உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6

   


  💟(௬) 6 

                         இன்றும் எப்பொழுதும் செய்யும் பணியினை முடித்து மஞ்சரி இறைவனை தொழுதபடி விழியில் நீரை சிதற விட அதனை கண்டு ருத்திரா தோளை தொட
      '' தினமும் பயணம் செய்கின்றோம் ருத்திரா இதில் இன்னும் எத்தனை தொலைவை அடைந்து விட்டோம் இன்னும் சமூத்ரா இருக்கும் இடம் அறியவில்லையே.... உமது தமையன் மேக வித்தகனும் காண முடியவில்லை... இனி அவ்விருவரையும் காண இயலாதா? எமது தாய்மை கோலம் கூட என்னவனின் செவிக்கு அறிவிக்க முடியாதா?'' என்றே அங்கே சோகமாக சொல்ல
     ''கண்டறிய செய்வோம் மஞ்சரி... கவலை கொள்ள வேண்டாம்... இங்கே அதீத மிருகம் நடமாடுவது போல தோன்றுகின்றது... முதலில் கிளம்புவோம்'' என்றே கையை பற்ற பிடித்து எழுந்து முடிக்க ருத்திரா குளித்து முடித்தும் அவளின் பிறை நெற்றியில் இருந்த ரத்த திலகம் அப்படியே இருக்க கண்டு
       ''ஏன் ருத்திரா திலகம் அழியவில்லையே...'' என்றே கேட்க
      ''நான் செஞ்சாந்து வைக்கவில்லை இது மித்திரனின் குருதி... அழுத்த துடைக்கவில்லை மஞ்சரி... மித்திரனின் குருதி படிந்த திலகம் அப்படியே இருக்கட்டும் என்றே விட்டு விட்டேன்'' என்றே சொல்ல மஞ்சரி குறுநகையோடு
     ''மையலில் விழுந்தவர் நிலை எல்லாம் இதுவே தான்... ருத்திரா... முன்னொரு முறை நீ எம்மை கேலி செய்தவை... தற்பொழுது உமது நிலையும் இதுவே... அன்று எம்மையும் சமுத்ராவையும் நீ கேலி செய்த பேச்சுக்கள் இன்று உமக்கே திரும்புகின்றனவே..'' என்றே நகைக்க
    ''மெய் தான் காதலில் கரைந்த பின் எத்தகையோரும் குருடராக தான் இருக்கின்றோம்... மூடராக தான் மாறுகின்றோம் சமுத்ராவை எடுத்து கொள் '' என்றே வலியோடு நகைக்க தூரத்தில் எங்கோ ஏதோவொரு அபாய ஒலி ஒலிக்க மஞ்சரியை அழைத்து மறைவிடம் கண்டார்கள்.
        சிறிது நேர சப்ததின் பின் அச்சத்தம் ஓய... ருத்திரா அதே மவுனம் கொண்டே யோசிக்க செய்தாள்.
            மஞ்சரியை விடுத்து ருத்திரா வெளியே வர அடுத்து மஞ்சரி வர நிம்மதியான சுவாச காற்றை வெளியிடும் சமயம் யாரோ ஒருவனின் கையில் மஞ்சரி அகப்பட ருத்திரா வாளை எடுக்கும் முன்னரே அங்கு நான்கு மானிடர்கள் அவளை சூழ நின்றார்கள்.
         கொள்ளை கூட்டம் போல முகம் கருப்பு நிற ஆடை கொண்டு மூட பட்டு இருக்க அதில் ஒருவனோ
      ''இன்று நமக்கு பொன் பொருள்கள் கிடைக்கவில்லை... ஆனால் தங்க பஸ்பம் கடைந்த மெழுகு சிலை போன்ற தங்க தாரகை கிட்டியிருக்கின்றாள்'' என்றே ஒருவனின் பார்வை மஞ்சரியை மேய
      ''அடகொள்ளை கூட்டமே... உமக்கு ஒரு அவகாசம் தருகின்றேன்... இதோடு விடுத்து பெண்ணை இறையாக எண்ணி வழிபட்டு சென்றாள் உயிர் பிழைப்பீர் இல்லையேல் ஒருத்தரும் மண்ணுலகில் இருக்க மாட்டீர்'' என்றே ருத்திரா சொல்ல
     ''வார்த்தையில் வித்தை தான்... பித்து கொள்ள வைக்கும் அழகிய நங்கை ஒருவள்... அவளை இரை வேண்டுமென்றால் ஆக்கி கொள்கின்றோம் இறையாக எல்லாம் எண்ண இயலாது'' என்றே ஒருவன் மஞ்சரியை நெருங்க
     ருத்திரா  ''உங்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை செய்கின்றேன் அவள் என் தமையனின் இல்லாள்... அவள் ஒரு சிசுவின் தாய்.... நாமெல்லாம் தாயின் புனிதம் அறிந்தவர்கள் விட்டுவிடுவீர்... மன்றாடி கேட்கின்றேன்'' என்றே சொல்ல மஞ்சரி
      ''ருத்திரா... என்ன சொல் இது நீ கயவர்களிடம் மன்றாட வேண்டுமா?'' என்றே மஞ்சரி சொல்ல
     ''தமையனின் இல்லாள்... உன்னோடு என்ன செய்கின்றாள் இந்த நட்ட நடு வனத்தில்...?'' என்றே கேட்க செவியில் கைகளை அழுத்திய ருத்திரா தனது தலைபாகையினை எடுத்து பெண் உருவிற்கு மாறினாள்.
    ''என்ன இது ஜாலம்...... நீ நங்கையா... ஒரு விருந்துக்கு இரு விருந்தா...'' என்றே சொல்ல
 ருத்திராவோ ''எம்மை தீண்டி பிறகே மஞ்சரியிடம் செல்'' என்றே நவில
   ''எழிலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல போல பதுமையாக இருகின்றேரே...''  கயவன் ஒருவனோ ருத்திராவை தீண்ட தீயில் கைகளை பற்றியவன் போல யாக்கை முழுதும் கனலை தீண்டியது போல துடிக்க துடி துடிக்க தணலாக அடுத்த நொடி மாறி உருவமின்றி அருவமாக மாறி போனான்.
           மற்றவர்கள் இதனை கண்டு பின்னங்கால்கள் பிடரியில் பட அவர்களின் புரவியில் பறந்தார்கள்.
         மஞ்சரியே இதை கண் இமைக்காமல் பார்க்க செய்தாள்.
     ''இது... இது.. எப்படி ருத்திரா? மித்திரன் புகட்டியதா?'' என்றே கேட்க
     ''இல்லை மஞ்சரி எமக்குள் இருக்கும் சக்தியே... எமக்கு இப்படி ஒரு விசித்திர சக்தி இருப்பதே யான் எமது பதினாறு வயதில் அறிந்தது.
         எமக்கு விற்பயிற்சி அளிக்கும் வீரன் ஒருவனின் காமுக பார்வையில் அவனின் தீண்டல் அவனுக்கே எமனாக மாறியதும் அதே போல மற்றும் மொருமுறை நமது நாட்டிலே சக குடிமகளாக வேடமிட்டு ஒரு வணிகனின் வீட்டில் தங்க அந்த வணிகனின் மனைவி நித்திரையில் அவன் என்னை நெருங்க வர அவனின் தீய ஆசையில் வாளை கையில் பற்றிய நேரம் அவன் என்னை தீண்ட இதே போல மறித்தான். அப்பொழுது தான் எம் மீது எம் விருப்பமின்றி எவரேனும் தீண்டினால் அவன் தீயுக்கு இரையாவான். அதனால தான் உமக்கு பதிலாக நான் முன் வந்தேன்'' என்றே சொல்ல
      ''கேட்கும் எமது செவிகள் நிஜம் தான் கூறுகின்றனவா? கண்ணால் பார்த்தும் இதுவும் மாயம் என்றே அல்லவா எண்ண தோணுகின்றது... உமது சக்தி மித்திரன் அறிந்து கொண்டானா? அவனிடம் செப்பினாயா?'' என்றே மஞ்சரி கேட்க அதற்குள் தாடி மீசை ஒட்டி ருத்திரா ருத்திரனாக மாறி நின்றான்.
     ''எமது கரம் பற்றும் பொழுது எல்லாம் சொல்வோம்... தற்பொழுது நாம் வந்த பணிகளை காண்போம்.. '' என்றே நடக்க அங்கே ஒரு பாழடைந்த குகை போன்று ஒன்று விழியில் அகப்பட ருத்திரா அங்கே சென்று அதன் புற வடிவை கண்டு கொண்டு இருந்தாள்.
      ''என்ன ருத்திரா இங்கே விழியகற்றாமல் பார்க்கின்றாய்...? அப்படி என்ன கண்டு கொண்டு இருக்கின்றாய்''
      ''பார் இங்கு இருக்கும் காளியின் வதனம்... ஏதோ ஒரு ரவுதிரத்தை பூசி கொண்டு ஆக்ரோசமாய் தெரிகின்றாள்... இவளின் பார்வை எமக்கு விசித்தரமாக உள்ளது.. ஏதோ என்னிடம் பேசுவதாக...'' என்றே ருத்திரா சொல்ல
       ''இன்று இங்கு தானே நமது குடில்?'' என்றே மஞ்சரி கேட்க
     ''இதில் ஐயம் ஏனோ உமக்கு?'' என்றே சுற்றி சுற்றி பார்வை செலுத்த அங்கே ஒரு வட்டமிருக்க அதிலே சக்கரம் போன்ற அமைப்பும் இருக்க கண்டவள் அதன் மீது கைகளை வைத்து வருட அதுவோ சக்கரம் உள்ளே சென்று அந்த இடம் குகை போல திரும்பியது...  குகைக்குள் எப்படி வந்தோம் என்றே ஒரு கணம் வியந்து அதிசயித்து அதனை மீண்டும் தொட அதுவோ மீண்டும் வெளிப்பக்கம் இவர்களை திருப்பியது.
      ''இது இது... என்ன இடம் ருத்திரா?'' என்றே மஞ்சரி அச்சத்தில் கேட்க
     ''நாம் தேடி வந்த யிடமாக இருக்கலாம் மஞ்சரி.. எதற்கோ கொஞ்சம் தயாராக இரு...'' என்றே மீண்டும் பொத்தனை அழுத்த குகையின் உள்பக்கம் அழைத்து விட... வாளினை கையில் ஏந்தி ருத்திரா போரில் இருக்கும் முகமாக தீவிர பாவனையில் முன்னே செல்ல வியர்வையில் முக்குளித்தவள் போல மஞ்சரி அவளின் பின் தொடர்ந்தாள்.
         அங்கே ஒரே ஒரு தீப்பந்தம் மட்டும் எரிய அதனை கையில் எடுத்த ருத்திரா அங்கே வெளிச்சம் மிகுந்து இருக்கும் இடமெல்லாம் சுற்றி பார்வை பதிக்க இதே போல அங்கே தீப்பந்தம் எரிய இருக்க அங்கே எல்லாம் தீயை ஏற்றி முடிக்க எல்லா தீபந்தமும் எரிந்திட ருத்திரா சுற்றி பார்வைகளை சுழற்றினாள். அங்கே மத்தியில் ஒரு மலர் மெத்தையில் ஒரு நங்கை நித்திரை கொள்ளும் பாங்கோடு இருக்க கண்டு ருத்திரா அருகே செல்ல மஞ்சரி ருத்திராவின் தோளில் கையை பற்றி பின் தொடர அருகே சென்றார்கள்.
        பெண்ணவள் முகம் திருப்ப மஞ்சரி ருத்திரா ஒரே சேர ''சமுத்ரா'' என்றே உச்சரிக்க... சமுத்ரா விழிகள் இங்கும் அங்கும் சுழன்றதே தவிர இமைகள் பிரியாது இருக்க கண்டனர்.
      சமுத்ரா மேனியை தொட்டு உலுக்கி மஞ்சரி எழுப்ப அவளோ சவம் போல கிடந்தாளே தவிர இம்‌மியும் விழிக்காமல் இருக்க ருத்திரா மெல்ல
       ''அவள் வசியத்தில் கட்டுண்டு இருக்கின்றாள்.... மஞ்சரி'' என்றே சொல்லி அவ்விடத்தை மீண்டும் ஆராய செய்ய.... அடிக்கடி பலியிட்ட தடம் கூட இல்லை... ஆக இது என்ன இடம் என்றே யோசித்து விழிகளை எட்டு திக்கும் சுழற்றி பார்வையில் கூர்ந்து ஆராய... வெளியே பார்த்தது போலவே இங்கும் ஒரு பொத்தான் இருக்க கண்டாள்.
       நட்சத்திர பொத்தான் அழுத்த அந்த விசையில் கதவு திறக்க கண்டாள்.
          உள்ளே எவர் இருப்பாரோ என்றே அஞ்சி வாளினை எடுத்தே வர சமுத்ரா அருகே மஞ்சரி அமர்ந்தாள்.
      ருத்திரா செல்லும் திசையில் ஒரு விழியை பதிக்க... தனது இஷ்ட தெய்வ பராசக்தியினை வேண்டினாள்.
        ருத்திரா வரும் திசையில் மேகன் கண்டிட மேகவித்தகனுக்குஅவள் ருத்திரா என்றே அறியாது யாரோ ஒரு ஆடவன் என்றே அறிந்து பேச்சு பேச அதுவோ தெள்ள தெளிவாக புரிந்தது.
    ''தாங்கள் யார்? இங்கே எப்படி வந்தீர்? அங்கே எமது தங்கை இருக்கின்றாளா? அல்லது அந்த கொடும் பாதகன் துர்வசந்திரன் இருக்கின்றானா? எப்படியாவது எம்மை விடுவியுங்கள்... வளியில் வேலி அமைத்து எமது பேசும் சக்தியும் பறித்து சென்று விட்டான்.. என்றே சொல்லிய மறுநொடி ஐயகோ உமக்கு எமது குரல் கேட்காதே நான் எப்படி எமது பிரச்சனையை புரியவைப்பேன்'' என்றே மேகவித்தகன் கதற
    ''நீ எதையும் செப்ப வேண்டாம் வித்தகா.... எமக்கு சொல்லாமலே விளங்கிற்று'' என்றே ருத்திரா குரல் மட்டும் வித்தகனுக்கு கேட்க அவனோ ஆச்சரியம் பொங்கும் பார்வை பார்க்க
     ''ருத்திரா...'' என்றே நாமம் அந்த குகையின் எல்லா பக்கமும் எதிரொலிக்க மஞ்சரியின் அலறல் மட்டுமே கேட்க ருத்திரன் மேகவித்தகனை கையில் பற்றி இழுக்க வளியில் உண்டான வேலி தானாக வழி தொடுத்தது.
       அதற்கு காரணம் ருத்திராவின் சக்தி மற்றும் மித்திரனின் திலகம்... ஆம் அந்த திலகத்தின் முன் அதாவது மித்திரனின் ரத்ததில் துர்வ சந்திரனின் மாயமும் கட்டஅவிழ்ந்து போகும்.
       ருத்திரன் போகாமல் வித்தகனை முதலில் போகுமாறு அனுப்ப மேகவித்தகன் வாளினை ஏந்தி முன்னே செல்ல அங்கே மஞ்சரியின் சிகையினை பிடித்து துர்வா நெஞ்சு நிமிர்த்தி நின்றான்.
     ''என்ன மேகவித்தகனே... இவள் தான் உமது ருத்திரா என்று கத்தி கொண்டு இருந்தாயே அவளா? பரவாயில்லை இவளை வசியம் செய்ய முடியாது போகவே எண்ணினேன்.. உன்னையும் வளி வெளியில் இருந்து விடுவித்து இருக்கின்றாள்... பலே பலே... ஆனால் எமக்கு இருக்கும் பலத்தில் துளி கூட இவளிடம் இல்லை... நீ பேசிய தோரணையில் இவளின் மிடுக்கு இருக்கும் என்றே ஒரு வினாடி யோசிக்க செய்தேன் ஆனால் எல்லா நங்கையும் போல ஒரு சாதாரண யுவதியாக அல்லவா இவளும் இருக்கின்றாள்... எழிலில் சதம் கொள்ளும் விதமே...'' என்றே பேச மேகவித்தகனுக்கு தற்பொழுது தான் அவசரம் கொண்டால் எல்லாம் கேட்டு விடும்... ருத்திரா இருக்கின்றாள்... இவன் மூடனாக மஞ்சரியை சொல்கின்றான்... மஞ்சரி கன்னி என்றால் இந்நேரம் வசியம் செய்து இருப்பானே... மஞ்சரியோடு தான் தான் விவாகம் புரிந்து இல்லலாக சரீரத்தில் பாதியாக ஏற்று விட்டோம் அதனால அவளை மயக்க இயலாது ருத்திரா என்றே எண்ணுகின்றானோ? என்றே மேகவித்தகன் எண்ண
     ''இவளா எமது உயிரை பறிக்க பிரம்மன் படைத்த விசித்திர பெண்... என்றே அந்த குகையே குலுங்க நகைக்க செய்தான்.

 தாரகை-பெண்
இல்லாள்-மனைவி
எழிலில்-அழகில்
யாக்கை-உடல்
தணலாக-சாம்பலாக
அருவம்-உருவம் இன்றி
பிடரியில்-கழுத்தின் பின்பகுதி
குடில்-தங்கும் இடம்
பொத்தான்-விசை-(ஸ்விட்ச்)
சவம்-பிணம்

சதம்-முழுமை...(நூறு சதம்) 

 -விழியும் வாளும்சந்திக்கும்.

-பிரவீணா தங்கராஜ்

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1