நீ என் முதல் காதல்-29

 அத்தியாயம்-29

மணி எட்டு இருக்கும் விடாமல் காலிங் பெல் அடிக்க கேட்டு ஸ்ரீநிதி கண்விழித்தாள்.

"எந்த எருமை இப்படி உயிரை வாங்குது" என்று போர்வையை வீசிவிட்டு நடக்க, ம்ருத்யுவை தேடி அறைக்கு சென்றாள்.
தாரிகா-பைரவ் புகைப்படத்தை கட்டியணைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இந்த அழைப்பு மணியோசையிலும் விழித்திறக்காதவனை கண்டு, 'நேத்து எப்ப தூங்கினானோ, எப்படி சத்தம் கேட்டும் எழுந்திருக்கலை' என்று வாசலுக்கு சென்றாள்.

கதவின் சிறு துவாரம் வழியாக எட்டி பார்த்தாள். வால் இல்லாத தன் தங்கை ரிது குரங்கு வந்திருப்பது தெரிந்தது.

'இவளை... எனக்கு சக்களத்தியா வர எவ்ளோ ஆசை. மண்டையை உடைக்க போறேன்' என்று கதவை திறக்க முயல, "சும்மாயிரு ரிதும்மா. அடிக்கடி பெல் அடிக்காத. அக்காவா எழுந்து வருவா.' என்று ஸ்ரீவினிதா பாட்டி குரல் கேட்டது.

''பெல் அடிச்சே வரலை. இதுல அடிச்சிட்டு வெயிட் பண்ணினா எப்படி வருவாங்க?" என்று சிறுகுழந்தையாக பதில் கொடுத்தாள்.

"புதுசா கல்யாணமானவங்க கொஞ்சம் லேட்டா தான்டி வருவாங்க. இந்த பதில் திருப்தியா இருக்கா. கொஞ்சம் கையை காலை வச்சிட்டு சும்மாயிரு" என்று லலிதா வேறு அதட்டினார்.

ஸ்ரீநிதியோ தன் ஆச்சி, அய்யம்மை வந்திருப்பதை கண்டு கதவை திறக்காமல், ம்ருத்யுவை தேடி ஓடினாள்.

ம்ருத்யு படுத்திருந்த அறைக்குள் வந்தவள், "ம்ருத்யு ம்ருத்யு ம்ருத்யு டேய் எழுந்திரிடா. அங்க ஆச்சி அய்யம்மை வந்திருக்காங்க. ம்ருத்யு என்று உலுக்க, திகைத்தவன் நெற்றி சுருங்கி என்ன என்பதே புரியாது பெண்ணவளை ஏறிட்டான்.

"அய்யோ.. என்னை அப்பறம் பாரு. அங்க ஸ்ரீவினிதா அய்யம்மை, லல்லு ஆச்சி, அவங்களோட அந்த குட்டி குரங்கு வந்திருக்கு." என்றதும் "பாட்டி ஆச்சி எதுக்கு வந்தாங்க?" என்று அவளையே பதில் வினா தொடுத்தான்.

"தெரியாது. முதல்ல வா. ரொம்ப நேரமா பெல் அடிக்கறாங்க. நீ வேற ரூம் நான் வேற ரூம் என்றால் இந்த ரிது என்னை ஆயிரத்தெட்டு கேள்வி எழுப்புவா." என்று இழுத்து சென்றாள்.

ஸ்ரீநிதி கைகள் தன் கையை பற்றி இழுக்க அதில் கவனம் செலுத்தியபடி கூடவே வந்தான்.

கதவை திறந்ததும் ஆச்சி பாட்டியிடம் கவனம் சென்றது.

"வாங்க பாட்டி என்ன ஆச்சி இவ்ளோ காலையில? " என்று விசாரித்தான்.

ரிதன்யாவோ "பெல் அடிக்க சட்டுனு திறக்காம என்ன பண்ணிட்டு இருக்க. மணி எட்டு ஆகறது கூட தெரியாம தூங்கற அப்படி தானே? இரு இரு மம்மியிடம் போய் கம்பிளைன் பண்ணறேன்." என்று ஆள்காட்டி விரலால் அச்சம் மூட்ட முயன்றாள்.

அங்கிருப்பது ஸ்ரீநிதியாயிற்றே "போடி போ. கம்பிளைன் பண்ணு காம்பிளன் குடிக்கிறவ எல்லாம் கம்பிளைன் பண்ணறாளாம்" என்று தங்கையை திட்டியபடி வந்தவர்களை அமர வைக்க, "நீ முதல்ல உட்காரு. கையில என்ன கட்டு? நேத்து போன் கட் பண்ணறச்ச தான் கவனிச்சோம். உங்கம்மாவிடம் கேட்டா உங்க பேத்தியிடம் கேளுங்கனு சொல்லிட்டா. நேத்து போன்ல கேட்கறதுக்கு பதிலா நேர்லயே வந்துட்டோம். என்னாச்சு?" என்று ஸ்ரீவினிதா வந்ததும் வராததும் வினாத்தொடுத்தார்.

"அய்யோ அய்யம்மை ஆப்பிளை கட் பண்ணறச்ச ம்ருத்யு ஆர்க்கியூமெண்ட் செய்தான். நான் அவனை பார்த்துட்டு பேச, கை லைட்டா கீறிடுச்சு." என்று கூறினாள்.

"நான் சொன்னேன்லங்க உங்க பையன் தான் ஏதாவது வம்பு இழுத்துயிருப்பான்னு." என்று தாரிகா குரல் வாசலில் வந்தது.

ம்ருத்யு எழுந்தவன் "அம்மா" என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டான். நீண்ட நாட்கள் தன் அன்னையை காணத குழந்தையை போல.

பைரவோ "நேத்து அத்தை போன் போட்டதுலயிருந்து தாரிகாவுக்கு இருப்பு கொள்ளலை. என் மருமகளுக்கு கையில கட்டா? ஹாஸ்பிடலுக்கு போய் வந்திருக்காளா, அய்யோ இப்ப என்ன பண்ணுதோ ஏது பண்ணுதோ, காலையிலேயே கூட்டிட்டு வந்துட்டா. இங்க வந்தா நீங்க எங்களுக்கு முன்ன வந்திருக்கிங்க." என்று ஸ்ரீவினிதாவிடம் பேசினார். அதனால் ம்ருத்யு அன்னையை அணைத்து கண்கலங்க அணைத்திருப்பதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால் ஸ்ரீநிதி கண்ணில் தப்பவில்லல.

"ம்ருத்யு பல்லு கூட விளக்கலை. முதல்ல ப்ரெஷ் பண்ணி பிரெஷ்ஷாகிட்டு வருவோம் வாடா" என்று இழுத்து சென்றாள்.

"கொஞ்ச நேரம் இருங்க அத்தை மாமா வந்திடறோம்." என்று மகனை இழுத்து சென்றவளை கண்டு சிரிப்பு தான் வந்தது. கல்யாணமான சின்னஞ்சிறுசுகள் நேரம் காலமின்றி உறங்கியிருக்க அவர்கள் எண்ணமெல்லாம் மகன் வாழ்வு இனித்திருக்க மகிழ்ந்தனர்.

இருவருமே இரவாடையோடு நிற்க, மற்றவர்களும் முதல்ல போய் வரட்டுமென விட்டனர்.

ஸ்ரீநிதி மட்டும் ரிதன்யாவிடம் "ரிது ஆச்சி அய்யம்மைக்கு அத்தை மாமாவுக்கு சாப்பிட ஏற்பாடு பண்ணு" என்று உத்தரவிட்டாள்.

"மனசாட்சியே இல்லாம என்னை வேலை வாங்கறா பிசாசு" என்று முனங்கி கொண்டே அக்கா வீட்டில் காலை உணவிற்கும் வந்தவர்களுக்கும் ஏதாவது உள்ளதா என்று கிச்சனை உருட்டினாள்.

சின்ன பேத்தி கிச்சனை உருட்டினால் லலிதாதாவுக்கு பொறுக்குமா? "ஆச்சி செய்யறேன் டா" என்று வந்துவிட்டார்.

தாரிகா பைரவ் இருவரும் ஸ்ரீவினிதாவோடு பேசினார்கள்.

பைரவ் தான் "ஹனிமூன் போகச்சொன்னா வீட்லயே இருக்கான். இவனை என்ன செய்யறது. கேட்டா லண்டன்ல இருந்து வந்துட்டு கொஞ்ச நாள் வீட்ல வீட்டு சாப்பாடுனு இருக்கேன் ப்ளீஸ் டேடினு அன்னைக்கு சொன்னான்.
ஸ்ரீநிதிக்கு ஆசையிருக்கும்ல. என்னதான் உலகத்தையே ஷண்மதி யுகேந்திரன் சுத்தி காட்டி பெத்தவங்க வளர்த்திருந்தாலும், இப்ப கணவரோட போறது தனி சுகம் ஆச்சே. நீங்க கொஞ்சம் சொல்லுங்க அத்தை. அதனால கூட சண்டை வாக்குவாதம் வந்திருக்கும்." என்று ஐடியாவை வழங்கினார்.

இங்கு அறைக்குள் வந்த ம்ருத்யுவிடம், "முதல்ல குளிடா. முகமே வருஷக்கணக்கா சோகத்தை அப்பிட்டு திரியறவனா இருக்க. அப்பறம் ஏன் எதுக்குனு ஆரம்பிச்சு, என் பக்கம் தான் உங்கத்தை ஷணு தலை திரும்பும்.

என்னை பார்வையால எரிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை." என்று குளிக்க தள்ளினாள்.

ம்ருத்யு ஒரு வேகத்தில் உள்ளே சென்றவன் குளித்து விட்டு உடையை எடுக்க மறந்தவனாய், குளித்தப்பின் உடுத்தும் மெத்தென்ற ஆடையோடு வெளிவந்தான்.

முன்பு மேற்சட்டையை கழற்றி அவன் நின்ற கோலத்தை விட, இன்று நெஞ்சின் ரோமங்கள் மட்டும் தெரிய வந்தாலும் ஸ்ரீநிதிக்கு பார்வை தாழ்ந்தது.

அவளுமே குளியலறைக்குள் ஓடமுயன்றாள்.

ம்ருத்யு அவள் கைப்பிடித்து தடுத்து, "கையில தண்ணி படாம பார்த்துக்கணும். ஸ்டரெயின் பண்ணாத" என்று நிறுத்தி கூறினான்.

அவன் தீண்டியதை கண்டு தலையாட்டியவள் "எனக்கு தெரியும்டா" என்று கூறினாள்.

கையை உதறவோ, நழுவவோ மனமின்றி இருக்க, ம்ருத்யு சொல்லியதும் கையை விடுவித்து கொண்டான்.

குளிக்க சென்றவள் ம்ருத்யு பிடித்த தன் கையை அடிக்கடி பார்த்தாள்.

ஏதோவொன்று உள்ளுக்குள் சென்று இதயத்தில் நுழைவதை உணர்ந்தவளுக்கு, வெளியே ரிது குரல் கேட்டது.

"என்ன அத்தான் நீங்க. சட்டை பட்டன் மாத்தி போட்டிருக்கிங்க. என்னவொரு யோசனை. நினைப்பு எல்லாம் எங்கயோ இருக்கா?" என்ற குரலில் வேகவேகமாய் குளித்து முடித்து வந்தாள்.

அவ்வறையில் ரிது இல்லை.

"ரிது பேச்சு சத்தம் கேட்டுச்சு" என்று இவனை போலவே குளித்து முடித்து அணியும் ஆடையோடு வந்தாள்.

"நீ போ ஸ்ரீ டிரெஸ் மாத்த வருவானு அனுப்பிட்டேன். அவளை என்னிடம் இருந்து விலகிட்டு தான் இருக்கேன்." என்று பதில் தந்தான்.

ஷண்மதி அத்தையால் சின்னவ மனசுல உன்னை பத்தி ஆசை முளைச்சிட கூடாது என்ற பேச்சு இருந்ததால் ரிதுவை அனுப்பிவிட்டான். அதோடு முன்புமே இப்படி தான் நீ போ நீ போ என்று அனுப்பி விடுவான். அதனால் ரிதுவுக்கு அந்த வித்தியாசம் கண்ணில் படவில்லை.

முன்பு அனுப்பியதற்கும் தற்போது அனுப்பியதும் ஸ்ரீநிதிக்கு நன்றாகவே புரிந்தது.

'அந்த பயம் இருக்கட்டும். ரிதுவை வச்சா என்னை கார்ணர் பண்ணற' என்று மிதப்பில் சிரித்தாள்.

ம்ருத்யுவிற்கு அவன் இயல்பு குணம் தலைதூக்கியது. ஆனால் கட்டுப்படுத்திவிட்டான்.

டீஷர்ட் ஷார்ட்ஸ் என்று வெளியேறவும் வேகமாய் இவளும் முட்டிவரை இருந்த ஒரு வெஸ்ட்ரன் உடையை அணிந்து புறப்பட்டாள்.

தாரிகாவின் பக்கம் வந்து அமர்ந்துக்கொண்டவன், அதன் பின் நலன் விசாரிப்போடு சென்றது.
பைரவ் முதலிலேயே மகனிடம் ஹனிமூன் போகலையா? அதுயிதுயென குற்றம் சாட்ட, 'இங்க ஒருத்தியோட காதலை பிரிச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிருக்கேன். அவளுக்கு இப்ப என்னை சுத்தமா பிடிக்காது. இதுல ஹனிமூனா? இதுல நான் வேற இந்த வீட்டு பையனே இல்லை அநாதை என்று தெரிந்திடுமோனு கவலையில இருக்கேன். இதுல எங்க ஹனிமூன். இயல்பா சிரிக்கவே முடியலை.' என்று முகம் வாட, தந்தை சொன்னதற்காக மகன் முகம் இப்படியுள்ளதென எடுத்துக் கொண்டார்கள் பெற்றவர்கள்.

ஸ்ரீவினிதா மற்றும் லலிதாவோ 'என்னவோ உள்சண்டை பூசல் இருக்குதோ. ஷண்மதி தான் நேத்தே பார்த்துட்டாளே' என்ற பெரிதாக சிந்திக்கவில்லை.

ரிதுவிற்கு அக்கா அத்தானின் ஊடலுக்கு காரணம் ஷண்மதிக்கு அடுத்து முதல் ஆளாக தெரிந்து வைத்து கொண்டாளே. அதனால் அத்தானிடம் "என்ன அத்தான் எதுவும் திரும்ப பிரச்சனையா? அம்மாவுக்கு தெரிந்துட்டா பிரச்சனை இந்நேரம் தலைதெறிக்க ஓடியிருக்கணுமே. நீங்க என்ன இன்னமும் டல்லாயிருக்கிங்க.

அம்மா மேல இருக்கற கோபத்தை ஸ்ரீக்கா பிசாசு உங்களிடம் காட்டறாளா? அப்படின்னா சொல்லுங்க அதையும் அம்மாவிடம் போட்டு கொடுத்திடுவோம்." என்று கிசுகிசுக்க, "அதெல்லாம் சரியாகிடுச்சுனு ரூம்லயே சொல்லிட்டேனே ரிது. ஸ்ரீநிதி ஆப்பிளை கட் பண்ணி தெரியாத்தனமா கையை கீறியது தான் கஷ்டமாயிருக்கு." என்று கூறவும் ரிதன்யாவுக்கு அந்த பதில் போதுமானதாக இருந்தது.

இந்த அத்தான் சிறு வயதிலிருந்தே ஸ்ரீநிதிக்கென்றால் இப்படி தான் வாடுமென்று புரிந்தவளே.

காலை சாப்பாடு சாப்பிடும் நேரம் வந்ததும் உணவு மேஜையில் வந்தார்கள். சேமியா ப்ரிஞ்ச் செய்திருக்க சூடானதை நெய் வாசம் மணக்க தட்டில் பரிமாறினார் லலிதா.

ரிது ஆச்சியை அமரவைத்துவிட்டு, பரிமாறினாள்.

ஸ்ரீநிதி ஒவ்வொர் முறையும் தண்ணி எடுக்க, சாதம் வைக்க இடதுகையை உபயோகப்படுத்த லேசாய் சுருக்கென்றது.

"நீயேன்டா கஷ்டப்படற. அத்தையிடம் கேட்டா எடுத்து தரப்போறேன்" என்று தாரிகா உதவினார்.

ஸ்ரீநிதி நொடியில் திட்டம் தீட்டியவளாக, இங்க தனியா நான் தானே அத்தை செய்யணும் பழகிக்கறேன்." என்று கூறினாள்.

"வேலைக்கு ஆட்கள் வச்சிக்கலாமே." என்று பைரவ் ஆலோசனை வழங்கினார்.

"கொஞ்ச நாள் போகட்டும்னு ம்ருத்யு தான் சொன்னான்." என்று கூறவும் அன்னையையே விழியகலாமல் பார்த்தவன் ஸ்ரீநிதியை சட்டென திரும்பி பார்த்தான்.

'இவயென்ன புதுசா ஏதோ சொல்லறா. என்ன மைண்ட்ல சுத்தறானு தெரியலையே. அம்மா அப்பாவிடம் என்னை பத்தி சொன்னா அவங்க அடுத்து உடைந்திடுவாங்களே.' என்று தந்தை பைரவ் பக்கமும் விழி சென்று மீண்டது.

மற்றவர்களுக்கு தனிமை வேண்டி ம்ருத்யு நினைத்திருப்பானென்று புரிந்துக் கொண்டார்கள். அதனால் சிரித்து பூரித்துக்கொண்டார்கள்.

ஸ்ரீநிதியோ "அத்தை நான் பேசாம அங்க வரட்டுமா. கை சரியானதும் இங்க வந்திடறேன். நீங்க தான் ஓகேவானு சொல்லணும்." என்று நல்லப்பிள்ளையாக கேட்டாள்.

ம்ருத்யுவிற்கு ஸ்ரீநிதி என்ன விதத்தில் பேசுகின்றாளென்று அறியாது தவித்தான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1