நீ என் முதல் காதல் -15
அத்தியாயம்-15
ம்ருத்யுவை எதிரே அமர வைத்து அரைமணி நேரமாக பேசாமல் வீற்றிருந்தாள் ஸ்ரீநிதி.
ம்ருத்யு கமுக்கமாய் தன் மடியில் தலையணையை வைத்து, சின்சியராக போனில் ட்விட்டரில் உலாத்திக் கொண்டிருந்தான்.
"ம்ருத்யு ம்ருத்யு இங்க பாரு?" என்று கூப்பிட்டால், "சொல்லு ஸ்ரீ காது கேட்குது. எதுக்கு பார்க்கணும்?" என்று கிரிக்கெட் மேட்ச் பற்றி விளையாடிய ஆட்டக்காரர்களின் பதிவுகளை பார்த்திருந்தான். சிலரின் பதிவும் அதற்கு கீழியிருக்கும் கருத்துகளையும் ஒவ்வொன்றாய் வாசித்திருந்தான்.
இந்த ஜீவி என்னடானா என்னவோ ம்ருத்யு என்னை லவ் பண்ணறதா சொல்லறான். லவ் பண்ணற எந்த மடையனாவது காதலியை வச்சிட்டு போனை நோண்டுவானா? நான் எத்தனை தடவை கூப்பிட்டும் போன்ல தான் மூழ்கிட்டு இருக்கான்.
இதை சொன்னா அந்த ஜீவி நம்ப மாட்டான்.
"டேய் கூப்பிட்டுட்டே இருக்கேன் அங்க என்ன பண்ணற?" என்று எரிச்சலாக கேட்டாள். தனக்குள் குழப்பத்தை விதைத்து சென்றவன் மீது காட்டாத கோபம், ம்ருத்யுவிடம் காட்ட துவங்கினாள்.
"ம்ம் எல்சா கூட சாட் பண்ணறேன்." என்று நக்கலாய் கூறினான்.
அடுத்த நொடி ஸ்ரீநிதி அவனருகே வந்து போனை விசுகென்று பிடுங்க, "கிரிக்கெட் நியூஸா" என்று சலித்து விட்டு நிம்மதியாக போனை திருப்பி கொடுத்தாள்.
"இப்ப எதுக்கு போனை பிடுங்கின? எதுக்கு போனை திருப்பி தந்த? என்ன தான் வேணும்? இங்க வந்து ஹாப் ஹவருக்கு மேலாகுது.
வீட்ல ஒரு பேச்சுக்கு தான, இங்கயே பேசுங்க வெளியே போகாதிங்கன்னு சொன்னாங்க. நீயென்ன என்னை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு ரசிச்சிட்டு இருக்க? என்ன தான் பிரச்சனை?" என்று கேட்டுவிட்டான்.
ஸ்ரீநிதி சொல்ல தயங்கி, "எதுக்குடா எல்சா கூட சாட் பண்ணறதா என்னிடம் விளையாடற?" என்று தேவையற்ற வினாவை தொடுத்தாள்.
"முதல்ல நான் கேட்டதுக்கு ஆன்சர் பண்ணு ஸ்ரீ. என்னை எதுக்கு கூப்பிட்டு உட்கார வச்சிருக்கற? இப்ப எதுக்கு சம்மந்தமேயில்லாம எல்சா கூட சாட் பண்ணறேன்னு சொன்னா போனை பிடுங்கற?" என்று விடாமல் கேட்டதும், "இந்த ஜீவி குழப்பறான்டா?" என்றாள்.
ம்ருத்யுவிற்கு என்ன குழப்பியிருப்பான். ஒரு வேளை எனக்கும் அத்தைக்கும் வேலையில்லாம அவனே இவளை விட்டு ஒதுங்கறானா? அப்படி பண்ணினா உத்தமமா இருக்கும் என்று நினைத்தவன் ஸ்ரீயிடம், "என்ன குழப்பறான்.?" என்று போனை கண்டு கேட்டான்.
எதிரில் இருந்தவளோ, தயங்கி தயங்கி "நீ என்னை லவ் பண்ணறியாம். அதனால தான் எனக்கு உதவறியாம்." என்றதும் போனிலிருந்து கண்ணெடுத்து ஸ்ரீயை பார்த்துவிட்டு மீண்டும் போனுக்குள் தலையை விட்டான்.
இரு நொடிகள் கடக்கவும் "ஏன் அப்படி குழப்பறான்? என்னவாம்?" என்று போனை கையில் வைத்தபடி கேட்டான். இவ்வளவு நேரம் கிரிக்கெட் மீம்ஸ் நியூஸ் என்று அவன் பார்ப்பதாக பெண்ணவளுக்கு காட்சிப்படுத்திவிட்டு தன் போன் முலமாக கேமிராவில் அவளை தான் நோட்டமிட்டான்.
"தெரியலை டா. நீயும் நானும் நிச்சயதார்த்தம் அப்ப சந்தோஷமா சிரிச்சிட்டு நின்றோமாம். அதனால அவன் சொல்லறான்." என்று கூறினாள்.
ம்ருத்யு எதுவும் உரைக்காமல் போனில் அவளை தான் கண்ணெடுக்காமல் பார்த்தான்.
ஸ்ரீநிதி இவனை பார்ப்பதன் வித்தியாசம் கண்டுக்கொண்டவன் தன் காதல் பார்வையை தவிர்த்திட முடிவெடுத்தான். மிக இயல்பாய் இருக்க, ஸ்ரீநிதியோ குழம்பிவிட்டாள்.
இந்த ஜீவி எதுக்கு என்னை போட்டுகொடுத்திருக்கான். என் பேஸ் ரியாக்ஷனை பார்த்துட்டு தான் என்னை குறுகுறுன்னு பார்த்தானா? காம்படேஷன் வந்துட்டேன்னு அவனுக்கு தெரியுது. இந்த குட்டி பிசாசுக்கு தெரியலையே? என்று அவள் அருகே வரவும் சட்டென வேறொன்று ஆப்பிற்குள் தலையை விடுவித்தான்.
போனை பிடுங்கி மெத்தையில் வீசவும், "இங்கபாரு ஹெல்ப் பண்ண கேட்ட, என்னால முடிந்ததை பண்ணறேன். அவன் சொல்லறான்னு என்னை கேள்விக்கேட்கறதா இருந்தா இப்பவே டிசைட் பண்ணு.
நான் என் வேலையை கவனிக்கறேன். அப்பா அம்மா கல்யாணம் முடிவாயிடுச்சு, எப்படா பிஸினஸ் ஆரம்பிக்கப்போறனு கேட்டுட்டு இருக்காங்க. என்னால புது பிசினஸ் ஆரம்பிச்சா நீ கூப்பிடற நேரத்துக்கு நாய்குட்டியா வரமுடியாது." என்று கோபித்தான்.
"நான் உன்னை நாய்குட்டியாவா ட்ரீட் பண்ணறேன்?" என்று ஸ்ரீநிதி வருத்தமாய் கேட்டாள்.
"இல்லையா பின்ன? சட்டுனு போன் போடற? வான்னு கூப்பிடற, வரலைனா அதுக்கு வேற திட்டற, நல்லா நினைவு வச்சிக்கோ, எனக்கு கல்யாணம் ஆகறவரை தான் இப்படி நீ யூஸ் பண்ணிக்கலாம். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனா என் மனைவி உனக்கு உதவறது எதுக்குனு கேட்பா?" என்று பேசவும் ஸ்ரீநிதியோ "வெளியே போடா, வெளியே போ, நீ எனக்கு எந்த உதவியும் பண்ண வேண்டாம். என் ரூம்லயிருந்து முதல்ல கிளம்பு" என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றாள்.
அவனோ விடாமல் தன் பலம் கொண்டு அதேயிடத்தில் நின்றான். இம்மியும் அசையாதவனிடம் "ஏன் நிற்கற கெட்அவுட்" என்று கத்தவும், "ஜீவி உன்னை விட்டு ஓடறதுக்கு பார்க்கறான். அதான் நான் உன்னை விரும்பறதா உன்னை குழப்பறான். நீ அவனிடம் சந்தேகப்படறியானு சண்டைப்போட்டா அவன் அந்த மொமெண்டுக்கு வெயிட்டிங். எனிவே என்னவோ பண்ணித்தொலை. நான் ஒன்றரை மாசம் உன்னோட வருங்காலப்புருஷனா ஆக்டிங் கொடுத்துட்டு நடையை கட்டறேன்.
அதுக்குள்ள எல்சாவிடம் கொஞ்சம் பேசணும். அவளை வேற மிஸ் பண்ணற பீலிங் ஆகுது." என்று பிட்டு போட்டு சென்றான்.
ஸ்ரீநிதியோ நிஜமாகவே குழப்பத்தின் அவதாரமாக மாறினாள்.
அவள் காதலித்தவரை ஜீவி நல்லவன். தன்னை அவன் நிஜமாக விரும்புவதை உணர்ந்தே தானும் விருப்பத்தை ஏற்றாள்.
அப்படியிருக்க ஜீவி சொல்வதை எந்த ரகத்தில் சேர்க்க? ம்ருத்யு தன்னை காதலிப்பதாக அல்லவா சொல்கின்றான்.
இந்த ம்ருத்யு சிறு வயது நட்பு. இவனும் தனக்காக உதவி செய்வான். ஆனால் இவனோ ஜீவியை தவறு சொல்கின்றான்.
தான் விரும்பியவன் அப்படிப்பட்டவனா? இரண்டும் நம்பிக்கைக்குரிய இடத்திலிருந்தால் எதை நம்புவது?
ஷண்மதியாக இருந்தால் பாசம் அன்பு காதல் இதெல்லாம் தவிர்த்துவிட்டு யோசிப்பாள். இவளோ அந்த அன்பை தான் தாரசு தட்டில் வைத்து பார்த்தாள். அன்பில் கலப்படம் இல்லாமல் போக, குழம்பிவிட்டாள்.
செயலில் கலப்படம் இருப்பதை யோசித்தால் கண்டறிந்திருப்பாளோ என்னவோ?
ம்ருத்யு சென்றதும் யாரையும் பார்க்க பிடிக்காமல் தவிர்த்தாள்.
ஸ்ரீநிதியை குழப்பி விட்ட திருப்தியோடு ராஜநடையிட்டவன் வீட்டுக்கு வந்து ஒன்றரை மாதத்தில் மூன்று நாட்கள் சென்றதில் வட்டமிட்டு சிரித்தான்.
'இனி நான் விடறதா இல்லை ஸ்ரீநிதி. நீ என் முதல் காதல் அதை எப்படி காப்பாற்றிக்கணும்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. இனி அத்தையே வந்து என் மகள் ஜீவியை கட்டிக்கட்டும்னு சொன்னாலும் இந்த ம்ருத்யு விடறதா இல்லை.' என்றவன் முகம் இது தான் எனது பிறவி ரத்தத்தின் குணம் என்பதாக முதல் முறை எட்டிபார்த்தது.
இதுவரை ஏமாற்றம், வலி அனுபவிக்காமல் கேட்டது கிடைத்த திருப்தியும், கேளாமல் கிடைக்கும் அன்பு மழையும் இருந்ததால் இதுபோன்று நினைத்ததை நியாயம் அநியாயம் பாராது அடைய வேண்டியதை அடையும் எண்ணமே வந்ததில்லை. இது தான் மொட்டு விட்டுள்ளது.
ஸ்ரீநிதி அதனை எழுப்பியிருக்க வேண்டாம். அவள் அரக்கியின் மகளாக இருக்கலாம். இவன் பகடை வீசி கணக்கை முடிக்கும் சகுனியானான்.
ம்ருத்யு இதயம் தான் செய்ய வேண்டியதை தெளிவாக சிந்தித்துவிட்டது. ஸ்ரீநிதி கழுத்தில் தாலி மட்டும் கட்டும் யோகம் அமையட்டும் அதற்காக காத்திருந்தான். எப்படியும் தாலி கட்டிவிட்டால் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்திடும் தீர்வில் இருந்தான். ஆனால் அவனே அறியாதது மிஞ்சி செருக்கை வெளிப்படுத்துவானென்று அறியாது போனான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment