உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13
(௧௩) 13
ருத்திரா மயங்கி சரிய புரவியில் மித்திரன் அவளை கிடத்தி துர்வன் இருப்பிடம் செல்ல அதனை தன் யாகத்தின் தீயில் கண்டு ஆனந்தம் கொண்டான் துர்வன்.
இங்கு மித்திரன் இக்காரிகையை கண்டால் எம்
மனமெங்கும் உவகை ஊற்று பெருகின்றது. இவளோடு என் நினைவு பயணம் ஏதோ சொப்பணத்தில்
காண்பதாக தெரிகின்றது ஆனால் இப்பெண்ணை இதற்கு முன் பார்த்த நினைவு இல்லையே
எதனால்...? இவளை துர்வன் திருமணம் செய்ய போகும் உறவு என்று
எந்தை சொன்னாரே அப்படி என்றால் எப்படி எமக்கு இவள் மீது உவகை வரலாம்? யான்
தமையனுக்கு தீங்கிழைக்கும் கயவனா? நற்பிறப்பு
அல்லாது மாக்கன் நானோ?
எழில் கொஞ்சும் இவளை தமையனிடம் எந்தையிடமும்
ஒப்படைத்து உயிர் துறக்க வேண்டும். அவதூறான எண்ணங்கள் கொண்டு அவதினியில் இருக்க
கூடாது என்று புரவிக்கு வேகம் தொடுக்க பயணித்து அந்த இடுகாட்டிற்கு வந்து
சேர்ந்தான்.
அங்கிருந்து புரவி மேதினியில் ஓசையிட்டு செல்ல
மனதின் எண்ணம் தறிக்கெட்டதாக எண்ணினான்.
(துர்வன்) பரிதி முன் வந்து நிறுத்தி பணிந்து
"தமையன் மணம் புரியும் காரிகையினை கொண்டு வந்தோம் வேந்தனே.." என்று
சிரம் தாழ்த்தி நகர பரிதி உருவில் இருந்த துர்வன் மித்திரனை அத்துணோடு கட்டி விட
"எம்மை எதற்கு கட்டி வைக்கின்றீர் வேந்தனே.."
என்று மித்திரன் வினா தொடுக்க
"காத்திரு
புதல்வனே... விடை தந்து உம்மை வியப்பில் ஆழ்துகின்றேன்" என்று எதிரே வந்து
மந்திரம் உச்சரிக்க மித்திரன் சிந்தை தெளிவாக
"யாம்... யாம் எவ்வாறு உமது பிடியில்? ருத்திராவின்
நாட்டு சிறையில் இருந்து எங்கணம் வந்தேன்...? தாங்கள்..
தாங்கள் எப்படி தந்தையே... துர்வனை போல செய்கை புரிகின்றீர்" என்று மித்திரன்
புரியாது கேட்க மயக்கத்தில் இருக்கும் ருத்திராவை காட்டி
"அதிக
சிந்தனை செய்யாதே உடன்பிறப்பே...யாம் நமது தந்தை உருவில் இருக்கும் உம் தமையனே
தான். நூறு என்ற சதத்தில் நெருங்கும் வீரன்
நான். எமக்காக உம் ஆருயிர் காதலியை சிறை பிடித்து வந்ததும் நீ தான்" எள்ளி
நகையாடி மித்திரனை சுற்றி வந்து செப்பிட
"எங்ஙணம்
எவ்வாறு? எம்மை மறலி செய்தாயா? ஆம்
எந்தை விழிகள் எம்மை வசியத்து போனப்பின் நடந்தவை தான் இவை எல்லாம். துர்வா தந்தையை
என்ன செய்தாய்...?" என்று கட்டி
இருக்கும் கயிற்றில் இருந்து விடுபட முயல
"இது எம் மந்திரத்தால் கட்டி வைத்தது எமது
செய்கையால் அன்றி வேறொன்றால் உம்மை விடுபட வைக்க இயலாது.... நம் தந்தை தானே இதோ
காற்றோடு காற்றாக ஆத்மாவாக அடைப்பட்டு கிடக்கின்றார் தந்தையின் இரகசிய அறையில்...
இனி அவர் உருவில் நான்.... உம் காதலியை மணந்து அவள் எமக்காக உயிர் துறந்து அவளாக
தம்மை தானே பலியாக அவள் உயிரை எமக்காக பரிசளித்து உயிர் துறக்க அதீத சக்தி பெற்ற
நான் நம் இராஜாங்கம் மட்டுமின்றி இந்த எட்டு திசை ராஜ்ஜியத்தையும் ஆளும் வல்லமை
பெற்று சாகா வரத்தோடு என்றும் இளமையாக இப்பரந்த நிலத்தினை ஆள போகின்றேன். தந்தை
உயிர் எமது உடலில் செலுத்தி நானே அரசவையில் மரண தண்டனை நவின்று மக்களின் நீதிமானாக
காட்டி கொண்டு நாடாளுவேன் என்ன அதை கண்ணுற்று காண நீ தான் இப்பரணியில் இருக்க
மாட்டாய்..." என்று அவ்விடம் அதிர நகைக்க
"துர்வா...
பிழைக்கு மேல் பிழை செய்கின்றாய்.. ருத்திராவை விடுவி... உம்மை உயிரோடாவது விட்டு
வைக்கின்றேன்" என்று கர்ஜிக்க
"விடுவிப்பதா? அவளை
மணந்து உம் எதிரில் அவள் உயிர் துறக்க இறக்கும் தருவாயில் அவளின் வசியத்தை அகற்றி
அவளின் தோல்வியை அவளுக்கு பறைச்சாற்றி எம் அதீத சக்தியையும் எம் அழியா உடல் இளமை
அவளுக்கு உணர்த்துவேன்" என்று உட்கார சிரிப்பில் மாலை எடுத்து ருத்திராவுக்கு
அணிவிக்க போக அவளோ
"உம்
சொப்பணங்கள் நிறைவேறினால் தானே எம்மை ஆட்கொண்டு மணந்து உமக்காக யாம் உயிர்
துறப்பது...?! ஆனால் மூடனே.... இது எல்லாமே உமது அடங்கா ஆசையாக
அல்லாட போகின்றாய்... இவை அனைத்தும் கனவாகவே போவது அறிவாயா?" என்று
கூர்வாள் ஏந்தி ருத்திரா துர்வனின் நெஞ்சில் வெளியே கொண்டு அழுத்த அது இரண்டடி உள்
இறங்கியது.
"இது எப்படி சாத்தியம்? நீ...
நீ... வசியத்தில் அல்லவா கிடந்தாய்?" என்று
வலியோடு கேட்க
"யாம்
அதிசய நட்சத்திரம் கொண்டு பிறப்பெடுத்தவள். பிறப்பிலே யாம் சக்தி பெற்றவள் உம்மை
போல் பலியிட்டு பெறவில்லை. அந்த காளிதேவி எமக்கு அளித்தவை இக்கணம் வரை
அநியாயத்திற்கு உபயோகிப்பது அல்ல... எம்மை காப்பதற்கு கூட பயன்படுத்தாது
இருந்தேன். மித்திரனை காண செல்லும் முன் அவரின் விழி பார்வை வித்தியாசம் கண்டு
யாம் எமக்கு அவர் வசியத்து விட்டால் அது பூத்தொடுக்கும்(சிறிது நேரம்) நேரம் மட்டுமே யாம் அவர்
கட்டுபாட்டில் இருந்து மீள பயன்படுத்தினேன்.
அது போலவே புரவியில் மித்திரன் எம்மை கிடத்தி வரும்
கணம் யாம் மயக்க பிடியில் இருந்து விடுபட்டு விட்டேன். உமது திட்டம் எதுவரை என்று
தான் காத்திருந்து காவலிட்டேன். அக்கணம் கூட துர்வனுக்கு பதில் வேந்தன் இருக்க
ஐயப்பட்டு நீரே பேச வைத்து மெய்யறிய முனைந்தோம்." என்றதும் துர்வன் தனது
இத்தனை மாத பலியிட்டு சக்தி கொண்டது எல்லாம் நொடியில் தவிடாக தன்னை மரணவாயிலை அடைய
செய்யும் பெண்ணிவள் என்று அறிந்து மரண பயத்தில் காண
"போதும்
உம் பிறப்பு இப்புவியில் உமக்கு சுதந்திரம் தருகின்றேன் இந்த யாக்கையில் இருந்து' என்று
வாளால் சிரத்தை துண்டாக்க பரிதி உருவில் இருந்த துர்வன் சிரம் மண்ணில் துவண்டு
விழுந்தது.
இக்கணம் மித்திரன் அதிர்ந்து போனான். இறந்தது
துர்வன் என்றாலும் உடலோ தந்தையானது என்ற உணர்வில் அதிர்ச்சி விலகாது காண ருத்திரா
அதே வாளை கொண்டு அந்த மந்திர கட்டை உடைக்க மித்திரன் அவளை கண்டு பெருமைபடுவதா
அல்லது தந்தை தமையனின் நிலைக்காக வருந்துவதா அறியாது தவித்தான்.
அழைத்து வந்தது போல மீண்டும் புறப்பட்டனர்.
மித்திரன் தந்தை உடலை எடுத்து கொண்டும் ருத்திரா அவள் நாட்டின் புரவியிலும்
பறந்தனர்.
ருத்திரா
நாட்டின் மக்களவையில் நிறுத்தி மித்திரன் உண்மை உரைத்து பரிதி சிதைக்கு தீயிலிட அம்மக்கள் இனி தங்கள்
வீட்டின் நங்கைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நிம்மதி பெருமூச்சை கொண்டனர்.
இங்கு
மித்திரன் நாட்டில் மந்தாங்கி அவர்களுக்கு தகவல் வந்து சேர தனது மணாளன் மாண்ட
செய்தி கேட்டு மயங்கி சரிந்தார். கண்ணீர் கோடுகள் மட்டுமே அந்நாட்டின் பிரஜைகள்
உகுக்க மித்திரன் தன் நாட்டை வந்து சேர்ந்தான்.
தந்தையின் இரகசிய அறையில் குடுவையில் இருந்த தந்தை
உயிர்சுவாசம் என்ன செய்வது என்று அறியாது நின்றான்.
தமையன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகி காற்றோடு காற்றாக அருவமாக மாறி
கலந்து போக குடுவையில் இருந்த அவனின் தந்தை உயிர்சுவாசம் தாயின் முன் நிறுத்தி
மித்திரனின் சக்தியால் உருவம் தெரியாத போதும் பேசும் வல்லமை அளித்தான்.
மந்தாங்கினியிடம் துர்வன் தவறான வழியில் சென்றதை
அறிந்து கேட்க தனக்கு மயக்கமுற்று வசியத்து இரத்த ஓட்டம் நிறுத்தி அப்படி
ஆக்கியதாக சொன்னார்.
உடலற்ற உயிர்சுவாசம் என்ன செய்யலாம் என்று சக்தி
மூலமாக கண்டறிய இயற்கையாக இறக்கும் உயிர் எதுவாகினும் அவ்வுயிர் பிரிந்த கணம்
பரிதியின் உயிர்சுவாசம் புகத்தினால் மனிதனாகவோ அல்லது மற்ற உயிராகவோ காலம்
முடியும் வரை அவர் ஆன்மா அவர் பேச்சும் கேட்டு அவரோடு வாழலாம் என்று அறிந்திட அந்த
நேரம் தான் நாடோடிகளில் ஒருத்தர் அரண்மனை வெளி வாயிலில் மாங்கனியை புசித்த கிளியை
வில் கொண்டு எய்தி கொல்ல காவலாளி மித்திரன் சொன்னதால் அப்பறவையை எடுத்து வந்தனர்.
தனது
சக்தியை மீண்டும் செலுத்த பரிதியின் உயிர்சுவாசம் அக்கிளியில் வந்து சேர மித்திரன்
தனது மொத்த சக்தியை இழந்து நின்றான்.
தனக்காக
மூன்று முறை சயநலமாக உபயோகிக்க தங்கள் சக்தி மொத்தமாக இழுக்க நேரும் என்றதை
அறிந்தே செய்தான்.
*1முதல் முதலாக துர்வனிடம் இருந்து மாய வலை செய்து ருத்திரா மஞ்சரியை காப்பற்றியது. ருத்திராவை காப்பாற்றியது சுயநலம்
*2இரண்டாவது பரிதியின் உயிர்சுவாசத்திற்கு பேச்சை வரவழைத்தது
*3பரிதியின் உயிர் ஆன்மாவை கிளிக்கு புகுத்தியது
மித்திரன்
இனி சாதாரண மாந்தராக மாறி நின்றான். வசியம் மட்டும் பண்ண இயலும் அது அவன்
குருநாதர் துர்வனுக்கும் சௌமித்திரதேவனுக்கும் போதித்தது ஆகையால்.
இரு திங்கள் கடந்தன.
மித்திரன்
ருத்திரா வாழ்வு அப்படியே இருக்க மஞ்சரி ஐந்தாம் மாத கரு சுமந்து இருக்க வயிற்றில்
சிசு வளையல் ஓசை கேட்டு வளர ஐந்தாம் மாதத்தில் வளையல் பூட்டும் விழா ஆரம்பிக்க
வேந்தன் முடிவு செய்து அண்டை நாட்டின் பல தேசத்துக்கு ஓலை அனுப்பட்டது.
அவ்வோலை மித்திரன் நாடாளும் அப்பெரிய சந்திரதேசத்து
மாநகரத்திற்கும் வந்து சேர்ந்தது.
மாதங்கி
தான் அவ்வோலை கண்டு ருத்திரா மீதும் வெறுப்பை உமிழ்ந்து ஓலையை தீயிலிட்டு
பொசுக்கினார். பரிதி கிளிவடிவில் நியாயம் சொல்லியும் பரிதி நிலைக்கும் துர்வன்
இறப்புக்கும் ருத்திரா ஒரு வகையில் காரணம் என்றே வாதிட்டார்.
இத்தனைக்கும்
மித்திரன் பகுத்து மெய்யை விரிவாக விளித்து கூறியும் தாய் மனம் அதன் போக்கிலே
சென்றது.
மித்திரனுக்கோ
தனது காதலி தன் கரம் பிடிக்க எங்கணம் அனுகுவது என்று குழம்பி போனான்.
ஒரு பக்கம் உயிர் கொடுத்து அமுதம் ஊட்டிய அன்னை மறுபக்கம் தன் மனதை முழுதாய் ஆக்கரமித்த ஆருயிர் காதலி என்று இருக்க ருத்திரா மனமோ மித்திரனை எண்ணி பார்க்கின்றதா இல்லையா என்று புரியாது தவித்தான்.
ஏன் என்றால் ருத்திரா
அதன் பின் மித்திரனிடம் நாட்டின் ஒருத்தியாக கூட மித்திரனிடம் பேசாது தவிர்த்து இருந்தாள்.
காரணம் துர்வன் இறந்த அதே நேரம் சமுத்தரா, துர்வனின் செயல்கள் அறிந்து காதலுக்காக நியாயம் கேட்க அவன் காதலே மறுத்து சக்திக்காக மட்டுமே தான் காதல் நாடகம் புரிய துவங்கினோம் என்றே சொல்லிட சமுத்ரா அவன் கண் எதிரே தீக்கு இரையாக மாறி போனது துர்வன் கூறியதே.
-விழியும் வாளும் சந்திக்கும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment