சிரமமில்லாமல் சில கொலைகள்-12

🩸-12

      தாங்கள் விரைவில் அபரஞ்சி கல்லூரி இருக்குமிடம் வீடு மாற்றம் செய்வதாக கூறி இனிப்பை வழங்கவும், நிர்மலாவோ "வீடு தானே மாற போறிங்க. பெருசா வீடு வாங்கிட்டு போறதா இனிப்பை தர்றிங்க." என்று ஏளனமாக கேட்கவும் அம்புஜம் கவலை கொண்டாள். 

    அபரஞ்சி சும்மா இருக்காமல், "வீடு தானே அத்தை வாங்கிடுவோம். அப்பா அவரோட ஊர்ல இருக்கற பூர்வீக வீட்டை நிலத்தை யாராவது விலைக்கு வாங்கிட்டா இங்க சீக்கிரம் வாங்கிடுவோம்." என்று பேசவும் நிர்மலாவுக்கு இப்பேச்சே கசந்தது. 

     "அம்மா... எனக்கு காலேஜில் டெஸ்ட் வருது வா... படிக்க போகணும்" என்று இழுக்க, அம்புஜம் நிர்மலாவிடம் விடைப்பெற்றார். 

    ஆடலரசன் வியேர்வை பூத்து நின்றிருந்தான். எங்கே இந்த அம்மா தான்  விளையாட்டுக்கு செய்தவையை அத்தையிடம் மாட்டி விடுவார்களோயென அஞ்சினான். 

     அப்படி நடக்கவில்லையென்றதும் நிம்மதி கொண்டான். 

    அம்புஜம் சென்றதும் அபரஞ்சியை வழிமறைத்தான் சர்வேஷ். 

      "நான் எழுதணும் வழிவிடுங்கோ" என்று சத்தமின்றி கூறியவளை முதல் முறையாக தனது சுட்டு விரலால் தாடை நிமிர்த்தினான். 

      "காலேஜ் பக்கத்தில வீடு வந்தா என்னை மறந்துடுவியா... இல்லை... நினைவு வச்சிப்பியா?" என்றான். 

     அவள் பதில் கூறவில்லை ஆனால்  அவள் கண்களில் என்னவோ வலி தேங்கியிருந்தது. 

           சர்வேஷ் அறைக்குள் வர, "சிறுக்கி என் பையனை இப்படி வசியம் பண்ணி வைச்சாளோ.? என்ன மாதிரி மந்திரிச்சி இருக்கான். அய்யோ இந்த மனிஷனிடம் சொன்னா நம்புவாறா..? தங்கை பெண்ணை கட்டி வைக்க யோசிச்சா அவ்ளோ தான் விஷம் குடித்து செத்து போவேன்." என்று புலம்ப சர்வேஷ் வந்ததும் அமைதியாக மாறி அடுப்பங்கரைக்குள் சென்றார் நிர்மலா.
    
      அபரஞ்சியின் வாய் முகூர்த்தமோ என்னவோ, கிருஷ்ணனுக்கு ஊர் பக்கம் அவரின் வீடும் நிலமும் நல்ல விலைக்கு போகவும் அதன் பணத்தை பெற்று ஒன்றரை மாதத்தில் அபரஞ்சி கல்லூரி அருகே ஒர் தனி வீடு வாங்கி பால் காய்ச்சி குடிபெயர்ந்தார். 

   நிர்மலா(மேரி) மற்றும் அம்புஜத்தின்(தபித்தாள்) அண்ணன் சந்திரசேகர்(ஜார்ஜ்) இருவரும் புதுமன புகுவிழாவுக்கு வந்திருந்தனர். ஆடலரசனையோ வரவிடாமல் நிர்மலா தடுத்துவிட்டார்.  சர்வேஷ்வரனோ ஒர் வேலை விஷயமாக வெளியூர் போக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். 

      அம்புஜத்தின் தங்கை கௌசல்யா(டெய்சி) மற்றும் அவள் கணவன் ஆனந்த்(ஆண்டர்சன்) வந்திருந்தார். கூடவே மகள் மனிஷாவையும்(லிசா) அழைத்து வந்திருந்தார். 

     இலட்சத்தீவில் பணிப்புரிந்து இங்கே மாற்றலாகி வந்திருக்க, அம்புஜத்தின் வீடு காலியானதும் அங்கே வர எண்ணி விவரங்களை பேசி முடித்தனர். 

    சந்திரசேகரனின் சின்னதங்கை மற்றும் நிர்மலாவின் ஒன்றுவிட்ட தம்பி ஆனந்த் என்றதில் நிர்மலா குடும்பத்தார் இவர்கள் வருகையை பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இதில் (லிசா)மனிஷாவின் கண்கவரும் உடைஅலங்காரம் நகையலங்காரம் அபரஞ்சியை விட மிளிர்வை காட்டியது அவர்களுக்கு.  

       இப்படியாக சர்வேஷ் அருகேயிருந்த அபரஞ்சி கல்லூரி பக்கத்திலும், சர்வேஷ் அருகே மனிஷா வீட்டு ஆட்களும் வந்து சேர்ந்திருந்தனர். 

     வழக்கம் போல பரிசு எடுத்து கொண்டு பெரியத்தை வீட்டுக்கு வந்தப்பின்னே இங்கே அபரஞ்சி இல்லை என்பதை உணர்ந்து சத்தமில்லாமல் கிளம்ப எண்ணினான். ஆனால் அவன் கெட்ட நேரம் மனிஷா பார்த்து விட்டாள்.

      "ஹாய் பெரியத்தான் எப்ப வந்தீங்க. என்னயிது பரிசா? எனக்கா?" என்று வெடுக்கென வாங்கிடவும், ஒர் நொடி தன் உயிரை யாரோ பரித்த உணர்வில் தவித்தவன் பிறகு, "இல்லைமா அது வேறயொருத்தருக்கு" என்று திரும்ப வாங்கி விட்டான். 

    மனிஷா ஏமாற்றமாக உணரத்துவங்க, "எனக்கு இப்ப தான் நினைவு வருது போயிட்டு அப்பறம் வர்றேன்" என்று நழுவினான். 
   
      மோகன் தன் வேலையை விட்டு பயிர் தொழில் செய்ய ஆரம்பித்து இருந்தான். அதனால் வீட்டிலிருக்க அங்கே சென்றான். 

     மல்லிகா வீட்டிலிருக்க  வரவேற்றாள். உட்காருங்க அண்ணா." என்றவளிடம் 

     "மோகன் இல்லையா மா?" என்றான்.

     "அப்பாவோடு விவசாயம் பண்ண ஆரம்பிச்சதும் பிஸியா இருக்கான் அண்ணா. இதோ வந்திடுவான். என்ன அண்ணா ஏதேனும் சொல்லணுமா?" என்று கேட்க இல்லையென மறுத்தான். 

     "அபரஞ்சி பேசினாளா மா. படிப்பு எப்படி போகுதாம். இங்க எல்லாரையும் விசாரிச்சாளா?" என்றதும் மல்லி தயங்கி தயங்கி கேட்டு விட்டாள். 

     "அண்ணா... நீங்க அவளை காதலிக்கறிங்க தானே. ஏன் அண்ணா நீங்க விரும்புவதை அவளிடம் நேர்ல சொல்லலை?" என்று கேட்டாள். 

     "நான் அவளை விரும்புவது அவளுக்கு தெரியும் தானே.?" கேட்டான். 

     "தெரியும் அண்ணா." என்றாள் மல்லிகா.

     "ஏதாவது சொன்னாளா மா?" என்றதும் சிறிது அமைதிக்கு பின் "அவள் காதலென்றாலே பாதி தூரம் ஓடுவா அண்ணா. எதுவும் வெளிப்படுத்தி பேசலை. ஆனா தவிர்க்க பார்க்கறா" என்றதும் சர்வேஷ் வருந்தி கிளம்பிவிட்டான். 

       அவளை தினமும் பார்த்து விடியலை கண்டவனால் பக்கத்து வீட்டில் தன் பாவையில்லாது வருந்தினான். 

       அபரஞ்சியை காணாமல் தவித்தவன் இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாதென உணர்ந்து அன்று அலுவலகம் விட்டு முன்னதாகவே தன் பெரியத்தை வீட்டுக்கு வந்திருந்தான். 

      அம்புஜம் பொதுவாக பேசி உபசரிக்க, சர்வேஷ் பார்வை என்னவோ வாசலிலே இருக்கவும், அவன் வந்ததன் பொருள் உணர்ந்து, "சர்வேஷ் தேவையற்ற ஆசையை மனதில் வளர்த்துக்காதே. அண்ணிக்கு எங்களை பிடிக்காது. நீ பாட்டுக்கு அபரஞ்சியை தேடி இங்க வந்தேனு தெரிந்தாலே உன்னை திட்டுவாங்க. தேவையில்லாம அபரஞ்சி மேல பழி சொல்வாங்க." என்று தன்மையாக எடுத்து கூறவும், 

       "அத்தை இதெல்லாம் தெரியாம நான் அபரஞ்சி மேல விருப்பம் கொள்ளாம இல்லை. அவளோட போன ஜென்மத்தில் வாழ முடியாத அளவுக்கு வலி எனக்குள் இருக்கு. என்னவோ நான் அவளை விட்டு இருக்க கூடாது. அவளை கைக்குள்ள வைத்து பாதுகாக்கணும்னு மனசு சொல்லுது. எனக்கு எப்படி அதை மற்றவர்களிடம் சொல்லறதுனு தெரியலை. ஏதோவொரு குரல் மட்டும் அபரஞ்சி உனக்காக பிறந்திருக்கா உன் வேண்டுதலுக்காக மட்டுமே என்று ஒர் ஒலி எப்பவும் செவியில் கேட்குது. நீங்க நம்புவீங்களோ என்னவோ?" என்று ஆற்றமையோடு பகிர்ந்தான். 

      கையெடுத்து கும்பிட்டபடி, "ஏற்கனவே அபரஞ்சிக்கு பதினெட்டு வயசில் கண்டம் இருக்குனு அவபிறந்தப்பவே ஜாதகத்தில் சொல்லியிருந்தாங்க. பொய்யோ மெய்யோ எங்களுக்கு எங்க மகள் வேண்டும்." என்று முடித்தார் அம்புஜம். 

     "ஏன் அத்தை என்னால அவ உயிருக்கு ஆபத்து வரும்னு நினைக்கிறிங்களா?" வலியோடு கேட்டான். 

      "இல்லையா பின்ன. இப்பவரை அவளுக்கு பிரச்சனையென்று அவளை எதுவும் நெருங்கலை. நீ மட்டும் தான் அவளை சுத்தி சுத்தி வர்ற. உன் காதல் தான் பிரச்சனையை இழுத்துட்டு வருமோன்னு பயமாயிருக்கு. அவளுக்கு வேற அடுத்த மாதம் துவங்கினா பிறந்த நாள் வருது. உன்னை கெஞ்சி கேட்கறேன். அவளை விட்டுட்டு அண்ணி சொல்றவளை திருமணம் செய்துக்கோ. எங்களை தனியா விட்டுடு." என்று கேட்கவும் சர்வேஷ்வரன் நிதானித்து எழுந்தவன் வெளியேற நடந்தான். 

   ஒரு கணம் நின்று திரும்பி, "என்னாலோ என் காதலாலோ என் அபரஞ்சிக்கு ஆபத்து வர விடமாட்டேன் அத்தை. நீங்க சொல்லற மாதிரி அவளுக்கு ஆபத்து வரும்னு எனக்கும் தெரியும் அதனால தான் அவளை பாதுகாக்க ஒரு மெய்காவலாளியா அவளையே சுத்தறேன். என் மெய் காதல் புரியும் பொழுது அவளா என் பெயரை உச்சரிப்பா." என்று நகர்ந்தான். 

     வெளியே அபரஞ்சி நின்று கேட்டதும் அவள் தனக்காக எதுவும் பேசாமல் நிற்பதை எண்ணி உள்ளுக்குள் வலித்தாலும் பேசாமல் சென்றான். 

       அம்புஜம் மேற்கொண்டு எதையும் மகளிடம்  பேசவில்லை. கணவர் கிருஷ்ணனிடம் மட்டும் சர்வேஷ் வந்து சென்றதை கூறினார். 

     "சர்வேஷ் அபரஞ்சியிடம் பேசினானா?" என்ற ஒற்றை கேள்வியை மட்டும் எழுப்பினார். 

      "அவன் அபரஞ்சியிடம் காதலென்று பேசியதேயில்லை" என்றதும் நிம்மதியடைந்தார். 

        சர்வேஷ் முன்பு போல கோவிலுக்கு செல்லவில்லை. தனித்து இருக்க முயன்றான். 

    மோகன் ஏதேனும் கேட்டாலும் பதிலளிக்காமல் கடந்தான். 

      மனிஷா சர்வேஷிடம் பேச அவனோ பேச்சிலே எட்டி நிறுத்தினான். 

     ஆடலரசன் சாதரணமாக பேசுவான். ஆனால் காதலென்ற துளிரிடும் கணம் அவனுள் அபரஞ்சி என்றவளை தான் நினைக்க தோன்றும். 

         சர்வேஷ் தன்னவளிடம் காதலை சொல்லாமல் பெரியவரிடம் கேட்டு அவர்கள் இப்படி தான் தடுப்பார்கள் தான் அபரஞ்சியிடம் இதற்கு விடை கேட்டிடுவோமென அன்று கல்லூரிக்கு வெளியே வரும் வழியில் தனித்து காத்திருந்தான். 
   
      பெண்கள் படிக்கும் கலைக்கல்லூரி  ஒவ்வொருத்தராக செல்லவும் பார்த்தவன் அபரஞ்சி தன் தோழியிடம் கதை பேசி வந்தவள் சர்வேஷை கண்டதும் எங்க பெரியத்தான் வந்திருக்கு. என்று கூறவும் அப்போ அவளை தான் அழைத்து செல்ல வந்திருப்பதாக எண்ணி தோழி முடிவு செய்து ஒதுங்கி விட்டாள்.

     "உன்னிடம் தான் பேச வந்தேன் அபரஞ்சி. ஏறு இங்க பேச வேண்டாம்" என்று கூறவும் அவனின் வண்டியில் ஏறினாள். 
   
     பாதை அவள் வீட்டிற்கு செல்லும் தடத்தில் தான் பயணித்தது.   

    வீட்டிற்கு இன்னமும் மூன்று தெரு கடந்தால் வந்திடும். ஆனால் நிறுத்திவிட்டு, கேள்வியாய் நோக்கினான். 

      "பதில் சொல்லு ரஞ்சி..." என்றான் எதையும் கேட்காமல்...

      "என்ன பதில்?" என்று விழித்தாள். அவன் தன்னிடம் காதலை பற்றி கேட்கின்றானா? 

    "நான் என்ன கேட்கறேனு தெரிந்தே புரியாம இருக்கியே.." என்று சிரமப்பட்டு நின்றான். 

      "நான் உனக்கு பரிசு கொடுத்தது, உன்னை அதிகமா கேர் எடுத்து பார்ப்பது பற்றி அத்தை மாமா பேசிக்கிட்டதில் உனக்கு தெரிந்திருக்குமே. மல்லியிடம்  கூட நீ அதை பற்றி பேசியிருக்க, அன்னிக்கு அத்தையிடம் பேசினப்பவும் வாசலில் இருந்தியே" என்று கேட்டவனை பார்க்க முடியாது மண்ணை பார்த்து கொண்டிருந்தாள். 

     "இதை பற்றி பேச எனக்கு தான் வயசில்லையே அத்தான். இருந்தாலும் சொல்லறேன்... அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி ஒர் அடிகூட சின்னதா எடுத்து வைக்க மாட்டேன். 

    ஆனா அம்மா பயப்படுகின்ற மாதிரி எனக்கு உங்க மேல பயமில்லை. எனக்கு ஆபத்து உங்களால் வரவே வராது." என்றதும் அவளை விழியில் ஊடுருவி பார்த்தான். 

     "என்னால ஆபத்துயில்லை என்று நம்பறியே அது போதும் அபரஞ்சி." என்றவன் அவள் கையை பிடித்து அவளுக்கு வாங்கிய பரிசான வளையலை மாட்டி விட்டான்.
     
      "அத்தான் என்னயிது பளபளக்குது. தங்கமா... அய்யோ... வேண்டாம். அம்மா பார்த்தா திட்டும்." என்று பயந்து கையை உருவ முயன்றாள்.

      "உன் பிறந்தநாளுக்கு பரிசுனு வைச்சிக்கோ. உனக்கு வாங்கியதை யாருக்கும் கொடுக்க எனக்கு மனசில்லை. இதயமும் அப்படி தான். உன்னை தவிர வேறொருத்திக்கு கொடுக்கப்போறதும் இல்லை." என்று விருவிருவென நடந்தான். 

     வீட்டுக்கு வந்து சாவகாசமாக ஹாலில் அமர்ந்து, ரேடியோவை திருப்பினான். 

    அதற்குமுன் நிர்மலா எரிமலையில் அள்ளி பருகியவளாக வந்து சர்வேஷ் முன் நின்றாள். 

     "நீ அந்த அபரஞ்சியை விரும்பறியா டா?" என்று ஆவேசமாக கேட்ட தாய் நிர்மலாவிடம், 

     "அம்மா... என்ன பேசற... அவ காலேஜ் படிக்கிறா..." என்று பேச்சை மாற்ற முயன்றான். 
   
     "நீ அவளை விரும்புவதாகவும் அவளுக்கு படிக்க காலேஜில் பார்ம் வாங்கியதும் நீதானாமே... அவளுக்கு அடிக்கடி ரேடியோ நோட்ஸ் புக், ஹீரோ பென்(pen), கொலுசு, கரடி பொம்மை, இப்ப ஏதோ வளையலை பரிசா கொடுத்துட்டு வந்தியாமே. அதுவும் அவ கையை பிடிச்சி போட்டியாம்." என்றதும் சுர்ரென சினம் உச்சத்தை தொட்டது. 

      "ஆமா... நான் என் அத்தை பொண்ணுக்கு உரிமையா கொடுத்தேன். கையை பிடிச்சிட்டு கொடுத்தேன். உங்ககிட்ட யாரு போட்டு கொடுத்தா...?" என்று சீறவும் நிர்மலா அந்த நபரை காட்டிக் கொடுக்காது தவிர்த்தார். 

    "யாராயிருந்தா என்னடா... அத்தை பொண்ணுனா இதோ நிற்கறாளே மனிஷா இவளுக்கு கொடு. அவளை இந்த சித்திரை வந்தா உனக்கு பேசி முடிக்கலாம்னு நானும் உங்கப்பாவும் முடிவு பண்ணியிருக்கோம்." என்றதும் 

    நிமிர்ந்து நடையிட்டவன், "நீங்க பேசினா நீங்களே உங்க சின்ன பையனுக்கு கட்டி வையுங்க" என்று திமிராக அறைக்கு சென்று தாழிட்டான்.

   ஆடலரசனோ(ஆரோல்) அண்ணா என்ன சொல்லிட்டு போறான். அப்போ எனக்கு பிடிச்சதுனு சொன்ன மாவடு செய்து கொடுத்தது, எனக்கு ஜலதோஷம்னு கோயிலிலிருந்து துளசி தீர்த்தம் கொண்டு வந்து என் ஜன்னலில் வச்சது, விநாயகர் டாலர் கழுத்துல அம்சமா இருக்குனு எழுதினது எல்லாம் யாரு? அபரஞ்சி தானே என்னை உரிமையா பேசுவா? என்று குழப்பத்தில் தவித்தான். 

     இங்கே நிர்மலா(மேரி) சந்திரசேகர்(ஜார்ஜ்) இருவருமே மனிஷா(லிசா) பெற்றோரான ஆனந்த்(ஆண்டர்சன்) கௌசல்யா(டெய்சி) இருவரிடம் சர்வேஷ் பற்றிய பேச்சு தான் எழும்பியது. 

    இதில் ஆடலரசன்(ஆரோல்) விரும்புவதை நிர்மலா மட்டுமே அறிவார். 

      இத்தனை களோபரம் இங்கே நடக்க, அபரஞ்சியோ சர்வேஷ் அணிவித்த வளையலை கழட்டவும் பிடிக்காமல் அதே நேரம் அம்மா என்ன சொல்வாரோயென்று வீட்டுக்கு வந்ததும் முழுக்கை சுடிதாரை அணிந்தாள். 

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

     
  
     

    

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு