நீ என் முதல் காதல் -17
அத்தியாயம்-17
ம்ருத்யு ஸ்ரீநிதி அருகருகேயிருக்க "ம்ருத்யு இரண்டு நாளா ஜீவியை காணோம் டா. என்னப்பண்ணறதுனு தெரியலை." என்று கண்ணீர் வடித்து நின்றவளிடம் "அவன் உன்னை கழட்டிவிட்டுட்டான் ஸ்ரீ. உனக்கு புரியலையா?" என்று மணக்கும் வாசனை திரவியத்தை தன் சட்டையில் தெளித்து சுவாசித்தான்.
ஸ்ரீநிதி அங்கிருந்த மெத்தையில் தொப்பென அமரவும், நிதானமாக "அவன் அத்தையோட தொழில்முறை எதிரியோட பையன். இதுல அத்தையவே சைட் அடிச்சிருக்கான்.
உன்னிடம் வாலாட்ட காதல் என்ற அழகான விளையாட்டை தொடுத்து மனசுல புகுந்திருக்கான்.
இப்ப நாலு நாளா போன் கான்டெக் இல்லை. இரண்டு நாளா ஆளையே காணோம்.
நீ பதறுற அளவுக்கு கூட அவங்க அப்பா தேடலை. அவர் கம்பெனிக்கு இப்பவும் வந்திருப்பதா நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல புதுகம்பெனி என்று பேசி சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கற மாதிரி கேட்டதுக்கு அவரும் வந்ததா சொல்லற. அப்ப பையன் மட்டும் எங்கப்போவான்?
லுக் ஸ்ரீ, உன்னை வச்சி அத்தையோட சாம்ராஜியத்தை அழிக்க முயற்சிப் பண்ணிருப்பான். அது முடியலை. அட்லீஸ்ட் உன்னை அசைத்து பார்த்துட்டான். நீயும் முட்டாளா கண்ணுல தண்ணியோட நிற்கற" என்று கேலியாக பேசவும் கண்களை துடைத்தாள்.
"நான் ஒன்னும் ஏமாறலை." என்றவளுக்கு கண்ணில் அருவி கொட்டியது.
அவள் அழவும், தன் மாமா யுகேந்திரனின் கலக்கமான முகமே வந்து செல்ல, அதே முகத்தோடு ஸ்ரீநிதியை காண்பதாக தோன்றவும், "கல்யாணத்தை இந்த நொடி கூட நிறுத்தறேன். அத்தையிடம் டைம் கேளு." என்றான் அன்பான நேசக்காரனாக, ஆனால் அடுத்த நொடியே "பட் அத்தையிடம் நீ பணிந்து போகமாட்ட. அத்தையை அவமானப்படுத்த ஆசைப்படுவ, இத்தனை பேரை இன்வெயிட் பண்ணிருக்காங்க. கண்டிப்பா தலைக்குனிவுப்படுத்துவ.
எங்கத்தை ஷண்மதியும் கண்ணீர் விட்டு கதறி அழணுமே." என்று ஸ்ரீநிதியை ஆழம் பார்த்தான்.
ஸ்ரீநிதி குழப்பமான மனநிலையில் தத்தளித்திருந்தாள். ஜீவி தன்னை கழட்டிவிடுபவன் அல்ல, ஆனால் இன்று திருமணம் என்று தெரிந்தும் ஏன் தன்முன் வரவில்லை?
அதிகமாக அவளை சிந்திக்க விடாமல் "ஸ்ரீ அத்தை சத்தியமா அழமாட்டாங்க. உனக்கு பதிலா ரிதன்யாவை மேடையில உட்கார வச்சிடுவாங்க. என் கதி தான் அதோகதி.
அத்தையை நீ விழ்த்திடுவ. ஆனா ஜீவியிடம் படுத்தோல்வியடைந்தவளா நிற்ப." என்றதும் அவளது எரிமலை எண்ணத்திற்கு எண்ணெய் ஊற்றியது அவன் பேச்சு.
உண்மை தான் இதை எப்படி மறந்தாள்? தான் இல்லாத இடத்தில் ரிதன்யாவை முன்னிருத்த நிச்சயம் தயங்கமாட்டார். தன் வாழ்வை விட, தன் தங்கை வாழ்வு குழியில் தள்ளப்படும். இந்த வயதில் அவளுக்கு திருமணம் என்றால்?
தலையை தாங்கி நின்றாள். அவளது உடையும் தலை கணமும், வளையல்களும், கம்மலும், செயினும் என்று அணிகலன்கள் ஒவ்வொன்றும் எடைக்கூடுதலாக இருக்க, மனமும் பாரமேற சோர்ந்தாள்.
காதல் என்றாலே வலி வேதனை இல்லாமலா? ஆளானப்பட்ட ஷண்மதியே காதல் வலியை அனுபவித்து கடந்து வந்தவளே. அவளது மகள் அனுபவிக்காமல் காதல் வலி காதலை உணர்த்தாதே.
"நமக்கு இரண்டு மணி நேரம் தான் இருக்கு." என்றவன் வாட்ச்சை பார்த்து "அதுக்கூட இல்லை. நான் மேடைக்கு போகவேண்டிய நேரம் வந்துடுச்சு.
உன்னோட முடிவு சொல்லு. இப்படியே மேடைக்கு போகவா. இல்லை மேடையேறாமலேயே கல்யாணத்தை நிறுத்தப்போறியா?" என்று பட்டு வேஷ்டி சட்டையில் கையை கட்டி அவளது பதிலுக்காக காத்திருந்தான்.
ஸ்ரீநிதி சிலையாக நின்றாளே தவிர பதில் கூற வாய் வரவில்லை. ரிதன்யா தான் குதித்து குதித்து வந்து "ம்ருத்யு அத்தான், அப்பா-அம்மா மாமா-அத்தை உங்களை கூப்பிடறாங்க. இங்க என்ன பேச்சு?" என்று கையை பிடித்து இழுத்தாள்.
"ஒரே ஒரு நிமிஷம் நீ போ" என்று ரிதன்யாவை அனுப்பினான் ம்ருத்யு.
ம்ருத்யு ஸ்ரீநிதியை பார்க்க, முடிவெடுக்கும் நேரத்தை நெருக்கியது. "ம்ருத்யு உனக்கு என்னை கல்யாணம் பண்ண ஓகேன்னா மேடைக்கு போ. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்.'' என்று உச்சரித்தாள்.
"ஆர் யூ சூர்" என்று கேட்க யுகேந்திரனோ "என்னடா மாப்பிள்ளை நீ. அங்க உன்னை தேடிட்டு இருக்கோம். இங்க என் பொண்ணு பக்கத்துல நின்றுட்டு இருக்க. அதோட ஆர் யூ சூர்னு? என்னடா?" என்று கேட்டார்.
"ஒன்னுமில்லை அப்பா. அவனை கூப்பிட்டுக்கிட்டு போங்க" என்றாள் ஸ்ரீநிதி.
"அவனா.. அவர்." என்று திருத்திவிட்டு ம்ருத்யுவின் கையை பிடித்தார் யுகேந்திரன்.
"ஏன்டா என் கையை பிடிச்சிட்டு ஸ்கூலுக்கு வந்தவன் நீ. இப்ப கல்யாணமேடை வரை வந்துட்ட, அவ்ளோ பெரிய ஆளாகிட்டியா?" என்று மருமகனை கொஞ்சினார்.
"டா போட்டு பேசாதிங்க உங்க அக்கா வேண்டுமின்னா உரிமையா எடுத்துக்கலாம். உங்க மாமா பைரவ் மாப்பிள்ளைக்கு மரியாதையில்லைனு நினைப்பார். யார்கண்டா மாப்பிள்ளை முறுக்கு காட்டினாலும் காட்டுவார் உங்க மருமகன் ம்ருத்யு.
அதனால மருமகனை டா போடாதிங்க." என்று கூறவும் ஸ்ரீவினிதா அவ்விடத்தில் இருக்க சிரித்தார். தன் மருமகள் இப்படி தான் சரியாக சொல்லுகின்றாளென்று இருந்தார். லலிதாவுக்கு லேசாக மலைப்பு வந்தது.
ம்ருத்யு மேடைக்கு வந்ததும் ஓமக்குண்டலத்தில் மந்திரம் உச்சரிக்க, ஸ்ரீநிதி வந்தாள்.
அழகான மயில் நடை, தன் காதலன் ஜீவி வராததில் சோகமாய் தலைக்குனிந்து நின்றாள். அது பார்க்க மணப்பெண் கூச்சமாக இருந்தது.
என்ன பெரிய திமிராக இருந்தாலும் மணக்கோலத்தில் மருமகள் அடங்கிவிட்டாளென்று பைரவிற்கு பெருமை தாளவில்லை.
'தி கிரேட் பிசினஸ் வுமன் ஷண்மதி' தனக்கு சம்பந்தியாக வருகின்றாளே. யுகேந்திரன் தன் மனைவியோடு தம்பி என்றதில் சந்தோஷமும் அடைந்தார்.
ஸ்ரீநிதி முகத்தை பார்த்து ம்ருத்யு மந்திரம் உச்சரித்து ஓமக்குண்டத்தில் ஒரு கண் பதித்தான்.
ஸ்ரீநிதி சிலையாக வீற்றிருக்க, ஐயர் தாலி கயிற்றை தந்து கட்டக் கூறி 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என முழங்கினார்.
ம்ருத்யு பொன் தாலியை எடுத்து அணிவிக்காமல், ஸ்ரீநிதியிடம் "ஸ்ரீ கட்டவா?" என்று கேட்டு முடிக்க, கழுத்தை தானாக முன் வந்து கொடுத்து நின்றாள்.
ம்ருத்யு வெற்றி மிதப்பில் பொன் தாலியை அணிவித்தான்.
ஸ்ரீநிதி அக்கணம் கண்ணீரை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இயல்பிலேயே தன்னை முடக்க நினைப்பவருக்கு எதிராக வாழும் வல்லமை வளர்த்துக்கொள்ளும் திடமிருக்க, எவ்வித வினையாற்றாது இருந்தாள்.
ம்ருத்யு தாலி அணிவித்ததும் தன் கரத்தால் அவள் கரம் பற்ற, அதற்காகவே காத்திருந்தது போல உன் தோழமை எனக்கு வேண்டுமென்று அவன் பிடிக்குள் இளைப்பாறினாள்.
அக்னி வலம் வந்தவர்கள் இறுதியில் சபைக்கு ஒரு வணக்கம் தெரிவித்துவிட்டனர்.
ம்ருத்யு அதன் பின் தன் ஆச்சி காலில் விழவும் ஸ்ரீவினிதா பதறினார்.
பைரவோ "விழட்டும் அத்தை. என்னயிருந்தாலும் நீங்க தானே எனக்கும் பெரியவங்க" என்று உற்சாகமாகவே கூறினார்.
ம்ருத்யு அடுத்து பைரவ் தாரிகா காலில் விழுவும் ஸ்ரீநிதி தயங்கினாள்.
"ஸ்ரீ கால்ல விழு. என் பேரண்ட்ஸை நீ மதிக்கலைனா எனக்கு அப்செட் ஆகும்" என்று கிசுகிசுக்க, "நான் எங்க மதிக்காம இருக்கேன். எனக்கு இதுயெல்லாம் பிடிக்காது." என்று கூறினாலும் காலில் அவனோடவே குனிந்து எழுந்தாள்.
ம்ருத்யு ஷண்மதி யுகேந்திரன் காலிலும் விழுந்து வணங்க தயாராக, தந்தை பக்கமிருந்தவள் விழுந்தாள்.
ம்ருத்யுவும் ஷண்மதி பக்கம் பாதம் பணிந்தான். ஷண்மதியோ காது மடல் பக்கம் சிகை ஒதுக்கி, ஸ்ரீநிதியை மணந்துவிட்டதை பாராட்ட, அதை கண்டுக்கொண்ட ம்ருத்யுவோ 'எல்லாம் உங்கள் தயவு' என்பது போல அத்தை பாதம் பணிந்து எழுந்தான்.
''ஏய் அக்கா அத்தான் மேரேஜ் முடிஞ்சது" என்று அங்கேயே வண்ண காகிதத்தை வெடிக்க வைத்தாள். அது அழகழகாக மேடை மீது மட்டுமின்றி திருமண விழாவுக்கு வந்தவர்களின் தலையிலும் விழுவதற்கு ஆங்காங்கே பலூனில் கட்டிதொங்கவிட்டது வெடிக்க வைத்திருந்தாள். அந்த பார்ட்டி ஹால் முழுக்கவே வண்ண காகிதமாக ஒளிர்ந்து மகிழ்ச்சியான சத்தமும் கூச்சலும் கேட்டது.
அதே கட்டிடத்தில் ஒரமாக இருந்த அறையில் கைகால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டு ஜீவி அடைப்பட்டிருந்தான். நிச்சயம் ஜீவியின் நிலைக்கு யார் காரணம் என்று தனியாக கூற தேவையில்லை. அது ம்ருத்யு ஷண்மதி இருவரில் யாரோ ஒருவராகவோ அல்லது கூட்டுக்களவாணியாகவோ இருப்பது ஸ்ரீநிதி அறியாமல் இருக்கலாம். ஜீவி அறியவேண்டிய அவசியம் இருந்தது.
ம்ருத்யு ஸ்ரீநிதி கையை பிடித்தவன், 'உனக்கு நானிருக்கின்றேன்' என்ற ஆதரவை வழங்கினான். ஆனால் உள்ளுக்குள் எப்படியும் இந்த ஜீவியை அடைச்சியே வைக்க முடியாது. வெளியே வந்தான், என் மேல இருக்கற கோபத்துல ஆடுவான். ஸ்ரீநிதியை இப்ப என்னை விட்டு விலகாம பார்த்துக்கறது பெரிசில்லை. ஆப்டர் உண்மை தெரிந்தப்பிறகு என்னை விட்டு விலகாம பார்த்துக்க முடிவெடுக்கணும்.
அந்த முடிவுல அவளால எதுவும் செய்ய முடியாம திண்டாடி என் கூடவே இருக்கணும்.' என்று பலவிதத்தில் சிந்தித்து யோசனை வந்தவனாக வில்லன் சிரிப்போ
டு சகுனியாக பகடையை உருட்ட தயாரானான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment