நீ என் முதல் காதல் -24

அத்தியாயம்-24

    ஸ்ரீநிதி அதீதமாய் கோபத்தோடு வீற்றிருந்தாள். அவளுக்கு ஜீவி வாட்சப்பில் அனுப்பியா இன்விடேஷன் கார்ட் அப்படி. 

   ஜீவி வந்ததும் "ஹாய் நிதி" என்று வந்தவனிடம், "நீயும் ஏன்டா இப்படியிருக்க? அவன் தான் ஏமாத்தி மேரேஜ் பண்ணி என்னை இம்சை தர்றான் என்றால், நீ எங்கேஜ்மெண்ட் இன்விடேஷன் அனுப்பற?" என்று சண்டையை பிடித்தாள். 

   "நான் என்ன செய்தா சரியா இருக்கும் ஸ்ரீநிதி. 
   உன்னை உண்மையா விரும்பினேன். கொஞ்சம் கம்பெனி வரட்டும் பேசலாம்னு பொறுமை காத்தேன். 'பொறுத்தார் பூமி ஆள்வார்'னு பழமொழி இருக்கு. ஆனா என் பொறுமை என் வாழ்க்கையை மாற்றிடுச்சு. 
  
    என் தேவதையை மிஸ் பண்ணிட்டேன். தந்திரமா உள்ள புகுந்த ம்ருத்யு தட்டிப் பறிச்சிட்டான். 

     நீ சொல்லற மாதிரி விவாகரத்து வாங்கிட்டு உன்னை மணக்க நான் ரெடி. ஆனா நான் ஹீரோ கிடையாது ஸ்ரீநிதி. 
   நான் ஒரு காமன் மேன். ஏற்கனவே இதை நான் சொல்லிருக்கணும். நீ ம்ருத்யுவை பத்தி பேசறப்ப எல்லாம் அடிவயிறு எரியும். இதுல என் எதிர்ல வீடியோ கால்ல அவனோட பேசிட்டே சிரிச்சிட்டு இருக்கறப்ப உன் போனை தட்டிவிடணும்னு தோணும். ஆனா சந்தேகப்படறேன்னு காதலை இழந்துடுவேன்னு நினைச்சேன்." என்றதும் ஸ்ரீநிதி கண்கள் இடுங்கியது.

   "முன்ன அவனை நண்பனா இருந்தப்பவும் அவன் புராணம் பாடின. இப்ப அவன் தந்திரமா  உன்னை மேரேஜ் பண்ணியிருக்கான். அட்லீஸ்ட் இப்பவாது அவன் பேச்சை விடுத்து நம்ம லைப்பை பத்தி பேசுவனு பார்த்தேன்." என்றதும் நான் நம் வாழ்விற்கு முடிவெடுத்து பேசவில்லையா என்ற குற்றச்சாட்டும் பார்வையை வீசினாள். 

    அவள் பார்வையின் வீரியம் புரிந்தவனோ "நீ பேசின இல்லைனு சொல்லமாட்டேன். ஆனா பாதிக்கு மேல அவனை திட்டிட்டு திரும்ப அவனை பற்றி தான் பேசற. 
  
   அவனும் என் ஓய்பை விட்டுதர முடியாது. ஒழுங்கு மரியாதையா  போடானு அடிச்சி சண்டைக்கு நிற்கறப்ப என்னால அவனோட மோதலுக்கு தாக்கு பிடிக்கமுடியலை ஸ்ரீநிதி. உண்மையை சொல்லணும்னா எனக்கு நீயாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். 
  
  அவன் உன்னை நேசிக்கறான். உன்னை நல்லா பார்த்துப்பான். என்னால நீ இரண்டு பக்கமா முடிவெடுக்க முடியாம அல்லல்படுவதை பார்க்க முடியலை. நிச்சயம் அவன் காதலை விட்டுதர மாட்டான். நான் விட்டு தருவதால என் காதல் தரம் குறைந்ததும் இல்லை. என் ஸ்ரீநிதி பிற்காலத்துல நிம்மதியா சந்தோஷமா வாழ்வா அதுக்கான தியாகமா நினைச்சிக்கறேன். 

  என்னோட காதல் பெரிது என்று காட்டி உன்னை அவனிடமிருந்து பிரித்து கல்யாணம் செய்து என்னைக்காவது ஒரு நாள் காயப்படுத்தி வலியை தந்து காதலை இழக்கறதுக்கு பதிலா, இப்ப விட்டுக்கொடுத்து ஒதுங்குவது ரொம்பவே பெரிசு." என்று தத்துவமும் சிந்தாந்தமும் பேசியவனிடம், ஸ்ரீநிதி "நல்லது." என்று எகத்தாளமாய் கோபமாய் உரைத்தாள். 

    "இப்ப உனக்கு கோபம் வரலாம் ஸ்ரீநிதி. பிறகு.." என்று ஆரம்பித்தவனிடம், "நல்லதுனு சொல்லிட்டேன், பேசி முடிச்சிட்டியா கிளம்பு.
   சும்மாயிருந்தவளை பார்த்து பேசி நட்பாகி காதலிப்ப, இப்ப அவன் வந்து அராஜகம் செய்ததும் என்னை போராடி மீட்க தைரியமில்லை. 

  முன்ன என் அம்மா பார்த்து பயந்த. இப்ப ம்ருத்யுவை பார்த்து கழண்டுக்கற. நீ என்ன தியாகம் செய்தாலும் என் மனசை சாந்தப்படுத்தாது ஜீவி. 

   பட் கவலைப்படாத. நீயா தியாகம் செய்து என் வாழ்க்கையை சீரமைக்க பார்க்கறப்ப, உன்னிடம் திரும்ப மன்றாடமாட்டேன். 
   இயல்பாவே எனக்கு வராது. இதுல அந்த ம்ருத்யு உன்னை பேசவிட்டு, பேச வச்சி, காய் நகர்த்தும் போது கெஞ்சிட்டு இருக்க மாட்டேன். 

   எனிவே வாழ்த்துகள்." என்று கைகுலுக்கினாள் ஸ்ரீநிதி. 

  அவள் கையை பற்றியவன், இருவிழியை அவளிடமிருந்து பிரிந்திட மனமின்றி நின்றான். 
   ஸ்ரீநிதி தான் அவ்விடம் விட்டு அகலும் நேரம், "ஸ்ரீநிதி உங்கம்மாவுக்கு என்னை நினைவிருக்கு. நான் அவங்களை எந்த அர்த்தத்தில பார்த்தேன்னு தெரிந்திருக்கு. அதோட அவங்களுக்கு நம்ம காதலும் தெரியும்." என்று கூறினான். 
  ஸ்ரீநிதி கால்கள் பசைப்போட்டு ஒட்டியது அவ்விடத்தில். 

ஜீவியோ "இது சமீபத்தில என்னை சுத்தி ம்ருத்யு போட்ட வளையத்தை பத்தி தெரிந்துக்க முயன்றப்ப ஷண்மதி ஆன்ட்டியை பத்தி தெரிந்துக்கிட்டது. எனிவே நிதி" என்று அணைப்பை உண்டாக்க, ஜீவி அணைப்பில் உடல் இறுக தன்னை விடுவித்து கொண்டு இரும்பு மனதோடு காரை நோக்கி சென்றாள். 
  அவளாக செல்ப் டிரைவிங் வந்தவளுக்கு ம்ருத்யுவை தான் திட்டினாள்.

   எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தானே. 
  கொஞ்சம் கொஞ்சமாய் சீண்டிக் கொண்டிருந்தவன், ரிதன்யா மீண்டும் வந்து சென்றதும் ஸ்ரீநிதி ம்ருத்யுவை திட்ட, பதிலுக்கு எப்பவும் போல சீண்டினான் ம்ருத்யு. 

   அதில் கோபம் உச்சமடைந்த ஸ்ரீநிதியோ, "உன் எதிர்ல ஜீவியை கிஸ் பண்ணிருக்கேன். ரிதன்யா கூட நீ என்ன மோட்டிவோட பழகி பிளாக் மெயில் பண்ணற. அப்பறம் நான் ஜீவியோட ஸ்டே பண்ணுவேன். அப்பவும் நீ வேடிக்கைப் பார்ப்ப டா." என்று சீண்டிவிட்டாள். 

   அதில் தான் ம்ருத்யு தன் வேலையை காட்டினான். 
   வம்படியாக ஸ்ரீநிதி இதழை கொய்யவும் அடிக்க ஆரம்பித்தவளை ஆவேசம் அடங்கும் வரை முத்தமிட்டு, "இதுக்கு மேலயும் முன்னேறுவேன். ஆனா என் ஸ்ரீயை காயப்படுத்த கூடாதேனு பார்க்கறேன்" என்றான். 

  ஸ்ரீநிதியை பேசவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை விட, ஜீவியை அடக்கும் வழியை யோசித்தவன் ஜீவியிடம் அவன் பாணியில் பேச, ஜீவியோ சாதாரணமாய், "நீ என்ன மிரட்டினாலும் நான் ஸ்ரீநிதியை விட்டு தர மாட்டேன். ஆனாலும் ஸ்ரீநிதியை விட்டு விலக போறேன். அதுக்கு முக்கிய காரணம் என் ஸ்ரீநிதி மனசுல நீ இருக்க." என்றதும் ம்ருத்யு இதென்ன கதை என்று விழி விரிய நின்றான். 

   "அவயுன்னை காதலிக்கறானு சொல்லமாட்டேன். அவளுக்கு உன்னை பிடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம். இக்கரையா அக்கரையானு அவ முழிக்கறதுக்கும், அவளோட மனசு தறிக்கெட்டு ரிவேன்ஜ் எடுக்கறதுக்கும் பதிலா, நானே உன்னோட கரையோரம் விட்டுடறேன். 
  அவளை பார்த்துக்கோ" என்று ம்ருத்யுவிடம் உரைத்து விட்டு, வீட்டில் திருமணத்திற்கும் தலையாட்டிவிட்டு, இதோ அதற்கு ஏற்றது போல ஸ்ரீநிதியோடும் சுமூகமாய் பேசி விட்டான். 

  ஸ்ரீநிதிக்கு தான் வெகுவாய் மனம் ஏற்க மறுத்தது. 

   இதுவரை அவள் வாழ்வில், அவள் மட்டுமே தனக்குண்டான நல்லது கெட்டது இரண்டும் தானாக ஏற்படுத்துவது. முதல் முறையாக ம்ருத்யு தன் வாழ்வில் திருமணத்தை முடிவெடுத்து சாதித்தான். தற்போது அதனை மாற்றிடும் வெறியில் இருந்தவளுக்கு, ஜீவியே வந்து விலகவும், தன் வாழ்க்கையை ம்ருத்யு பொம்மையாக மாற்றுவது பிடிக்கவில்லை. 

   ஜீவியிடம் இனி தானாக சென்று சமாதானமோ கெஞ்சுவதோ செய்யப்போவதில்லை. ஆனால் ம்ருத்யு எல்லாவற்றிற்கும் சேர்த்து அனுபவிப்பானென்று வேகமாய் ஓட்டினாள். 

    வீட்டுக்குள் நுழையும் போது டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் படத்தை போட்டுவிட்டு, "ஓ ஜெர்ரி டாமிடம் அடிவாங்கி ஓடறியே. சோ சேட்" என்று சிரித்து அவளை ஏறிட்டான். 
   
    ஸ்ரீநிதியோ தன் கைப்பையை தூக்கி ம்ருத்யு மீது தூக்கியெறிய, "பாருங்க மம்மி அத்தான் மேலயே ஹாண்ட்பேக் தூக்கியெறியறா. எப்பவும் திமிரா தான் இருக்கா." என்று ரிதன்யா குரல் கிச்சனிலிருந்து வரவும் இடப்பக்கம் சோபாவில் ஷண்மதி வீற்றிருக்க கண்டாள். 

   கூடவே தன் தந்தை யுகேந்திரன் மனைவியோடு அமர்ந்து, 'என்னடா கண்ணா இது?' என்று பார்வையை வீசினார்.

   "மாமா அவ செல்லமா அடிக்கிறது. கோபத்தில இல்லை. ரிது என்னை ஸ்ரீநிதி இப்படி பண்ணறதை  எல்லாத்தையும் தவறா நினைச்சிட்டா. இது கப்பீள்ஸ் லாங்வேஜ். கொஞ்சம் மோதல் கொஞ்சம் காதல்" என்று ஸ்ரீநிதியை கண்டதும் தானாக நெய்யூற்றிவிட்டு அவனாகவே சமாளிக்கவும், ஷண்மதி தன் மகளை தான் அளவெடுத்தாள். 

    ஷண்மதிக்கு தன் இளமை பருவமே ஸ்ரீநிதியாக உருவமெடுத்தது போல தோன்றியது. 
   
   ம்ருத்யு அதிகமாகவே தன் மகளை தாங்குவது புரிந்தது. ஆனாலும் மகள் ம்ருத்யு காதலை புரிந்துக்கொண்டால் நல்லது. 

   ஸ்ரீநிதியோ தன் அன்னையையும் வெறித்தாள். 
   தன் காதல் தெரிந்தும் ம்ருத்யு மீது கொண்ட அன்பிற்காக தன்னை அவனோடு சேர்த்து விட்டாரே என்று பொறுமியபடி பார்த்தாள். 

     அன்னைக்கு எதிரே வந்து தந்தையோடு அமர்ந்தவள், யுகேந்திரன் தோளில் சாய்ந்தாள். 

    மறுபக்கம் ம்ருத்யு வந்து யுகேந்திரன் தோளில் சாயவும், யுகேந்திரன் இருபிள்ளைகளையும் சரிப்பாதியாக பாவித்தார். 

   "அப்பா உங்களிடம் பேசணும்" என்று புதிர் போட்டாள். 

   ஏற்கனவே ரிதன்யா ஸ்ரீநிதியால் அடிக்கப்பட்டு, கன்னம் சிவந்து போய் வீட்டிற்கு செல்லவும், என்னாச்சு?  என்று யுகேந்திரன் விசாரிக்க, முதலில் "ஒன்னுமில்லைப்பா" என்று மறைத்தாள். யுகேந்திரன் எத்தனையோ விதத்தில் கேட்டும் ம்ருத்யுவிற்காக கூற மறுத்தாள்  
  
  பிறகு ஷண்மதி ரிதன்யாவிடம் தனியாக இருக்கும் சமயம், "அக்கா  வீட்டுக்கு போய் கன்னம் சிவந்து வந்திருக்க யார் காரணம்?" என்று அதட்டிவிட்டார். 

  அன்னை குரல் உயர்ந்தாலே ரிதன்யாவுக்கு சிறு பயம். அடுத்து சமாளிக்கும் விதமும் அந்த குழந்தைக்கு தெரியவில்லை. அதே நேரம் உண்மையை முற்றிலும் உடைத்து பேசும் சாமர்த்தியமும் போதவில்லை. அதனால் "அக்கா அடிச்சிட்டா. எதுனாலும் அவளிடம் கேளுங்க" என்று முடிவுரை போட்டுவிட, ஷண்மதி யுகேந்திரன் இருவரும் ஸ்ரீவினிதா லலிதாவிடம் பகிராமல் பெற்றோர்களாக இதோ இன்று பெரிய மகளை காணவும், ரிதன்யாவை ஏன் அடித்தாளென்றும் அறிந்திடும் முடிவில் இருந்தார்கள். 

   "நாங்களும் உன்னிடம் பேச தான் வந்தோம் ஸ்ரீநிதி." என்றார் யுகேந்திரன்.

    ஷண்மதிக்கோ ஏற்கனவே ம்ருத்யுவிடம் ரிதன்யாவுக்கு என்ன நடந்தது என்று கேட்க, 'ரிதன்யாவுக்கு ஜீவி பத்தி தெரிந்துடுச்சு அத்தை. நான் சமாளிச்சிட்டேன். ஆனாலும் ஸ்ரீநிதி செய்த காரியம் ரிதன்யாவை டிஸ்டர்ப் பண்ணுது." என்று பூடகமாக பேசினான். 

  ஸ்ரீநிதி என்ன செய்தா?" என்று ஷண்மதி கேட்க ம்ருத்யு தயங்கினான். 
   என்ன தான் ம்ருத்யு ஸ்ரீநிதியிடம் அடாவடிதனம் செய்தாலும் ஷண்மதி யுகேந்திரன் இருவரிடம் தன் வில்லன் முகத்தை காட்ட மாட்டான். அது ஒருவித மரியாதை கலந்த அன்பிற்காக. 

   அதனால் இலைமறையாய் கூற பார்த்தான். ஷண்மதியோ "எம்பொண்ணு என்ன பண்ணினானு நீ தெளிவா நடந்ததை சொன்னா தான். அதுக்கு ஏற்றது போல நான் முடிவை எடுப்பேன்." என்று கறார் குரலில் கேட்டதும், "திருமணம் முடிந்து அடுத்த நாள்ல ஜீவியை கண்டுபிடிச்சதும், எனக்கும் ஸ்ரீநிதிக்கும் வாக்குவாதம் நடந்தது அத்தை. அப்ப ஸ்ரீநிதி ஜீவியை உயர்த்துவதற்காக அவனை கிஸ் பண்ணிட்டா. அதை ரிதன்யா பார்த்துட்டா. ரிதன்யா அதுக்கு பிறகு ஸ்ரீநிதி மேல கோபமாயிருந்தா. நான் தான் ஜீவி ஜீவினு பேசினா, நான் ரிதன்யாவை ரிதுவை, அட்வான்டேஜ் எடுத்துப்பேன்னு ஸ்ரீநிதியை சும்மா மிரட்ட செய்தேன். ரிதுவை கட்டிபிடிச்சேன். ரிதுவிடம் சாரி கேட்டுட்டு எனக்கு உதவினா ஸ்ரீநிதி கோபமாகி ஜீவி பேச்சை எடுக்கமாட்டானு சொல்லி கட்டிப்பிடிச்சேன். 
  ஸ்ரீநிதி எதிரே கட்டிட்டு இழையவும் ஸ்ரீநிதி கோபத்துல ரிதுவை அடிச்சிட்டா." என்று விளக்கினான்.

   ஷண்மதி எல்லாம் கேட்டு, "ஒருத்தியை அடக்க நினைச்சி இன்னொருத்தியோட மனசை சிதைக்காத. ரிது இந்த பிரச்சனைக்குள் இழுக்காத. நான் மாமா வந்து ஒரு நாள் பேசறோம். ஆல்ரெடி உங்க மாமா ரிது கன்னம் சிவந்திருக்க என்னை வச்சி விசாரிக்க சொன்னார். நான் முழுதும் சொல்ல முடியாது. ஆனா அவரோட வந்து ஸ்ரீநிதியிடம் பேச அவசியம் வந்திடுச்சு.' என்று முன்கூட்டியே உரைத்திருந்தார். 

   இன்று தந்தை எதிரே ஸ்ரீநிதி செய்கை அமையவும் ம்ருத்யு சொல்லாமலே, ஜீவியோடு நடந்த உரையாடலால், ஸ்ரீநிதியே பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

   

   

    

   
   

    

  
  


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1