பனித்தல்

    பனித்தல்


     மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.

     பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.

     அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இடைநிலை பள்ளி. அதனால் கூட்டம் உடனே கலைந்து ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.

   எதிரே சற்று தள்ளி நோட் புத்தகம் விற்கும் அண்ணாச்சி இருந்தார். பாதிக்கு மேல் சாரலடிக்க அதனை எடுத்து கடைக்கு உள்பக்கம் விரசாக அடிக்கினார். தளிர்மலர் இருக்கும் மரத்துக்கு எதிரில் கடையிருக்க அங்கே எழுதும் அட்டைகள் நனைவதை கண்டாள்.

       தளிர்மலரோ, "அங்கிள் ரைட்டிங் பேட் நனையுது பாருங்க. சாக்லேட் எல்லாம் பாக்ஸில இருக்கு. அது மர அட்டையில செய்தது. நனைந்தா ஊறி உப்பிடும்" என்றதும் "தேங்க்ஸ் மா தேங்க்ஸ் மா" என்று அதை முதலில் எடுக்க சென்றார்.

     அந்த நேரம் இளைஞன் ரபீக் வந்து தளிர்மலரை கண்டு வண்டியை அவளருகே நிறுத்தினான். ரபீக் தளிர் வீட்டின் பக்கத்து வீட்டு பையன். தனியாக வீடெடுத்து படிப்பவன்.

       "என்னாச்சு மா. மழையில் நிற்கறியா... வீட்டுக்கு போயிடலாமே." என்று கேட்டான் ரபீக். கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருப்பவன்.

     "நனைஞ்சுடுவேனே அண்ணா." என்றாள் தளிர்.

    யோசனை செய்தவன் தனது ரெயின் கோர்ட்டை கழட்டி அவளை அணிந்திட செய்து அழைத்து சென்றான்.

      சற்று நேரம் கடந்திருக்கும் அண்ணாச்சி சிகரெட்டை இழுத்து விட்டபடி வேடிக்கை பார்க்க, தளிரின் தந்தை தலையை சொரிந்து அங்கும் இங்கும் அந்த மழையில் தேடுவதை கண்டார்.

     அந்த பள்ளியில் சில நேரம் தளிரோடு இவர் வருவதை கண்டவரோ, "என்னசார் தேடறிங்க?" என்றார்.

    "என் மக மழையில நனைவாளோனு நான் கூட்டிட்டு போக வந்தேன். என் பொண்டாட்டி வேற மதியம் தான் ஒரு துக்கச்செய்தி வந்ததுனு அதுக்கு போயிருக்கா. வீட்டை பூட்டிட்டு பிள்ளை அழைக்க வந்தா. பிள்ளைய காணோம். எதிருல பார்த்த மாதிரியும் தோனலை."  என்றார் ரெயின் கோர்ட் அணிந்தும் முகத்திலடித்த மழைத்துளியை துடைத்தவாறு கூறினார் மாணிக்கம் தளிரின் தந்தை.

    "எது உசரமா நெற்றிக்கிட்ட கூட மருவு இருக்குமே அந்த பிள்ளையா..?  என்றார் கடைக்கார அண்ணாச்சி.

     "ஆமா சார் அவதான்." என்று மாணிக்கம் சொல்லி முடித்தார்.

    "இப்ப தானே கொஞ்சநேரம் முன்ன பைக்குல ஓரு காலேஜ் பையன் மரத்துல ஒதுங்கியிருந்த பிள்ளைய கூட்டிட்டு போனான். உங்கப் பொண்ணும் தெரிந்தவரு மாதிரி போச்சே." என்றதும், மாணிக்கத்திற்கு பயபந்து அடிவயிற்றில் உருண்டது.

    "என்னங்க சொல்லறிங்க. பையன் எப்படியிருந்தான்." என்று விரசாக கேட்டு முடிக்க, "அவனா... பார்க்க தாடி வச்சி முஸ்ஸிம் பையனாட்டம் இருந்தான்." என்றதும் தன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்த ரபீக் நினைவு வந்தது.

     "பக்கத்து வீட்ல இந்த மாதிரி பையன் இருக்கான். நான் போய் பார்த்துக்கறேன் சார். ரொம்ப நன்றி. என்று வண்டியை ஸ்டாட் செய்தார்.

    "பார்த்து சார். பிள்ளைய ஏதாவது பண்ணிடப் போறானுங்க. சீக்கிரம் போங்க." என்று பதட்டம் கூட்டினார்.

      மாணிக்கத்திற்கு அந்த மழையிலும் நெற்றியெல்லாம் வேர்த்தது போன்ற உணர்வு.

    தனது வண்டியை ஸ்டாட் செய்து வீட்டை நோக்கி பயணித்தார்.

     ஐந்து வயது பெண் கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், குழந்தையை கெடுத்து உருத்தெரியாமல் எரிப்பு, சிறுமியை கற்பழித்து உடலை வெட்டி திசைக்கு ஒன்றாக வீசியெறிந்து தலைமறைவான காம வெறியன்.

      தன் வீட்டில் ஒருத்தனாக பழகிய உறவுக்கார பையன் தங்கை உறவு முறை பெண்ணை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து பதிவாக்கியுள்ளான். என்று மாணிக்கத்தின் எண்ணங்களில் மாறி மாறி வீட்டை அடைவதற்குமுன் தறிக்கெட்டு ஓடியது.

பக்கத்து வீட்டில் தன் மகளின் கால் செருப்பை கண்டவர் வேகமாக கதவை தொட அது தாழிடாமல் இருக்கவும் திறந்துக் கொண்டது.

    அங்கே வீல்அப்பளம் பொரித்ததை சாப்பிட்டு கொண்டிருந்தாள் தளிர்மலர்.

     ரபீக்கோ ஒரு ஒரத்தில் போர்வைபோட்டு உறங்குவதை கண்டார்.

      தனக்கு பின்னால் நிழல் தெரிய தளிர் திரும்பி "அப்பா...." என்று அழைத்து, "ரபீக் அண்ணா... அப்பா வந்துட்டார். தேங்கஸ் அண்ணா. அண்ணா இந்த அப்பளம் எனக்கு தானே வீட்டுக்கு எடுத்துட்டு போகவா." என்றதும் தலையாட்டினான்.

     தந்தை கையில் சாவியை பிடுங்கி தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

     "தேங்க்ஸ் தம்பி நான் ரொம்ப பயந்துட்டேன். அதுவும் யாரோ ஒருத்தர் கூட போனானு கேட்டதும் அச்சோ... " என்று அதிர்ந்து வார்த்தையை நிறுத்தி கொண்டார். தளிரை போல சிறுவன் அல்லவே ரபீக். கல்லூரி மாணவன் வார்த்தை என்ன நோக்கத்தில் சொல்லப்படுவது அறியாதவனா?"

     "ஏன் அங்கிள் தப்பா நினைச்சிட்டிங்களா? ஒருத்தன் கூட்டிட்டு போனான் என்றதும் அப்பாவா கண்டதை யோசித்து பயந்திருப்பிங்க.

     எல்லாரும் அப்படியிருக்க மாட்டாங்க அங்கிள். என் தங்கை குப்ரா இப்படி தான் மழைக்கு பயந்து பச்சை மரத்துல கீழே நின்றாள். அப்ப மின்னல் தாக்கி மரத்துல மின்சாரம் பாய்ந்து என் தங்கை குப்ரா அப்பவே என் கண் முன்ன இறந்துட்டா. அதான் எப்பவும் எட்டியே நின்று பழகின எனக்கு தளிரை அங்க விட்டுட்டு போக மனசில்லை.

   என் தங்கைக்கு ஆன மாதிரி ஆகாது தான். இருந்தாலும் மனசு திக்குதிக்குனு இருக்கும். அந்த காரணத்துக்காக தான் என் ரெயின் கோர்ட் கழட்டி அவளுக்கு கொடுத்து அழைச்சிட்டு வந்தேன்.

    ஆன்ட்டி இருப்பாங்கனு பார்த்தேன். கதவு பூட்டியிருக்கவும், ரோட்டில இருக்கறதுக்கு பதிலா வீட்டுல இருக்க சொன்னேன்.

     இப்ப எல்லாம் சொந்தக்காரங்க வீட்ல கூட குழந்தையை விளையாட பயப்படறாங்க. உங்க பயம் நியாயமானது அங்கிள். அதனால தான் கதவு திறந்து வச்சேன். 

   பசிக்கும்னு தான் அப்பளம் பொரித்து தந்தேன்." என்று கூறவும் கைப்பிடித்து "ரொம்ப நன்றி தம்பி." என்று கூறவும் ரபீக் உடல் சூடாக தகித்தது.

    "என்னதம்பி உடல் அனலா கொதிக்குது." என்றார் மாணிக்கம் பதட்டமாக.

    "அதுக்கு தான் அங்கிள் மருந்து வாங்க போனேன்... கூட கொஞ்சம் நனைந்ததில் இப்படி ஆகிடுச்சு. அதனால தான் தூங்க செய்தேன்." என்று சொன்னதும் மாணிக்கம் நெகிழ்ந்து விட்டார்.
   
   தம்பி உங்களுக்கு ஜூரம் ஆனாலும் எம்பிள்ளைக்கு ரெயின் கோர்ட் கொடுத்துட்டு நனைந்திருக்கிங்க. என்ன தம்பி. கொஞ்சம் தூரம் ஈரத்தோட அழைச்சிட்டு வந்திருக்கலாம்." என்று அங்கிருந்த துவலையால் துவட்டி விட்டார்.

      ரபீக் நெளிந்து "அங்கிள் இருக்கட்டும். நீங்க தங்கச்சியை பாருங்க." என்றதற்கு "பரவாயில்லைபா. அவ இந்நேரம் அப்பளத்தை திண்ணுட்டு டிவி பார்த்திட்டு இருப்பா. நீ மருந்து எடுத்துக்கிட்டியா...?"

     "இல்ல அங்கிள் சாப்பிட்டு போடணும். இன்னமும் சமைக்கலை." என்றதும் மாணிக்கம் தான் வாங்கிய இரண்டு தோசை பொட்டலத்தின் ஒன்றை எடுத்து நீட்டி சாப்பிட சொன்னார்.

    "தளிர் அம்மா... நைட்டுக்கு வராது. அதான் வாங்கிட்டு வந்தேன். நீ சாப்பிட்டு மருந்து எடுத்துக்கோப்பா." என்று கூற, "பரவாயில்லை அங்கிள் நான் சுட்டுக்கறேன்." என்று அசதியில் கூறினான்.

     "தளிர் தங்கைனு நினைக்கிற எனக்கு பையன் தானே பா. சாப்பிடு. நான் பார்த்துக்கறேன். என்றார்.

    தோசையை சாப்பிட்டு மாத்திரையை, மாணிக்கம் வைத்து கொடுத்த சுடத்தண்ணீரில்  போட்டு முடித்தான்

    மின்னல் தாக்கி தன் கண்ணெதிரே இறந்து தான் தொலைத்த தங்கையை இன்று மீட்டப்பட்ட உணர்வில் ரபீக் மனம் சென்றது. சின்னதாக அழைத்து வந்த நிகழ்வாக தளிருக்கு இருக்கலாம். ரபீக்கை பொருத்தவரை தன் தங்கையை மீட்ட உணர்வோடு இமை மூடி மருந்தின் வீரியத்தில் உறங்கினான்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
   பிரதிலிபி நடத்திய ஈரம் என்ற போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற கதை. 

    


    

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு