மர்ம நாவல் நானடா-2
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-2
சுப்ரமணியத்தின் அலறல் கேட்டு அப்பொழுது தான் வந்த அஜித் மற்றும் தனஞ்செயன் மாடிபடி தாவி ஓடி வந்தார்கள்.
அலமாரி போன்றதொரு அறையை தனஞ்செயன் நெற்றி சுருங்க பார்த்து, விழுந்து கிடக்கும் சின்ன மகனருகே வந்தார்.
அஜித்தோ தம்பியை தோளில் கிடத்தி அங்கிருந்த ஹாலுக்கும் பால்கனிக்கும் நடுவே கிடத்தினான்.
அதற்குள் சுப்ரமணியமோ "ஆரன் தண்ணி எடுத்துட்டு வா" என்று கூற, தனஞ்செயனோ அங்கிருந்த டேப் வாட்டரை எடுத்து முகத்தில் தெளித்தார்.
ஆயிரம் திட்டி ஹரிஷை பேசும் தனஞ்செயனுக்கு, ஹரிஷை இப்படி கண்டதும் ஈரக்குலை நடுங்கிவிட்டது. என்னயிருந்தாலும் கடைக்குட்டி என்று தனி ப்ரியம் உண்டு.
லேசாய் விழி திறந்தவன் கண்களை சுழற்றி யாரையோ தேடினான்.
"தண்ணி குடி டா" என்று அஜித் ஆரனிடமிருந்து வாட்டர் பாட்டிலை தரவும் வாங்கி சப்பி குடித்தான்.
பாதி குடிநீரை அப்படியும் வழியவிட்டு உடை ஈரமானது தான் மிச்சம்.
"என்னடா?"
"என்னாச்சு..?"
"உடம்புக்கு ஏதும் முடியலையா"
"சித்தப்பா நீ என்னை விட நோஞ்சானா இருக்க'' என்று ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்க காஞ்சனாவோ தட்டில் உணவை எடுத்து வந்து "அவன் காலையில இருந்து சாப்பிடலை. இந்த பொருளை எல்லாம் எடுத்து தனியாளா செட் பண்ணியதும் அவன் தான். பசிமயக்கமா இருக்கும்" என்று உணவை ஊட்டவும் அவனை அறியாது அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து சாதத்தை விழுங்கினான்.
சற்று ஆசுவசம் அடைந்ததும் போதும் என்று மறுத்துவிட்டான்.
அதன் பின் ஆரனோடு சேர்ந்து அவனது பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து மேல வர கூறினான். குழந்தையிடம் 'வேலை செய்' என்ற ஏவுதலை விட, நெயிற்சியாய் வேலை வாங்குவது கூடுதலாய் அவர்களை பெரியவர்களோடு சிநேகத்தை உருவாக்கும்.
ஹரிஷ் அப்படி தான் ஆரனை வேலை வாங்கினான்.
தனது சிங்கிள் பெட்டை முதலில் மாட்டி, அதற்கு மேல் ஏறி பேனை மாட்டினான்.
பேனில் ஸ்கூரு போட்டு விட்டு அடுத்து மின்சார ஒயர்களை மாட்டும் முயற்சியில் இறங்க, காதருகே 'ஸ்விட்ச் ஸ்விட்ச் என்றதில் ஸ் சத்தம் மட்டும் ஒலிக்க சுற்றிலும் ஒரு பார்வையை வீசினான். 'ஸ்விட்ச் ஆன்ல இருக்கு' என்ற பெண் குரல் கேட்பது போல இருக்க, ஸ்விட்ச் பாக்ஸ் இருக்கும் திசையை கவனித்தான்.
லைட் போடும் போது பேன் ஸ்விட்சும் சேர்த்தே போட்டதை கவனித்தான். அதை ஆப் செய்தப்பின் மீண்டும் அறையை கவனிக்க எங்கிருந்தோ சிறு சிறு ஓசையாக பெண் குரல் கேட்பது போன்ற மாயம் ஏற்பட்டது.
வேர்வை நெற்றியில் பூத்து ஆறாய் ஓட, வேகமாய் மெத்தையில் ஏறி அதனை ஒட்டிய ஜன்னலை திறந்தான்.
காற்று இதமாய் அவன் கேசத்தை கலத்து விளையாடியது.
இதுவரை இருந்த லேசான புழுக்கம் மாறியது. மீண்டும் அவனது டேபிள் போட்டோ புத்தகம் உடை, அவனே செய்த கடிகாரம், என்று அவன் அடுக்கி வைக்க, "சித்தப்பா எனக்கு அந்த பைக்கை விளையாட எடுத்து தா" என்றான்.
"டேய்... இங்க எதை வேண்டுமென்றாலும் எடு. பைக் பொம்மை மட்டும் டச் பண்ணாதே. நானா பண்ணியது." என்று உத்தரவிட்டு ஆரனை அப்படியே வெளியேற்றி கூடவே கீழே வந்தான்.
வீட்டின் பொருட்கள் அதனது இடத்தினில் பக்காவாக பொருத்தி கோர்வையாக பார்க்க நன்றாக இருந்தது. புதிதாக வந்ததால் ஒவ்வொரு இடமும் ஏதோ இதம் தந்தது.
எல்லா வீடும் இப்படி அமையாது. நமக்கே நமக்கென்று இருக்கும் வீட்டில் இந்த இதம் உணர்வோம்.
கனிகாவும் காஞ்சனாவும் கிச்சனில் மாலை சிற்றுண்டி தயாரிக்க, நேரங்கள் போனது.
ஹரிஷ் அடிக்கடி மாடிக்கு செல்லும் படிக்கட்டினை விழிநிமிர்த்தி பார்த்தான். யாரோ மேலிருந்து அனைவரையும் பார்ப்பது போல பிரம்மை.
வீட்டை சுற்றி பார்த்தால் பாஸிடிவ் எனர்ஜி தான் தோன்றியது. மற்றபடி அச்சுறுத்தும் வகையில் அவன் உணர்ந்தது ஒரு நொடி தான்.
குடும்பமாய் டிவி பார்த்தார்கள், இரவு உணவை இங்கேயே முடித்துவிட்டு, ஆரனை அழைத்து கொண்டு அஜித் கனிகா கிளம்புவதில் குறியாக இருக்க, காஞ்சனாவோ, "நாளைக்கு சனி ஞாயிறு தானடா. ஹாண்ட் ரைட்டிங் கிளாஸ் கிடையாது தானே. ஆரன் இங்க இருக்கட்டுமே" என்று பேரனை மட்டும் தங்கிட கோரிக்கையை வைத்தார்.
அஜித் மனைவியை பார்த்து தயங்க, "தாரளமா இருக்கட்டும் அத்தை பார்த்துக்கோங்க." என்று கூறிவிட அஜித் மகிழ்ந்தான்.
ஹரிஷும் ஆரனும் "ஏய் ஜாலி என்று 'ஹைபை' அடித்து கொண்டார்கள்.
"சித்தப்பா சித்தப்பா... எனக்கு போன் விளையாட தருவியா?" என்று காதை கடித்தான்.
"டேய்.. நீ ஒரு பிளான் போட்ட உங்கப்பா அம்மா இப்பவே கூட்டிட்டு போயிடுவாங்க. அதனால அமைதியா இரு. நைட் தாத்தா போனை ஆட்டையை போட்டு தர்றேன்." என்று அண்ணன் மகனின் ஆசைக்கு சம்மதம் அளித்தான்.
அஜித் கனிகா இருவரும் பைக்கில் கிளம்பினார்கள்.
"ஏன் கனி... பையனை எப்படி விட்டுட்ட?" என்று ஆச்சரியமாய் கேட்க, "நீங்க தானே ஆரனுக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்பது போல கோடு போட்டிங்க.
இந்த இரண்டு நாள்ல அதுக்கு முயற்சிக்க தான்" என்று ஆசையாய் நெஞ்சோடு அணைக்க அஜித்தோ மனைவியிடம் இரண்டு நாளாய் தவிப்பாய் கேட்ட மோகத்திற்கு வழிபாதையை கொடுத்தாள்.
"அப்போ நாம பிஸியா இருப்போம்னு சொல்லு" என்று துள்ளலாய் இருந்தான்.
தாய் தந்தை சென்றதால் கீழே தாத்தா பாட்டி அறையான தனஞ்செயன் காஞ்சனா அறையில் சற்று நேரம் ஆரன் விளையாட, ஹரிஷ் டிவியில் படம் பார்த்திருந்தான்.
அவன் கண்கள் தான் படத்தில் இருந்தது. எண்ணமோ... காலையில் அறையில் நுழைந்ததும் யாரோ தன்னை இறுக பிடித்து அணைத்தது போல இருந்ததே என்ற எண்ணத்தின் வலையில் நீந்தினான்.
சுருங்க கூறினால் பேய் பிடித்தது என்று தான், ஹரிஷ் பயத்தில் ஆடிப்போனது.
நிஜமாகவே தன்னை அப்படி யாரோ இறுகி பிடித்தனரா? அல்லது சட்டென காற்று கூட புகாத இடத்தில் கதவு திறந்து உள் நுழையவும் ஏற்பட்ட மூச்சு திணறலா? இதையே யோசித்தான்.
மூடிய அறையில் சட்டென நுழைந்ததன் விளைவாக இருந்தால் தற்போது இரண்டு ஜன்னலை திறந்து வைத்து இருக்கின்றான். மாடிக்கு சென்றால் தெரிந்திடும். எப்படியும் அங்கு தானே இனி வனவாசமாக காலம் தள்ளப் போவது.
மணி ஒன்பதாக ஆரனே சுப்ரமணிய தாத்தாவின் போனை எடுத்து கொண்டு மாடிக்கு ஓடினான்.
ஆரன் சும்மா போகாமல் "சித்தப்பா கிரேட் கிராண்ட்பா போனை நானே வாங்கிட்டேன்" என்று ஆட்டியபடி செல்லவும் ஹரிஷ் குழந்தையின் கேடித்தனத்தை எண்ணி சிரித்தான்.
அடுத்த கணமே மாடிக்கு தனியா போறான். காலையில என் மேல விழுந்த வெயிட் சுமார் ஐம்பது கிலோ இருக்கும். அந்த வெயிட் ஆரன் மேல விழுந்தா? என்று ஹரிஷும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு மாடிக்கு விரைந்தான்.
சுப்ரமணியமோ ஹரிஷை கண்டு உறங்கும் அறைக்குள் கதவை தாழிடாமல் சாற்றிக் கொண்டார்.
மாடியில் ஹரிஷ் தயக்கமாய் காலடியெடுத்து வைத்தவன் "ஆ..ஆரன் ஆர் யூ ஓகே" என்று கேட்டான்
"ஓகே சித்தப்பா. சித்தப்பா சித்தப்பா... போனை ஆப் பண்ணுனு சும்மா சும்மா அதட்ட கூடாது. ஓகே தானே" என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டான்.
"டேய் ஆரன்... சித்தப்பா பிரெண்ட்லியா இருப்பதால நைட் முழுக்க போன் பார்க்க அலோவ் பண்ணுவேன்னு தப்பா கால்குலேஷன் பண்ணக் கூடாது. எப்படியும் பத்தரை மணிக்கு போனை அங்க வச்சிட்டு தூங்கணும்." என்று கட்டளை விதைத்தான்.
சம்மதமாய் தலையாட்டி ஆரன் தலையை தலையணையில் சாய்த்து போனில் விளையாடினான்.
நெஞ்சு முழுக்க பயத்தை வைத்து கொண்டு வெளியே இயல்பாய் இருக்க படாதபாடுபட்டான் ஹரிஷ். ஏதோவொரு குரல் சன்னமாய் காதில் ஒலிக்க, ஏர்பட்ஸை பொருத்தி பாடலை கேட்க ஆரம்பித்தான்.
அதன் பின்னர் அந்த விநோத சத்தமோ மென் முனங்கல் வழியாக வந்த பேச்சோ எதுவும் கேட்கவில்லை. நிம்மதியாக தனது பிரம்மை என்று முழுதாய் தெளிந்து நீட்டி நிமிர்ந்தான்.
ஆரன் ஏற்கனவே பத்தேகால் ஆனது என்று போனை வாங்கி வைத்து விட்டான்.
ஆரன் ஹரிஷை கட்டிக்கொண்டு உறங்க, ஹரிஷூம் அண்ணன் மகனை தன் மகன் போல பாவித்து பேணிக்காத்தான்.
ஹரிஷ் சற்று நேரத்திலேயே உறக்கம் தழுவினான். நடுவில் ஆரன் "சுச்சு வருது" என்று ஹரிஷ் தோளை சுரண்ட அரை உறக்கத்தில் ஆரனை மாடியில் இருந்த பாத்ரூமிற்கு கையை பிடித்து அழைத்து சென்றான்.
ஆரனும் ஹரிஷும் மீண்டும் வந்து பாதியில் விட்ட உறக்கத்தை மீண்டும் தொடர்ந்தார்கள்.
இம்முறை சற்று நேரத்திலேயே ஆரன் அவனது காலை ஹரிஷ் தொடையில் போடவும் "அடேய்... வலிக்காம காலை போடுடா.'' என்று முனங்கினான். அதன் பின் அதிகாலை தான் எழுந்தான்.
இரவில் பெரிதாய் அப்படியொன்றும் மர்மங்கள் நிகழில்லை. அப்படி தான் ஹரிஷ் நம்பினான்.
ஆனால் அவனருகே அந்த மர்ம பெண்ணவள் பேச முயற்சித்து, பின்னர் ஹரிஷிடம் தன் நிலையை விளக்கிவிட இயலாது என்று தனது மாய சிறைக்குள் மனம் வெதும்பினாள்.
ஹரிஷ் காலையில் சோம்பல் முறித்து எழவும், ஆரன் இன்னமும் உறங்கினான்.
"குழந்தையாவே இருக்கலாம் டா. வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும்னு ஒரு கட்டாயம் இல்லாம இருந்திருப்பேன். பாரு... எவனும் எனக்கு வேலை தரலை. என்னவோ நான் வேலைக்கு போகலைனு பிடிவாதம் பிடிக்கிற மாதிரி உலகம் சொல்லுது. நேத்து உங்க தாத்தா தனஞ்செயன் தட்டி எழுப்பிட்டு டெம்போ டிரைவர் கூட போனு சொன்னார் எழுந்ததும் ஒரு டெம்போகாரன் முகத்துல தான் முதல்ல சந்திச்சு பேசியது. நேத்து என்னவென்னவோ நிகழ்ந்திடுச்சு.
இன்னிக்கு உன் முகத்துல முழிச்சியிருக்கேன் டா. எல்லாம் நல்லபடியா இருக்கணும். பெரிய கனவெல்லாம் வேண்டாம். யாரும் திட்டாம சந்தோஷமா நாள் போனா போதும்" என்று அண்ணன் மகனின் கேசத்தை கலைத்து விட்டு பாத்ரும் சென்றான்.
காஞ்சனாவோ காபியை நறுமணமத்தோடு மாடி வரை எடுத்து வந்து அங்கிருந்த ஸ்டடி டேபிளில் வைத்து விட்டு சென்றார்.
ஹரிஷ் வந்தப்பொழுது காலி கோப்பையாக இருந்த காபி கப்பை எடுத்து பார்த்து 'ஆரன் குடிச்சானா? இவனுக்கு காபி பிடிக்காதே.' என்று ஐயத்தோடு காபி கப்பை கையில் ஏந்தி கீழே படிக்கட்டில் வந்தான்.
"காபி இன்னும் சூடுதுனு சொல்லறிங்க. அங்க பாருங்க என் பையனுக்கு மட்டும் ஆறிப்போயிருந்ததா. அவனெல்லாம் குடிச்சிட்டு வரலை. சொல்லப்போனா அவனுக்கு ஆற்றி கூட வைக்கலை. உங்களுக்கு கை வலிக்க ஆற்றி தந்தேன்." என்று காஞ்சனா கணவரிடம் காலையிலேயே மகனை புகழ்ந்தார்.
அதனை கேட்ட ஹரிஷுக்கு தான் திகிலென்றது.
ஒரு வேளை ஆரன் குடிச்சிருப்பானோ எதுக்கோ அவனிடம் கேட்டுட்டு இந்த ஐயத்தை பத்தி பேசலாம். நாமளா ஏதாவது பேச ஆரன் குடிச்சிருந்தா? அப்பறம் கிண்டல் பண்ணியே ஓட்டுவாங்க. அதுவும் இந்த ஆரன் இருக்கானே நேத்து மயங்கி விழுந்ததுக்கே நோஞ்சானானு கேட்டான்.
அப்பா அடுத்து ஆரம்பிச்சிடுவார், ஆளுதான்டா வளர்ந்திருக்க இன்னமும் வளராம சுத்திட்டு இருக்கனு ஒரு நாள் முழுக்க கச்சேரி ஆரம்பிப்பார்.' என்றவன் கமுக்கமாய் காபி கப்பை கிச்சனில் வைத்து விட்டு சோபாவில் சிவனேயென்று அமர்ந்தான்.
தனஞ்செயனோ அப்பொழுதும் மகனை திட்டுவதை விடாமல் "ஒரு காபியாவது பொறுமையா குடிக்கிறானா. திங்கறது மட்டும் எங்கிருந்து தான் ஆளா பறக்கறானோ. அவன் சூடா காபியென்ன காண்டாமிருகத்தையே விழுங்குவான். எனக்கு சூடாற்றி கொடு" என்று மகனை திட்டினால் தான் என் காலை வேளை சுபிக்ஷமாக விடியுமென்று பறைச்சாற்றினார்.
காஞ்சனாவிடம் காபி ஆற்றும் வேலையை தந்தவர் பேரன் எழுந்துக்கவே காத்திருந்தார்.
ஹரிஷ் தேவையற்று தந்தையிடம் திட்டு வாங்கினாலும் பெரிதாய் அலட்டிக்காமல் இருப்பதை கண்டு லேசாய் உதட்டில் சிரித்தாள் அவள்.
இந்த ஒருமாதமாக அவள் சிரிப்பதில்லை. அவள் அனுபவிப்பது யாரிடமாவது உரைத்தால் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் முகத்தில் அவள் கவலைகள் இருந்தாலும், இன்று தான் லேசாய் தெளிந்து உதட்டில் முறுவல் பூ பூத்தது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Nice sisy thrilling agavum iruku konjam bayamum varuthu yar athu pei ah 🥶
பதிலளிநீக்குதிரில்லர் கதை சூப்பரோ சூப்பர்
பதிலளிநீக்குஅப்படி என்ன தான் அவனை சுத்தி திரியுது..?
பதிலளிநீக்கு50kg வெளித் தாஜ்மஹாலோ..? செத்தப் பிறகு அழகான பேயா சுத்துதோ...???
Pei than heroine ya sis🤔
பதிலளிநீக்குAdei harish pei kooda room met ah iruku ah polayae aana ennaku oru doubt pei coffee ellam kudikuma ah sis
பதிலளிநீக்கு