நீ என் முதல் காதல் -7

அத்தியாயம்-7

  ம்ருத்யு அணைப்பில் ஸ்ரீநிதி அதிர்ச்சியானாள். ஆனால் கதவை திறந்து எட்டிப்பார்த்த ரிதன்யாவோ "அத்தான் இதெல்லாம் டூமச்." என்று ரிதன்யா வரவும் ம்ருத்யு சட்டென்று விழியில் தன் உணர்வுகளை காட்டாமல் மறைத்தான். 

   ம்ருத்யு ஸ்ரீநிதி பார்க்கும் நேரம் ரிதன்யா வந்துவிட்டதாக நெற்றியை நீவிவிட, இது நாடகமென்று எண்ணிக்கொண்டாள். 

   ரிதன்யா ம்ருத்யு மெத்தையில் தொப்பென அமர்ந்து "அத்தான் உங்க கல்யாணத்துக்கு எனக்கு வைர ஒட்டியானம் மம்மியிடம் கேட்டிருக்கேன். மம்மி ஓகேனு சொல்லிருக்காங்களே." என்று அமர்ந்தபடி குதித்தாள். அவள் குதிக்கவும் ஸ்பிரிங் போல அவளை மேலே தூக்கியது. 

     "இங்க எதுக்குடி வந்த?" என்று ஸ்ரீநிதி அவளை விரட்ட முயன்றாள். 

   "ஹலோ ராட்சஸி அக்கா இது எங்க அத்தை பையன் ரூம். நீ எப்படி உரிமையா வரலாமோ அதே போல நானும் வரலாம். நீ ஏன் வந்த எதுக்கு வந்தனு கேட்கற அதிகாரத்துக்கு ஆளாகணும்னா எங்க மாமாவை கட்டிக்கணும். 

  இன்னும் நிச்சயமே நடக்கலை. ஓவரா தான் அத்தான் மேல பொஸஸீவ் ஆகற." என்று நேரம் காலமின்றி கூறவும் ம்ருத்யுவிற்கு நகைக்க தோன்றியது. 

  ஸ்ரீநிதி தன்னை மணக்க ஏதோ கனவு கோட்டை கட்டி, விரும்புவதாக ரிதன்யா பேச்சு இருக்க நகைக்காமல் இருக்க முடியுமா? 

   "அத்தான் ஒரு பூங்கொத்து கூட உனக்காக வாங்கத்தெரியாத இவளை கழட்டிவிட்டுடு. என்னை கட்டிக்கோ" என்று வெள்ளெந்தியாக ரிதன்யா கூற ஸ்ரீநிதிக்கு கடுப்பானது. 

  "ஸ்டாப்பிட் ரிதன்யா. நானும் ம்ருத்யுவும் பெர்சனலா பேசிப்போம். உன்னை யாரு இங்க வரச்சொன்னது. கெட் அவுட்" என்று விரட்ட பெரும்பாடுபட்டாள். 

  "கல்யாணத்துக்கு பிறகு பெர்சனலா பேசிக்கோ. இவர் எனக்கும் அத்தான். எனக்கும் ம்ருத்யு அத்தான் வெளிநாட்டுல இருந்து வந்ததால அவரிடம் பேச ஆசையா வந்தேன். அத்தான் எங்க என் கிப்ட்?" என்று விகல்பமின்றி கையை நீட்டினாள்.

   ம்ருத்யு முறுவலோடு "ஸ்ரீ அவளை ஏன் திட்டற. மனசுலபட்டதை பேசறா. கொஞ்சம் வெயிட் பண்ணு ரிது கிப்ட் எடுத்து தர்றேன்." என்று அறையிலிருந்து வெளியே வந்து ஹாலுக்கு வந்தான். தான் கொண்டு சூட்கேஸில் நம்பரை போட்டு பெட்டியை திறந்து கொண்டு வந்த பரிசை பிரித்தான். 

    அன்னை தந்தைக்கும் மாமா அத்தை பாட்டி லலிதாவிற்கு என்று தனிதனியாக சாக்லேட்ஸ், நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் வாலெட், பெர்ப்யூம் நெக்லஸ் என்று எடுத்து கொடுத்தான். 

     இங்கு வந்ததும் 'ஸ்ரீ வில் யூ மேரீட் மீ' என்று அவளிடம் கேட்டு அவள் சம்மதித்ததும் கையில் மோதிரம் போட்டு இதழ் முத்தம் கொடுக்கலாமா என்று அனுமதி கேட்டு மோதிரம் கொடுக்கும் ஆசையோடு வந்தான். 

   இந்த நொடி மோதிரத்தை கொடுக்க தயங்க, ரிதன்யாவோ எங்களுக்கு வாங்கியதை விடுங்க. அவளுக்கு என்ன வாங்கினிங்க?" என்று ஆராய்ந்தாள். 

   ஸ்ரீக்கு மோதிரம் இருக்கவும் ரிதன்யா வேகமாய் எடுத்துவிட்டாள். 

    "பாருங்க மம்மி ரிங் பிரசெண்ட் பண்ண வாங்கியிருக்கார். சோ பைரவ் மாமா உங்ககிட்ட சொல்லிட்டாரா?" என்று ரிதன்யா விளையாட்டாய் கேட்டாள். 

  "சேசே அம்மாவுக்கும் அத்தைக்கும் நெக்லஸ் வாங்கியது போல ரிங் வாங்கியது ரிது. நீ வேற" என்று அவளிடமிருந்து வாங்க முயன்றான். 
   
   "ஓ..ஓ... இது இவளுக்கு தானே வாங்கினிங்க. போட்டுவிடுங்க இல்லை என்னை கதம் பண்ணிடுவா. பாருங்க இப்பவே  நீங்க அவளுக்கு வாங்கிய கிப்ட் எடுத்துட்டேன்னு லாவாவை ஒன்றரை டம்ளர் குடிச்சவளாட்டும் இருக்கா. அத்தான் கையில போட்டுவிட்டுடுங்க" என்று ரிதன்யா அலைப்பறை செய்யவும் ஸ்ரீநிதி கூடுதலாய் முறைக்க, பைரவ் தாரிகா அணிவிக்க உந்தினர். 

   யுகேந்திரனோ "கமான் மேன் போடு" என்றதும் ஷண்மதியை கண்டு ஸ்ரீநிதியை பார்த்து தயங்கினான். 

  ஷண்மதியோ "ம்ருத்யு அவளுக்கு கொடுக்க தானே வாங்கின. சோ நீயே போட்டுவிடு" என்று கூறவும் ஸ்ரீநிதியை ஏறிட்டான். 

   அவளோ மறுக்க பார்க்கும் நேரம், "ஸ்ரீநிதி ம்ருத்யுவுக்கு கோஆப்ரேட் பண்ணு" என்று யுகேந்திரன் கூறவும், "உங்க மகளுக்கு வெட்கம் கிட்கம் வந்துடுச்சோ என்னவோ" என்று ஷண்மதி கிண்டலாய் கூறவும், அன்னையை எரிப்பது போல பார்வையிட்டு ம்ருத்யுவிடம் கையை நீட்டினாள்.

   அவளே கையை நீட்ட வேறு வழியின்றி பெரியவர்கள் முன்னால் அணிவித்தான். 

  அவன் அணிவிக்கும் ஆர்வத்தோடு வாங்கியது என்றாலும் இம்முறை துளி சந்தோஷமும் அதிலில்லை. ஸ்ரீநிதிக்கு தன்னை பிடிக்கவில்லையே. யாரோ ஜீவியை காதலிக்கின்றாளே என்ற எண்ணமே முடக்கியது. 

  ரிதன்யா கைதட்டவும் மற்றவர்களும் கைதட்டி ஆனந்தமடைந்தனர். 

   அன்றிரவே இரவு உணவை முடித்து கொண்டு கதையளந்து தாமதமாய் வீட்டுக்கு புறப்பட்டார்கள். 

  ம்ருத்யுவும் தாய் தந்தையிடம் தனக்கு அசதியென்று தனியறை சென்றுவிட்டான்.

  ஸ்ரீநிதி வீட்டுக்கு வந்ததும் மோதிரத்தை பார்த்து பார்த்து கழட்ட மாட்ட, கழட்ட மாட்ட என்றிருந்தவள் ஜீவிக்கு அழைத்துவிட்டாள். 

    "ஹாய் நிதி என்ன பண்ணற? உன் அத்தை பையன் ம்ருத்யு வந்துட்டானா? நம்ம லவ் சொல்லிடப்போறனு சொன்ன? என்னாச்சு?" என்று வரிசையாக வினாத்தொடுத்து முடித்தான் ஸ்ரீநிதியை விரும்பும் ஜீவி என்பவன்.

  "ம்ருத்யு வந்ததும் நானா பிக்கப் பண்ண போய் அவனிடம் தனிமை கிடைக்கவும் நம்ம லவ் மேட்டர் சொல்லிட்டேன் ஜீவி. அவன் புரிஞ்சுக்கிட்டான். நமக்கு உதவறதா சொன்னான். 

   நான் தான் ம்ருத்யுவை பத்தி சொன்னேனே. அவன் எனக்குன்னா என்னவேன்னா செய்வான். ஹீ இஸ் மை குட் பிரெண்ட். 

  மம்மியை சமாளிக்க குடைச்சல் இல்லாம மேரேஜை டிராப் பண்ண யோசிக்கறதா சொல்லிருக்கான். 

  பட் ஜீவி எனக்கு இந்த விஷயத்துல உன் மேல கோபம் கோபமா வருது. எங்க மம்மியிடம் உங்க டேடி தானடா மோதறார். நீ வந்து பொண்ணு கேட்க என்னவாம்." என்று எரிந்து விழுந்தாள். 

    ஜீவி என்பவனோ "உனக்கென்ன ஈஸியா சொல்லிட்ட. எங்கப்பாவுக்கு உங்க மம்மியை சுத்தமா பிடிக்கலை. நான் உன்னை லவ் பண்ணறதா சொன்னா என்னிடம் கம்பெனி பொறுப்பை தரமாட்டார். 

  எல்லாமே என் தம்பியிடம் ஒப்படைச்சிடுவார். இப்ப தான் எல்லாயிடத்திலும் அவரோட தொழிலை நான் மேனேஜ் பண்ணறதா வாரிசா என்னை முன்னிலைப்படுத்தறார். 

      அவர் பொறுப்பை தர்ற வரைக்குமாவது நான் அவருக்கு பிடிக்காத விஷயத்தை அவாய்ட் பண்ணிடறேன். மத்தபடி பொறுப்பு கைக்கு வந்துட்டா, நீ எதிர்பார்க்கற மாதிரி நானே வந்து ஷண்மதி அத்தையிடம் பொண்ணு கேட்பேன். எனக்கு அந்த கட்ஸ் இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணணும். 

    எனக்கென்னவோ உங்க அம்மா அந்த வாய்ப்பை தரமாட்டாங்கனு தோணுது." என்று அவன் நிலையை விளக்கினான்.

   "என்னவோடா எங்கம்மா இந்தளவு எனக்கு நேரம் கொடுத்ததே ம்ருத்யுவால தான். அவன் படிப்பு முடிஞ்சி வர்றதால தான் இத்தனை நாள் நேரம் கொடுத்தாங்க. இப்ப மேரேஜ் டாபிக் பேசியதும் இனி விடமாட்டாங்க. 
  சப்போஸ் இக்கட்டுல எதுவும் நமக்கு பாஸிடிவா நடக்கலைனா நீ எதையும் யோசிக்காத. இரண்டு வீட்டு சைட்லயும் லவ் சொல்லிட்டு கல்யாணம் பண்ணிப்போம். எங்கப்பா ஷணும்மாவுக்கு எதிரா நான் நடக்கறதால கோபமா இருப்பாரே தவிர மத்தபடி என்னை மொத்தமா ஒதுக்க மாட்டார். அதனால அப்பாவோட என்னை கைவீசி வெளியே அனுப்பமாட்டார். உட்கார்ந்து சாப்பிட்டாலே இன்னும் இரண்டு தலைமுறைக்கு சொத்து இருக்கு ஜீவி." என்று ஸ்ரீநிதி பேசினாள். கம்பெனி பதவி என்பதற்காக தங்கள் காதல் முடங்க வேண்டாமென்ற அக்கறையில் மொழிந்தாள். 

   "உன்னிடம் எனக்கு தேவை சொத்து கிடையாது ஸ்ரீநிதி. உன் மனசு தான். பார்த்தும் பிடிச்சிருக்கு. பேரண்ட்ஸுக்கு பிடிக்காதுனு என்னால ஒதுங்க முடியலை. மேபீ நான் பேட் தாட்ல உன்னை அப்ரோச் பண்ணியதா ம்ருத்யு நினைக்கலாம். பட் ஐ ரியலி லவ்யூ நிதி." என்று உருகும் வார்த்தை வீசினான். 

   "நீ சொல்லணுமா ஜீவி எனக்கு உன் லவ் புரிஞ்சதால தான். நான் ஓகே சொன்னது. நான் ஒன்னும் கண்ணை மூடிட்டு காதல் வசனம் பேசறவனோட முட்டாள் தனமா காதலிக்கலை. யூ டோண்ட் வொர்ரி. ம்ருத்யு பார்த்துப்பான். நாங்க பேசி ஏதாவது ஐடியா கிடைக்குதானு பார்க்கறோம். குட் நைட் ஜீவி" என்றுரைத்தாள். 

    "குட்நைட் நிதி. லவ் யூ" என்று உரைக்க "லவ் யூ டூ" என்று அணைத்தாள். 

   ஸ்ரீநிதிக்கு ஜீவி காதல் உண்மையானது என்று அறிந்ததால் தான் மனதை பறிக்கொடுத்தது. இங்கே தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஒருவன் உருகி காதலிப்பது அவள் அறியாததே.

    சிறுவயதிலிருந்து கனிவான பார்வையில் நேசத்தை பிரதிபலிக்கும் ம்ருத்யு கண்களில் காதலென்ற வரையறையில் பருவம் மாறியதும் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒற்றுமை இருந்தது. அதனாலோ என்னவோ ம்ருத்யு தன்னை நேசிப்பானென்று ஸ்ரீநிதி அறிந்திட வாய்ப்பில்லாமல் போனது. 

   ஏதோ மணக்க தேர்ந்தெடுத்தது ம்ருத்யு என்பதால் ஸ்ரீநிதி பதட்டமின்றி நித்திரைக்கு சென்றாள். 

     ம்ருத்யுவின் காதல் வலிகள் அவனைப்படுத்தி எடுக்க அவனுமே பெண்பிள்ளையாக தலையணையை கண்ணீரால் நனைத்து நித்திரையில் ஆழ்ந்தான். 

   உறக்கத்தில் ஸ்ரீநிதி இடையை வளைத்து, அவள் நெஞ்சில் ம்ருத்யு தலைசாய்த்து அணைக்கவும் ஸ்ரீநிதி திடுக்கிட்டு எழுந்தாள். ஏதோ ராட்சஸ கனவு கண்டதாக நீரை எடுத்து பருகினாள். 

   கனவால் உறக்கம் முற்றிலும் பறிப்போக, எழுந்து பால்கனி வந்தாள். 

   ஒரு வருடத்திற்கு மேலாக ஜீவியை காதலித்து இருக்கின்றாள். இது போல கனவு வந்ததில்லை. ம்ருத்யு இன்று ரிதன்யாவிற்காக நாடகமாய் தன்னை அணைத்தது தன்னை ஏன் இப்படி கதிகலங்க வைக்கும் கனவாக வந்து அச்சுறுத்துகிறதென்று பயந்தாள். 
   
   ம்ருத்யு அணைத்தது ரிதன்யா வருகைக்காக என்று தான் ஸ்ரீநிதி முடிவெடுத்திருந்தாள். 

   ஜீவிக்கு அழைக்கலாமா என்று நேரத்தை கவனிக்க நான்கு பத்தாகி  நொடி முள் டிக்டிக் என்று ஓசையெழுப்பியது. 

ரிதன்யாவுக்காக ம்ருத்யு என்னை தொட்டது என்னலாம் பயமுறுத்தது.' என்று தலையை உலுக்கி முடிக்க அந்த எண்ணம் உருவாகியது. கைகளை சொடக்கிட்டு 'ம்ருத்யு ஐ காட் எ ஐடியா' என்று துள்ளி குதித்தாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 



  

  

   

  



  

  


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1