உன் விழியும் என் வாளும் சந்திதால்...-2

   


💟 (௨)2

                      ஊசி நுழைவில் தன்னை தான் ருத்திரன் குள்ளநரி என்று சொன்னது புரியாமல் இல்லை மித்திரனுக்கு.... இருந்தும் மெல்ல குறுநகையோடு நித்திரை செய்ய... வெண்ணில ஒளியில் அந்த தாமரை விழிகள் அவனுள் நட்சத்திரமாக மின்னியது.
         அவளுக்குள் என்னை பார்த்த கணம் மின்னல் வெட்டியது. நிச்சயம் என்னை பற்றி அறியலாகும் திகதியில் அவளாகவே மெய்யுரைப்பாள்.
          அதிகாலை வெய்யோனின் கதிர் அவ்வனத்தில் இருந்த இருளை அகற்ற பரிதியின் கதிர்கள் இலைகளின் வழியே குடிலை அடைய மித்திரன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தான்.
    ருத்திரனோ குளித்து முடித்து ஆடையணிந்து பரிதியினை வணங்கி நின்றான். மஞ்சரியும் ருத்திரனும் ஒரே மாதிரி முகத்தில் தாமரை கைகளை தாங்கி பின்னர் மார்பின் அருகே வணக்கம் வைத்து சூரிய நமஸ்காரம் வைத்து இருக்க அது மித்திரன் விழியினில் பதிந்து மீண்டது.
        மித்திரன் அதன் பின்னே அருவி நீரில் குளித்தவன் மனதை ஆற்றின் மையத்தில் இருந்து பரிதியினை தனது இரு வலிய கைகளை மேலே தலைக்கு மேல் எழுப்பி வணங்கி முகம் மற்றும் அதன் பின் மார்பில் வைத்தவன் நீரை மும்முறை வணங்கி தொழுது கரையில் வந்து சேர்ந்தான்.
          சிகையில் பணிதுளிகளாக கோர்த்த நீர்துளிகள் அவனின் தலையாட்டலில் சிதறிய தூரலாக தெளிக்க மஞ்சரி முகம் ருத்திரனின் முகத்திலும் விழ மஞ்சரி முகமோ சிரிப்பில் விரிய, ருத்திரன் முகமோ கோவத்தில் செங்கணலாக திகழ்ந்தது.
      தான் நினைத்த சினம் ருத்திரன் முகத்தில் கண்டதும் மஞ்சரியை பார்த்து கண் சிமிட்டி கண்ணனாக மாறி குடிலில் புகுந்தான்.
          மஞ்சரிக்கு மித்திரனின் செயல்பாடு எல்லாம் வித்தியாசமாக இருந்தாலும் ருத்திரனின் அமைதி முகம் அதற்கு மேல் வித்தியாசமாக எண்ணினாள்.
         மித்திரனின் இந்த செயலுக்கு ருத்திரன் ருத்திர மூர்த்தியாக மாறி இருக்க வேண்டுமே...?!
         மகிழ்சியாக மற்றதை ஒதுக்கி உணவினை உண்ண செய்தார்கள்.
      ''அன்னமிட்ட இனத்தவருக்கு வஞ்சம் செய்வதில்லை அதே போல உண்மை மறைக்கவும் செய்வதில்லை... தாங்கள் யார்? எதற்கு வந்தீர்? என்றே அறியலாகுமோ?'' என்றே ஆதிவாசி கேட்க மித்திரனோ இது தனக்கா அல்லது எதிரில் எதுவும் செவியில் ஒலிக்காமல் இருப்பது போல பாவனை செய்யும் இவ்விருவருக்குமா? என்றே ஐயத்துடன் பார்த்தான்.   ஆதிவாசி இன தலைவனோ மித்திரனை ஊடுருவி விழியை அகற்றாமல் பார்க்க இது தனக்கான வினா என்றே எண்ணியவன் மெல்ல உண்ணும் பாவனையில் இருந்து நிமிர்ந்தவன்.
      ''எம் தேசம் சந்திரதேசம்... அங்கே சில திகதிகளாக பெண்கள் மாயமாக போவதை கண்டு அவர்கள் எங்கே என்ன ஆனார்கள் என்றே தேடி ஒற்றை வீரனாக வந்து இருக்கின்றேன்.. அவ்வளவே... வேறேதும் நோக்கமில்லை இங்கே வனத்தில் வந்தது அது மட்டுமே காரணம்'' என்றே முடிக்க ஆதிவாசியின் தலைவன் கடும்பன்
      ''ஆம் நாங்களும் கேள்விபட்டோம் எங்கள் குலபெண்களில் கூட சிலர் மாயம் ஆனார்கள்... ஆனால் இங்கே வனத்திலே பிறந்து வளர்ந்த எங்களால் கூட அது யாரின் வேலை என்றே கணிக்க முடியவில்லை... அப்படி இருக்க ஒற்றை வீரனாக நீ...?'' என்றே அவர் கூற வர தயங்க
       ''தாங்கள் முதலில் சொல்லியதே... அச்சம் என்பது எம்மிடம் இல்லை.. அது மட்டுமே...'' என்றே பார்வை மஞ்சரி, ருத்திரன் இருக்கும் பக்கம் சென்று மறைய ருத்திரன் மித்திரனை காணாமல் இருப்பது போல இருந்தான் ஆனாலும் ருத்திரனின் பார்வையில் மித்திரன் தங்களை எடை போடுவது அறியாமல் இல்லை.
      ''மன்னிக்கவும்.. உங்களுக்கு கூடிய விரைவில் ஏதேனும் தகவல் கிட்டட்டும்... அப்படி கிட்டும் தகவல் எங்களுக்கும் அறிய படுத்துங்கள்...'' என்றே சொல்ல வணக்கம் வைத்து எழுந்து கையெடுத்து கும்பிட்டு பயணத்தை தொடர போவதாக சொல்லி கிளம்பினான்.
            திரும்பியவன் என்ன நினைத்தானோ... மீண்டும் ஆதிவாசிகள் அருகே வந்து
      ''உணவிட்ட நல் உள்ளமே.... எமக்கு தெரிந்த முதல் தகவல், அழகான பெண்கள்.. அதுவும் அதிசயமான நட்சத்திரம், வினோத மச்சம் என்றே இருக்கும் கன்னி பெண்ணை தான் அந்த தாடி வைத்த வஞ்சகன் தேர்ந்து எடுப்பது...  அக்கன்னி பெண்களை தான் அவன் பலியிடுவதாக அறிந்து கொண்டது... எதற்கும் தாடி வைத்த நகல் கொண்ட நபர்களிடம் எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள்.. ஏன் என்றால் குள்ளநரி கூட்டதிரனை விட ஓநாய்கள் அதிகமாகவே இருக்கும் தரணி இது'' என்றவனின் பார்வை ருத்திரனின் மீதே இருக்க மஞ்சரி கண் இமைக்காமல் மித்திரனையே பார்த்து இருந்தாள்.
            மித்திரனே தொடர்ந்தான். ''அது மட்டுமில்லை... காதல் என்னும் பந்தம் பேசி உள்ளதை கவர்ந்து கண் சொடுக்கில் வசியம் செய்பவன்... அவனின் வசிய பார்வையில் விழுந்து விட்டால் மீள முடியாது என்பது அறிந்து கொண்ட தகவலில் அதிமுக்கியம்..'' என்றே மஞ்சரியை பார்த்து சொல்லி வணக்கம் வைத்து கிளம்ப ஆதிவாசிகள் அவர்களும் அதனை கேட்டு சிலை போல நின்றே விடை கொடுத்தார்கள்.
      கொஞ்ச நேரம் அமைதியில் கழிய ''நாங்களும் புறபடுகின்றோம் கடும்பா... பாதுகாப்பை பலபடுத்துங்கள்.. தகவல்களை கசிய விடாதீர்கள்...'' என்றே ஆணையிட்டு சொல்ல
     ''தாங்களும் ஜாக்கிரதையாக செல்லுங்கள்... மஞ்சரியை பார்த்து கொள்ளுங்கள் அவள் வினோத ராசி, நட்சத்திரம் தாங்கள் அறியாதது அல்ல..'' என்றே சொல்ல
       ''கடம்பா... இங்கே மரத்திற்கும் செவிகள் இருக்கும்.. பார்த்து பேசுங்கள்... வருகின்றோம்'' என்றே புரவியினை தட்ட வேகமாக கிளம்பினார்கள்.
          அங்கே செல்வது போல சென்று ஒளிந்து இருந்த மித்திரனுக்கு மஞ்சரி வினோத ராசியில் பிறந்த கன்னி என்பது கருத்தில் பதிய அவர்களை தொடர எண்ணி அவனும் பின் தொடர்ந்தான்.
        கொஞ்ச நேரம் புரவி ஓசையில் செல்ல மஞ்சரி தான் ''ருத்திரா.. நமது புரவி சப்தம் தவிர்த்து வேறு ஒரு ஓசை கேட்கின்றது.. இது...?'' என்றே மஞ்சரி ஐயத்தில் விழிகள் அங்கும் இங்கும் சுழல புரவியின் பாதுகையோசையினை நிறுத்த மற்றொரு புரவியின் பாதுகை ஒலி எழுப்பி அருகே கேட்க, ருத்திரன் சப்தம் வந்த ஓசையில் பார்க்க அங்கே யாரும் இல்லை...
         ருத்திரன் விழிகள் கூர்ந்து கவனிக்க அங்கே யாருமில்லை என்றாலும் யாரோ இருப்பதாகவே பட்டது. விழிகளுக்கு புலப்படாமல் இருக்க ஏதோ மாயா கட்டுக்குள் இருப்பதாக தோன்றியது.
          அதற்குள் அங்கே இவ்விருவரை தொடர்ந்த விழிகள் மர்மமாக சத்தமில்லாமல் சிரித்தது.
       எந்தன் உருவம் உம் மான் விழிகளில் அகபடாது கண்ணே... எந்தன் வஞ்சக விழியினில் பட்ட தாங்கள் இனி கண் மறைவில் செல்ல இயலாது... என்றே மர்மமாக சிரிக்க ருத்திரன் விழிகள் எங்கோ சுற்றி சுற்றி இருந்தாலும் அதில் இங்கு யாரோ இருப்பது மனம் சொல்லி கொண்டே இருக்க புரவியின் செவியில் மெல்ல குனிந்து
      ''ஜெகதம்பா... புழுதி பறக்க இவ்விடம் அதிரும் வகையில் மின்னல் வேகத்தில் இவ்விடம் விட்டு வேகமெடு'' என்றே சொன்ன அடுத்த நொடி அந்த பெண் புரவி பாதம் புயலாக தாவியது... நொடியில் தனது விழிகள் புழுதியில் எதிரே இருக்கும் இடமே மறைந்து போக அங்கே இருந்த புரவியும் அதில் இருந்த நபர்களும் இல்லாமல் போக
      'மிதப்பில் இருந்து விட்டேனே..இவர்கள் சாதாரண நபர்கள் என்றே கருதிவிட்டேன்.. இப்பொழுது நான் என்ன செய்ய? எங்கு தேடுவேன்.. என்றே கர்ஜித்து கொண்டன அக்குரல்.
             அங்கே இருந்து தப்பித்து வந்த ருத்திரன் மற்றும் மஞ்சரி இருவரும் ஒரு குகையில் வந்து சேர்ந்தார்கள்.
     ''முடியவில்லை ருத்திரா.. உயிர் சுவாசமே நின்று போனது.. அங்கே யாரோ இருந்தார்கள்... எனக்கு அப்படி தான் தோன்றியது.. ஏன் ருத்திரா உனக்கும் அப்படி தோன்றியது தானே?' என்றே மஞ்சரி கேட்க அவளின் அச்சம் இந்த இரவுக்கு மேலும் அதிகபடுத்தும் என்றே கருதிய ருத்திரன்
       ''அல்ல அது போல எதுவும் இல்லை... நீ வந்ததிலிருந்து கண்டதை எண்ணி கொண்டதாலும் இன்று கேட்ட தகவலிலும் தோன்றிய பிரம்பை'' என்றே ருத்திரன் சொல்ல
     ''ஏதோ சொல்கின்றாய் உன்னை நம்பி தான் வந்தேன்.. எனக்கு கேடு நிகழாமல் காப்பாய் தானே?' என்றே கேட்க
       ''ஆம்'' என்றே சொன்ன பொழிதிலும் உமக்கு மற்றவர்களால் கேடு இல்லை ஆனால் எம்மால்... எம்மால் ஏற்பட்டால்? என்றே எங்கோ விழிகள் செல்ல மெல்ல மனதில் தோன்றிய எண்ணத்தை சொல்லாமல் மறைக்க தான் முடிந்தது
           அதே நேரம் மற்றொரு இடத்தில் மித்திரன் எங்கே சென்று போனார்கள்... தொடர்ந்து வந்தும் இப்படி ஆகிவிட்டதே.. எப்படியும் என் விழியில் இருந்து செல்ல இயலாது... அது அந்த ருத்திரனாக இருந்தாலும் தான். மஞ்சரி உன்னை விட மாட்டேன்.. உன்னை வைத்து தான் நான் இங்கு வந்த காரணம் வெற்றி காண முடியும்.
           மஞ்சரி எங்கே போனாய் என்றே வனமே அதிர கத்திட அடுத்த நொடி செய்த பிழை உணர விழி மூடி மந்திரம் போல உச்சரிக்க இருக்கும் இடம் எல்லாம் விடுத்து காற்றோடு காற்றாக உருவம் மறைந்து புரவியினை தட்ட அதுவோ வனத்தில் குறிப்பிட்ட இடம் நோக்கி விரைந்தது.
       இங்கு வரும் முன் அதீத மாயங்கள் புரிய மாட்டேன் என்ற சபதமிட்ட நிகழ்வுகள் தோன்ற தன்னை உலுக்கி கொண்டு தேடுதலில் முன்னேறினான்.
            நாழிகை தான் கடந்தன.. மஞ்சரி ருத்திரன் இருக்கும் இடம் எதுவும் அறிய முடியாமல் போக அந்த குகையில் சென்றே சேர்ந்தான்.... சோர்ந்தான்.
            மின்மினி வெளிச்சத்தில் அங்கே விழிகளில் எல்லாம் சேர்ந்த அயர்ச்சி போக்கும் விதமாக அங்கே மஞ்சரி இருந்தாள்.
        கண்டதும் ஒரு வித நிம்மதி தோன்ற அருகே வர மஞ்சரி அருகே செல்லும் பொழுதே அவளின் நிழலை தொட ஒரு வாள் முதுகிலே பதிய அது யாரென்று பார்க்காமலே புரிந்தது மித்திரனுக்கு....
       என்றுமே வீரனுக்கு அழகு முன் புறம் வந்து நெஞ்சில் வாளை சொருகுவது தான்..... கோழையாக பின் முதுகில் துளைப்பது அல்ல'' என்றே சொல்லி சிரிக்க
     ''நீயா? இங்கு எப்படி மறுபடியும்?'' என்றே சந்தேகிக்கும் பார்வையை விசிட
      ''உம்மை இங்கே மீண்டும் சந்திப்பேன் என்றே எண்ணவில்லை...'' என்றே வாளை வாளின் உறையில் வைத்து மஞ்சரியை பார்த்து
      ''உன்பதை ஒழுங்காக செய்துவிட்டு துயில் கொள்'' என்றே கட்டளையிட்டு அமர்ந்தாள்.
        '
          திகதி- தேதி
          வெய்யோன் - சூரியன்
          பரிதி-சூரியன்
          வனம்-காடு
         தரணி-உலகம்
          பாதுகயோசை- காலடி ஓசை

 

-விழியும் வாளும் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1