நீ என் முதல் காதல்-22
அத்தியாயம்-22
ஜீவி போனதும் ம்ருத்யு அவன் வீட்டிற்கு சென்று ஸ்ரீநிதி சடங்கு சம்பிரதாயம் நிறைவேற்றினாள்.
எதிரெதிர் நெருப்பு பொறி போல கண்கள் சந்தித்தாலும் பெற்றவர்களிடம் தங்கள் பித்தலாட்டத்தை காட்டிக்கவில்லை.
ஸ்ரீநிதி எப்படி ஜீவி பற்றி கமுக்கமாய் காய் நகர்த்தினாளோ, அதே போல ம்ருத்யுவும் கமுக்கமாய் இருந்தான்.
இவர்கள் இருவர் தான் இப்படி என்றால் அக்காவை பார்த்த ரிதன்யாவோ அதற்கு மேலாக இருந்தாள்.
இங்கே யுகேந்திரன் கொடுத்த வீட்டில் தனியாக இருவரும் வந்து சேரும் வரை அதீத மௌவுனம் ஆட்கொண்டது.
ஏற்கனவே இங்கு வந்து சென்று இருந்ததால் ஸ்ரீநிதி தனியாக ஒரு அறைக்கு செல்ல, ம்ருத்யு அவள் பின்னால் வந்தான்.
"என்னோடவே ஸ்டே பண்ணலாம் ஸ்ரீநிதி. ஐ அம் எ குட் பாய்." என்று நெஞ்சில் கைவைத்து கூறவும் ஸ்ரீநிதியோ, "நான் ஜீவியோட சாட் பண்ணணும். நீயிருந்தா டிஸ்டர்பா இருக்கும்." என்று சாதாரணமாக கூறியவளை வெறியுடன் கையை பிடித்தான்.
ம்ருத்யு பிடித்த பிடியில் கை வலிக்க முகம் சுணங்கியது ஸ்ரீநிதிக்கு.
"ம்ருத்யு என்ன பண்ணற?" என்று முகம் சுணங்கி கையை விடுபட முயன்றாள்.
அதை கண்டவன் "அய்யோ ஏன் ஸ்ரீ என்னை மிருகமாக்குற. நான் இதுக்கு முன்ன உன்னிடம் பேடா நடத்துக்கறேனா? கொஞ்சம் யோசி ஸ்ரீநிதி, ஜீவி வேண்டாம்மா. நீ அவனை காதலிச்சது பழகியது ஜஸ்ட் டூ இயர் இருக்குமா? நான் ரொம்ப நாளாவே உன்னோட பழகியிருக்கேன் எப்ப காதலிச்சேன்னு கூட எனக்கு தெரியாது. நான் பாவம் இல்லையா?'' என்று கேட்கவும் ஸ்ரீநிதி மனம் தடுமாற்றம் கொண்டது. ஆனால் அவன் உதடும் நாக்கும் அவளை சீண்டும் விதமாக குறும்பு கண்ணோடும், பார்பபவனை எரிக்கும் விதமாக கையை உருவி கதவடைத்து சென்றாள்.
ம்ருத்யு கையை தேய்த்து பொறுமையாக இன்னொரு அறைக்கு சென்றான்.
வீட்டில் ஜாமரை வாங்கியிருந்தவன் அதனை ஆன் செய்திட, சிக்னல் முற்றிலும் செயலிழந்தது.
ஸ்ரீநிதி சென்ற வேகத்திலேயே போனை கையில் ஏந்தி 'பச் சிக்னல் இல்லை." என்று அங்கும் இங்கும் சுற்றினாள்.
ம்ருத்யு கையை கட்டி ஸ்ரீநிதியை ரசிக்க, "புல் ஷிட் இந்த நெட்வொர்க்குக்கு என்ன ஆச்சு." என்று முனங்கினாள்.
ம்ருத்யு சிரிக்கவும் "ஏன்டா சிரிக்கற?" என்று கத்தினாள். ஜீவியிடம் எந்த தகவலும் பரிமாறாத நிலையில் கோபம் பிறந்தது.
"பச் நம்ம லைப்ல நீ நான் இதுவரை சண்டையே போட்டதில்லை. முதல் முறை சண்டை போடவும் ஜாலியா இருக்கு. என்ன உன் வாய்ல ஜீவினு வர்றப்ப தான் எனக்குள்ள கெட்டவன் வளருறான்" என்றதும் ஸ்ரீநிதியோ போனை வெறித்து சிக்னல் இல்லையென்றதும், ம்ருத்யு பேச்சை காதுகேளாதவள் போல கடந்தாள்.
ஸ்ரீநிதியின் ஒவ்வொரு உதாசினமும் ம்ருத்யுவுக்குள் எரிச்சலை தர, அவள் சென்ற திக்கில் பார்வையை செலுத்தியவன், 'ரொம்ப முறுக்கிட்டே போடி தூக்கிட்டு போய் உப்பு கண்டம் போடறேன். அப்பறம் கத்தி கதறின இங்க எவனும் இல்லை.' என்று உள்மனம் சண்டிதனம் செய்தது. மறுகணமோ 'ம்ருத்யு என்னயென்ன சிந்தனைக்குள் மூழ்கின்றாய் அசிங்கமாக உள்ளது. நீயா இப்படி தீயவனாக யோசிக்கற? ஏன் இப்படி இந்த காதல் என்னை அடியோட மாத்துது. அதுவும் ஸ்ரீநிதியையே காயப்படுத்துவேனா?' என்று அதிர்ச்சியும் இருந்தது.
ஸ்ரீநிதி எப்பவும் போல இருந்தாள். ஜீவியை சந்தித்து பேசினாள். முன்பு ம்ருத்யு தோழன் என்ற புராணமிருந்தால், தற்போது அவன் எதிரிடா. அவனை ஜெயிக்க விடக்கூடாது என் எண்ணத்துக்கு மதிப்பு தரலை பார்த்தியா? ம்ருத்யு இப்படி பண்ணிட்டான்' என்று தினசரி புலம்பல் இருக்கும். ஜீவிக்கு அதுவும் ஒரு கட்டத்தில் வெறுப்பை தந்தது.
ஜீவிக்கே 'ம்ருத்யு பேச்சை மொத்தமா நிறுத்தமாட்டாளா?' என்று அயர்ச்சியாக தோன்றும்.
இந்த ஒரு மாதம் திருமணம் முடிந்து மூன்று முறை, ஜீவி அவளை சந்திக்கின்றான்.
ஸ்ரீநிதியிடம் 'ம்ருத்யு அத்துமீறுகின்றானா என்று கேட்டதற்கு 'அப்படி பண்ண மாட்டான்டா என் ம்ருத்யு பத்தி எனக்கு தெரியும்' என்பாள்.
ஸ்ரீநிதி அவளையறியாது ம்ருத்யு மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தாள். அவன் மிகவும் கனிந்தமனம் கொண்டவன், தன்னிடம் இதுவரை சண்டையென்று போட்டதேயில்லை என்று பாராட்டு பத்திரம் வாசிக்க ஜீவிக்கு ஜிவ்வென்ற சினம் உண்டாகும்.
"நான் கம்பெனியை நிர்வாகிக்க ஆரம்பிச்சிட்டேன் ஸ்ரீநிதி. இனி நினைச்ச நேரம் உன்னை சந்திக்க முடியாது. நீ வேற வீட்டுக்கு போனாலே போன் சாட் பண்ண மாட்டேங்குற, எப்படி காண்டெக் பண்ணறது? எதுவும் முன்ன மாதிரி இல்லை ஸ்ரீநிதி. நிறைய விஷயம் கைமீறி போகுது" என்பான் ஜீவி.
"முன்னவே அம்மாவிடம் வந்து உங்க பொண்ணை கட்டிக்கொடுங்கன்னு கேட்டிருந்தா என்ன? பெரிய இவன்? உன்னை யாருடா எங்கம்மாவை சைட் அடிக்க சொன்னது.'' என்று அதற்கும் எரிந்து விழுவாள்.
ஜீவி பாடு கொஞ்சம் திண்டாட்டத்தில் இருந்தது.
பிறகு ஸ்ரீநிதிக்கே பாவமாக தோன்ற, "இட்ஸ் ஓகே. நான் ம்ருத்யுவிடம் பேசி டிவோர்ஸ் அப்ளை பண்ண ட்ரை பண்ணறேன். என்னிடம் வம்பு பண்ண நிறைய பண்ணறான். ஆனா அவனோடு வாழணும்னு டார்ச்சர் பண்ணறதில்லை. வீட்லயும் நியூ மேரீட் கப்பிள் என்று அப்பா அம்மா அத்தை மாமா அவ்வளவா வர்றதில்லை. என்னவோ நானும் அவனும் ஜாலியா சுத்தறதா நம்பறாங்க.'' என்று கூறிவிட்டு ஜீவியின் உற்றுநோக்கும் பார்வையால் வீடு திரும்பினாள்.
அவளுக்கே அது சாத்தியமா? ம்ருத்யு மியூட்சுவல் பிரிவை ஏற்பானா என்பது சந்தேகமே. தான் வேண்டுமென்று இந்த கோக்குமாக்கு செய்து திருமணத்தையே முடித்திருக்கின்றான். இதில் எங்கிருந்து தன்னை ஜீவிக்கு விட்டு தருவான்? இதே சிந்தனையில் வீட்டுக்குள் வரவும், சிரிப்பு சத்தம் கேட்டது. அதுவும் ம்ருத்யு இருந்த அறையில் சிரிப்பு சத்தம் என்றதும் ஸ்ரீநிதி கால்கள் தானாக அவ்வறையை நோக்கி சென்றது.
"போங்க நீங்க எப்பவும் மோசம். நான் கிளம்பறேன்" என்றவள் ம்ருத்யுவின் அணைப்புக்குள் இருந்தாள் ரிதன்யா.
"ரிதன்யா?" என்று அதட்டவும் அக்காவை கண்டு ம்ருத்யுவிடமிருந்து பிரிய முயன்றாள்.
ம்ருத்யு ரிதன்யாவை பிடித்த பிடியை தளரவிடாமல் இருக்க, ஸ்ரீநிதிக்கு இதயம் பற்றிக்கொண்டு வந்தது.
"என்னடி பண்ணற அசிங்கமாயில்லை?" என்று ம்ருத்யு கையை எடுத்து விட்டு தள்ளிவிட்டாள்.
"என்ன அசிங்கம்? கல்யாணம் பண்ணிட்டு வேறொருத்தனை கிஸ்ஸடிச்ச, அதை விட இது அசிங்கமில்லை" என்று ரிதன்யா உனக்கு நான் தங்கை என்ற ரீதியில் பதில் தந்தாள். ஸ்ரீநிதி ஆடிப்போனாள் இவ எப்ப பார்த்தா? என்று அதிர்ந்து நிற்க "வர்றேன் அத்தான்" என்று ரிதன்யா புறப்பட்டாள்.
அவள் சென்றதும், "என்னை பழிவாங்கறியா?" என்று மெத்தையில் கையூன்றி அமர்ந்து கேட்டாள். அவளொன்றும் ரிதன்யா ம்ருத்யுவை கண்டு எதற்கு இப்படி செய்கின்றானென்று அறியாத சிறுமியில்லையே.
"நானா பிளான் பண்ணி எந்த தப்பையும் செய்யறது இல்லை ஸ்ரீநிதி. ஆனா என்னை கெட்டவனா மாத்த, நிறைய வழிகளை நீ தான் அமைச்சி தர்ற. இப்ப கூட பாரு, என்னை பழிவாங்க ஜீவீக்கு முத்தம் தந்த, பட்டும் படாமலும் ஒரு ஒத்தடம் என்றாலும் ரிதன்யா பார்த்துட்டா. பாவம் சின்ன பொண்ணு இல்லையா? எனக்கு நீ துரோகம் பண்ணறதா நினைக்கிறா.
எனக்கு ஆறுதல் சொல்லறா. நான் அதை அட்வான்டேஜா எடுத்துக்கறேன்" என்று கண்சிமிட்டினான் ம்ருத்யு.
"அட்வான்டேஜின்னா?" என்று அவனருகே திகிலோடு வந்தாள் ஸ்ரீநிதி.
"பார்த்தியே எ ஸ்மால் ஹக். பட் பெண்டாஸ்டிக் பீலிங்" என்று நெஞ்சில் கைவைத்து மார்க்கமாய் சிரிக்க, ஸ்ரீநிதிக்கு கோபம் தலைக்கேறியது. கண்மண் தெரியாமல் அவன் நெஞ்சில் அடிக்க, "ஜஸ்ட் ஹக் தான் ஸ்ரீநிதி. அதை டெவலப் பண்ண வச்சிடாத. இப்பவே ரிது என் பின்னாடி குட்டிப்போட்ட பூனையா சுத்தறா. லைட்டா பாவமான முகத்தை வச்சி பேசி முன்னேறினா குட்டி பொண்ணு என்னிடம் விழுந்தாலும் ஆச்சரியப்படறதிக்கில்லை. பிகாஸ் நீ வேண்டுமின்னா அத்தையோட டிட்டோவா இருக்கலாம். அவ எங்க மாமா மாதிரி சாப்ட் நேச்சர்.
கரைப்பார் கரைத்தால் கரைஞ்சிடுவா." என்று கடைசி வார்த்தையை அஸ்கி வாய்ஸில் பேசவும் ஸ்ரீநிதி அவனை பிடித்து தள்ளினாள்.
மெத்தையில் விழவேண்டியவன் அவளை பிடித்தே இழுக்கவும் சேர்ந்து விழுந்தார்கள்.
ம்ருத்யு மீது பூவாக விழுந்தவளை, "உன்னிடம் நான் எதிர்பார்க்கற விஷயத்தை அவளிடம் எதிர்பார்க்க வச்சிடாத. அப்பறம் அய்யோ போச்சே அம்மா போச்சேனு புலம்பினா சல்லிக்கு பிரோஜனமில்லை.
இதான் என்னோட கடைசி வார்னிங். இன்னொரு முறை ஜீவி ஜீவினு பேசின.? நான் ரிது புராணம் பாட வேண்டியதா போயிடும். அவனை மனசுலயிருந்து அடியோட தூக்கிப்போட்டுட்டு நமக்கு கல்யாணமாயிடுச்சுனு உன் பழைய ம்ருத்யுவை காதலிக்க ஆரம்பி. இல்லையா இந்த அடாவடியான புது ம்ருத்யு பிடிச்சிருந்தாலும் ஏற்றுக்கோ. நீ அன்பா என்னிடம் மாறினாலே இந்த அடாவடிக்காரன் ஓடிடுவான். அதை விட்டுட்டு அவனை தேடி போன, நான் யாரையும் தேடி போக மாட்டேன் ஸ்ரீம்மா. என்னை தேடி ரிது குட்டியை வரவச்சிடுவேன்." என்று இறுமாப்பாய் கூறினான்.
ஸ்ரீநிதிக்கு பகீரென்றது. இதயமே ஒரு கணம் வெற்றிடமாக தோன்றியது. இது அவள் பழகிய ம்ருத்யுவே அல்ல. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இவனுக்கும் இதற்கு முன் பழகிய ம்ருத்யுவிற்கும்.
தன் தங்கையை பகடையாக வைத்து ஆட்டம் காட்டுகின்றானே என்று பயந்தாள். அடுத்த கணம் அந்த முட்டாளுக்கு நாளைக்கே புரிய வைக்கிறேன்.' என்று மனக்கோட்டை கட்டினாள் ஸ்ரீநிதி.
ம்ருத்யுவோ தன் துவங்கிய ஆட்டம் சரியான திசையில் போவதாக, ஸ்ரீநிதி முகமாற்றத்தில் புரிந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment