தீவிகை அவள் வரையனல் அவன்-20

 


🪔🔥-20


        இன்று சம்யுக்தாவிற்கு பிறந்த நாள் எப்படி மறந்தேன்? வருடம் வருடம் நினைவு வந்து கொல்லுமே... இன்று எப்படி மறந்தேன்... என்றவன் அன்னை தன்னையே பார்ப்பதை உணர்ந்து சோபாவில் அமர்ந்தான். 


       மனமோ அவளுக்கு பிறந்த நாளுக்கு பரிசு தரவில்லையா? புது டிரஸ் வாங்கிதராத காதலன். ஒரு கேக்கை கூட வாங்க வக்கில்லாத கணவனா? என்று உள்ளம் கேள்வி கேட்டதும் எழுந்தான். 


    அட சொன்னதும் எழுந்து கிப்ட் வாங்க போறியா ஆரவ் என்று அவனின் மூளை நக்கலாக கேட்டதும் தலையை தாங்கி அமர்ந்த நிலையிலே இமையை இறுக மூடினான். 


     சம்யுக்தா அதனை கண்டு மனம் வருந்தினாள். ஆரவ் மனதிற்கும் மூளைக்கும் இடையில் சிக்கி தவிப்பதை நன்றாகவே அவளுக்கு புரிந்தது. அவன் தாடை பற்றி திருப்பி 'என்ன ஆரு பிரச்சனை மனசுவிட்டு பேசு டா.' என்று கேட்க துடித்தாள். 


     அவளை விட அவள் மனம் புரிந்தவன் ஆரவ் தான். அவன் அறியாததா? அவனாக வருவான் என்று எண்ணியிருக்க, சுபாங்கினி "வாங்க மாப்பிள்ளை" என்று அழைப்பது கேட்டு யுக்தா திரும்ப ஆரவும் நிமிர்ந்தான். 


   கையில் கேக் அட்டைப்பெட்டி எடுத்து "பிறந்த நாள் வாழ்த்துக்கள் சம்யு" என்று சந்துரு கூறவும் "தேங்க்யூ அண்ணா" என்றாள். 


    வைஷ்ணவி கையில் பரிசாக ஆடையை எடுத்து வந்து நீட்டியபடி, "அண்ணி இந்தாங்க மாற்றிட்டு வாங்க. கேக் கட் பண்ணலாம்." என்றதும் சம்யு மென்னகை புரிந்து வாங்கிக் கொண்டு மாற்ற சென்றாள். 


    ஆரவிற்கு தான் சந்துரு எப்படி நினைவு வைத்திருந்தான் அதுவும் கேக் டிரஸ் பிரஸண்ட் வேற என்று அவனை இழுத்து தனியாக கேட்டு விட்டான். 


     "மச்சான் அத்தை வைஷ்ணவிக்கு போன் பண்ணினாங்க டா. வீட்டுக்கு டோர் டெலிவரியா கேக் அண்ட் கிப்ட் வந்ததாம். நம்ம சம்யு பெயருக்கு... முதல்ல என்னனு தெரியாம கேக்கை வாங்கி பிரித்து இருக்கா அதுல ஹாப்பி பெர்த்டே சம்யு குட்டி எழுதியிருந்ததை பார்த்ததும் தூக்கி எறிந்திடவும் தான் அத்தை பார்த்து இருக்காங்க. சம்யுவுக்கு பிறந்த நாள் கிப்டை திரும்ப அதே அட்ரஸ்க்கு எடுத்து போக சொல்லிட்டாளாம். சுவாமிநாதன் அனுப்பியிருப்பார் போல.


     அத்தைக்கு இதை பார்த்ததும் கஷ்டமா போச்சாம். ஒருமுறை உங்க வீட்டுக்கு பிறந்த நாளென வந்தாப்ப அன்னிக்கு அத்தை மனசு சங்கடமா நிறைய பேசினாங்களாம். அதான் சம்யுவுக்கு இந்த நேரம் கூட வேற உறவும் இல்லை நட்பும் இல்லை. வைஷ்ணவிகிட்ட சொல்லி கேக் டிரஸ் வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க. அதான் நானும் ஒரு சின்ன கிப்ட்டோட வந்துடலாம்னு. ஏன்டா உனக்கு காலையில் நினைவு இல்லையா? அந்தளவு மறந்துட்டியா ஆரவ்." என்றதும் ஆரவ் கல்லாக மாறி இருந்தான். 


     இத்தனைக்கும் அவன் மாறியதற்கு காரணம் கடந்தகாலம் என்று இறுகிப் போனான். 


     அதற்குள் சேலை அணிந்து வந்து தயங்கி நின்ற சம்யுக்தாவை, "அண்ணி ப்ளவுஸ் கரெக்டா இருக்கா... அம்மா சொன்னதும் போய் வாங்கி தைய்த்து வந்தது." என்றாள் வைஷ்ணவி. 


      "சரியா இருக்கு வைஷூ. தேங்க்ஸ்... பிறந்த நாள் வாழ்த்து கூட யாரும் சொல்லாம இந்த தினம் முடியுமோனு நினைத்தேன். இப்ப சந்தோஷமா இருக்கு." சம்யு கூறியதும் ஆரவ் விடுக்கென நிமிர்ந்து பார்த்தான். 


    இங்கே தான் ஒருவன் மனதில் நித்தம் நித்தம் குமைந்திருக்க இவளுக்கு சந்தோஷமா? என்று பார்த்தான். அடுத்த கணம் யுக்தா கண்களை கண்டவன் பார்வையை அவளிடமிருந்து அகற்றிக் கொண்டான். 


      கேக் கட் செய்து முதல் துண்டை ஆரவ் புறம் திருப்புவாள் தட்டி விட எண்ணி இருக்க, அவளோ தன் மாமியாருக்கு ஊட்டி முடித்தாள். ஆரவ் ஒரு கணம் நெகிழ்ந்து விட்டான். 


     "எனக்கு அம்மா இல்லை. என்னால இந்த குடும்பம் எத்தனை துன்பத்தை அனுபவித்து இருக்கோம்னு புரியுது. அத்தனை துன்பம் அனுபவித்தும் இந்த குறிப்பிட்ட நாளில் என்னை புரிந்து கொண்டவங்க நீங்க. எனக்கு அத்தையா தெரியலை அம்மாவா தான் தெரியறீங்க." என்று கூறவும் சுபாங்கினி இத்தகைய பெண்ணையா அன்று கடுஞ்சொல் சொல்லி பிறந்த நாள் அதுவுமாக வீட்டில் இருந்து அனுப்பினோம் என்ற  குற்றவுணர்வு வந்தது. 


     "சந்துரு அண்ணா இந்தாங்க" என்று ஊட்ட வந்தவளின் கையை பற்றி திருப்பி ஆரவ் பக்கம் நகர்த்த ஆரவ் எதிர்பார்க்காததால் அவள் ஊட்ட சந்துரு திணிக்கவும் ஒரு கடி அதில் பதித்து இருந்தான். மீதியை வேறு யாருக்கும் உண்ண பிடிக்காது யுக்தாவே சாப்பிட்டு முடித்தாள். 


     அதே சந்தோஷத்தோடு இரண்டு பீஸ் கட் செய்து சந்துருவிற்கும் வைஷ்ணவிக்கும் கொடுக்க உண்டனர். 


      சந்துரு வைஷ்ணவி இருவரும் சேர்ந்து அந்த பிரசெண்டை நீட்டினர். யுக்தா குழப்பத்தோடு நிற்க, "வாங்கிக்கோ சம்யு" என்று சுபாங்கினி சொல்லவும் "தேங்க்ஸ் அண்ணா" என்று பிரிக்க, கண்ணை பறிக்கும் நகை இருந்தது. 


      "அண்ணா அண்ணிக்கு போட்டு விடு" என்று வைஷ்ணவி சொல்ல, ஆரவ் பார்த்த பார்வையிலே வைஷ்ணவி அமைதியாகி விட்டாள்.


    சுபாங்கினி ஆரவ் செய்கையை எண்ணி தனிபட்டு அவனிடம் பேச அக்கணமே முடிவெடுத்தார். 


     சற்று நேரம் இருந்து பேசிவிட்டு, உணவருந்தி, வைஷ்ணவி சந்துரு கிளம்பினர்.


    சந்துரு தான் போகும் பொழுது "அவன் சீக்கிரம் புரிந்துப்பான் மா. மனசுல இருக்கற வலி மறைய நேரமெடுக்கும் மா. இப்ப தானே உன்னை பார்த்து இருக்கான். கொஞ்சம் கொஞ்சமா உன் முகமே பழையதை மறக்க வைக்கும். தானா உன் ஆருவா வந்து பாசத்தை பொழிவான்." என்று கூறினான். 


    "உங்க ஆசிர்வாதம் அண்ணா. நிஜமானா ரொம்ப சந்தோஷம் தான்." என்று கூறி வழியனுப்பி விட்டாள். 


     ஆரவ் அப்பொழுதே அவனறைக்கு சென்று இருந்தான். 

     

      மனம் அத்தனை கோபத்தில் தகித்தது. அது யார் மேல் என்பது தான் அவனுக்கே எரிச்சலாக இருந்தது.


    சுபாங்கினியும் அவரது அறைக்கு உறங்க சென்று இருந்தார். 


     கதவை திறந்து தாழிட்டு, ஆடை மாற்ற முயன்றவள் ஆரவை கண்டு அதிர்ந்து நின்றாள். 


     தொப்பலாக நனைந்து வந்தவன் கண்கள் மட்டும் சிவந்து கோவப்பழமாக இருந்தது. 


      அவனை கண்டு ஒதுங்கி சென்று உடை மாற்ற நைட்டி எடுக்க முயன்றாள். 


    ஆரவ் அவளை கைபற்றி இழுத்தான் அவன் மீதே பூ போல மோதியவளை கண்கள் கலக்க சில நிமிடம் விழியில் கவிதை புரிந்தான். 


     அவளின் மெல்லிடையில் தன் வன்கரத்தை பதித்தவன். அவள் உதட்டிலும் முதல் முத்தத்தை பதித்தான். 


     உயிர் அமுதம் கிடைத்த மனநிலையில் இத்தனை நாள் வலிகளை மனழுத்தங்களையும் அதில் நிவர்த்தியானது. 


     ஆரவின் முத்தம் அதனோடு முடியாமல் நீண்டு கொண்டு செல்ல, சம்யுக்யா அவனின் கைகளுக்கு தடை விதிக்காமல் அவனுடன் கலந்தாள்.   


    இவனுக்கு அவள் மருந்தா? அவளுக்கு இவன் மருந்தா? என்பது அறியாது இருவருக்கும் அருமருந்தாய் மாறி நிம்மதியில் பயணித்து நித்திரையும் அடைந்தனர். 


    அதிகாலை ஆரவின் கைவளைவில் உறங்கும் சம்யுக்தாவை கண்டு ஆரவ் கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவு நடந்தவை ஓட்டி பார்த்தான். 


    மெல்ல ஆரவ் எழுப்பும் நேரம் தன் முட்டி கையால் அவளின் உள்ளங்கையை அழுத்தம் கொடுத்து விடவும் அதன் வலியில், "ஸ் ஆ அப்பா" என்று முணங்கவும் ஆரவ் மனம் சுவாமிநாதனை எண்ணி விட்டது. தேனை பருகும் பொழுது குரங்கை எண்ணிவாட்டான். மீண்டும் வேதாளம் ஆனான். 


    மெத்தையில் சற்று சள்ளி விழுந்தவள் ஆரவின் சினம் கண்டு எதற்கென்று புரியாமல் அவனை விழித்து நோக்கினாள். பாதி தூக்கத்தில் வலியில் முணங்கியதை அவளே அறியாமல் இருந்தாள்.


      மேலும் நமக்கு அடிப்பட்டால் அப்பா என்றோ, அம்மா என்றோ அனிச்சையாக குறிப்பிடும் வார்த்தையை அவள் உச்சரித்ததை ஆரவ் 'அப்பா' என்றதை மட்டும் உள்வாங்கி இருந்தான். 


     "அது எப்படி டி. இங்க நான் சித்திரவதை அனுபவிச்சிட்டு இருக்கேன். நீ மட்டும் எப்பவும் போல அதே சந்தோஷம் நிம்மதியோட மிடுக்கா இருக்க? எத்தனை வலி கொடுத்தும் உன்னை வீட்ல வைத்து இருக்கேன் பாரு." என்று வீறிட்டு கத்தினான். 


      நேற்று நடந்தவை கூட உணர வைக்க முடியாது அவன் கேள்விகள் குழப்பத்தை தரவும், அவனே தொடர்ந்தான். 


     "நான் உன்னை மிஸ்பிகேவ் பண்ணினேனா? உங்கப்பா நம்ம காதல் தெரிந்ததும் உனக்கு கொடுத்த அட்வைஸ்ல நான் மத்தியவாசி தெரிந்ததா? ஏன் நம்ம காதலிக்க ஆரம்பிச்சப்ப தெரியாதா? அது என்ன? என் வாயை அடைக்க எங்க வீட்டு பெண்ணோட மானத்தை கேவலப்படுத்தி சீப்பான ஆளா இருக்கான் உங்கப்பன். 


    தெரியுமா டி உனக்கு... உன்னால என் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியதுன்னு. 


    எங்கம்மா வேலையிலிருந்து எடுத்தாங்க, வாடகை வீட்டை விட்டு வெளியேற வைத்தான். படிக்கிற படிப்பை கெடுக்க எண்ணி உன்னை கெடுக்க முயன்றேனும் அதனால நீ விபத்தே பரவாயில்லைனு வண்டில மோதியதா கேஸ் போட்டு உள்ள தள்ளியிருக்கார். 


    நீ அதுக்கு பளிச்சினு கையெழுத்து போட்டு கொடுத்து இருந்த? ஜெயிலில் தள்ளியும் உங்கப்பா வெறி அடங்கலைல என் தங்கை என்னடி பாவம் பண்ணினா? வேசி பட்டம் கட்ட பார்த்தான் அந்தாளு. 


    மனுஷனா டி... ஜெயில் வந்து என்னிடமே சொல்லி என் கையாளாகாத தனத்தை பார்த்து ரசிக்கிற சாடிஸ்ட்டா இருந்தான். சந்துரு இல்லைனா என் அம்மா தங்கை செத்து போயிருப்பாங்க.... எல்லாத்துக்கும் காரணம் நீ... ஆனா மேடம் ஹாயா லண்டனுக்கு படிக்க போயிட்டீங்க. 


    காதல் கன்றாவி உனக்கு தேவையில்லை. படிப்பும் பதவியும் உன் கம்பெனி ரன் பண்ற அளவுக்கு ஆளுமையும் தான் வேண்டுமென்றால் எதுக்கு டி என்னை மாதிரி ஒருத்தனை நடுவுல காதலிக்கறீங்க. 


     போ... தேர்ட் கிரேடு ஆளு தான் உன்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்து ருசித்தது. 

   

    சே... உன்னோட இருந்ததை வலியோட கொடுக்க கூட என்னால முடியலை. 


    இந்தா... எனக்கு உன்னோட இருந்த ஒரு இரவுக்கு விலை." என்று கற்றை நோட்டு இருந்த பணப்பெட்டியை எடுத்து பணத்தை  அவள் மேல கொட்டினான். 


      சம்யு எதையும் பெரிதுபடுத்தவில்லை. ஆரவ் தாலி நெஞ்சில் சுமந்த பிறகு ஒவ்வொன்றாய் அறிந்து கொண்டுள்ளவள் தானே. என்ன கடைசியாக தன்னோடு இல்லறம் இனிக்க நடந்த தாம்பத்தியத்திற்கு பணத்தை மழையாக பொழிந்தது தான் சம்யுவிற்கு கண்ணீர் மழையை தோற்றுவித்தது. 


      மெல்ல அந்த கட்டுக்களை மீண்டும் பெட்டியில் அடுக்கி முடித்தவள். 


    "நான் அழுதா... என்னை விட நீ தான் ஆரு கஷ்டப்படுவ. ஏன்னா... என்னை விட என்னை விரும்புவது நீ தான். இது உனக்கும் தெரியும் ஆனா அதை ஒப்புக்க தான் எங்கப்பா செய்த தீவினை தடுக்குது. புரியுது ஆரவ். 


   நடந்தவைக்கு நான் எதற்கும் விளக்கம் தரப்போவதில்லை. என்னோட நிலைமையும் புரியவைக்க போறதில்லை. எப்படி நான் விரும்பியதை நீயா புரிந்து உன் வாட்ஸப் புகைப்படம் நான் பார்க்க நீ என் பெயரை சேவ் பண்ணி முடித்து இருந்தியோ, அதே போல என்னோட நிலைமை நீயா யோசிப்ப அப்போ புரிந்து யுக்தானு வருவ. அந்த நாள் ரொம்ப தூரம் இல்லை. ஆரு என்று கூப்பிடாதே அந்த அருகதையில்லைனு சொன்ன நீயே அப்படி கூப்பிடுடினு கேட்ப. அதுக்காக காத்திருக்கேன். 

  

     இந்த பணம் கொடுத்து நம்ம தாம்பத்தியத்தின் இனிமையை நீயே தாழ்த்திடாதே. என் பிறந்த நாளுக்கு நம்ம அனுபவித்த இனிமை தான் பரிசா எண்ணி இருக்கேன். அதை நீ வேண்டுமென்றால் தாழ்த்தி பேசி என்னை காயப்படுத்துவதா நினைச்சிக்கோ. ஆரவ் மனைவியா நான் உடலளவிலும் சேர்ந்ததால் சந்தோஷப்பட்டுக்கறேன்." என்று மெத்தையில் தன் சேலையை தேடிக் கொண்டிருந்தாள். 


    ஆரவ் அவளின் பேச்சில் அசையாது நின்றான். சம்யு சேலையெடுத்து போர்த்தி குளிக்க சென்றாள். 


-வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 


- பிரவீணா தங்கராஜ். 


      

   


Comments

  1. யுக்தா நிலைமை பாவம்! ஆரவ், உனக்கு உண்மை புரியும் போது ரொம்ப வருத்தம் உனக்கு தரும்!

    ReplyDelete
  2. Super ud sis. Arambathula vantha samyu kum intha aaru hoda kadali samyu kum evvalavu vithiyasam.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு