சிரமமில்லாமல் சில கொலைகள்-11

 


🩸-11

     அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள். 

  எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள்.

    மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள்.

      "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள்.

     "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள்.


   அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள்.


   மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு தானே. அந்த அன்பு அப்பா, அம்மா, கூடப் பிறந்தாவா தவிர்த்து நம்ம கட்டிக்கப் போற கணவரிடமும் வரலாம். என்ன அந்தக் கணவரை நாமளா தேடிட கூடாது. அப்படித் தேடி காதலிச்சா தப்பு" என்றாள்.


     "ஒருவேளை அவரா வந்து காதலிப்பதா சொன்னா என்ன செய்ய? இல்லை அவர் அந்தப் பெண்ணிடம் சொல்லாம  காதலிக்கறார்னா என்ன செய்யறது."


      "யார் அந்த அவரு" என்று மல்லி தோளை சுரண்ட, "இல்லை சும்மா அப்படியொருத்தார் இருந்தா என்ன செய்யனு அபிப்ராயம் கேட்டேன்."


     "இந்த மழுப்பல் வேண்டாம் யாருனு சொல்லு."- மல்லி.


    "சொன்னா வேற யாரிடமும் சொல்லிட மாட்டியே?" என்றதும்


     "சாமி சத்தியம் சொல்ல மாட்டேன். யாரை விரும்பற?" என்றாள் மல்லி ஆர்வமாக இருந்தாள்.


     "நான் யாரையும் விரும்பலை. என்னைத் தான் அத்தான் விரும்புது." என்றாள்.


      "யா.. யாரு ஆடலரசன் அவங்களா?" என்றதும் அபரஞ்சியோ


    "சீ இல்லைப்பா... எங்க பெரிய அத்தான் சர்வேஷ்வரன்." என்றவளின் பேச்சில் மகிழ்ச்சியெல்லாம் இல்லை.


    "நீ கூடக் காதல் என்றதும் எப்பவும் உங்க வீட்டை நோட்டமிடுவது ஆடுலரசு தானே. அவரோனு நினைத்தேன்."


     "பச் சர்வேஷ் அத்தான் தான் எனக்குக் காலேஜ் சீட் வாங்கிருக்கு தெரியுமா? எனக்கு இப்ப வரை எத்தனை பரிசு தரும் தெரியுமா. என் சித்தி பொண்ணு மனிஷாவுக்குக் கூட இப்படிப் பரிசு தரலை.


   நான் ஏதோ பக்கத்தில இருப்பதால் தந்துக்கிட்டு இருக்குதோனு நினைச்சேன். ஆனா அத்தான் என்னை விரும்புது." என்றவள் திருதிரு விழித்தாள்.


     "இதுல தப்பென்ன பா. உனக்கும் பிடிச்சா காதலி. உங்க மாமா பையன் தானே." என்று மல்லி சாதரணமாகச் சொன்னாள்.


     அபரஞ்சியோ, "இல்லைபா உனக்கு எங்க அத்தை பற்றித் தெரியாது. அதுவுமில்லாம எனக்கு அத்தான் மேல எந்தவித ஆசையோ, காதலோ வைக்கவும் பயமா இருக்கு. ஆசைப்பட்டுக் கிடைக்கலனா என்னால ஏற்றுக்க முடியாது மல்லி." என்று அழுதாள்.


     "இதுக்கு எதுக்கு அழுவுற விடு... அதான் காதலிக்கலையே. பிறகென்ன" என்று மல்லி சர்வசாதாரணமாகச் சொல்லி திரும்பினாள்.


     சர்வேஷ்வரன் அத்தான் விரும்புதே. அது மனசு கஷ்டப்படுமே என்றவள் மனதிற்குப் புரியவில்லை அவன் கஷ்டப்பட்டால் தன் இதயம் வலிப்பது எதற்கென்று புரியாத வயதல்லவா?!


        சுடிதாரில் தேவதையொருத்தி தினமும் தன்னைத் தாக்கிவிட்டு கல்லூரிக்கு  கிளம்புகின்றாள். அதனை நின்று இரசித்து வேலைக்குச் செல்கின்றான் சர்வேஷ்.


    அன்றும் தங்கள் தெரு முனையில் நின்று அவள் வரும் வருகைக்காகக் காத்திருந்தான்.


     சுடிதாரில் புத்தகப்பை ஒருபக்கம் மாட்டி கையில் சில புத்தகம் ஏந்தி அன்னநடையிட்டுத் தன்னைக் கடந்து செல்லும் அபரஞ்சியை எதிரில் நண்பன் பேச பேச காதில் ஒரு வார்த்தையும் பதிவாகமல் இரசித்து நின்றான்.


     அவள் சென்றபின், "உன்கிட்ட நான் என்னென்ன பேசினேன்னு இப்ப சொல்லு டா" என்று நண்பன் கேட்கவும்,


      "வேலை எப்படிப் போகுது கேட்ட, பைக் எத்தனை கிலோ மீட்டர் வேகம்.." என்று கூறவும் சர்வேஷ் எதிரில் இருந்தவனோ, "இராசா... நைட் ஷோ வர்றியானு கேட்டேன் டா. நீ என்ன போனவாரம் பேசியதுக்கு இப்ப பதில் சொல்லற... அடேய்... காதலிங்க டா. ஆனா சொல்லிட்டு பண்ணுங்க. ப்ரெண்ட் நான் சுதாரித்து இருப்பேன். இப்ப பாரு இங்க நிற்கறதே வேஸ்ட். " என்று சலிப்படைந்து சென்றான்.


      "டேய் டேய்... நான் யாரை காதலிக்கறேன். நீயா கதை கட்டாதே." என்று சர்வேஷ் மறைக்க முயன்றான்.


     "ஏலேய்... என் தங்கை மல்லி சொல்லிட்டா... நீ உன் அத்தை மகளை விரும்பறதை." என்று சர்வேஷ் நண்பன் சிரிக்கவும் சர்வேஷ் அக்கம் பக்கம் பார்த்து,


    "மோகன்... மல்லிக்கு எப்படித் தெரியும்?" என்று ஆர்வம் கொஞ்சம் பயம் கொஞ்சமாகக் கேட்டான். மல்லிக்கு தன் காதல் தெரிகிறதென்றால் அபரஞ்சியிடம் உரைத்திருப்பாளே... என்ற நோக்கத்தில் கேட்டு முடித்தான்.


     "எப்படித் தெரியுமா. என் காதலி  அபரஞ்சி சொன்னா." என்று இடக்காகக் கூற, சர்வேஷ் அவனின் காலரை பிடித்துச் சினத்தோடு நின்றான்.


    அவனோ, என்னடா நீ சட்டுனு சட்டையைப் பிடிக்கிற. பின்ன என்ன நீ விரும்பறது உன் மாமா மகளுக்குத் தெரியாதா. அவ தான் மல்லிக்கு சொன்னா. நேற்று என்னிடம் கேட்டா.


    சர்வேஷ் அண்ணா ரஞ்சியை விரும்புதே என்னிடம் சொன்னியானு கேட்டு உலுக்கி எடுத்துட்டா." என்று கூறினான்.


    "மோகன் நான் இன்னும் ரஞ்சிக்கு சொல்லலை டா. நல்லா கேட்டியா உன் தங்கை மல்லிக்கு ரஞ்சி தான் நான் அவளை  விரும்புவதைச் சொன்னாளா?" என்று கேட்டதும்,


      "ஏன்டா.. இது தெரியாம தான் காதலிக்கறியா. போன வாரம் ஞாயிறு பேசினாங்களாம். நான் வாரத்துக்குச் சனி ஞாயிறு தானே வர்றேன். அதான் நேர்ல கேட்டுப்போம்னு வந்தேன். நீ என்ன அபரஞ்சிக்கு நீ விரும்புவதே தெரியாதது மாதிரி பேசற" என்றான் மோகன்.


     "அவளுக்குத் தெரியாது.... ஆனா ரீசன்டா என் காதல் தெரிஞ்சுயிருக்கு. எப்படித் தெரிந்துயிருக்கும்?" என்றவனின் யோசனை அத்தையாரிடம் வந்து நின்றது.


    "கண்டுபிடிச்சிட்டேன் என் அத்தையிடம் பேசியதை  அபரஞ்சி கேட்டுயிருப்பா. இல்லை அத்தை மாமா என் காதஷை பற்றி விவாதித்து இருப்பாங்க அப்போ கேட்டிருக்கணும்" என்றவன் மனம் தன் காதல் அறிந்தபின் அபரஞ்சியைக் காண துடித்தது.


     "என்ன நேரிடையா கேட்க போறியா...? ஓகே சொல்வாங்களா?" என்றான் மோகன்.


       "அவளுக்குப் பதினெட்டே பிறக்கலை. எங்கிருந்து காதலை சொல்ல... காத்திருக்கணும்." என்றான் சோர்வாகச் சர்வேஷ்.


       "காதலிக்கறியானு கேட்க வேண்டாம். ஜஸ்ட் நேர்ல போ... என்ன ரியாக்ஷன் தர்றானு பார்ப்போம். பிறகு முடிவெடுக்கலாம்." என்று மோகன் கூறியதும் சர்வேஷிற்குச் சரியாகத் தோன்ற மாலை சந்தித்திட துடித்தது.


      இன்று பிரதோஷம் கோவிலுக்கு வருவா... அங்க வைத்து பார்க்கணும் என்று கிளம்பிவிட்டான்.


     இவனை மட்டும் அவள் விரும்பிட்டா கையில் பிடிக்க முடியாது. பதினெட்டு முடியலையா...? மல்லிக்கு நாலு மாதம் முன்னவே பிறந்த நாள் வந்துட்டு போயிடுச்சு. மல்லியை விடச் சின்னப் பொண்ணா...? என்றவன் சிந்தனை அவன் பணியில் சென்றுவிட்டது.


        கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்தவள் உடையை மாற்றிக் கோலிலுக்கென்று தாவனி அணிந்து தலையைப் பிண்ணி அம்புஜம் தொடுத்த ஜாதிமல்லியை சூடி முடித்தாள்.


      பிறகு கூடையில் பூவை எடுத்துக் கொண்டு புறப்பட, ஏதோவொன்று குறைவதை உணர்ந்தாள்.


     "அம்மா... வில்வம் இலை இல்லையே... எங்க வைச்சிருக்க?" என்ற குரல் பக்கத்தில் இருக்கும் சர்வேஷ் ஆடலரசனுக்கும் கேட்டது. 


     "தோட்டத்தில் தானே இருக்கு பறிச்சுக்கோடி" என்று அம்புஜம் கூறவும் கொலுசொலி இசைக்க ஒடிவந்து பறித்தாள்.


      அபரஞ்சிக்கு எப்பொழுதும் தான் கோவில் என்றால் அங்கே தனக்கு முன் காண்பது சர்வேஷ் அத்தான். நான் இப்படிக் கத்தியதில் என்னை நோட்பண்ணறாரா? என்றவள் மனம் அந்தப்பக்கம் விழியுயர்த்திக் காண சொல்ல பார்த்தாள்.


     அவளையே இந்நேரம் வரை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்த சர்வேஷ் சட்டென அபரஞ்சி தன்னைப் பார்த்ததும் மாடியில் இருந்து, "மோகன்... கோவிலுக்குக் கூப்பிட்டியே... ரெடியா...?" என்று கேட்டான். 


    "ஆல்மோஸ்ட் டா" என்று நின்றதும் அபரஞ்சியோ, சே மல்லி அண்ணா ஏற்கனவே தயாராகி இருக்கார். எதச்சையமா சர்வேஷ் அத்தான் கிளம்பயிருக்கார். நான் தான் குழம்பிட்டு இருக்கேன் என்று இலை பறித்துப் பூஜை கூடையில் வைத்து புறப்பட்டாள். 


     மல்லிக்கு கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக இல்லை. தந்தை மட்டும் தான் அதனால் பெரிதாக எதுவும் சிரத்தை எடுக்க மாட்டாள்.


       சிவன் கோவிலும் விஷ்ணு கோவிலும் அருகருகே இருக்கும் அவ்விடத்திற்கு வந்தடைந்தாள்.


    முதலில் விநாயகரை துதித்து முடித்துச் சிவனுக்கு வில்வ இலைகளைச் சாற்றிச் சர்வேஷை பற்றி நீலகண்டனிடம் சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டாள்.


    பின்னர் முருகனையும் அம்மனை வேண்டி தலத்தைச் சுற்றி முடித்துப் பக்கத்து கோவிலுக்கும் செல்ல, தாய் தொடுத்த துளசி மாலையை விஷ்ணுவுக்குப் போட்டு அழகு பார்க்க குருக்களிடம் தந்தாள்.


        எப்பொழுதும் தீபராதனை காட்டும் பொழுது வந்து வருகை பதிவு செய்வாரே இன்று எங்கே..? என்று கண்கள் அலைபாய்ந்தது.


      ஒர் மனமோ, 'என்னயிது அபரஞ்சி கோவிலுக்கு வந்துவிட்டு உன் அத்தானை தேடுகின்றாய்.' என இடித்துரைத்தது.

  

     தலையில் தன் இரு கைகளில் கொட்டிக்கொள்ளக் குருக்களோ, "யானைமுகத்தான் அங்கே இருக்கார். நீ என்னமா இங்க கொட்டிட்டு இருக்கே." என்றதும் அசட்டுப் புன்னகை அளித்து, தீபம் தொட்டுக் குங்குமம் பெற்று துளசி தீர்த்தம் பருகி வணங்கி எழுந்தாள்.


     தலம் சுற்றி வந்து நிற்க அங்கே சின்னதாகப் படிக்கட்டுட்டில் சர்வேஷ் நின்றிருந்தான்.


     சர்வேஷை கண்டதும் அத்தான் என்ற உவகை வர சின்னதாய் ஒர் சிரிப்பை உதிர்ப்பாள். இன்று அச்சிரிப்பை உதிர்க்கவும் தயங்கினாள்.


       அவள் சர்வேஷை கடந்து செல்லவும், சர்வேஷால் தாங்கி கொள்ளயியலாத வகையில் இதயம் கணக்க, கூடவே ஓடிவந்தான்.


    மோகனிடம் வண்டி எடுத்து வர சாவியையும் கொடுத்து விட்டான்.

  

      "அபரஞ்சி... நில்லு.." என்றதும் பெரியவன் என்ற ரீதியில் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றாள்.


      'என்ன நான் காதலிக்கறேன் என்றதும் ஒதுங்கி போற. என் காதலுக்குப் பதில் என்ன' என்று கேட்க துடித்த நாவை அடக்கி, "காலேஜ் எப்படிப் போகுது. ராகிங் ஏதாவது இருக்கா? உனக்கு இந்தக் குரூப் பிடிச்சிருக்கு தானே?" கேட்டான்.


     "எல்லாம் சரியா தான் போகுது அத்தான். எதுவும் குறுக்கே வராதவரை சரியா தான் நடக்கும்." என்று பதிலளித்தாள்.


     அவள் பேச்சிலே தன்னை எட்டிநிறுத்தி கேள்வி கேட்பதை நிராகரிப்பதை அறிந்து உள்ளுக்குள் மெச்சி கொண்டான்.


      "வேறதும் இல்லையே நான் போகவா. அம்மா தேடுவா.." என்று கேட்கவும் தலையைச் சரியென்று ஆட்டிவிட்டான்.


      அவள் சென்றதும் மோகன் அருகே வந்து "என்னடா... ரிசல்ட் என்ன?" என்றதும் "பச் எதுவும் கேட்கமுடியலை." என்றான் சர்வேஷ்.


     "வாவ் செம டா.. செம... இப்படியேயிரு. பிடி வண்டியை" என்று மோகன் கொடுத்துவிட்டு கேலிபுன்னகையோடு அகன்றான்.


      சர்வேஷிற்குச் சங்கடமாகவும் அதே சமயம் என்னவோ போல் ஆனது.


     இங்கே வீட்டிற்கு வந்து நிற்க, தந்தை கிருஷ்ணன் லட்டு இனிப்பு வாங்கி அம்புஜத்திற்கு ஊட்டி விட்டார்.


     "அப்பா..." என்று ஒடிவந்த மகளைக் கண்டு அம்புஜத்திடமிருந்து இரண்டடி எட்டி நின்றார்.


      "வாடா இந்தா..." என்று லட்டை வாயில் வைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


     "உன் காலேஜ் பக்கத்தில் வீடு பார்த்தாச்சு. இந்த மாதத்தில் அங்க போயிடுவோம். உனக்கும் காலேஜ் கிட்ட. எனக்கும் ஆபிஸ் போகச் சுலபம்." என்று கூறி முடித்தார்.


    "அப்பா இந்த வீடு தோட்டம் கோவில் எல்லாத்தையும் விட்டுட்டு போகணுமா?" என்றதும் "ஆமாம் மா. வேற வழியில்லை." என்று கடந்துவிட்டார்.


      அம்புஜம் மற்றொரு இனிப்பு பெட்டியை எடுத்துக் கொண்டு, "அபரஞ்சி கூட வாடி, எங்கண்ணா அண்ணியிடம் இனிப்பை கொடுத்துட்டு இந்த விஷயம் சொல்லிடுவோம். இல்லை பக்கத்தில இருந்துட்டு ஒரு வார்த்தை சொன்னாலா ஐங்க தங்கைனு அண்ணி அண்ணாவை இடிப்பா." என்றதும் அபரஞ்சி சரியென்று கூடத் துணைக்கு வந்தாள்.


       அம்புஜம் அபரஞ்சி தங்கள் வீட்டு வாசலில் நுழைவதை கண்டு வேகமாக வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வர அவசரம் கொண்டான். அதுவோ இன்று பார்த்து வழுக்க, அபரஞ்சி தன் சர்வேஷ் அத்தானை திரும்பத் திரும்பப் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தாள்.


      அங்கே ஆடலரசன் தன் புத்தகப் பையில் அபரஞ்சி ஆடலரசன் என்று எழுதி பிளேம்ஸ்(flames) போட்டு கிறுக்கியிருப்பானோ என்னவோ பெண் பெயர் மட்டும் எப்படியோ சாமர்த்தியமாகக் கிழித்து விட்டான். ஆனால் நிர்மலா சின்னப் பையனின் குட்டை கண்டுபிடித்துப் பொரிந்து கொண்டிருந்தார்.

   

    இதில் அம்புஜம் வரவும் அதே அனலோடு வரவேற்றார்.


-🩸🩸🩸🩸🩸


-பிரவீணா தங்கராஜ்.

     

     


  

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு