முதல் முதலாய் ஒரு மெல்லிய-5

 

💘 5

      அடுத்த நாள் கல்லூரி கிளம்பும் போதே, இன்று எப்படியாவது அஸ்வினோடு போவதை தவிர்க்க லேட்டாக செயல்பட்டாள். ஆனால் அவளுக்கு தெரியாது அஸ்வின் அவளது சிறு அசைவையும் கவனித்து அவனும் தாமதம் ஏற்படுத்திக் கொண்டான்.


பவித்ரா விஸ்வநாதனிடம் '' அங்கிள் எனக்கு டைமாகும் போல இருக்கு அவரை வேணும்னா கிளம்பிப் போகச் சொல்லுங்க அங்கிள்'' எனக் கூறினாள். கல்லூரி என்பதால் முதல் வகுப்பு தாமதமாக சென்றாலும் கவலையில்லை. அலுவலகம் அப்படியில்லையே.


''
இதே தான் அவனும் சொன்னான். டைமாகும்னா சேர்ந்தேப் போங்க நான் கிளம்பறேன்'' என சென்றார்.


இது என்னடா வம்பா போச்சு , எப்பவும் போல கிளம்பி இருந்தாலும் நான் முன்னாடிப் போய் இருப்பேனென தன்னையே நொந்துக் கொண்டாள் பவித்ரா  .
பைக்கில் அமர்ந்தப் பின்னும் எப்பொழுதும் போலப் பேசாது வந்தனர். பவித்ராவுக்கு சற்று அச்சம் ஏற்பட இறங்கும் போது தொலைப்பேசி எடுத்து ‘’ஹலோ அப்பா” என தானாக பேசிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.

 

   அஸ்வின் அவளை ''பவித்ரா'' என மெதுவாக கூற கேட்டும் கேட்காது போல் நடந்தாள். வகுப்பறை வந்தும் பதட்டம் இருந்தன.


ரம்யா, சஞ்சனா வந்தவுடன் லேடீஸ் ஹாஸ்டல் பற்றி தீவரமாக கேட்டாள்.

   பதில் மட்டும் அவளுக்குச் சாதகமாக இல்லை. மேலும் ஐந்து நாட்கள் அஸ்வின் கண்களுக்குப்படாது ஓடினாள். இவ்விஷயம் அஸ்வினுக்கு நன்குப் புலப்பட்டது இருப்பினும் பொறுமைகாத்தான், தன் காதல் சொல்லும் சூழ்நிலைக்காகக் காத்திருந்தான்.


அதற்கு ஏற்ற சூழலும் அடுத்த நாள் ஞாயிறு தானாய் அமைந்தது. தனுவும் சுவாதியும் கடற்கரை போக அடம் பிடிக்க, எல்லோரும் மாமல்லபுரம் கடற்கரை செல்ல தயாரானார்.

   அஸ்வின், ஆகாஷ் முன் சீட்டில் அமர, விஸ்வநாதன், பவித்ரா, ராதை அதற்கு அடுத்த நடு பகுதி சீட்டில் அமர, சுவாதியும், தனுவும் பின் சீட்டில் வாயாடிக் கொன்டே வந்தனர்.

 அடிக்கடி அஸ்வின் ரீவ்யூவில் பவித்ராவை பார்க்க பவித்ரா கவனித்தாள்.


தனு இளநீர் வேணுமென கேட்க, சற்று இளநீர் கடை அருகே வண்டி நின்றது. இளநீர் அருந்தித் திரும்ப ஏறுகையில் பவித்ரா சுவாதியிடம் ''நீ முன்ன உட்காரு நான் பின்னாடி உட்காருகிறேன்'' என சொல்ல அதன் படி அமர்ந்தாள். அஸ்வினுக்கோ பவித்ரா செய்கை புரிய கள்ளமாய் சிரித்தான்.


மாமல்லபுரம் வந்த பிறகு, சிற்பங்களை இரசிக்க இரசிக்க பவித்ராவின் முந்தைய மன நிலை சற்று மாறின. கலைகளுக்கு மனதை நிம்மதியாக மாற்றும் சக்தி உண்டு. புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். பவித்ராவுக்கு தெரியாது அஸ்வின் அவளை தன் செல்லில் புகைப்படம் எடுத்துச் சிறைச் செய்தான்.


அஸ்வின் அருகே கைப் பைகளைக் குவியலாக வைத்து, துப்பட்டாவை ஒன்றாக வைத்தும், கடல் அலையில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். விஸ்வநாதனும், ராதையும் அலையில் கால் பதித்து ஒரு நடை பயிற்சி மேற்கொண்டனர். ஆகாஷ், சுவாதி, தன்யா, பவித்ரா கடலில் விளையாடினர். நீரை மாறிமாறி தெளித்தனர்.


கடலில் விளையாடி சோர்வு பெற, தனு சற்று தொலைவில் இருந்த வேர்க்கடலையை வாங்கச் சென்றாள். ஆகாஷ், சுவாதி மாறிமாறி நீரை தெளிக்க, ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓட்டமெடுத்தனர்.


பவித்ரா தனியாக இருக்க, தனது துப்பட்டாவை எடுத்து கொண்டு தனு இருக்கும் பக்கம் செல்லலாமென அஸ்வின் அருகில் துப்பட்டாவை எடுக்க வந்தாள்.

 

    அஸ்வினுக்கு அந்த ரம்மியமான அந்திமாலையில், சூரியன் கடலில் கலக்க, பறவைகள் வீட்டிற்குச் செல்ல, கடல் ஓசையும், பவித்ராவின் வருகையும் அவனது காதலைச் சொல்ல ஏற்ற சூழ்நிலையாகக் கருதினான்.
பவித்ரா துப்பட்டா எடுத்து திரும்புகையில் அஸ்வின் உட்கார்ந்த நிலையில் பவித்ராவின் கையைப் பற்றினான்.
''
பவித்ரா நான் உன்னை விரும்புறேன், வில் யூ மேரீட் மீ? '' எனக் கேட்க பவித்ரா அங்கிருந்தச் சிலைகளில் ஒரு சிலையாக மாறினாள்.

    மீண்டும் அஸ்வின் '' பவித்ரா ஐ லவ் யூ'' என திரும்பக் கூற உயிர் பெற்றச் சிலையானாள்.
''
கையை விடுங்க ப்ளீஸ்'' என்று அவன் பேசியதற்கு எதுவும் எதிர்வினை அளிக்காமல் நழுவ பார்த்தாள்.


''
எனக்கு பதில் சொல், நீயும் என்னை விரும்பற தானே?” என்றான் ஆசையாக.


''
ப்ளீஸ், நான் யாரையும் விரும்பல தயவு செய்து கையை விடுங்க'' என்று அஞ்சினாள்.
''
நம்ம மால்ல மீட் பண்ணி..'' என்ற பொழுது விஸ்வநாதன், ராதை, ஆகாஷ், சுவாதி என ஒருவர் பின் ஒருவராக வர ஸ்தம்பித்தனர்.

விஸ்வநாதன் அஸ்வினிடம் “கையை விடுடா '' என கூறிய பின்னரே பவித்ராவுக்கு தன் கை இன்னும் அஸ்வின் பிடிக்குள் இருப்பது உணர்ந்தாள்.


கையை உதறித் தானாகக் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தாள்.
தனு தூரத்தில் இருந்தவாறு ''சுவாதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணு கீழே விழற மாதிரி இருக்கு'' என கையில் நாலு, ஐந்து பொட்டலத்தைப் பார்த்து கூற, யாரும் ஏதும் பேசாது செய்வது அறியாது இருக்க, அஸ்வின் பவித்ராவை ஒரு ஆழப்பார்வைப் பார்த்து விஸ்வநாதனையும் பார்த்து விட்டு நகர்ந்தான்.

 

 ராதை விஸ்வநாதனிடம் அருகே வந்து, '' இப்ப என்னங்க செய்யறது?” என்று திகைத்து கேட்டார்.

 
''
வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் போலாம்.'' என விஸ்வநாதன் கடினமாய் மாறினார்.


ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பவித்ராவை பார்க்க, பவித்ராவோ மணலை பார்த்தவாறு கண்ணீரைச் சிந்தியப்படி வந்தாள்.


''
என்னாச்சு'' என தனு கேட்க, ''கண்ணில் தூசி விழுந்துடுச்சாம்'' என ராதை சமாளித்தார்.


காரில் ஏறியப் பின் அனைவருக்கும் ஒவ்வொரு சிந்தனை ஓடியது. தனு சற்று நேரத்தில் உறங்கிட, சுவாதி மனதில், ' ஓ இதுக்கு தான் காலேஜிக்கு டெய்லி ட்ராப் பண்றானா? ரூமுக்கு வந்தாலே கத்துவான் அன்னைக்கு ஏதும் கத்தலையேன்னு நினைச்சேன். அம்மாக்கு தெரிஞ்சா என்ன திட்டி தீர்த்துடுவாங்க. எப்படியும் ஒரு புயலைச் சந்திக்கணும்.’ என்று எண்ணினாள்.


ஆகாஷின் மனமோ தன் அன்பு கொண்ட? சுவாதிக்கு இது பெரும் அதிர்ச்சி அல்லவா? ஆனால் சுவாதியை அஸ்வின் திருமணம் செய்யவில்லை என்றால் நல்லது என்றே மனம் கூறியது. ஏனென்றால் அவன் சுவாதியை விரும்பியது ஒரு காரணம். அஸ்வினுக்கு சுவாதி என பேசி முடிவு செய்ததால் அவளை மறக்க நினைத்தான். இப்பொழுது பவித்ராவை அஸ்வின் விரும்புவதால் அவனுக்கு குதூகலமாக தான் இருந்தது.


ராதைக்கோ பவித்ராவை பிடித்தமையால் ஒரு பக்கம் இன்பமாக இருந்தன. அஸ்வின்-பவித்ரா ஜோடி மிக நன்றாக தான் இருந்தன. ஆனால் சுவாதியை பார்த்தால் மட்டும் ஒரு நெருடல், இத்தனை வருடம் அஸ்வினுக்கு சுவாதி என தன் அண்ணியின் ஆசை ஒரு புறம், சுவாதி மனமும் அஸ்வினை திருமணம் செய்யும் ஆசை இருப்பின் இதை எப்படி ஏற்றுக்கொள்வாள்.

அன்று காலேஜிக்கு ட்ராப் செய்ததற்கே கோபத்தோடு வந்தாளே என தவித்தது.


விஸ்வநாதன் மட்டும் அமைதியாக கண் முடி நெற்றியை பிடித்தவாறு யோசிக்கத் துவங்கினார். பவித்ராவை அவருக்கு ரொம்ப பிடிக்கும் . அதனால் தான் நந்தகோபாலன் பவித்ராவை சென்னையில் தங்க இடம், காலேஜ் என தேடிய போது, தானாகப் பார்த்து கொள்வதாக வாக்கு அளித்தார். பவித்ரா தனக்கு மருமகள் ஆக வந்தால் சந்தோஷமே. ஆனால் தன் தங்கை தவசுடர் சுடராக எரிய மாட்டாளே?! நெருப்பாய் பொங்குவாள். அதுவும் இல்லாது சுவாதி மனம் அஸ்வினை ஆசைப்பட்டால்? அது மட்டும் இல்லை முதலில் பவித்ரா இதற்கு சம்மதம் தெரிவிப்பாளா? ஏற்கனவே ஒரு பிரச்சனையை தவிர்க்க இங்கே வந்தவள். இங்கேயும் வேறொரு சூழ்நிலை உருவாகிற்றே என மனம் நொந்தார்.


பவித்ராவிற்கோ தான் வந்து இந்த அழகிய கூட்டின் சந்தோஷக் கச்சேரியில் குழப்பம் ஏற்படுத்தி விட்டோமென தன்னையே நொந்துக் கொண்டாள். விஸ்வநாதன் முகத்தைப் பார்க்கவே கூசினாள் . சுவாதியை நினைக்க கூடக் கலக்கமாக இருந்தது. யாராவது இப்படி ஒரு முறைப் பார்த்தப் பெண்ணைச் சட்டம் போட்டு அறையில் மாட்டி உருவம் தெரியாதப் புகைப்படத்தை வைத்துக் காதலிப்பானா? இதோ இவன் செய்கின்றானே?! இவன் காதல் பார்த்தவுடன் வந்த காதல் என்று நகைக்க கூட முடிய வில்லை. அவன் பேச்சில் உறுதி, பார்வையில் தீர்க்கமென அவனது செய்கை அவளை வியக்கச் செய்தது என்னவோ உண்மை

.
அஸ்வினுக்கு எந்தவித யோசனையின்றி கூலாக, தன் காதலை தெரிவித்த நிம்மதியில் நிதானமாக வண்டியைச் செலுத்தினான் .அவனுக்கு தான் நினைத்ததை முடிக்கும் பழக்கம் என்பதாலோ பதிலை பற்றி பயம் இன்றி, யாரையும் பார்த்து அஞ்சி நடுங்கும் ஆளும் இல்லை என்பதாலோ தெளிவாகவும் இருந்தான். பவித்ராவின் சிறு விசும்பல் மட்டுமே அவன் மனதை வலிக்கச் செய்தது.


கார் ஒரு ஹோட்டலில் வந்து நின்றன.

வீட்டிற்கு போனால் பவித்ரா சாப்பிட மறுப்பளோ?! என ஹோட்டலுக்கு எல்லோரையும் அழைத்து வந்தான்.


தனு மட்டும் சிறு சிறு பேச்சும் கேள்வியும் கேட்டுக் கொண்டே இருக்க, பவித்ராவிற்கும் சேர்த்தே அஸ்வின் தோசை ஆர்டர் தந்தான். சாப்பிட்டு முடித்துக் கை அலம்பும் இடத்தில் கிடைத்தத் தனிமையில் '' பவித்ரா அழாத ப்ளீஸ்'' என்றதும் பவித்ரா வேகமாக நகர்ந்தாள். வீட்டிற்கு வந்ததும் காரைப் பார்க் செய்து வர, சுவாதி ஸுகூட்டி எடுக்க முனைந்தாள்.

 

 ''நாளைக்கு போ இப்ப வேணாம்'' என அஸ்வின் கூறிவிட்டு சென்றிட, சுவாதி வீட்டுக்குள் சென்றாள். பவித்ரா உள்ள வர யோசிக்க ''உள்ள வா பவித்ரா'' என ராதை கூறி தோளைப் பற்றினாள். 
மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ்

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...