மர்ம நாவல் நானடா-3
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அத்தியாயம்-3
புது வீடு வந்து இரண்டு நாள் கடந்துவிட்டது. இந்த இரண்டு நாள் முழுக்க ஆரன் கூடவே உறங்கி பழகியிருந்தான் ஹரிஷ்.
இந்த இரண்டு நாளும் யாரோ இருப்பதாக தோன்றினாலும் எதுவும் பெரிதாய் பாதிப்பை உண்டாக்கும் அளவிற்கு எதுவும் தெரியவில்லை.
மாடியில் தனியறையில் தனக்கென நொறுக்கு பண்டங்கள் வைத்திருக்க அது மட்டும் காணாமல் போனது.
ஆரன் ஹரிஷுக்கு தெரியாமல் சாப்பிடும் நேரம் ஹரிஷ் கண்டதால், "சாரி சித்தப்பா பசிக்குது. ஏதாவது திண்ணுட்டே இருக்கணும் போல இருந்தது." என்று நொறுக்குதீனியை சாப்பிட தனியாக வைத்த பாக்ஸ் இருந்தது.
அதனால் மற்ற நொறுக்கு தீனியும் அவன் சாப்பிட்டதாக எண்ணினான்.
ஆரனை அண்ணன் வீட்டில் விட்டுவிட்டு வந்து அசதியில் படுத்தான்.
உறக்கமும் சட்டென வந்திட ஆழ்ந்த நித்திரைக்கு தள்ளப்பட்டான்.
இடையில் தனது கட்டிலில் நெறுக்கி உறங்குவதாக தோன்றியது. தூக்கத்திலேயே "ஆரன் நெறுக்காத டா. தள்ளி படு."
"காலை போடாத டா." என்று முனங்கினான்.
அர்த்தராத்திரியில் பஞ்சு பொதியை தலையணை அணைத்தான். என்ன தலையணைக்கு கை கால்கள் இருக்குமென்று அவனறியாது போனது.
தூக்கத்திலேயே அவன் தலையணை என்று எண்ணிய பெண்ணவளோ, 'ரொம்ப நாள் கழிச்சி மெத்தையில படுக்கலாம்னு இருந்தா இவன் கையை கண்டயிடத்துல வைக்கிறான். சே..' என்று அவன் கையிலிருந்து விடுபட்டு தள்ளி படுத்தாள்.
'என்ன மாதிரி வாழ்ந்த என்னை இப்படி இன்விசபிளா(invisible) பொண்ணா மாத்திடிச்சே... நான் என்ன பாவம் பண்ணினேன். இதுக்கு தான் நான் கொலம்பியாவிலருந்து வந்தேனா? இதுலயிருந்து நான் எப்படி தப்பிக்கறது எனக்கு ஒன்னும் புரியலை.' என்றவள் உறங்கும் ஹரிஷை தான் அவளின் மர்மத்தை உடைக்கும் காரணியாக கண்டாள்.
'ஒரு மாசம் இந்த வீட்ல தனியா இருக்கேன். உருவமில்லாம... முதல் முதலா சத்தம் கேட்டு இந்த ரூமுக்கு வந்த இவனிடம் பேசலாம்னா இவன் இப்படி பேயை பார்த்தது போல பயந்து சாகறான்.' என்று தனியாக தனிமையாக இந்த ஒரு மாதம் பைத்தியமாய் பிதற்றுவது போல பிதற்றினாள்.
இன்னும் கொஞ்சம் காலம் போனால் நிஜமாகவே பைத்தியமாக சென்றிடுவது சாத்தியமே.
நிஜமாகவே உருவம் தெரியாமல் இருந்தால் யாராக இருந்தாலும் பேய் என்று தான் எண்ணி அஞ்சுவார்களென பேதையவள் அறியவில்லை. கண்ணீரும் நிறமற்று உருவமற்று விழியிலிருந்து கன்னத்தில் ஆறாய் ஓடியது.
யாஷிதாவும் ஆழ்ந்த உறக்கத்தில் சென்றதும், ஹரிஷ் இம்முறை தூக்கத்தில் யாஷிதா முகத்தை நெஞ்சுக்குள் வைத்து கட்டிக்கொண்டான்.
முதலில் அவன் தீண்டிய இடத்தை கண்டு முகம் சுழித்து தள்ளி வந்த யாஷிதாவுக்கு, ஹரிஷிடமிருந்து இப்படியொரு அணைப்பில் 'நான் இருக்கின்றேன் உன்னை விடுவிப்பேன்' என்றது போல செய்த செயலை அவளுமே உணராமல் நித்திரையில் ஆட்கொண்டிருந்தாள்.
அதிகாலை ஹரிஷை எழுப்ப வந்த காஞ்சனா அவனை எழுப்பினார்.
கொட்டாவி விடுத்து எழுந்தவனுக்கு யாரையோ அணைத்திருந்து விடுவித்தது போலபிரம்மை தோன்ற, தலையை சொரிந்து மெத்தையிலேயே யாரையோ தேடினான்.
"என்னடா பண்ணற? பல் விலக்கிட்டு காபி குடி. ஏதோ காலேஜ் பசங்களுக்கு பிராக்டிகல்ல ஹெல்ப் பண்ண போகணும்னு சொன்ன" என்று மகனை உலுக்கிவிட்டு சென்றார்.
ஹரிஷோ பாத்ரூம் சென்று பற்பசை வைத்து விட்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தான். கரகரவென்று இரண்டு நொடி தேய்த்தவன் சட்டென காபி கோப்பை இருக்கும் திசை நோக்கி ஓடினான்.
காபி அருகே வந்து காபி இருக்கா? இல்லை குறைந்ததா? என்று பார்த்து விட்டு பல் தேய்த்தான்.
'ஓ.. காட்.. நல்ல வேளை.. காபி குடிச்சிருப்போம். இப்ப இவனுக்கு சந்தேகம் வருது.' என்று யாஷிதா பொறுமை காத்தாள்.
ஒரேடியாக இவனை அச்சுருத்துவதாக மாறினால் பிறகு தான் கூறுவதை காது கொடுத்து கேட்க மாட்டானோ என்று யாஷிதா புரிந்தவளாக நிற்க, நுரைகள் வழிய பல் விலக்கியவன் வேகமாய் பாத்ரூமில் சென்று முகமலம்பி வாய் கொப்பளித்து ஓடிவந்தான்.
காபி அதே அளவுயிருக்க 'அப்பாடி' என்று நிம்மதியாக அன்னை கைமணத்தில் காபியை சுவைத்தான்.
மாடி படியில் கடைசி மிடறை சுவைத்தவன் 'ஆஹா அமிர்தம்' என்று நடந்து வர, "நான் காபி குடிக்கலை டி சத்தியமா?" என்று தனஞ்செயன் கூற, "விளையாடாதிங்க... இப்ப தான் இங்க வச்சிட்டு போனேன். இரண்டு நிமிஷமாகலை. அன்னைக்கு திட்டினேன்னு ரோஷப்பட்டு உடனே குடிச்சிட்டு இப்ப குடிக்கலையேனு சாதிக்கறிங்க. உங்க விளையாட்டை மூட்டை கட்டுங்க. எனக்கு வேலையிருக்கு." என்று பீன்ஸ் வெட்ட சென்றார் காஞ்சனா.
தனஞ்செயனோ ஹரிஷை போல, 'நான் ஒரு சொட்டு குடிச்சது போல தெரியலையே. ஆனா காபி கப் என் பக்கமா தான் காலியா இருக்கு. ஒருவேளை குடிச்சாலும் குடிச்சிருக்கலாமென்று அலுவலகத்திற்கு தயாரானார்.
ஹரிஷோ தந்தை தாயின் சண்டையை வேடிக்கை பார்த்தவன் மனமோ 'என் காபிக்கு பதிலா அப்பா காபி காலியாகியிருக்கு. இங்க என்னவோ இருக்கு. இப்ப நான் யாரிடம் சொல்லறது' என்று கவலை தோய்ந்த முகத்தோடு வீட்டையே அளவிட்டான்.
சுப்ரமணிய தாத்தாவோ "என்னடா வீடு ரொம்ப பிடிச்சிருக்கா? அடிக்கடி என்னைய விட நீ ரொம்ப ரசித்து பார்க்கற?" என்று பேரனிடம் மூக்கு கண்ணாடியை துடைத்து போட்டாவாறு கேட்டார்.
"தாத்தா... இந்த வீட்டை யாரிடம் இருந்து வாங்கினிங்க?"
"என் பால்ய காலத்து சிநேகிதனிடமிருந்து டா." என்று தாத்தா பெருமையாக கூறினார்.
"பால்ய சிநேகிதரா? அவர் இறந்துட்டாரா? உன் திக்கஸ்ட் பிரெண்டா? உன் கூடவே இருக்க விரும்புவரா?" என்று சம்மந்தம் சம்மந்தமில்லாது கேட்டான். ஒரு வேளை இறந்தவர் வீட்டை வாங்கியதால் அவரும் இங்கு ஆவியாக வந்திருப்பாரோ என்று.
"படுவா... அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கான் டா. உடம்பு முடியாம. விளையாட்டுக்கு கூட அப்படி பேசாதே." என்று கடிந்தபடி பேப்பரை படிக்க ஆரம்பித்தார்.
ஹரிஷோ இந்த வீட்டை ஏன் விற்றாங்கனு கேட்கலாம்னா தாத்தா ஓடிட்டாரு. என்றதும் ஹரிஷிற்கு அழைப்பு வந்தது. அவனின் உயிர் தோழன் ரஞ்சன்.
பெரும்பாலும் சனி ஞாயிறு வெளியே காலையில் டிபன் சாப்பிட்டு சென்றால் இரவு உணவுக்கு தான் வருவான். அதுவரை ரஞ்சன் மற்றும் விமல் கூட தான் ஊர்சுற்றுவது.
இன்றும் அதே போல ஊர்சுற்ற தயங்காமல் "வர்றேன் டா பெட் மேட்சா. ஒரு ஸ்டூடண்டுக்கு பிராக்டிகல் ஹெல்ப் கேட்டாங்க. அதை சொல்லிக் கொடுத்துட்டு வந்துடறேன். உதவின்னு வந்துட்டா உசுரை கொடுத்து செஞ்சிடுவோம்ல.." என்று பேசிக் கொண்டே அறைக்கு சென்று உடைமாற்றினான்.
"டேய்... குளிக்காம கொள்ளாற எங்க போற?" என்று காஞ்சனா கேட்க, "விளையாட போறேன் மா. வந்து குளிச்சிக்கறேன்" என்று வாசனை திரவியத்தால் உடல் கமகமக்க பைக் எடுத்து மறைந்தான்.
"வரவர ஒழுங்கா சாப்பிடறதில்லை, குளிக்கறதில்லை, தூங்கறதில்லை." என்று பெற்றவளாய் கவலைக் கொண்டு வாடினார்.
"ஆமா... எந்நேரமும் திங்கறதை பத்தியே பேசு. விமலுக்கு பொண்ணு பார்த்துட்டாங்க தெரியுமா. இவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னா ஒரு வேலையும் இல்லை." என்று பேச்சு ஆரம்பிக்க, "எனக்கு சமையல்கட்டுல வேலையிருக்கு" என்று காஞ்சனா நழுவிட அகப்பட்டது என்னவோ சுப்ரமணியம் தான்.
"பாருங்கப்பா... அவனும் பொறுப்பில்லாம இருக்கான். இவளும் பையனை குறை சொன்னா ஒளிஞ்சுக்கறா" என்று புலம்பினார் தனஞ்செயன்.
சுப்ரமணியமோ "நீ இப்படி சொல்லற. நான் ஹரிஷுக்கு நேத்து சப்போர்ட் செய்ய மருமக ஏதோ நான் தான் அவனை செல்லம் கொடுக்கறதா பேசறா. தனஞ்செயா.. படிப்பு, வேலை, நம்ம வாழ்க்கை
துணை எதுவுமே நம்ம தேடி போய் தவிச்சாலும் சரியா அமையாது டா.
ஆனா கால நேரம் கூடி வரும் போது யாருக்கு யார் துணையோ, என்ன வேலையோ, எல்லாம் நல்லபடியா அமையும். அதுவும் என் பேரன் மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும். ஏன்னா அவன் யாருக்கும் மனசார கூட கெடுதல் நினைக்கிறவன் இல்லை.
அவனுக்குனு ஒரு தேவதை நம்ம கண்ணுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா எப்ப வேண்டுமென்றாலும் அவனோட நேசத்தை புரிந்து அவனுடையவளா மாறுவா. இந்த வாரம் புதன் கிழமை இன்டர்வியூ இருக்குனு சொன்னான்.
எனக்கென்னவோ இடம் மாறினா நல்லது நடக்கும்னு சொல்வாங்களே அது ஹரிஷுக்கு சாதகமா அமையும்னு மனசுக்கு படுது. புது வீடு, புதுவேலை என்று ஹரிஷுக்கு எல்லாம் நல்லதா பொருந்தி வரும்" என்று மகனிடம் நல்லதாக நடக்குமென மகன் தனஞ்செயனிடம் நம்பிக்கையூட்டினார் சுப்ரமணியம்.
சமையலறையிலிருந்து இதனை கேட்டுக் கொண்டிருந்த காஞ்சனாவுக்குமே ஹரிஷுக்கு ஒரு நல்லது நடக்க ஆசைக்கொண்டது.
அங்கிருந்த யாஷிதாவோ மாடியறைக்கு சென்று ஹரிஷின் புகைப்படத்தில் விலோசனங்களை பதித்தாள்.
இதுநாள் வரை எப்படியோ? இனி தான் ஒருத்தி இருப்பதை இங்கிருப்பவருக்கு தெரிவித்து தனது மர்மங்கள் விடுபட்டு பழைய நிலைக்கு சென்றாக வேண்டியது தான்.
முதலில் ஹரிஷிடம் எப்படி பயமுறுத்தாமல் தன்னை பற்றி அறிவித்து பேசி புரிய வைப்பதென்று தீவிர ஆலோசனையில் திளைத்தாள்.
மன்னவன் வருகைக்கு காத்திருக்கும் தேவதையாக துடித்தாள்.
ஆனால் ஹரிஷ் நள்ளிரவு தாண்டி அரை போதையில் வந்து சேர, காஞ்சனாவோ மூக்கு முட்ட முறைத்து சத்தம் போட்டால் எங்கே கணவர் வந்து பிரச்சனை விஸ்வரூபம் கொள்ளுமோயென்று தலையிலடித்து மாடிக்கு அனுப்பினார்.
வார்த்தை குழறலாக "தேங்க்..ஸ்.. மம்மி... லவ் யூ சோ மச்." என்று படிக்கட்டில் தள்ளாடி தள்ளாடி அலைமாரியை தள்ளி அறைக்குள் வந்தான். அவன் கதவு திறக்கும் போதே 'மம்மி... நான் கொத்து பரோட்டா சாப்பிட்டுட்டேன். சாப்பிட சொல்லி போர்ஸ் பண்ணாதே' என்றதால் காஞ்சனாவோ மகனை சாப்பிட இருத்தாமல் மாடிக்கு துரத்தினார்.
இப்படி கதவு திறந்ததும் குப்பென்ற மதுவாடையில் யாஷிதாவுக்கு எரிச்சல் உருவானது.
எப்படியெல்லாம் தன்னை பற்றி கூறி தனக்கு இவ்விடம் விட்டு, எப்பொழுதும் போல பழைய நிலையை அடைந்து, நிம்மதி கொள்ளும் முயற்சியில் திட்டத்தை வகுத்தால், இப்படி மதுவென்ற அரக்கனை விழுங்கி வந்து தொலைத்திருக்கின்றானே இந்த மூதேவி.
ஹரிஷ் மீது நல்ல அபிப்ராயம் அமுதமாக இறங்க தற்போது நஞ்சு போல தொண்டையில் விக்கித்து நின்றாள் யாஷிதா.
'எருமை மாடே... பன்னி பயலே.. ஏன்டா இப்படி குடிச்சிட்டு வந்த... எனக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா? உன்னிடம் சொல்லலாம்னா இப்படி வந்து நிற்கறியே தடிமாடு.' என்று தலையணையை வைத்து சாற்றினாள்.
"திட்டாத மா. விமலுக்கு எங்கேஜ்மெண்ட் அதனால ட்ரீட் தந்தான் பிரெண்ட்ஸோட கொஞ்சமா குடிச்சேன்" என்று அன்னை அடிக்கிறாரென்று உளறி தள்ளி போதையில் விழி நிமிர்த்தாமல் பதில் தந்தான்.
யாஷிதாவோ தலையணையை அவன் மீதே போட்டுவிட்டு கோபம் காட்டி, துடித்தாள்.
எத்தனை நாட்களாய் இதே இடத்தில் இதே கோலத்தில் இருப்பது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவரும் தன்னை காத்திட முன்வரவில்லை.
இதற்கு அந்த கொலைக்காரனிடம் சிக்கி இறந்திருக்கலாமென்று தோன்றியது.
அப்படியே இறந்து போனாலும் இது போல ஒரு அமானுஷ்யத்தில் தான் கிடந்திருப்போமா? என்று கண்ணீர் வடித்தாள்.
ஓரு வேளை தான் இறந்து விட்டோமோ? அவளுக்கே தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. கடைசியாய் அருவாள் கத்தியோடு தன்னை திடக்காத்திரமான ஒருவன் துரத்தி வந்தது வரை நினைவிருந்தது.
அறைக்குள் செல் என்றவரின் அடுத்த செயல் என்னவாக மாறியதோ?! தான் அருவுருவமாக மாறிவிட்டோமென்று இப்பொழுதும் தனக்கு என்ன நேர்ந்திருக்குமென்று அறியாமல் தான் இருந்தாள்.
இதற்கெல்லாம் விடையறிய வேண்டுமென்றால் மேகமலைக்கு சென்றாக வேண்டும். இங்கிருந்துக் கொண்டு அங்கு எப்படி செல்வது? ஆனால் அங்கிருந்து தானே இங்கு வந்தது? யாஷிதாவுக்கு குழப்பமாய் போக ஹரிஷின் கட்டிலில் உறங்கவும் பிடிக்கவில்லை. மது வாடை குமட்டியது.
இந்த ஒரு மாதக்காலம் எப்படி தரையில் படுத்தாளோ அப்படியே படுக்க ஆரம்பித்தாள்.
முன்பு பழக்கமின்றி வேறு வழியில்லையென்று தரையில் படுத்தாள். ஹரிஷ் வந்ததும் அதுவும் மெத்தையென்றதும் சுகபோகத்திற்கு பழகிய தேகம் மீண்டும் பஞ்சனையில் துயில் கொண்டது. ஹரிஷ் ஆடவன் என்பதெல்லாம் அவள் கருத்தில் இல்லை. அவன் ஒரு ஓரமாக இருந்து தொலையட்டும் தரையில் உடல் வலிக்கிறதென்று இவள் ஒரு பக்கம் உறங்கினாள்.
இன்று அருகே சென்றாலோ மது வாடை. சொல்லப்போனால் அறையெங்கும் வீசியது.
அரசாங்கம் கஜனா நிரப்ப மதுவுக்கு தடை விதிக்கவில்லை. அதற்கான பலன் என்னவோ குடும்பத்தில் வீட்டாட்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர்.
இங்கு நாயகி யாஷிதாவுக்கு அந்த தலைவிதி இல்லை. ஆனாலும் ஹரிஷ் குடித்ததற்கு இரவெல்லாம் அவனை சபித்தபடி சொக்கி உறங்கினாள்.
நள்ளிரவு தாண்டி இரண்டு மணியளவில் ஹரிஷ் கட்டில் விளிம்பில் வந்தவன் 'தொப்பென்று தரையில் விழுந்து, யாஷிதா இருந்த இடத்தில் சேர்ந்து அவளை ஆரத்தழுவி கொண்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
சூப்பர் சகி.....👍🏻👍🏻👍🏻 யாஷிதா புலம்பல் சீரியசாக க இருந்தாலும் சிரிப்பாக இருக்கு😂
பதிலளிநீக்குகதை மிகவும் சுவாரசியமாக அருமையாக போகிறது.
பதிலளிநீக்குசூப்பர். ..
பதிலளிநீக்குYash pei illaya ah pavam ava Harish kita help kekalam nu vandha inga ivan full ah kuduchitu bothai la paduthu irukan
பதிலளிநீக்கு