முன்பனியா... முதல் மழையா...

 முன்பனியா... முதல் மழையா...



       நேற்று இரவில் பெய்த மழையில் இடிகளும் சாரலும் செவியில் எட்டினாலும் இப்படி ரோடு நசநசவென மாறியிருக்குமென ஆறு வயது ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை.

     தங்கள் டெண்ட் வீட்டிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே பாதங்களில் ஈரம் உணரவும் 'அய்யய்ய மா... சகதி தண்ணியா இருக்கு." என்று அன்னையிடம் தெரிவித்தான்.

    "ஏன்டா.. சகதி தண்ணிய பார்க்காத மாதிரி பேசுற. இதென்ன நமக்கு புதுசா... போய் ஊத்தப்பல்லை விளக்கிட்டு மூஞ்சியை கழுவிட்டு வா. டீ ஊத்தி தர்றேன்." என்று கூறிய மாலதிக்கு வயது இருபத்திரெண்டு. என்னவோ தன் மகனுக்கு அதீத வயது அனுபவம் கண்டவன் போல சகதி தெரியாதா... என்னடா அதிசயமா பார்க்கற வேலையை பாரு என்று வழமை பணியை ஏவினாள்.

      ராஜேஷ் அங்கிருந்த பேஸ்டினை உருட்டி உருட்டி கையில் சிறிதளவு எடுத்து வாயில் தேய்த்தான். நடுவில் தாய் காணாத நேரமாய் எச்சியை விழுங்கினான்.

    "ராஜேஷூ பல் விளக்கினியா டா" என்ற கூக்குரலில் "ஆச்சு மா" என்று அவன் உயரத்திற்கு இருந்த உருளை வடிவ நீல நிற டப்பில் தண்ணீரை கையால் எடுத்து முகமலம்மி வாயிலும் ஒரு முறை கொப்பளித்து ஓடினான்.

     "என்னத டா பல் விளக்கின. பாரு வாயுக்கு இந்த பக்கம் பேஸ்ட் அப்படியே கீது." என்று தனது அழுக்கு சேலையில் துடைத்து விட்டாள்.

    அழுக்கு சேலை என்று கூறிட முடியாது. துவைத்து மடித்து வைத்தவை தான். ஆனாலும் அது எத்தனை வருடம் உபயோகத்தில் உள்ளதோ நான் பழைய துணி என்று பல் இளித்து காட்டி கொடுத்து.

    அதற்குள் டீ வாங்கி வந்த கணேசன் மாலதியிடம் நீட்டினான்.
  
    சூடான தூக்கிலிருந்து தரையில் சரிவர நிற்காத அடிவாங்கி நெளிந்த டம்ளரில் ஊற்றி கணேசனுக்கும் ராஜேஷூக்கும் கொடுத்தாள்.

    "ஏல ராசா... டீ குடிச்சிட்டு இங்குன உட்கார்ந்து இரு. நானும் உன் அப்பாவும் கட்டிடம் கட்டுற இடத்துக்கு போயிடுவோம். எங்குட்டும் போகக்கூடாது. வெளியே புள்ளக்குட்டிய திருடறவங்க இருக்காங்க. புடிச்சுட்டு போயிடுவாங்க டா கண்ணா. நம்ம வடிவுக்காற பேத்தி மீனா வரும் கூட விளையாடிட்டு வூட்லயே இரு" என்று கூறியபடி கணேசன் குடித்து முடித்த டம்ளரில் தனக்கும் ஊற்றி கொண்டு மிடறை விழுங்கினாள்.

    "ம்மா... இந்த கட்டிடத்துல யாரு தங்குவா?" என்று கேள்விக் கேட்டான் ராஜேஷ்.

   குடித்த டம்ளரை கழுவிக் கொண்டே, அன்னார்ந்து பார்த்தாள். நிச்சயம் நாம இல்லை என்ற வார்த்தை வாய் வரை வந்து, "வூடு கட்டினா யாருயா தங்குவா. மனுஷங்க தான்" என்று துவைத்த துணியை அவர்கள் இருந்த இடத்தில் கம்பிகள் போட்ட வேலியிருக்க அதில் காயப்போட்டாள்.

    ஏற்கனவே நன்றாக இருந்த சேலை கிழிந்து போனதும் இதே கம்பியால் தான். ஆனாலும் கொடியோ க்ளிப்போ எதுவுமின்றி தனக்கிருக்கும் துணியும் பறந்தோடாது பாதுகாத்திட இதே வேலி தான் மூன்று மாதமாய் உதவுகிறது.

    "நாம எப்ப மா இது மாதிரி வூட்ல போவோம்." என்றதும் ராஜேஷ் இருக்கும் அளவுக்கு மண்டியிட்டு, "செருப்பு தைக்கிறவன் காலுக்கு சொந்தமா ஒரு செருப்பு இருக்காது. வூடு கட்டுற நம்மள மாதிரி ஆட்களுக்கு வூடு இருக்காது பா.

     நாம எங்க எல்லாம் வூடு கட்ட போறோமோ அங்க எல்லாம் இந்த மாதிரி பெரிய பிளாஸ்டிக் பை தான் வூடா மாற்றிக்கணும். நமக்குனு நிலையா வூடு இல்லை ராசா. இங்க பாரு வரிசையா நம்ம ஜனம். குத்தகையா வந்து தங்கிடறாங்க. இந்த நாலு தட்டு முட்டு சாமான், பம்புஸ்டவ், தண்ணி கொடம், இதெல்லாம் தான் நம்ம சொத்து.

    இந்தா இந்த சோறை திண்ணு. மதியம் கிளம்பி வர்றேன்." என்று சாதத்தினை விழுங்கி, மகனையும் சாப்பிட வைத்து, கணவனிடம் நீட்டினாள்.

   தட்டை வாங்கியவனோ மனைவி மாலதியின் பேச்சையும் குழந்தை ராஜேஷின் முகத்தை கண்டு கவலையாய் வாங்கி கொண்டான்.

     இருவரும் வேலைக்கு சென்றிட, மாலதி கூறியது போல மீனா மூச்சிரைக்க வந்தாள்.

     ராஜேஷை ஏறயிறங்க பார்த்து, "காபிகலர் டவுசர், பச்சை கலர் சட்டை அதுல பாக்கேட் கிழிஞ்சு இருக்கும். வேலியோட ஒட்டியிருக்கற வீட்ல எட்டாவது வீடு. நீ தானே ராஜேஷு?  இந்தா சமோசா. உங்கம்மா கொடுத்துச்சு." என்று கொடுக்க ராஜேஷ் வாங்கிக் கொண்டு சுவைத்தான்.

    "நீங்க தான் மீனா அக்காவா? நீங்க நடுவுல ஊருக்கு போயிட்டதா அம்மா சொல்லுச்சு. எங்கப் போனிங்க." என்று ராஜேஷ் கேட்கவும், "எங்க ஆயா அதை பத்தி பேசக் கூடாதுனு சொல்லி கூட்டியாந்துடுச்சு. எங்கயோ போனதை சொல்ல மாட்டேன். " என்று எட்டு வயதான அவள் கூறினாள்.

    நீரால் செம்மண் சகதியாகி கூழ்பதமாகி அதனை காலால் நெம்பி விளையாடிக் கொண்டிருந்தனர் அந்த பூஞ்சிட்டு இருவரும்.

     "ஏன்கா... நீ போனியே அது இதோ இந்த மாதிரி வூடா. இல்லை இதோ இது மாதிரி வூடா." என்று காலையில் இருந்து வீட்டின் சிந்தனையில் இருந்த ராஜேஷின் மனம் கேட்டது.

    "அது இவ்ளோ பெரிசும் இல்லை. அதே மாதிரி இத்தூனுண்டும் இல்லை. ஆனா அழகா வாசல்ல நாய் கட்டி வச்சி செடியெல்லாம் தொட்டில வளர்த்து வராண்டால பெரிய ஊஞ்சல் கட்டி, மூன்று ரூம் இருந்துச்சு. நானும் பாட்டியும் கிச்சனுக்கு பக்கத்துல இருக்குற பால்கனில இதோ உன் வீடு மாதிரி எங்க உடுப்பு வச்சிட்டு தங்கினோம்.

   பாட்டி வீடு பெருக்கி துணி துவைச்சி, பாத்திரம் கழுவும். அப்போ... எல்லாம் நான் தூசி துடைக்கறது, பாத்திரம் துடைச்சி வைக்கிறது பெருக்கிலாம் விடுவேன். அடிக்கடி அந்த வீட்ல இருக்கற அண்ணா சாப்பிட நிறைய பிஸ்கேட் சாக்லேட் கூட தருவாங்க.

   என்னை மடில வச்சி தூக்கி தூக்கி கொஞ்சுவார். பாட்டி தான் கடைசியா அந்த அண்ணா கொஞ்சிட்டு இருக்கறப்ப என்னை விடுக்குனு பிடுங்கி 'பாவிபயலே குழந்தை மேல கை வைக்கிறியே நல்லாயிருப்பியாடா'னு திட்டிடுச்சு. அதோட அங்கிருந்து கூட்டிட்டு வந்துடுச்சு." என்று சமோசாவை சாப்பிட்டு பாவாடையில் துடைத்து கொண்டாள்.

      ராஜேஷிற்கு அவள் கூற வந்த சாரம்சம் புரியவில்லை. அதே போல கூறியவளுக்கே தனக்கென்ன நேர்ந்தது என்று புரியாது பகிர்ந்தாள்.

    "நானும் நாய் வளர்க்க போறேன்" என்று எழுந்து தேங்கிய தண்ணிரில் 'சொதக் சொதக்' என்று நடந்து சென்றான்.

     "ஏய்.. உங்க அம்மா திட்டும்டா" என்று பின் தொடர்ந்தாள்.

    "திட்டாது.. எப்படியும் இதோட மதியம் வரும் பார்த்துப்பேன்." என்று சமாளித்து கொள்வேனென திரிந்தான்.

   "ராஜேஷ் நானும் வர்றேன்" என்று ஓடினாள் மீனா.

       ராஜேஷ் மற்றும் மீனா இருவரும் கைகோர்த்து நடந்தனர். பெரிய பெரிய கண்டெய்னர் அவர்கள் அருகே சென்றது. ஆனால் ரோட்டில் கீழே நடைப்பாதையில் அதெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமேயில்லை என்பது போல நடந்தனர்.

    "எங்கடா போற?" என்று கேட்டதும், "அங்க ஒரு பெட்ரோல் பாங்க் இருக்கு அங்க ஒரு நாய் குட்டி போட்டிருக்கு. அதை எடுத்துட்டு வரப்போறேன்." என்று கூறவும், "அச்சோ அம்மா நாய் கடிக்கும்" என்று மீனா அஞ்சினாள்.

      "அதெல்லாம் கடிக்காது. நான் அடிக்கடி பன் தருவேன்." என்று கூறி நடந்தான்.

    "அப்போ அடிக்கடி வெளியே போவியா. உங்க அப்பா அம்மா திட்ட மாட்டாங்களா?" என்று கேட்டாள்.

     "அவங்க போனதும் போரடிக்கும். வீட்ல டிவியில்லை ரேடியோ இல்லை. அங்க பங்க் ஆபிஸ்ல டிவி இருக்கும். தூரத்துல இருந்து பார்ப்பேன். பாட்டு போட்டு ஓடிட்டு இருக்கும். சன் மியூசிக் பார்த்திருக்கியா?" என்று கூறவும் மீனா கண்ணை உருட்டி ஆஹ் பார்த்திருக்கேன். ஆனா முன்ன தங்கின வீட்ல.... இப்ப ஆயா திரும்ப இங்க வேலைக்கு கேட்டு வந்துடுச்சா போச்சு. எதுவும் பார்க்க முடியாது. டிவியே இல்லை." என்று பாவமாய் முகம் வைத்து கூறினாள்.

     அதற்குள் பெட்ரோல் பங்க் வந்திட எங்கோ குட்டி நாய் சத்தம் மட்டும் கேட்டது.

     சத்தம் கேட்ட இடமெங்கும் தேட, அங்கே தாடி வளர்த்து அழுக்கு சட்டையும் செருப்பின்றி கால் வெடிப்பையே செருப்பாக மாற்றியிருந்த பிச்சைக்காரனோ அல்லது பைத்தியமோ எதுவொன்றின் அடையாளத்திற்கு உரியவன் மட்டும் இருந்தான்.

     "எ..என்ன?" என்ற அதட்டலில் மீனா பயந்து நிற்க, "நாய்குட்டி வேண்டும். எங்கயிருக்கு?" என்று கேட்டான்.

    "அது... அது என் சட்டைக்குள்ள இருக்கு. நேத்து மழை பெய்ததால நாய்குட்டிக்கு குளிர் அடிச்சி நடுங்கிடுச்சு. அதனால நான் தான் என் சட்டைக்குள்ள போட்டு வச்சியிருக்கேன்." என்று கூறவும், ராஜேஷ் ஆவலாய் எட்டி பார்த்தான்.

       மேற்சட்டையை மடித்து குழந்தையை வயிற்றில் சுற்றியது போல பிடித்திருந்ததை காட்டினான்.

    எனக்கு அந்த பிரவுன் குட்டியை கொடுக்கறியா?" என்று கேட்டு நின்றான் ராஜேஷ்.

     "நீ சரியா சாப்பாடு போடுவியா. இது சாப்பிடலைனா செத்துடும்." என்று பின்னாலாய் சடையாக இருந்ந முடியை இன்னமும் திருகி முடித்து கேட்பான் அந்த பைத்தியமாய் காட்சி அளித்த மனிதன்.

    "எங்கூட்ல பழைய சோறு கிடைக்கும். நான் தினமும் கொடுப்பேன்." என்று கைகளை நீட்டினான்.

     பைத்தியமாய் காட்சி தரும் மனிதனோ, மேல்சட்டையை விரித்து அதிலிருந்த ஒன்றை கொடுக்க, அதனை வாங்கி கொண்டான் ராஜேஷ்.

    "ஆத்தா நாய் வர்றதுக்குள்ள வூட்டுக்கு போயிடு. இல்லை அதோட குட்டியை தூக்கறேனு கடிக்கும்" என்று ஏதேதோ முனுமுனுத்து தரையிலேயே படுத்து கொண்டார்.

     "அய்ய சீ.. அந்த பைத்தியம் மழை தண்ணி சகதியா மாறியிருந்ததுலயே படுத்துக்கிச்சு" என்று பேச மீனா முதுகில் தொம்மென்ற ஒரு அடி விழுந்தது.

     "பாவி மகளே... எங்க டி வந்த. உன்னை அங்க வூட்ல தானே இருக்க சொன்னேன். நானே இப்ப தான் உன்னை அந்த வூட்ல இருந்து காப்பாத்தி இங்க கூட்டியாந்தா, இங்க பைத்தியத்தோட பேசற, அவன் ஏதாவது பண்ணிடுவான் டி" என்று வடிவு ஆயா அடித்துக் கொண்டே பேசினார்.

    இளமை வயதிலேயே திருமணம், குழந்தை என்று மாறிய ஆயாவின் வாழ்வில் வயதுக்கு உண்டான முதிர்வுக்கும் முன் இளமையாகவே இருந்தார்.

     பேத்தி மட்டும் தனக்கிருக்க, மகள் இரண்டு வருடம் முன் எவனோடவோ சென்று விட்டதால் இந்த குழந்தையை பராமரித்து வளர்க்கின்றார்.

     மீனாவும் ஏதோவொரு நேரம் இப்படி வழி தவறியோ அல்லது வேறு காரணமோ என்று திட்டு வாங்குவாள்.

    "ஆத்தாளை போல ஊர் சுத்துதே. அய்யோ... எங்குட்டாவது ஊர் மேய போகுமோனு பக்குபக்குனு இருக்கு. இதுல வளருறதுக்கு முன்ன எதுவும் தெரியாம இருக்கே." என்று வருந்தினார்.

    மீனாவை அடித்ததும் ராஜேஷ் தன் கையிலிருந்த நாய்குட்டியை எடுத்து கொண்டு ஓட்டமெடுத்திருந்தான். வீட்டுக்கு வர மாலதி கோபமாய் நின்றிருந்தார்.

     "மேலயிருந்து உன்னை பார்த்தா தெருவுல ஓடறியோ... கொஞ்ச நாளா நீ வூட்ல இல்லையே எங்க போனனு இன்னிக்கு வேவு பார்த்தா நீ பெட்ரோல் பங்க் வரை போயிருக்க, ஏன்டா... புள்ள புடிக்கிறவன் புடிச்சிப்பான் சொன்னேனே டா. அந்த பைத்தியத்துக்கிட்ட என்ன பேசிட்டு இருக்க?" என்று விசாரணை துவங்கினாள்.

   "மா வூட்ஐயே இருக்க போரடிக்காதா. டிவி பார்க்க போனேன். அவன் ஒன்னும் பைத்தியம் இல்லை. கிழிஞ்ச சட்டை போட்டிருக்கான். டெய்லி பேப்பர் நியூஸ் எல்லாம் சொல்லறான் தெரியுமா" என்று சிறுவண்டு வாதம் செய்தது.

    அதற்குள் மீனாவையும் இழுத்து வந்து சேர்ந்தார் அவளின் ஆயா.

     நேற்று விட்ட மழை மீண்டும் வலுக்க துவங்கியது.

     "போச்சு... போச்சு... இவனிடம் பேசிட்டு துணியை நனைய விட்டுட்டேன். நாளைக்கும் ஈரத்துணி தான் கட்டணும்" என்று தலையிலடித்து சேலையை எடுக்க பாதி நனைந்தது. மாலதி வேகமாய் எடுக்கையில் கிழிந்திடவும் செய்தது.

    "ஏம்புள்ள... கொஞ்சம் பார்த்து எடுக்கலாம்ல... கிழிச்சிட்டியே. எடுத்து இரண்டு வருஷம் கூட ஆகலை." என்று கணேசன் பேசவும் மாலதி திரும்பி பார்க்க மகன் மழைறில் நனைவதை கண்டு "ஏலேய்... மழையில என்ன நனையுற?" என்று கணேசன் திட்ட ஆரம்பித்தான்.

     அப்பா... மழையில அந்த வூட்ல இருக்கறதும் ஒன்னு தான் மழையில நனையறதும் ஒன்னு தான் வூடுப்பா... ஜாலியா நனையறேன்" என்று ராஜேஷ் பெற்றோரின் அனுமதியோடு விளையாடும் நோக்கில் அந்த முதல் மழையை ரசிக்க துவங்கினான்.  

    மாலதி மகனின் பேச்சில சலனமின்றி கணேசனை பார்வை பார்த்தார்.

   "ஏம்புள்ள இன்னமும் முறைக்கிற... ஈரத்துணி கட்டிட்டு இருக்கறதும் அழுக்கான உடையும் நமக்கென்ன புதுசா... முதல் முதல்ல மழையில நனைந்து துணி கிழிந்தது போல லுக்கு விடற... இப்ப கட்டிக்கினுகிற சேலைக்கூட அப்படி தானே கிழிஞ்சுது." என்று அவளின் முந்தானி சொருகிய இடையில் கைவைத்து தன்பக்கம் இழுத்தான்.

    "யோவ் குழந்தை கீதுயா." என்று பதற, ஆமா அங்கப்பாரு முதல் முதல்ல மழையில நனையுற மாதிரி ஆடுறான்." என்று சுட்டிக் காட்டினான்.

   அங்கே பாட்டி வடிவோ பேத்தி மீனாவை அதட்டவும் முடியாது, துள்ளி குதித்திடும் அந்த சிறுமியை எப்படி வளர்ப்பேனோ என்று கண்ணீரை வடித்து அவளையே விழியகலாது கண்டார்.

அந்த கார்கால மேகமோ சாரலை முகத்தில் தெளித்து வழிந்த நீரோடு கண்ணீரை தனித்து காட்டிடாது மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்று 'படைத்தவனுக்கு படி அலுக்க தெரியும்' என்பதாக சொல்லாமல் சொல்லியது இயற்கையெனும் கொ(அ)டை மழை.

   மீனாவும் ராஜேஷும் மழையில் பெய்த சகதியில் தண்ணீரில் குதித்து குதித்து மகிழ்ந்து ஆட, சற்று தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் 'முன்பனியா... முதல் மழையா..' என்று பாடல் வரிகள் காற்றில் மிதந்து குடிசைக்கும் எட்டியது.

*சுபம்*
-பிரவீணா தங்கராஜ்
   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1