமா?" என்று மதன் கேட்கவும் துப்பாக்கி ஏந்தியிருந்தவர்கள் மதன் ஸ்டீபன் முகமது மூவரிடம் கொடுத்துவிட்டு அம்மூவர்கள் தட்டை ஏந்தி உண்ண ஆரம்பித்தனர்.

    வெளியே நெல்சனிடம் விமல், "சார் இங்க இருபது குடும்பம். மொத்தம் எழுபத்தி மூன்று பேர் இருந்தார்கள். இதில் குழந்தை பெரியவர்கள் என்று இருபத்தி ஏழு பேர்கள், பெண்கள் இருபத்தி நாலு. ஆண்கள் இருபத்தி இரண்டு. இதுல குழந்தைங்க சிலர் கீழ் தளத்தில் விளையாடியதிலும் பெரியவங்க ஆண்கள் சிலர் குழந்தையைப் பார்த்துக்க வந்ததில், இப்ப விமானத்துல பதிவாகிய பெயரான ஸ்டீபனிடம் மாட்டிய ஆட்களின் எண்ணிக்கை நாற்பத்தி ஒன்பது சார்.

   அந்தப்பக்கம் வழியில்லை. வெளியே போகணும்னா அந்த டோர் திறந்தா மட்டும் தான். ஆனா சார். அந்த டோர் திறந்துட்டா... அந்த ஜிம் பக்கமா மாற்றொரு வழி இருக்கு. ஆனா அது பெரும்பாலும் வாட்ச் மேன் தான் பயன்படுத்துவாராம். இடமும் ஒரு ஆள் போகிற அளவுக்குத் தான் இடம் இருக்கும். விசாலமா இருக்காதாம்." என்று கூறினான்.

    நெல்சனோ நாற்பத்தி ஒன்பது பேரா... எப்படியும் உயிர் போக வாய்ப்பு இருக்கு. எதுக்கோ ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி டாக்டரை ரெடியா இருக்கச் சொல்லுயா. இன்னிக்கு தூங்கின மாதிரி தான். ஆமா... இந்த நிலவரம் கமிஷனருக்கு சொல்லியாச்சா..." என்றார் நெல்சன்.

    "ஆல்மோஸ்ட் தெரிந்துடுச்சு சார். காப்பாற்ற டீம் ரெடி பண்ணறாங்க." என்றதும் போனில் கமிஷனர் செல்வன் அழைப்பை தொடுத்தார்.

    "சார்... ஸ்பாட்ல தான் இருக்கேன் சார். அவங்க எஸ்கேப் ஆக வண்டி மட்டும் போதும் என்று சொல்லறாங்க. மோட்டிவ் எதுவுமில்லை சார். ரமேஷ் பின் தொடரவும் பக்கத்துல இங்க இந்தக் குடியிருப்புக்கு வந்து பிணைகைதியா மாற்றித் தப்பிக்கப் பார்க்கறாங்க." என்று பேச அந்தப் பக்கம் கமிஷனர் செல்வன் என்ன கூறினாரோ நெல்சன் தலையிலடித்துப் போனை அணைத்தார்.

   "என்னாச்சு சார்.?" என்று விமல் கேட்டு நின்றான்.

      "அந்தப் பயலுகலை தான் போட்டு இருக்காங்க. தள்ளுயா... எப்படியும் ஒரு வார்த்தை என் பேச்சை கேட்டு மதிக்க மாட்டானுங்க. இனி நான் பொம்மையாகத் தான் இருக்கணும்." என்று நெல்சன் சலித்துக் கொண்டார்.

   இதற்கிடையே செய்தியாளர்கள் லைவ்வாக அங்கே நடக்கும் கலவரத்தை வீடியோவாகப் பரபரப்பாகப் பதிவு செய்தனர்.

   அந்தக் கட்டிடம் மற்றும் அந்தக் கட்டிடத்தின் வசித்து வந்தவரை பேட்டி எடுத்து தொலைக்காட்சிக்கு , 
ஆர்.பி-காக உழைத்து கொண்டிருந்தனர்.


    குடியிருப்பில் "எங்க வீட்டுக்காரர் மேல இருக்கார். எப்பவுமே இது மாதிரி விழாவுக்கு வரமாட்டார்
இன்னிக்கு பார்த்துப் போனார். இப்படி ஆகிடுச்சு. எப்படியாவது மீட்டு கொடுங்க." என்றும்

    "என் குழந்தையும் என் மகளும் சாப்பிட போனாங்க அங்க மாட்டிக்கிட்டாங்க. எப்படிக் காப்பாற்ற போறாங்கனு தெரியலை. எத்தனை பேர் ஓடி வந்தாங்கனும் தெரியலை." என்று அழவும் கண்ணீர் முதல் கொண்டு ஜூம் செய்து நேரடியலையில் போட்டு போட்டு பார்க்கும் நபரை உச்சுக்கொட்ட வைக்கும் அளவிற்கு ஒளிப்பரப்பினார்கள். 

       அங்கிருந்தவர்கள் கிசுகிசுக்கும் சத்தம் கேட்க, நெல்சன் திரும்பி பார்க்காது, "அவனுங்க வந்துட்டானுங்க. இனி எவனையும் பேச விடமாட்டானுங்க." என்று முனங்கியபடி திரும்பினார்.

     "இங்க வரை எதுக்குக் கிரவுட். பத்திரிக்கை ஆளுங்க தானே. சப்போஸ் அவனுங்களோ குடியிருப்பு வாசிகளோ  வெளியே வந்தா நேர இங்க கிராஸ் பண்ணணுமா வேண்டாமா. நந்தி மாதிரி நின்றால் எப்படி ஓடுவாங்க. விமல் பார்க்க மாட்டிங்களா... கிரவுடை இன்னமும் தள்ளி அங்க அனுப்புங்க." என்று கண் காட்டினான் தர்ஷன்.

     "குட் டே சார்." என்றான் ருபன்.

     "குட் டே வா? யோவ் நாற்பத்தி ஒன்பது பேர் மாட்டியிருக்காங்க. ஒர் உசிரு போனாலும் பேட் டே தெரியுமா?" என்று நொடிந்தார்.

     "எந்த உயிரும் போகாது." என்று ஸ்டீபன் இருக்கும் மாடியின் எதிர் மாடியை தான் கண்டு கொண்டிருந்தான் தர்ஷன்.

அத்தியாயம்-3

  மூவரும் சாப்பிட்டு எழுந்து துப்பாக்கியை ஏந்தி காவலுக்கு ஆள் மாற்றி நின்றனர்.

    செல்வன் வந்துவிட்டதாக ஒலிப்பெருக்கி வழியாக அறிவித்து முடித்தனர்.

    ஸ்டீபனோ "கமிஷனரை யார் வரச்சொன்னது. எங்களுக்கு ஒர் வண்டி தானே கேட்டேன். அதை அரேஜ் பண்ணி எங்களைப் போக விடுங்க." என்று பதிலாக அனுப்பினான்.

     "லுக்... எங்களுக்கு அங்க இருக்கற மக்களில் பாதிப் பேர் வெளியே வரணும். அப்போ தான் நீங்க சொல்வது போல வண்டியை அரேஜ் பண்ண முடியும். திஸ் இஸ் பைனல். பாதிப் பேரை வைச்சிட்டு மீதி பேரை அனுப்புங்க." என்று கட்டளையிட்டான்.

     "முடியாது." என்ற மதனின் குரலுக்கு, "அப்போ இங்கயே இரு. பட் வெளியேவும் போக முடியாது. நீங்க சொல்லறதை நான் கேட்டா. நான் சொல்லறதையும் நீங்க கொஞ்சம் யோசிங்க." என்றவன் பேச்சில் எரிச்சலானான் ஸ்டீபன்.

    "யார் டா நீ கமிஷனரை பேச சொல்லு. நீ என்ன இடையில்" என்று குரலை வைத்து அது வயதான செல்வன் அல்ல யாரோ இளைஞன் என்று கேட்டு முடிக்கச் செல்வன் "தம்பி நீங்க யாரு என்ன என்று தெரியலை அட்லிஸ்ட் பாதிப் பேரை விடுங்க. குழந்தை பெரியவர்களாவது விட்டுவிடலாமே. நீங்க கேட்ட கார் ரெடியா இருக்கு." என்று பேச,

     "அங்கிருந்து எல்லாரும் போங்க. நாங்க சொல்லற டைம்கு விடறோம்." என்று ஒலிப்பெருக்கியை கத்தரித்தான்.

     தர்ஷன் என்னவோ போங்க என்று அவன் எதிர் பக்கம் சென்றனர். ரூபனோ பின்னாடியே போனவன்.

----
     "நன்விழி உனக்கு என்னாச்சு... வேர்குது." என்றதும்

   "ஒன்றும் இல்லை நித்திஷ் ஒரு மாதிரி இருக்கு என்னனு தெரியலை." என்று கூற, நித்திஷ் எழுந்தவன் கூட்டத்தில் இருந்தவனிடம் "சார் இவங்க பிரகனட் லேடி தயவு செய்து இவங்களை மட்டும் அனுப்புங்களேன். சம்திங் அன்கம்பர்டபிளா பீல் பண்ணறாங்க." என்று கெஞ்சினான்.

     "டேய் நாங்க விடணும்னா அந்தப் போலிஸிடம் கேளு. எங்களைச் சுத்தி போலிஸ்... எங்க ஆறு பேர் உயிர் அந்தப் பொண்ணோட உயிருக்கு நிகரா. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அவஸ்தைபடுங்க." என்று எரிந்து விழுந்தான்.

    "சார் அவங்க கணவர் இராணுவத்துல உயிர் இழந்தவர். இப்ப இந்தப் பொண்ணுக்கு அந்தக் குழந்தை தவிர வேற யாரும் துணையில்லை. தயவு செய்து இவங்களை மட்டும் அனுப்புங்க" என்று மீண்டும் கெஞ்சினான்.

     "இராணுவ வீரனோட மனைவியா? உபயோகப்படுத்திக்கறோம் உட்காரு டா" என்று எட்டி உதைக்க, நித்திஷ் வலியோடு நன்விழி அருகே அமர்ந்தான்.

     "பார்த்தியா... அவ மட்டும் உசுரோட வெளியே போகணுமாம். என்ன பேச்சுச் சுயநலம் பிடிச்சவன். இங்க எத்தனை குழந்தை இருக்கு, பெரியவா இருக்காங்க." என்று இம்முறையும் எங்கோ குரல் மட்டும் நன்விழியை வைத்து நித்திஷை தூற்றியது.

      "நித்திஷ் எதுக்குக் கெஞ்சிட்டு இருக்க. என்னால தாங்கிக்க முடியும். யாரிடமும் கெஞ்சாதே... எனக்குக் கெஞ்சறதே பிடிக்காது. வெற்றிக்கும்..." என்று கூறுவதில் புன்னகை துளிர்த்தது.

   நன்விழியின் பலம் வெற்றி என்ற பெயரில் அதிகமானது. புன்னகையிக்க வைத்தது.

     நன்விழி காதல் திருமணம். வெற்றி இராணுவம் சென்றால் தனித்து இருக்கும் வாழ்வு அமையும் என்றதாலும், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நன்விழி பெற்றோர் வெற்றியை மணக்க மறுத்திட, நன்விழி பெற்றோரை எதிர்த்து வெற்றியின் கரம் பற்றினாள். நித்திஷ் தலைமையில்... நித்திஷ் கல்லூரி நண்பன். இங்கே நந்தனம் குடியிருப்பில் கூட வீடு வாங்கியது இருவருமே. ஆனால் இன்று வெற்றி அவ்விடத்தில் இல்லை. அவன் இல்லை என்பதால் அவன் மனைவியிடம் ஒதுங்கி சிறு உதவியும் செய்யாமல் கடக்க இயலுமா?

   அதுவும் தன்னையும் அவளையும் இணைத்து பேசுவதால் பயந்து. சமூகம் இன்னமும் ஆண் பெண் பழகினால் அவர்களைச் சேர்த்து வைத்து கிசுகிசுத்து தோற்றுவிப்பதால் கசப்பை  வரவழைத்தது.

    வெற்றி இருக்கும் பொழுதே நன்விழியைப் பெயரிட்டு அழைத்து இருக்க, சிஸ்டர் என்றோ தங்கை என்றோ விளிக்கவும் மனமில்லை. அப்படி அழைத்துத் தான் புரிய வைக்கவும் நித்திஷ் விரும்பவில்லை.

ஏன் ஆணும் பெண்ணும் தங்கை என்றோ அண்ணா என்றோ அழைத்தால் உறவு புனிதம் என்று புகழப்பட்டால் சரியா? நித்திஷ் இந்த நிலையிலும் எப்படித் தான் சாடி பேசுகின்றனர் என்ற வலி தாங்கியது.

   அதிலும் கர்ப்பமாகத் தனி ஆளாக யாரிடமும் கெஞ்சி பேசி பிடிக்காத இவளிடம். இவள் கெஞ்சி புரிய வைக்க வேண்டுமென்றால் தாய் தந்தையர் கூறிய கணமே வெற்றியை மறுத்து சென்றிருப்பாளே. உண்மை காதலுக்கு வழிமொழிந்து வந்தவளுக்குக் கிட்டிய அவப்பெயர் எத்தனை சே...

    காலையில் எதிர்ல வந்தால் திட்டு, ஏதேனும் தன்னிடம் பேசினால் கிசுகிசுப்பு, மனதை வலிப்பது போன்ற மறைமுகக் குத்தல், பெற்றோரிடம் சென்று வாழ்ந்திடு என்று அறிவுரை கூட நன்விழிக்கு சொல்லியாயிற்று. வெற்றியோடு வாழ்ந்த இடம் நித்திஷ். இதான் எனக்கு ஆறுதல் என்பவளை என்ன செய்ய?

    வெளியே கிடைத்த தகவலோ ஸ்டீபன் என்பவன் பிளாக்மூன் இயக்கத்தின் முக்கிய ஆட்கள் என்று அறிய நேரிட இதுவரை துப்பாக்கி வைத்து இருப்பதை மட்டும் கொண்டு துரத்திய போலிஸுக்கு சர்வமும் ஒடுங்கியது.

    இவர்களைப் பிடிக்க டெல்லி மும்பை இடத்தில் அத்தனை கெடுபிடி. இங்கே சென்னையில் எளிதாகக் கிடைத்திருக்க, அவர்களை வழியனுப்பி விடவா முடியும். இல்லை... நாற்பத்தி ஒன்பது பெயரை பிடித்து வைத்திருக்க அந்த உயிருக்கு என்ன பதில்.

     தமிழகப் போலிஸ் தலையைப் பிய்த்துக் கொண்டு விழி பிதுங்கி நின்றது. செல்வன் என்ன செய்யலாம் என்று மற்ற மேலிடத்தில் பேசி முடிவெடுக்கப் போனிலே கான்பிரன்ஸ் பேசிக் கொண்டிருந்தார்.

     செய்தியாளர்களுக்குத் தெரிந்தால் இன்னமும் செய்தியை திரித்துக் கதை கட்ட வாய்ப்புண்டு என்று தங்களுக்குள்ளே எவ்வாறு இப்பிரச்சனையைக் கையாள என்று குழுமிக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
   
     "என்னடா... வரவர லேட் ஆகுது. நாம பிளாக்மூன் இயக்கம் என்று தெரிந்தா சும்மா விடமாட்டாங்க. அதனால அவங்க சொன்ன மாதிரி பாதிப் பேரை விடுவிக்கலாமா?" என்று மதன் கேட்டான்.

     "ஆமா... நமக்கு வேற வழியில்லை. நம்ம ஏர்போர்ட்ல இருந்து வந்த போட்டோ வைத்து நாம யாருனு தெரிந்தா நம்மை விட மாட்டாங்க. அதனால பாதிப் பெயரை அனுப்பி நாம யாருனு தெரிவதற்குள் தப்பிக்கப் பார்ப்போம்." என்று ஸ்டீபன் அங்கிருப்பவர்களில் முதியவர்கள் மற்றும் சில பெண்களைக் குழந்தையை விடுவிக்க எழுப்பினார்கள்.
   
    ஆனாலும் சில பெண்களை முடக்கினார்கள். நித்திஷ் கெஞ்சியும் நன்விழியை விட மறுத்து விட்டனர்.

   இறந்தாலும் இராணுவ விரன் வெற்றியின் மனைவி என்ற பெயர் இருக்க, நன்விழியை விடாமல் இருந்தனர். அவள் நிறைமாத  கர்ப்பமாக இருப்பதால் தப்பிக்கவும் வழி தேட மாட்டாள் என்பது இவர்களின் எண்ணம்.

ஒலிப்பெருக்கி வாயிலாக, "இப்ப கொஞ்சம் பேர் அனுப்பறோம். அடுத்தக் கட்டத்தில் மற்றவரை அனுப்ப முயற்சிக்கறோம். நாங்க போகற காரில் புத்திசாலியா யாரும் ஜிபிஆர்எஸ்ஸோ, பின் தொடரவோ கூடாது. அப்படிப் பண்ணினீங்க... எங்களோட கூடக் கூட்டிட்டு போற உயிருக்கு உத்திரவாதம் இல்லை." என்று பாதிப் பேரை அனுப்பினான்.

நன்விழிக்கோ இது நிறை மாதம் எந்த நேரத்திலும் சொல்லப்பட்ட தேதிக்கு முன்னவே குழந்தை பிறக்க வாய்ப்புண்டு என்று எண்ணியிருக்க, அவளின் உடலில் சிற்சில மாற்றம் அவளுக்குச் சிசுவின் வருகையைப் பறைச்சாற்றியது.

அத்தியாயம்-4

"அம்மா...." என்ற அலறலில் நித்திஷ் கையைப் பற்றி முடித்தாள்.

நித்திஷ் இம்முறை பயந்து லேபர் பெயினா என்பது போலப் பார்வை பார்க்க, ஆம் என்பதாகத் தலையை அசைத்தாள்.

"சார்... இவங்களை முதல்ல அனுப்புங்க சார். லேபேர் பெயின் வருது." என்று நித்திஷ் மன்றாட, அங்கிருந்தவர்களோ பாவமாகப் பார்க்க செய்தனர்.

முகமது மற்றும் மதன் ஸ்டீபன் மறுப்பாய் தலையசைக்க, "டேய் என்னடா வேண்டும் உங்களுக்கு... சின்னதா  ஈவு இரக்கம் இல்லையா... உலகத்திலயே பெரிய வலி பிரசவவலி தான் அதனைப் போராடி ஜெயிக்கறதே பெண்களுக்குச் சாதனை தான். அதுல இந்த மாதிரி வேற வலியை தருவது நியாயமா டா. பாஸ்டட்" என்று நித்திஷ் கத்தவும் மதன் எட்டி உதைக்க, காலி இருக்கைகள் மீது விழுந்தவனை சற்றுத் தூரமாகத் தள்ளியது.

"நித்திஷ்... யாரிடமும் கெஞ்சாதேனு சொன்னேன். புரியலையா உனக்கு. அதுவும் குழந்தை முதியவர்கள் பெண்கள் என்று பிடிச்சி வைத்து ஜம்பம் பேசறவனிடம் கெஞ்சற...

மனிதாபிமானம் கெஞ்சி பெறுவதில்லை நித்திஷ்" என்றாள் அந்த நிலையிலும்.

முகமத் அருகே வந்து, இராணுவ வீரனோட மனைவில... பேசுவடி" என்று ஒர் அறையைப் பரிசாக அளித்தான்.

"முகமத்... இங்க நின்று பேசற நிலையில் நாம இல்லை. நாம போகணும். சுத்தி என்ன நிலைமை இருக்குனு பாரு." என்றான்.

துப்பாக்கி ஏந்திய மூவரிடம், தியாகு, சல்மான், கேசவன் நீங்க மூன்று பேரும் வண்டியை சுற்றி எப்பவும் துணைக்கு நில்லுங்க. நாங்க ஏறிட்டதும் உடனே ஏறிடணும். ஒரு கார்ல ஆறு பேர் உட்கார..." என்றதற்குள் ஒலிப்பெருக்கி முழங்கியது.

"இப்ப நீங்க கேட்டது போலக் கார் இருக்கு. மற்றவர்களை விடுவித்துட்டு நீங்க போகலாம் இங்க யாரையும் தடுக்கலை. எங்களுக்கு மக்களோட உயிர் முக்கியம்." என்று கத்தியது.

"சரி எங்களுக்கும் எந்தக் கோரிக்கையும் இல்லை. எங்களை விட்டா போதும்" என்றதோடு மறறவர்களையும் அனுப்ப திட்டமிட்டனர்.

இம்முறையாவது நன்விழி அனுப்ப படுவாளென நித்திஷ் எண்ணியிருக்க, மாறாக அவளைத் தவிர யாவரும் அனுப்ப ஏவிக்கொண்டிருந்தனர்.

"சார் இப்பவாது நன்விழியை அனுப்புங்களேன்." என்று வந்து கெஞ்சினான்.

"எல்லாரையும் அனுப்பிட்டு நாங்க என்ன செய்ய? எங்களுக்கு வேல்யூவான ஒரு பெர்ஷன் வேண்டும் தப்பிக்க. இந்தப் போலிஸ் என்ன காரை கொடுத்து வழியனுப்புமா. ஏதாவது தகிடுதத்தம் செய்தா எங்களுக்கு ஒர் துருப்பு சீடடு வேண்டுமே. அதுக்கு இந்தப் பொண்ணு தான் சரியா வருவா.

இவளால தப்பிக்கவோ ஓடவோ முடியாது. எங்க இழுப்புக்கு இவ சரியா வருவா. அதோட போலிஸை விட மிலிட்ரி மேன் மனைவி அதிகமா அக்கறை படுவாங்க. நீ வேண்டுமென்றால் போ" என்றதும் நித்திஷ் போக மறுக்க அடித்து வெளியே அனுப்பப்பட்டான்.

"நித்திஷ் நீ போ.." என்றவளின் உறுதியை இத்தனை நேரம் வசவு பேசி வருந்தியவர்கள் கூட நன்விழி பாவமாகக் கடந்து சென்றார்கள்.

கடைசியாக ஆறுபேர் இருக்க, நன்விழி தனியாக நின்றாள்.

இருவரின் துப்பாக்கி முனையில் நன்விழி அடியெடுத்து வர, பனிக்குடம் உடைந்து அந்நீரானது வழிய நடக்க இயலாது கடினப்பட்டு நடந்தாள்.

அந்த நேரம் எங்கிருந்தோ இரண்டு தோட்டா... வந்து நன்விழியின் அருகே இருந்தவர்களின் நெற்றியை பதம் பார்த்து உள்ளிறங்கியது.

நொடியில் ஸ்டீபன் மதன் முகமத் மற்றும் கேசவன் ஜிம்மில் இருந்த கதவு திறந்து நன்விழியை இழுத்து கதவை சாற்றி முடித்தனர்.

முகமத் வைத்திருந்த ஒலிப்பெருக்கியால் "ஏன் இப்படிப் பண்ணறிங்க." என்று கத்தியதில் செல்வனோ, "நீங்க பிளாக்மூன் இயக்கம் என்று எங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. நீங்க சமூகவிரோதி என்றப்பின் மத்திய அரசாங்கம் உங்களைச் சுட்டுப் பிடிக்கத் தான் எங்களுக்கு ஆர்டர் தந்திருக்காங்க." என்று பேசவும்

"இங்க ஒர் கர்பிணிப்பெண் எங்களோட இருக்கா. ஏதாவது பண்ணினா அவளையும் அவ கருவையும் அழிச்சிடுவோம். இப்பவும் ஒன்றும் இல்லை எங்க நால்வரை செல்ல விடுங்க. இல்லை... இருக்கற இந்தப் பொண்ணைச் சாகடிச்சிடுவோம்" என்று மிரட்ட, நித்திஷ் பயந்தே போனான்.

"சார் அந்தப் பொண்ணு பிரசவவலி வருது. காப்பாற்றுங்க சார். அவங்க தான் இரக்கமே இல்லாம அனுப்பலை. நீங்க அவளைக் காப்பாற்ற மெனக்கெடுங்க ப்ளிஸ்." என்றான்.

அவனின் கதறல் அங்கிருந்த விமல் ஆறுதல் படுத்தினானே தவிர மற்றவர்கள் பார்வைக்குப் படவில்லை.

செல்வனோ, "தர்ஷன் ஸ்பாட்ல அகைன் அந்தப் பொண்ணு இருக்கா. எப்படிக் காப்பாற்றுவது... அந்தப் பொண்ணு உயிரை காப்பாற்றி மற்றவர்களை டார்கட் பண்ணுங்க." என்று கட்டளை வழங்கினார்.

"சார் இட்ஸ் ரிஸ்க். சாதாரணப் பெண் என்றால் காப்பாற்றுவது ஈஸி சார். பட் அந்தப் பொண்ணு பிரகனட் தப்பிக்க மனபலம் வேண்டும். அது இருக்கானு தெரியலை." என்று குறி வைத்தவன் கேசவனுக்குக் குறி வைத்திருந்தான்.

ஏற்கனவே ரூபன் சல்மானையும், தர்ஷன் தியாகுவையும் சுட்டி முடித்திருக்க, கேசவனைக் குறி வைத்து சுட்டி முடிக்க, சப்தமில்லாமல் அவன் இதயத்தைத் துளைத்துப் புல்லட் பாய்ந்தது.

ரூபன் மதனுக்குக் குறிப்பார்க்க அது கண்ணாடியில் பட்டு தெரித்ததே தவிர அவனை ஒன்றும் செய்யவில்லை.

"ரூபன் என்னடா பண்ணிட்ட.?" என்று தர்ஷன் கத்த,

"மச்சான்... ஜிம் டா.. கண்ணாடில வியு பார்த்துட்டேன் போல. குழம்பிட்டேன்." என்று முடிக்க அங்கே மதன் பின் நகர, முகமத் தர்ஷன் பார்வைக்குப் பட இம்முறை முகமத் தொண்டை குழியில் துளைத்து உயிரை மாய்த்தான்.

ஸ்டீபன் மற்றும் மதன் இருவரும் சுதாரித்து நன்விழியின் நெற்றிக்கு வயிற்றுக்கும் குறி வைத்து நின்றனர்.

"மதன் இனியும் தாமதிச்சா நம்மைக் கொன்று பிடிப்பாங்க. அடுத்த வாரம் நடக்குற சயின்டிஸ்ட் மீட்டிங் பிளான் அப்படியே கேன்சல் ஆகிடும். இனிமே புதுசா ஆட்கள் இங்க ரீச் ஆகி செயல்படுத்த முடியாது." என்று பேச, நன்விழிக்கு அந்த வலியிலும் அவர்கள் பேச்சில் இவர்களை பற்றி அறிந்துக்கொண்டாள்.

பிளாக்மூன் இயக்கம் ஏற்கனவே நன்விழி அறிந்து இருந்தமையால் எத்தகைய ஆட்கள் இவர்கள் என்ற கணிப்பில் நன்விழி புரிந்துக் கொண்டாள்.

நன்விழியின் சிகையைப் பிடித்து இழுத்து அவளின் வயிற்றில் துப்பாக்கி வைத்து ஸ்டீபன் வெளியே வந்தான்.

"கன் பயர் பண்ணியவங்க எல்லாரும் முன்ன வாங்க. இல்லை இவளை கொன்றுடுவேன்." என்று மிரட்ட தர்ஷன், ரூபன் வர மறுத்தனர்கள்.

"மூன்று என்றதற்குள் வரலை... இவளை சுடுவேன்." என்று சொல்லி எண்ண ஆரம்பித்தான்.

இருவரும் தங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, ஸ்டீபன் துப்பாக்கி சுட்டு முடித்தான்.

நன்வழி அலறல் அந்த இடத்தையே உலுக்க அங்கே வெளியே பாதுகாப்பாக உள்ளிருந்து வேடிக்கை பார்த்தவனரோ, "அச்சச்சோ அந்தப் பொண்ணைச் சுட்டுட்டாங்க" என்ற செய்தியை பரப்பினாள்.

அத்தியாயம்-5

"நன்விழி..." என்று நித்திஷ் கத்தி, ஸ்டீபன் அருகே வர முயல, துப்பாக்கியை நித்திஷ் முன் நிறுத்தி, "அங்கயே நில்லு... இல்லை இப்ப அவ கையில் சுட்டதை நெற்றியில சுட்டுடுவேன்." என்று மிரட்டினான்.

"நீங்க இரண்டு பேர் தானா? இல்லை எவனாது இன்னமும் மறைந்து இருக்கிங்களா?" என்று ஸ்டீபன் நன்விழியைத் துப்பாக்கி முனையில் மிரட்டியபடி கேட்டு முடித்தான்.

"நான் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவன் ஒருத்தன் தான்" என்று ரூபனை கைகாட்டி தர்ஷன் பேசினான்.

"டேய்.. அவனைச் செக் பண்ணு. கன் எல்லாம் இருந்தா எடுத்து முன்ன வை. இல்லை.. இவளை" என்று கூறுவதற்குள் தர்ஷனை செக் செய்து கன் எடுத்து வைத்தான். முதுகில் ஒன்று காலில் ஒன்று வைத்திருந்தான். மற்றொரு காலில் சின்னக் கத்தி வைத்திருந்தான். அனைத்தும் முன் வைத்திட, அடுத்து ரூபனின் பக்கமும் முதுகில் ஒர் கன்னை எடுத்து ஸ்டீபன் முன் வைத்து விட்டு "அவளை விடுடா." என்றான்.

துப்பாக்கியை மதன் எடுத்துக் கொண்டு முடிச்சிட, கத்தி கீழே விழுந்தது.

நன்விழி இரத்தம் சொட்ட, எழ சொல்லவும் போராடி எழுந்தாள். எழுந்தவள் கையில் அந்தச் சின்னக் கத்தி மிளிர்ந்தது.

''என்ன மா... அந்தச் சின்னக் கத்தி வைத்து மிரட்ட போறியா... அதெல்லாம் உடலில் கீறினா அந்த வலியெல்லாம் கண்டுக்கவே மாட்டோம். கொடு அதை." என்று கையை நீட்டினான்.

"சின்னக் கத்தி தான். உன்னை ஒன்றும் பண்ணாது தான். உங்க இரண்டு பேரை இதை வைத்து மிரட்ட முடியுமா? சயின்டிஸ்ட் மீட்டிங்ல கொல்ல வந்த உங்களுக்கு இதெல்லாம் பொருட்டா இருக்காது.

ஆனா என்னை நானே குத்திக்கிட்டா உங்களால தப்பிக்கவே முடியாது. தப்பிக்க விடவும் மாட்டார்." என்றவள் பார்வை தர்ஷனை தழுவி மீண்டது.

"நீ சொன்னியே கர்ப்பவதி மிலிட்ரி மேன் மனைவி அதனால வேலிட் பெர்சன் என்று. ஆமா டா. நான் பொண்ணா பிறந்ததாலே தகுதியானவள் தான்.

அதோட வெற்றியோட வாழ்ந்துயிருக்கேன். அவர் போய்ச் சேர்ந்தாலும் என் மனசுல விதைத்தது. தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தான். அதை எப்பவும் கைவிட்டதில்லை. கூடவே இருக்கு. உன்னை மாதிரி ஆட்களுக்குப் பயந்தா வெற்றி என்னை மன்னிக்க மாட்டார்.

பிளாக்மூன் இயக்கத்துல ஆறு பேரை தமிழகப் போலிஸ் சுட்டுப் பிடிச்சிருக்கு. அந்தக் கிரிடிகல் சூழ்நிலையில் ஒரு கர்ப்பிணி பெண் இறந்துட்டா. இதான் நாளைக்கான செய்தி." என்று கூறினாள்.

"நன்விழி அவசரப்படாதே... எதுவும் தப்பா முடிவெடுக்காதே." என்று நித்திஷ் பதறினான்.

"இல்லை நித்திஷ்... என்னால இவனுங்க தப்பிக்கக் கூடாது. எத்தனை இலகுவா கர்ப்பிணி பெண்ணைப் பிணையகைதியா வைத்தா தப்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க. இங்க யாராயிருந்தாலும் தன் உயிரை துச்சமா எண்ணிட்டா எந்தத் துப்பாக்கிக்கும் பயப்பட மாட்டாங்கனு புரியறதில்லை.

உயிர் பயம் காட்டினா பயந்து போயிடுவோம் இவனுங்க தப்பிக்கலாம்னு நினைச்சிடறாங்க. ஒவ்வொருத்தரும் உயிர் பயம் இல்லாம வாழ ஆரம்பிச்சிட்டா இவனுங்களால் என்ன பண்ண முடியும்." என்று நன்விழி சற்றே அசதியாகவே பேசி முடித்தாள்.

"ஏ..ஏய்... பொண்ணு... உனக்காக இல்லைனாலும் உன் குழந்தை வயிற்றுல இருக்கு. அதுக்காவது யோசி. எதுவும் பண்ணிடாதே." என்று மாற்ற முயன்றான். அப்படியாவது நன்விழி குழந்தைக்காக யோசித்துத் தயங்க தப்பிக்க வழிக்கிடைக்குமென்று.

"ஆமால்ல... ஆனா பாரு.... இந்தக் குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகி, என் வெற்றி மாதிரி இராணுவத்தில சேர்ந்து உன்னை மாதரி ஒர் ஆளை சாகடிக்கச் செத்து போனா... என்ன பண்ணறது. அது வீரமரணம் தானே. அப்போ என் குழந்தை இறந்தா கர்வமா தானே எண்ணுவேன். இப்ப அப்படியே நினைச்சிக்கறேன்.

ஏற்கனவே நான் செத்துட்டு தான் இருக்கேன். என் மேல குண்டு பாய்ந்து இருபது நிமிடம் ஆகுது. பிளட் லாஸ். நிச்சயம் பிரசவத்துல என்னால உயிர் பிழைக்க முடியாது. அதை என்னால உணர முடியுது. சாகறப்ப என் வெற்றி மாதிரி நானும் நல்லது பண்ணிட்டு போறேனென்ற திருப்தியாவது கிடைக்கட்டும். நான் இந்த நந்தவனத்துல அதுக்காவது உபயோகமாகறேன்." என்ற பேசி தன் கழுத்தில் கீறி முடித்தாள்.

தங்களின் பணயகைதியாக அழைத்து வந்த நன்விழி இப்படி ஒரு முடிவில் தங்களை மாட்டி விட்டு செல்வாளென அறியாத ஸ்டீபன் மதன் ஸ்தம்பித்தனர்.

இத்தனை தூரம் பொறுமையாக இருந்த தர்ஷனும் அவளின் முடிவில் அதிர்ந்தான்.

ஸ்டீபனிடம் இருக்கும் துப்பாக்கியை பொருட்படுத்தாது அவனைத் தாக்கினான்.

ஒரு புல்லட் அவனருகே உரசி சென்றதே தவிர எதுவும் ஆகவில்லை. ஆனால் மதன் வைத்த கத்தி மற்றொரு கத்தியால் கையைக் கீறி முடித்தான்.

நன்விழி கழுத்தில் இரத்தம் சொட்டிய நிலையைக் கண்டவன், தன் கைகளில் வழிவதை கண்டுக்காது ஸ்டீபனிடம் இருந்த துப்பாக்கியை லாவகமாகப் பிடுங்கி மதனை சுட்டு முடித்தான்.

அடுத்து ஸ்டீபனை கூறிவைத்து நின்றான்.

"நோ... நோ.. நான் சரண்டர் ஆகறேன்" என்று மண்டியிட்டவனைக் கண்டு "அப்ப இந்த உயிர் போனதுக்கு என்னடா மதிப்பு." என்று ஸ்டீபனை சுட்டு முடித்தான்.

நித்திஷ் நன்விழியைத் தாங்கி கொண்டு, "என்னமா பண்ணிட்ட... என்னை விபத்துல இருந்து காப்பாற்றி இரத்தம் தந்தவன் மா வெற்றி. அவனோட வாழ்க்கை தான் முடிஞ்சுது. உன்னோட வாழ்வில் சின்னதா உதவி செய்து நன்றி கடனா இருந்தேன். இப்ப அதுவும் வேண்டாம்னு போயிட்டியே..." என்று கதறினான்.

"தர்ஷன் உனக்கு...?" என்று ரூபன் விசாரிக்க, "ஒன்றும் ஆகலை" என்றவன் உயிர் போனாலும் கர்வமாக இருந்தவளை கண்டு வியந்தான்.

'தான் கூடக் கர்ப்பிணி பெண் பலகீனமானவள் என்று கூறினோமே... இல்லை இவள் பலகீனமானவள் அல்ல. இந்த மாதிரி பெண் தான் நம்ம நாட்டோட பலமோ' என்றது அவன் உள்ளம்.

"என்னவெல்லாம் பேசினிங்க. இது மாதிரி நீங்க உயிரை துச்சமா கொடுப்பிங்களா... மாட்டிங்க. அடுத்த வீட்ல என்ன நடக்குது. உங்களுக்கு யாரை எப்ப நோகடிக்கப் பேசறது இப்படித் தான் நடந்துக்கத் தெரியும்.

செத்தப்பிறகு அச்சச்சோ... அந்தப் பொண்ணு பற்றி இப்படிப் பேசிட்டோமேனு வருந்துவிங்க. ஆனா உயிரோட இருக்கறப்ப, வார்த்தையால கொல்லுவிங்க.

போங்க இதே ஆண்டுவிழா நடந்த இடத்துல ஆன்மாவுக்குச் சாந்தி அடையணும்னு வேண்டுவிங்க. உங்களால் அதைத் தான் பண்ண முடியும்." என்று பொரிந்து தள்ளினான்.

"நித்திஷ்.... உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. வயிற்றில் இருக்கற சிசுவை காப்பாற்ற வாய்ப்பு இருக்கு." என்றதும் அடுத்த நொடி ஆம்புலன்சில் நன்விழியின் உடலை ஏற்றினார்கள்.

ரூபன் தர்ஷன் இருவரும் அந்த நன்விழி உடலுக்கு ஒர் ராயல் சல்யூட் அடித்து நிற்க, மற்ற போலிஸார் அதே போலச் செய்து முடித்தனர். நன்விழி உடல் மருத்துவமனை நோக்கி சென்றது.

சில மணித்துளிகள் கடந்திட....

"பிளாக்மூன் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்பாரா விதமாகச் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பொழுது, சந்தேகத்திற்கு இடம் அளிக்க ரமேஷ் என்ற போலிஸ் பின் தொடரவும், அவ்வியக்கத்தின் ஆட்கள் நந்தவனம் குடியிருப்பு வளாகத்தில் சென்று அங்கிருந்தவர்களைப் பிணை கைதியாக மாற்றித் தப்பிக்க முயன்றனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக முன்னாள் இராணுவ வீரன் மனைவி நன்விழிவெற்றி என்ற கர்ப்பிணிப்பெண்ணின் உதவியால் அந்த ஆறுபேரினை சுட்டு பிடிக்க முயன்றது. அதில் வீர மரணமாக நன்விழி மரணம் நேர்ந்தாலும் அதற்கு அவள் கர்வமே கொள்வாள் என்று அப்பெண்ணின் குழந்தையைக் கையில் ஏந்தி அப்பெண்ணின் தோழன் நித்திஷ் செய்தியாளரிடம் பெருமையாகக் கூறி முடித்தார்.

நன்விழி இறந்த பின்னும் அவள் வயிற்றில் இருந்த பெண்சிசு உயிரோடு மீட்கப்பட்டது." என்ற செய்திகள் எல்லாத் தொலைக்காட்சியிலும் மாறி மாறி அதே செய்தியை ஒளிப்பரப்பி முடித்தார்கள்.

நந்தவனம் குடியிருப்பில் நித்திஷ் கூறியது போலவே நன்விழிக்காக அங்கே இரங்கல் கூட்டம் நடைப்பெற்றது. ஆனால் இம்முறை நித்திஷ் அங்கே செல்லவில்லை.

கையில் பிறந்த குழந்தையை வைத்து எப்படி வளர்க்க என்று புரியாது தவிக்க, குழந்தை வீல்லென்று கத்த துவங்கியது. மருத்துவமனையில் நர்ஸ் சொல்லிக் கொடுத்த வகையில் நீரில் பால் பவுடரை கலக்கி கொண்டிருந்தான். வாசலில் நிழலாட, அங்கே வினோதினி நின்றாள்.

"சாரி டா... குழந்தையைக் கொடு. நான் பார்த்துக்கறேன்." என்று அவளாக வாங்கிக் கொண்டாள்.

நண்பன் மகளைத் தன் முதல் குழந்தையாக வளர்க்க திட்டமிட்டுயிருந்தான் நித்திஷ். வினோதினி நன்விழியின் தியாகத்துக்கு முன் சின்ன உதவியாக நித்திஷோடு அக்குழந்தையை வளர்க்க எண்ணினாள்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
 


நன்விழியை காப்பாற்றி சுமூகமா கொண்டு போனா ஆர்டினரியா இருக்கும்.
கர்ப்பிணி பெண் பிணைகைதியா மாட்டினாலும் எப்படி ஹாண்டல் பண்ணறா என்ற கான்சப்ட் தான் இந்த கதை.

  
     
    

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...