கண்ணால் காண்பது பொய்யா?

 அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து 'கண்ணால் கண்டது பொய் ஆகுமா?'' என்று வினவினார்.


'பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்'' என்றார் பீர்பால்.

''இதற்கு என்ன ஆதாரம்?'' எனக் கேட்டார் அக்பர்.

சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால்.

ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால்.

அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார்.

அடுத்து, படுக்கை அறையில் நுழைந்த அக்பர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்துவிட்டது.

படுக்கையில் பீர்பாலும் அருகில் சிறிது தள்ளி அரசியும் படுத்திருப்பதே அந்தக் காட்சி!

முகம் கடுகடுத்தது அக்பருக்கு.

அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்; அமைச்சர்களில் முக்கியமானவர்; அறிவுத்திறன் உடையவர்; ஒழுக்க சீலர்; பல சோதனைகளில் வெற்றி பெற்றவர் - இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீர்பால் செய்யும் காரியமா இது?

பீர்பாலை எழுப்பி, ''இது என்ன செயல்?'' என்றார் அக்பர்.

''மன்னர் பெருமானே, 'கண்ணால் கண்டது பொய்யாகும்' என சில நாட்களுக்கு முன் நமக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது நினைவு இருக்கிறதா? அதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன்'' என்றார் பீர்பால்.

அக்பர் இந்தக் கூற்றை ஏற்கத் தயாரில்லாதவராகக் காணப்பட்டார். உடனே ராணியை எழுப்பினார்; ''ஏன் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினீர்கள்?'' என்று கேட்டார் ராணி. அதே சமயத்தில் பீர்பாலும் அங்கே நிற்பதைக் கண்ட ராணியார் திடுக்கிட்டார்.

''மேன்மை மிக்க ராணியாரே, படுக்கையில் உங்களுக்கு அருகில் சிறிது தள்ளிப் படுத்திருந்தவர் யார்?'' என்றார் பீர்பால்.

''எங்கள் படுக்கை அறையில், மன்னரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?'' என எதிர்கேள்வி போட்டார் ராணி.

''இதை நீங்கள் உறுதியாகக் கூற இயலுமா?'' என்றார் பீர்பால்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் ராணியார் சீற்றம் கொணடு, ''உமக்கு என்ன புத்திக்கோளாறு ஏள்பட்டுவிட்டதா? அரசரின் படுக்கையில் வேறு எவர் வந்து படுக்கத் துணிவார்?'' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

ராணியின் கோபத்தைச் சாந்தப்படுத்தி, ''நீ கட்டிலில் படுக்கும்பொழுது, நான் அங்கே தூங்கிக் கொண்டிருந்ததை நீ கண்ணால் பார்த்தாயா?'' என்று கேட்டார் அக்பர்.

இந்தக் கேள்வியின் பொருள் எனக்குப் புரியவில்லையே. நான் அறைக்கு வந்தபொழுது கட்டிலில் ஒரு உருவம் படுத்திருந்தது தெரிந்தது. அது உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என எண்ணி எழுப்பாமல் நான் படுத்து கண்ணயர்ந்துவிட்டேன்'' என்று கூறினார் ராணியார்.

ராணியின் நித்திரைக்குப் பங்கம் இன்றி, அவரைத் தூங்கும்படி கூறிவிட்டு அக்பரும் பீர்பாலும் அடுத்த அறைக்குச் சென்றனர். ''ராணியின் சொற்களிலிருந்து உங்களுக்கு உண்மை புலப்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்; கண்ணால் காண்பது பொய்'' என்பதை இதன் மூலம் இப்பொழுதாவது உணர்ந்து கொள்வீர்கள் அல்லவா?'' என்றார் பீர்பால்.

இது ஒரு விஷப்பரிட்சை என்ற போதிலும், பீர்பாலும் ராணியும் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆகையால், 'கண்ணால் கண்டது பொய்தான்' என்பதை அரசர் நம்ப வேண்டியதாயிற்று.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...