நீ என் முதல் காதல் -25

அத்தியாயம்-25

    ஸ்ரீநிதி பேச வேண்டும் என்றதும் யுகேந்திரன் மகளிடம், "என்ன பேசணும் என் மகளுக்கு? ஸ்ரீகுட்டி ரிதுவை ஏன்டா அடிச்ச? உனக்கும் ம்ருத்யுவிற்கும் ஏதோ சண்டைனு ரிதன்யா சொன்னா? அந்த கோபத்துல தான் அவன் மேல ஹாண்ட்பேக்கை தூக்கிப்போட்டியா? 

   சண்டை சின்னதா? பெரிசா? ஓ
எங்களிடம் ஷேர் பண்ணணுமா? இல்லைனா நீங்களா சண்டையை முடிச்சிப்பிங்களா?" என்று கேட்கும்வரை ஸ்ரீநிதி தந்தை தோளில் கிளியாக சாய்ந்தாள். இதுவரை தந்தையிடம் கூற தயங்கி மூச்சு விடாமல் இருந்தாள். என்ன தான் கோபமிருந்தாலும் இருவர் சண்டையில் பெரியவர்களிடம் சென்றால் ஜீவி பற்றி விளக்க வேண்டும். அதற்கு வேறு பதில் கூறியாக வேண்டுமே என மலைத்தாள்.
அதை தவிர்த்து தாய் ஏன் ம்ருத்யுவிடம் பாசம் காட்டுகின்றாளென்று கேட்க முடியாதா என்று வாடினாள். 

   ஷண்மதியோ "கேட்கறார்ல சொல்லு" என்று அதட்டல் வரவும், அன்னைக்கு தான் ஜீவியை தெரியுமே. இன்னமும் மறைத்து ஒன்றுக்கும் ஆகப்போவதில்லையே என்று அனைத்தும் கூறிட வாய் திறந்தாள். 

   "அப்பா நான் சொல்லறதை முதல்ல பொறுமையா கேளுங்க. அப்பறம் என்னை திட்டினாலும் ஓகே. பட் எனக்கு கடைசியா தெரிந்துக்க வேண்டிய வினாவுக்கு ட்ருவா ஆன்சர் பண்ணுங்க." என்று பீடிகையோடு ஆரம்பித்தாள். 

யுகேந்திரன் மகளின் கையை தன் இடது கைக்குள் கொண்டு வந்து கூற ஊக்குவித்தார். 
  "டேடி நான் ஜீவினு ஒரு பையனை விரும்பினேன். நானா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ஜீவி அம்மாவோட காம்படேஷன் கம்பெனியை ரன் பண்ணறவரோட பையன். 
அதனால தயக்கம் இருந்தது. கூடவே ஜீவியும் அம்மாவை பேஸ் பண்ண தயங்கினான்." என ஆரம்பித்து திருமண பேச்சு எடுத்ததும், பின்னர் ம்ருத்யுவிடம் உதவிக்கேட்டது வரை உரைத்தாள். 

    ம்ருத்யு நிச்சயதார்த்தம் அப்ப உதவ தயாராயிருந்தான். ஆனா கல்யாண மேடையில ஏறுகின்றப்ப ஜீவி வரலை என்னையாவது மேரேஜ் பண்ணிக்கோ, அத்தை-மாமா, அப்பா-அம்மா, நம்ம சொந்தம் சந்தோஷப்படுவாங்கன்னு சொன்னான். 
  நானும் ஜீவி தான் என்னை தேடிவரலையே. அட்லீஸ்ட் அப்பா கேட்டு முடிவுப்பண்ண கல்யாணம், யாரோட மனசும் வலிக்காம கட்டிக்கலாம்னு ம்ருத்யுவோட மேடையில வந்து ம்ருத்யு தாலியை கட்டவும் கல்யாணம் செய்துக்கொண்டேன். 
   ஆனா அடுத்த நாளே ஒரு டவுட் இருந்தது. அம்மாவுக்கு என் காதல் தெரிந்து அதனால ஜவியை ஏதாவது செய்திருப்பாங்களோனு." என்றதும் யுகேந்திரன் பார்வை மனையாள் இருக்கும் திசைக்கு திரும்பியது. 

  "அப்பா நான் நினைச்ச மாதிரி ஜீவி எனக்கு கல்யாணமான இடத்துல ஒரு ரூம்ல அடைப்பட்டிருந்தான்." என்றதும் யுகேந்திரனுக்கு ஷண்மதி மீது கோபம் வந்தது. 
  
  "என்ன ஷணு இது. ஸ்ரீகுட்டி விரும்பியவனை சேர்த்து வைச்சிருக்கலாமே" என்று ம்ருத்யுவை தழுவியிருந்த வலது கையை எடுத்து ஷண்மதியிடம் தாவினார். 
  "அப்பா ஜீவியை அம்மா கட்டிப்போட்டு வைக்கலை. நான் நைட்டே போய் அவனை காப்பாத்திட்டேன். ஜீவி அவனை கட்டிப்போட்டது ம்ருத்யுனு சொன்னான்." என்றதும் யுகேந்திரன் ம்ருத்யுவை திரும்பி பார்த்தார். ம்ருத்யுவோ "மாமா அது வந்து" என்று ஆரம்பிக்க, ஸ்ரீநிதி தந்தையை தன் பக்கம் திருப்பி, "நீங்க சொன்ன உங்க காதல் கதையோட பாணியில் ஜீவியை கட்டிவச்சிட்டு என்னை கல்யாணம் பண்ணிருக்கான். 
   அதோட ஏன்டா என் காதலை உன்னிடம் தானே முதல்ல சொன்னேன் அப்படியிருந்தும் நம்பி கழுத்தறுத்து என் காதலை பிரிச்சிட்டு, என்னை மேரேஜ் பண்ணியிருக்கனு கேட்டதுக்கு 'நீ என் முதல் காதல் ஸ்ரீநிதி' விட்டு தர முடியாதுனு என்னிடம் திமிரா பேசினான். 

   உங்களுக்கே தெரியும், என்னிடம் பணிந்து அன்பா பேசினா காது கொடுத்து கேட்பேன். அட்லீஸ்ட் யோசிப்பேன். திமிரா பேசினா நான் என்ன செய்வேன். என்னோட காதலை அழிச்சவனிடம் எப்படி நடந்துக்கணும்னு எதிர்பார்க்கறான். 

   என்னை சீண்டிட்டு இருக்கான். நான் அவனோட ஆசைக்கு அடிப்பணியலை என்றால் ரிதன்யாவிடம் நாசூக்கா பேசி அவளை என் வலையில் விழ வைப்பேன்னு என்னிடமே திமிரா பேசறான். 

   நான் ரிதுவை இங்க வராதடினு சொன்னா. நான் வருவேன்னு இங்கயே சுத்தி சுத்தி வர்றா. அதான் ரிதுவை அடிச்சேன். 

   எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைப்பா டிவோர்ஸ் வாங்கித்தாங்க" என்று தந்தை நெஞ்சில் சாய்ந்து அழுதாள். 

  மகள் அழுது பாராத யுகேந்திரனோ அருகேயிருந்த ம்ருத்யுவை வில்லனாக பாவித்தான். 

     "அப்பா அவ என்ன செய்தா தெரியுமா? அத்தான் எதிர்ல அந்த ஜீவியிடம்" என்று ஆரம்பிக்க, "நீ பேசாத வாயை மூடுடி. அப்பா பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டு இவன் பேசறதை சகிச்சிட்டு என்னால எப்படி வாழ முடியும்?" என்று தேம்பினாள். 

   யுகேந்திரனோ மனைவி, மருமகன், சின்ன மகள் என்று பொருட்படுத்தாது, "உன் காதலன் ஜீவியோட வாழ்ந்தா நீ சந்தோஷமாயிருப்பியாடா?" என்று கேட்டார்.
  
   ஷண்மதியோ "ஏங்க நம்ம ம்ருத்யு" என்று பேசியவளிடம், "நீ சும்மாயிரு ஷணு. 

  சொல்லு ஸ்ரீநிதி அப்பா ம்ருத்யுவோட உனக்கு விவாகரத்து வாங்கி வச்சிட்டு உன் காதலன் ஜீவியோட சேர்த்து வைக்கவா?" என்று மகளின் கண்ணீரை துடைத்தபடி கேட்டார் பாசமிகு தந்தையாக மட்டும். 
  
   ஸ்ரீநிதியோ "முன்ன இதை கேட்டிருந்திங்கன்னா ஓகே சொல்லிருப்பேன் அப்பா. இப்ப ஜீவியோட வாழவும் எனக்கு விருப்பமில்லை. 
   அந்த ஜீவியிடம் இந்த ம்ருத்யு என்ன பேசி தொலைச்சானோ, என்னை இவனோடவே வாழுனு வாழ்த்திட்டான். அதோட அவனுக்கு எங்கேஜ்மெண்ட் நடக்கப்போகுது. என்னை வேண்டாம்னு சொன்னவனிடம் நான் கெஞ்சி போக மாட்டேன். எனக்கு ம்ருத்யுவிடமிருந்து டிவோர்ஸ் மட்டும் வேண்டும்." என்று முடிவாக திருமண வாழ்விற்கு முடிவுக்கட்ட பேசினாள். 

  "பேசிட்டியா? இப்ப நான் பேசவா?" என்று ஷணு யுகேந்திரன் முன் வந்து, உன் பொண்ணு விரும்பிய பையன் அவளை விரும்பறதுக்கு முன்ன யாருக்கு தூண்டில் போட்டான்னு கேளு." என்று ஷண்மதி முன்பக்கம் விழுந்த சிகையை காது மடலில் ஒதுக்கி கேட்டாள். 

   யுகேந்திரனுக்கு குழப்பமெடுக்க, "இரண்டு பொண்ணுக்கு அம்மாவா நீங்க டீசண்டா இருக்கணும். உங்களை யாரு தாலி மெட்டி எல்லாம் மத்தவங்க பார்வைக்கு தெரியாம மறைச்சி ஊர் உலகத்துல சுத்த சொன்னது. ஜீவி கண்ணுக்கு அன்மேரீட் கேர்ள்னு நினைச்சிட்டான்." என்று கூறினாள். 

  ஸ்ரீநிதி பேசியதை கேட்ட யுகேந்திரனோ மனையாளை பார்த்து 'உன்னையா?' என்று பார்வையாலே கேட்க, ஆமென்று தலையாட்டினார் ஷண்மதி.

   "இங்க பாரு, தொழில்முறையில் கொடுத்த அவார்ட் பங்ஷனுக்கு நான் என் தாலியை மெட்டியை கழட்டி வைக்கலை. மெட்டியை தாலி எல்லாம் அவன் முதல்ல தேடலை." என்றாள் ஷண்மதி. 

  "அதை விடுங்க அப்பா எனக்கு இப்ப அதுமுக்ககயமகல்லை‌. அம்மாவுக்கு ஏன் என்னை விட ம்ருத்யுவை பிடிக்குது? எனக்கு அதுக்கான காரணத்தை சொல்லுங்க. எப்பபாரு அம்மா ம்ருத்யுவுக்கு தான் சாதகமா முடிவெடுக்கறாங்க.
    அன்னைக்கு லேப் எரியறப்ப ஓடிவந்தவங்க என் பெயரை கேட்டாங்களா? ம்ருத்யுவுக்கு என்னாச்சு? என்னாச்சுனு மேமை உலுக்கிட்டாங்க. ம்ருத்யு இரும்பிட்டே வந்து, 'அத்தை எனக்கு ஒன்னுமாகலை'னு சொன்னதும் தான் நெஞ்சு பிடிச்சிட்டு தூண்ல சாய்ந்தாங்க. அதுக்கு பிறகு தான் ஸ்ரீநிதினு ஒரு பொண்ணு இருக்கறது நினைவு வந்து என் பொண்ணு ஸ்ரீநிதி, பிளஸ் ஒன் படிக்கிறா அவளுக்கும் பிராக்டிக்கல் லேப்ல இருக்கறதா அவ பிரெண்ட் பாவனா சொன்னா? என்று கேட்டாங்க. என் மனசுல அம்மானு உயர்ந்த இடத்தில வச்சிருந்த என் ஷணும்மா அதளபாதாளத்துல விழுந்தது அன்னைக்கு தான். அன்னைக்கு தான். இப்பவரை என் அம்மா என்னிடம் திரும்ப கிடைக்கலை." என்று வெடித்து அழுதாள். 

   இந்த வினாவை பலமுறை ம்ருத்யுவிடம் கூறிவிட்டாள். ஏன் ஷண்மதி-யுகியிடம் கூட கூறி கேட்டாள். ஆனால் ஆளுக்கொரு திக்கிற்கு பார்த்து ஊமையாகி பதில் தரவில்லை. 

  'அப்படியில்லைடா. நீ தான் அம்மாவுக்கு முதல்ல முக்கியம்' என்றதெல்லாம் பதிலாக ஏற்கவில்லை. இன்று தேம்பி தேம்பி கேட்க யுகேந்திரனுக்கு வருத்தம் கூடியது. 

     "ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காத ஸ்ரீநிதி. உங்கப்பா வேண்டுமின்னா அச்சோ நம்ம பொண்ணு அழுவறானு பீல் பண்ணலாம். நான் உன் நடிப்பை கண்டு வருந்தமாட்டேன். 

  எவனையோ விரும்பறேன்னு சொன்னியே அவன் ஏன் முதல்லயே வந்து சொல்லலை. 
   சரி அவன் தான் என்னை சைட் அடிச்சான் வர தயக்கம் உனக்கு என்னவாம்? நீ தயங்கி ஒதுங்கி போறவள் இல்லையே? பப்பிற்கு போகற அளவு தைரியம் இருக்கற உனக்கு என்னிடம் பேச தைரியமில்லையா?" என்றதும் யுகேந்திரன் மகளை நெற்றி சுருக்கி கண்கள் இடுக்க கண்டார். 

    "இதுக்கே முறைக்கறிங்க, என் தொழிற்சாலையில பிரச்சனைகள் வரிசைக்கட்டி வந்தப்ப அதை இவளிடம் முன்கூட்டியே சொல்லி தவிர்க்க பார்த்திருக்கான். உங்க மக என்னிடம் சொல்லாம நான் நஷ்டப்படணும் நினைச்சிருக்கா. 
   என் மேல அம்மாவுக்கு பாசமில்லை நேசமில்லைனு புலம்பறவளுக்கு, அம்மா மேல பாசம் வைக்க கூடாதுனு யாராவது சொல்லிட்டிங்களா? இல்லை இவ அன்பா இருக்காளா இல்லையானு நமக்கு தெரியலை. நாமளும் அன்பு செலுத்த வேண்டாம்னு முடிவுக்கட்டிட்டாளா?" என்றதும் ஸ்ரீநிதி தலையை தாங்கினாள்.

   "டேட் பேச்சை டைவெர்ட் பண்ணறாங்க. எனக்கு ஆன்சர் பண்ண சொல்லுங்க?" என்று ஸ்ரீநிதி அன்னையை இடைவெட்டினாள். 

   "சபாஷ் நான் பேச்சை மாத்தறேன்னா? உன்னோட கேள்விக்கு பதில் அதுலயே இருக்கு. உனக்கு தான் இந்த அம்மாவோட அன்பு கண்ணுக்கு தெரியலை. எப்பவோ நடந்ததை இப்பவரை யோசித்து என்னை வெறுக்கறது நீ. அப்படியிருக்க ம்ருத்யு மேல வச்ச அன்பை நீ தான் உன்னை விட பாசம் காட்டுவதா நினைச்சி நினைச்சி தவறா நினைக்கிற. இதான் பதில்.
  
   அப்பறம் என்ன பழி சொன்ன, ரிதன்யாவை அவன் வலையில விழவைப்பானா?

   நீ ஏன் கல்யாணம் ஆனப்பின்னும் ஜீவியை கிஸ் பண்ணியிருந்த. அதை ரிதன்யா பார்த்துட்டா. அதனால ரிதுக்கு அக்கா அத்தான் லைப் பத்தி கவலை. அதனால உன்னை உன் வீட்டை தேடி வந்து நீ நல்லா இருக்கியா. ம்ருத்யு உன்னை நல்லா பார்த்துக்கறானா? ஜீவியை விட்டு ம்ருத்யு மேல அக்காவோட பார்வை திரும்ப என்ன செய்யனு இரண்டு பேரும், பாவம் தவறா திட்டம் போட்டுட்டாங்க. 

    நீ கிஸ் பண்ணியது போதாதுனு ஜீவியோட வாழ்வேன் என்னடா பண்ணுவனு திமிரா கேட்டா, அவனும் திமிரா பேசினான். 

   இதுக்கு இது பேலன்ஸ் ஆகிடுச்சு. இப்ப உன் காதலனுக்கு நிச்சயம் ஆகுது. ம்ருத்யுவால அவனோட இனியும் சேரமுடியாதென்ற கோபம் கண்மண் தெரியாம பேசற. கொஞ்சம் நிதானமா இரு. நிறைய விஷயங்கள் பொறுமையா பேசி யோசி. நான் எல்லாம் உன்னை மாதிரி கோபப்பட்டு ஓடமாட்டேன். கண்ணீர் விடமாட்டேன். பாவம் இந்த இரண்டு விஷயம் உங்க டேடியிடமிருந்து ஓட்டிக்கிச்சு போல" என்று உச்சு கொட்டினாள் ஷண்மதி. 

   யுகேந்திரனோ "விளையாடத ஷணு. ரிதன்யா இனி அக்காவிடம் நான் பேசிக்கறேன். நீ போ." என்று சின்ன மகளை அறைக்குள் சென்று உறங்க கூறினாள். 
  "ஷணு போதும் எப்பவும் போல பேசி காயப்படுத்தாதே. இவ நம்ம பொண்ணு." என்று மனைவியையும் அடக்கினார் யுகேந்திரன். 

  ஸ்ரீயிடம் திரும்பி "நீ கேட்டதற்கு பதில் அம்மா சொல்லிட்டா. இனி என்ன? போய் தூங்கு." என்று அனுப்பினார். 
   ஆனால் எங்கும் செல்லாமல் "இல்லை எனக்கு சரியான பதில் கிடைக்கலை. திரும்ப திரும்ப எனக்கு அதிருப்தியான பதிலை தர்றிங்க. டிவோர்ஸாவது தரச்சொல்லுங்க." என்று கத்தினாள். 
  யுகேந்திரனோ 'தற்போது தந்திடறேன்னு சொல்லு போய் தூங்கட்டும்' என்று ம்ருத்யுவிடம் கிசுகிசுக்க, "முடியாது மாமா. ஸ்ரீநிதிக்கு டிவோர்ஸ் தர்றதுக்கு தாலி கட்டலை. 

   என்னால விளையாட்டுக்கு கூட அப்படி பேச முடியாது. 

   நீங்க தான் ஷண்மதி அத்தையை விவாகரத்து கொடுத்துட்டு ஸ்ரீநிதி வயிற்றில இருக்கறது கூட தெரியாம என்னென்ன காரணத்துக்கோ ஓடிட்டிங்க. 

என் யூகேஜி டேஸ்ல ஸ்ரீநிதியை பார்த்துட்டு ஷணு அத்தையோட சேரந்து வாழறிங்க. என்னால என் ஸ்ரீயை நாட்கள் கடந்து கூட, விட்டுட்டு போக முடியாது. அப்படியிருக்க வருடங்கள் கடந்து சத்தியமா பிரிவை தரமாட்டேன். பிடிக்குதோ இல்லையோ ஸ்ரீயை என்னோட வாழ சொல்லுங்க. நான் அவளை நல்லா பார்த்துப்பேன். இட்ஸ் எ பிராமிஸ்" என்று அழுத்தமாய் உரைத்து எழுந்து கொண்டான். 

   யுகேந்திரனுக்கு இந்த ம்ருத்யு புதிதானவன். இதுவரை ஸ்ரீநிதியிடம் பேசுவது போல தான் எதற்கும் எதிர்த்து பேசாதவன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வாதிடுகின்றான் அவன் வாழ்க்கைக்காக. ஆனால் இந்த பேச்சு ம்ருத்யு தான் பேசுகின்றானா என்று ஆச்சரியமாய் பார்த்தார். 

   ம்ருத்யு சென்றதும் ஷண்மதி ரிதன்யாவின் அறைக்கு சென்றிட தந்தையும் மகளும் சோபாவில் தனித்து இருந்தனர். 

   ஸ்ரீநிதியை வித்தியாச வித்தியாசமாய் ஆறுதலுரைத்தார் யுகேந்திரன். மகளோ விதண்டாவாதம் செய்துக் கொண்டிருந்தாள். 

   ஷண்மதியே ஒரு கட்டத்தில் ரிதன்யாவுக்கு தட்டிக்கொடுத்து கண்ணயர்ந்திட, ம்ருத்யுவோ எட்டியெட்டி பார்த்து அவனுமே படுத்துவிட்டான். 

   ஸ்ரீநிதி கொட்ட கொட்ட விழிக்க, பிடிவாதமாய் உறங்காமல் காரணம் காரியம் அறிந்திடும் உத்வேகத்தில் இருந்தாள்.

  இரண்டு முன்று முறை மகளை மடியில் வைத்து உறங்கி வழிந்து எட்டிபார்க்க, மகள் தந்தை மடியில் சாய்ந்தபடி, பேனாவால் கேள்விக்குறியை தான் பேப்பர் முழுக்க கிறுக்கினாள். 

   இரண்டு நாற்பது மணி இருந்தப்போது மகளின் கண்ணீருக்கு தந்தை நெஞ்சில் இரத்தம் கசிய "நீ ம்ருத்யுவோட நல்லபடியா வாழறேன்னு சொன்னா, அம்மா ஏன் ம்ருத்யு மேல அன்பாயிருக்கானு நான் சொல்லறேன்." என்று ஒப்பந்த முடிவுக்கு வந்தார். மகளுக்கு இந்த ஒற்றை கேள்வியால் தானே ஷணு மீது கோபம். அதனால் தானே அவளை வில்லியாக பார்க்கின்றாள். இந்த கோபம் போனால் அன்னையை நேசிப்பாள். பின் ம்ருத்யு மீதும் பரிதாபம் பிறந்தால் அவனோடு வாழ்வாளென்ற முடிவு கட்டினார் யுகேந்திரன். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

  
   

    

   

  


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1