நீ என் முதல் காதல்-31

 அத்தியாயம்-31

ம்ருத்யு தெனாவட்டாய் வந்து ஸ்ரீநிதி அருகே அமர்ந்தான்.

தாரிகா பைரவிற்கு உண்மை அறிந்திடுமோ என்பதை நினைக்காமல் தள்ளிவைத்துவிட்டு, 'நான் ஸ்ரீநிதிக்கு ஹஸ்பெண்ட்' என்ற முடிவோடு இருந்தான்.

அவளுமே அத்தையின் கவனிப்பில் இருந்தாள். மணி பதினொன்று பத்து இருக்கும் ஷண்மதி யுகேந்திரன் ஜோடியாக வந்தார்கள்.

மறுவீட்டு அழைப்பில் என்ற காரணம் வைத்து அழைத்தாலும் ம்ருத்யு மனதளவில் எப்படி இருக்கின்றானென்ற காரணம் அறியவே அழைத்தார்கள்.

பைரவ் தான் "இதென்ன பார்மாலிட்டிஸ் தங்கச்சி. வாடான்னா வந்துட்டு போகப்போறான்." என்று கூறினார்.

"சிலதை நியாயப்படி செய்யணும்னு யுகி விரும்பறார் அண்ணா." என்று முடித்து கொண்டாள் ஷண்மதி.

அதன் படி ஷண்மதி வீட்டுக்கு படையெடுத்தார்கள் புதுமண ஜோடிகள்.

பைரவ் தாரிகாவை கண்டு ஸ்ரீவினிதா இன்னமும் பைரவை மாப்பிள்ளையாக பாவித்து முதல் மரியாதை செய்தார்.

ஆச்சி இங்க நான் தானே நியூ மேரிட் கப்பிள். எப்பவும் போல அப்பாவையே கவனிக்கறிங்க பார்த்திங்களா?" என்று ஆதங்கப்பட்டான்.

லலிதாவோ இடைப்புகுந்து, முன்னயாவது வீட்டு மாப்பிள்ளை. இப்ப சம்பந்தி ஆச்சே ம்ருத்யு. மாப்பிள்ளை உன்னை விட மாப்பிள்ளையோட அப்பா அம்மாவை கவனிக்கணும் இல்லையா?" என்றதும் "சரியா சொல்லிட்ட தங்கச்சி" என்றார் ஸ்ரீவினிதா.

கலகலப்பாய் மதிய விருந்து முடித்து ம்ருத்யுவை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு தாரிகா பைரவ் நடையை கட்டினார்கள்.

ம்ருத்யு உடைந்து போய் முடங்கவில்லை. அதே சமயம் ஆர்ப்பாட்டமும் போடவில்லை. ஸ்ரீநிதியிடம் எப்படி பழகுகின்றானோ என்று யுகேந்திரன் பயந்தார்.
தன்னவள் ஷண்மதி பற்றி அறிந்ததால் ஸ்ரீநிதி எப்படி அவனை காயப்படுத்துவாளோன்று யூகிக்க முடியுமே.

ஆனால் ஸ்ரீநிதியுமே உடைந்து போகவில்லை. தனக்கு காதல் கதை என்றால் ம்ருத்யுவிற்கு செண்டிமெண்ட் கதை உள்ளதென்று முடிவெடுத்தாள். ம்ருத்யுவை காயப்படுத்தினால் ஷண்மதி ஆக்ஷன் கதையை ஓட்டுவாளென்றும் அறிந்தவளே. அதனால் தன்னை மறுத்த ஜீவியை மனதிலிருந்து எடுத்துவிட்டு ம்ருத்யுவோடு எப்படி அணுசரித்து வாழ்வதென்ற முடிவோடு இருந்தாள்.
என்ன தான் முடிவெடுத்திடுவது குறைவான நேரமென்றாலும் அதனை செயல்படுத்த யூகமே தேவைப்படும் போல தோன்றியது.

முதல் காரணம் இந்த ம்ருத்யு தனக்கு முற்றிலும் புதிதானவன். முன்பெல்லாம் இனிக்க இனிக்க பேசும் பாஸந்தி பேச்சு. எதுவென்றாலும் கற்கண்டு சிரிப்பில் கரைத்து விடுவான்.
கோபம் என்றால் எந்த கடையில் இருக்குமென்று அவன் முகத்தில் தேடி அலச வேண்டும். இன்றோ நிலைமையே வேறல்லவா?!
தன்னையே சாமர்த்தியமாக பேசி சிந்திக்க விடாமல் கூடவேயிருந்து துரோகம் செய்து மணந்தான்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறார் பேச்சா 'நீ ஜீவியை தேடி போனா நான் ரிதன்யாவை என் கைக்குள்ள வச்சிப்பேன்' என்ற மிரட்டல்.
அதெல்லாம் விட தான் பைரவ் தாரிகாவின் பிள்ளையே இல்லையென்றாலும் உனக்கு கணவன் தானே?! என்று சாமர்த்தியமாக காய் நகர்த்தும் சகுனி.
எந்த பகடை விழுந்தாலும் நான் எனக்கானதாக மாற்றிக்கொள்வேன் என்ற ரீதியில் இருந்தான். ஒரு வகையில் அவளுக்கு அவனை கூடுதலாக பிடித்திருக்க வேண்டும்.

ஏனோ சிறுவயது ம்ருத்யுவும் தற்போதைய ம்ருத்யுவும் அவளை பாடாய்படுத்திருந்தான்.

டெம்பிளேட் கதைகளில் வரும் வழக்கம் போல தங்கள் அறையிலேயே தனிதனியாக நீட்டி நிமிர்ந்து கொள்வதில் மட்டும் மாற்றமில்லை.

இருவருக்குள் இருக்கும் ஈகோ 'நீயே பேசி நெருங்கிவா. நானா ஏன் இறங்கி வரணும்?.' என்ற கொள்கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டார்கள்.

தன் மாமா யுகேந்திரன் வீட்டில் விடுமுறைக்கு வரும் ம்ருத்யு போலவே இரண்டு நாளாய் இருந்தான்.

யுகேந்திரன் தான் கடலுக்கு கப்பலில் பயணிப்போமென்று மகள் மருமகனை அழைத்து சென்றார்.

லலிதா ஸ்ரீவினிதா இருவரும் ''நாங்க வரலை உடல் குளிரும்." என்று கூறி விலகி கொண்டார்கள்.

ரிதுகுட்டியோ பள்ளிக்கு சென்று நேரத்தை கழிக்க புது ஜோடியோடு பழைய ஜோடியும் ஜோடிப்போட்டு சென்றார்கள்.

சுற்றி கடல் நீரும், தலைக்கு மேல் வெண்மேகமும் சூழ்ந்திருக்க, ம்ருத்யு அடிக்கடி ஸ்ரீநிதியையும் அத்தை மாமாவையும் ஏறிட்டான். அவர்கள் காணும் நேரம் இமையை தாழ்த்தி கொண்டான்.

ஷண்மதியோ தங்களை தவிர யாருமில்லையென்றதால் ம்ருத்யு அருகே வந்து, "என்ன ம்ருத்யு? இந்த கடலை போல ஆர்ப்பரிக்குதா மனசு?" என்று கேட்டதும் யுகேந்திரனும் ம்ருத்யுவின் தோளில் கைப்போட்டு நின்றார்.

"ஆர்ப்பரிக்கலை அத்தை. கடல் நீரில் சாக்கடை கலந்த மாதிரி உணருறேன்.
நீங்க என்னை தூக்கி தாரிகா அம்மா பக்கத்துல வைக்காம இருந்தா, இந்த உயிர், லண்டன் படிப்பு, பகட்டான வாழ்க்கை, மானம் மரியாதை, எதுவும் எனக்கில்லைல? நான் ஒரு அனாதை அது மட்டும் தானே என் அடையாளமா இருந்திருக்கும். அப்பா அம்மா பெயர் கூட தெரியாதவனா? நினைக்க நினைக்க ஸ்ரீநிதிக்கு நான் பொருத்தமேயில்லை அத்தை.

நீ ஏன் அத்தை என்னை ஸ்ரீநிதிக்கு கட்டிவச்ச. பேசாம அந்த ஜீவியோட ஸ்ரீநிதியை கட்டிவச்சிருக்கலாம்.

ஸ்டேடஸ் படிப்பு அழகு, ஏன் ஸ்ரீநிதி மனசுக்கும் அவனை தானே பிடிச்சிருந்தது." என்று கலங்கினான்.

உச்சுக்கொட்டிய ஷண்மதி "யார் ம்ருத்யு தாரிகா பைரவ் இல்லைனா நீ அனாதைனு சொன்னது? உயிர் மட்டும் தான் நான் காப்பாத்தி தாரிகா அண்ணியிடம் உன்னை பையனா சேர்த்து வைத்தது.

மத்தபடி உனக்கு இதயநோய் பாதிப்பு இல்லைனா நீ உன் பேரண்ட்ஸ் கூடயிருந்திருப்ப" என்றதும் யுகேந்திரன் ஸ்ரீநிதி ம்ருத்யு மூவரும் ஷண்மதியை உற்று நோக்கினார்கள்.

ம்ருத்யு தான் சுதாரித்து "அப்போ எனக்கு இதயநோய் இருந்ததால தான் அனாதை ஆக்கப்பட்டிருக்கேனா?" என்றதும் ஷண்மதி கடலை வெறித்து, "அப்படின்னு சொல்லமுடியாது." என்று எவ்வாறு உண்மையை உடைப்பது என்ற ஆழ்ந்திருந்தாள்.

யுகேந்திரனோ தன் மனையாளிடம் "தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு ஷண்மதி. அவனுக்கு என்ன தெரிந்திக்கணுமோ அதை சொல்லு. ஒரு வேளை பெத்த அப்பா அம்மாவை பார்க்க விரும்பறானோ என்னவோ. என் அக்கா மாமாவோட நலனுக்காக அவனோட மனசை முடக்க முடியாது." என்று கூறினார்.

ம்ருத்யு உடனடியாக, "அய்யோ மாமா எனக்கு அம்மா அப்பா என்றால் இந்த ஜென்மத்துக்கு தாரிகா அம்மா பைரவ் அப்பா மட்டும் தான். நான் ஜஸ்ட் தெரிந்துக்க விரும்பினேன்.

என் உண்மையான பேரண்ட்ஸை தேடி நான் போகமாட்டேன். அத்தை இது யுகி மாமா மேல சத்தியம்" என்றதும், ஷண்மதி கையை கட்டி கடலை வெறித்தவள் மெதுவாய் ம்ருத்யு பக்கம் திரும்பினாள்.

தொண்டையை செருமி "தாரிகா அண்ணி பனிக்குடம் உடைந்து அன்கான்ஸியஸ்ல மருத்துவமனைக்கு வந்ததா என்னோட அப்ப உடனிருந்த பி.ஏ சொன்னான்.
யுகியை அளவுக்கு அதிகமா விரும்பியதால அவர் துவண்டு முகம் வாடறதை பார்க்க என்னால முடியலை. குழந்தை இறந்து பிறந்ததை அவங்களிடம் சொல்லாதிங்க, அதுக்குள்ள ஏதாவது வேற குழந்தையை அந்த இடத்துல வைப்போம். கஷ்டப்படற ஜனங்கள், வரிசையா பெண் குழந்தை பெற்று அதனை வளர்க்க முடியாம தவிக்கற ஏழைகள், குழந்தையோட அம்மா இறந்து உறவுகள் இல்லாம ஆசிரமம்ல அனுப்பி வைக்கப்படுற குழந்தைகள், இப்படி ஏதாவது ஒரு குழந்தையை பணத்தை தண்ணியா செலவழிச்சு வாங்குன்னு உத்தரவு போட்டேன்.

என்ன தான் பணமிருந்தாலும் நினைத்ததை அடைய முடியுமா? அதுவும் சூழ்நிலை கழுத்தை நெறுக்கிட்டு இருக்கறப்ப?

அதிர்ஷ்டம் இருந்தா கிடைக்கும்னு நாயா பேயா தேட சொன்னேன்.

எங்கயும் குழந்தை கிடைக்கலை. அரசு மருத்துவமனை இருக்கற ஒவ்வொரு ஏரியாவிலையும் என் பி.ஏ ஏறியிறங்கி ரொம்ப விசுவாசமா முயற்சி செய்தான். அதோட பலன் அப்ப தான் ஒரு குப்பத்துக்கு பக்கத்துல அரசாங்க மருத்துவமனையில நீ பிறந்திருந்த. குறைபிரசவத்துல இதயநோய் பாதிப்போட பிறந்திருந்ததால உன் அப்பா உன்னை ஒரு ஆசிரமத்து வாசல்ல போட்டுட்டு போக முடிவெடுத்தார். உங்கம்மா என்ன நினைச்சாங்களோ அவங்களுமே உன்னை ஆசிரமத்துல போட்டுட்டு உங்கப்பா கையை பிடிச்சிட்டு அழுதபடி போயிட்டாங்க.

என் பி.ஏவுக்கு நீ இதயநோய் சம்மந்தமா உபாதை இருக்கும்னு தெரியாது. குழந்தை கிடைச்ச மகிழ்ச்சில உன்னை கொண்டு வந்து டாக்டரிடம் கொடுத்துட்டு தாரிகா-பைரவ் குழந்தை என்று அறிவிச்சிட்டாங்க.

உன்னை பிழைக்க வச்சிஅதனை காரணம் காட்டி தான் என் திருமணம் நடக்கணும்னு விதியோ என்னவோ, உனக்கு இதயநோய் பிரச்சனை இருக்குன்னு தெரியவும் அதுக்கான ட்ரீட்மெண்ட் பார்க்க சொல்லிட்டேன்.

ஆனா யுகி பார்வைக்கு உன்னை துருப்புசீட்டா வச்சி தான் அவரை மணந்தது.
நீயும் ஆப்ரேஷன் பண்ணிடவும் ஆரோக்கியமா மாறிட்ட." என்று கூறினாள்.

அப்போ நான் குப்பத்துல வாழவேண்டியவனா? என் அப்பா அம்மா யாரு அத்தை?" என்று ம்ருத்யு தன்னவளை தான் ஏறிட தயங்கி அத்தையிடம் கேட்டான்.

யுகியோ இடையிட்டு, "ம்ருத்யு யாரு என்னனு ஷண்மதிக்கு எப்படி தெரியும். அவளே அப்போ மும்பையில இருந்தா. பேரண்ட்ஸ் தெரிய வாய்ப்பில்லைடா கண்ணா" என்று கூறினார்.

"அதை அத்த சொல்லட்டும் மாமா. அங்க பாருங்க அத்தை மௌவுனமா இருக்காங்க. அத்தைக்கு என் அப்பா அம்மா எனன? என் ஜாதகமே தெரிந்திருக்கு இல்லைனா இப்படி மௌவுனம் சாதிப்பாங்களா?

சொல்லுங்க அத்தை. நான் அப்பா அம்மாவை தேடி போகமாட்டேன். நம்பி சொல்லுங்க. நீங்க ஒருமுறை என்னிடம் உன் இரத்தத்துக்கு அடங்கி போக தெரியாது அடக்கி ஆளா தான் தெரியும்னு சொன்னிங்க. எனக்கு நல்லா நினைவிருக்கு.
அப்போ நான் ஆண் வர்க்கம் அடக்கணும்னு சொல்ல வர்றகங்களோனு தப்பா நினைச்சிட்டேன்.
என் அத்தையோட ரூல்ஸே பெண்கள் அன்புக்கு தான் அடங்கணும். அடக்கற குணத்துக்கு இல்லைனு. அப்படியிருக்க ரத்தம்னா? என்னோட அப்பா அடங்காதவனா இருக்கணும் அப்படிதானே?" என்று கேட்க, ஸ்ரீநிதி அன்னை அருகே வந்தாள்.

ஷண்மதி கூறப்போகும் உண்மைக்கு செவிமடுக்க மூன்று ஜீவனும் காத்திருந்தனர்.

ஷம்மதியோ உண்மை சொன்னால் சாதகம் பாதகம் என்றதை மனதிற்குள் அலசினாள்.

நிச்சயம் ம்ருத்யு தாரிகா பைரவை விட்டு செல்லவோ, உண்மையை உரைத்து முட்டாள் தனத்தையோ காட்ட மாட்டான். வேண்டுமானால் அவன் பெற்றோரை பார்க்க விரும்பலாம் என்று தோன்றவும், "நான் உன்னை தூக்கி தாரிகா பக்கத்துல வைக்காம, உன் தந்தைக்கு நீ பிறந்தது தெரிந்திருந்தா உன்னை தலைமேல தூக்கி வச்சிருப்பான். அதோட அந்த காலத்துலயே உன் சித்தப்பாவை லண்டன் பிரான்ஸ் என்று படிச்சவன். அப்படியிருக்க நீ இப்ப போலவே லண்டன் போவது சாத்தியமாகியிருக்கும். என்ன உங்க அப்பாவிடம் உன் பிறப்பை பற்றி உங்கம்மா சொல்லிருந்தா." என்று புதிர் போட்டாள்.

ம்ருத்யுவிற்கு இப்ப தானே அப்பா ஆசிரமத்துல போட அம்மா அழுதபடி போனதா சொன்னாங்க என்ற புதிரோடு கதை கேட்க ஷண்மதி ம்ருத்யுவின் அடுத்த அத்தியாயத்தினை உரைத்திடும் முடிவில் இருந்தாள்.

_தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்



Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1